in ,

தித்தித்த காதல் (சிறுகதை) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ஐயா, சாப்பிட வாங்கய்யா, அம்மா வாங்கம்மா” நான்காவது முறையாக கணேசன் அழைத்தான்.

சங்கோஜத்துடனும், சந்தோஷத்துடனும், “கணேசா, உறவுகாரர்களெல்லாம் மொதல்ல சாப்பிடட்டும். எங்களுக்கு என்ன அவசரம்? அப்புறமா வரோம். நீ மொதல்ல அவங்கள கவனி போ…” என்று உரிமையாக அதட்டினார் ஆதவன்.

“அப்போ… நீங்க என்னை அந்நியமாப் பார்க்கறீங்க நீங்க என்னோட உறவு இல்ல. அப்படித்தான? என்று சற்று வருத்தமாக கூறிய கணேசன், “வாங்கய்யா நீங்களும் எங்களுடைய உறவுக்காரங்களோடு தான் சாப்பிடணும்” என்று கைகளை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான் கணேசன். தன் உறவுக்காரர்களிடம் இவரை அறிமுகப்படுத்தினான்.

“மாமா, நான் அடிக்கடி சொல்லுவேனே, இவர்தான் ஆதவன் சார், அவங்க கவிதா மேடம்” என்று அறிமுகப்படுத்தினான்.

“அப்படியா, வாங்க ம்.. மா… வாங்க ஐயா, நல்லா இருக்கீங்களா? உங்கள பத்தி கணேசு அடிக்கடி சொல்லுவான். நீங்க எல்லாம் இல்லைன்னா என் கணேசன் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பான். நாங்க எல்லாம் உறவுக்காரங்கன்னு இருந்து என்ன பிரயோஜனம்…? எல்லாரும் தள்ளி தள்ளி வெளி ஊர்ல இருக்கோம். உங்கள மாதிரி நல்லவங்க ஒத்தாசைனால தான் கணேசன் இம்புட்டு தூரம் வளர்ந்து இருக்கான். நீங்கதான் முதல்ல குழந்தையை ஆசீர்வதிக்கனும்” என்று கணேசனின் மாமா அவர்களை புகழ ஆதவனும் கவிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அகம் மகிழ்ந்துப்  புன்னகைத்தனர்.

அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் பட்டு மெத்தையில் கை, காலை உதைத்துக் கொண்டிருந்த பட்டுக் குழந்தையின் பிஞ்சுக் கையில் 500 ரூபாய் நோட்டை ஆதவன் வைக்க, விரல்களால் இறுகப் பற்றிக்கொண்டு பொக்க வாயை காண்பித்து இவர்களை பார்த்து சிரித்தது. எல்லோரும் ஆர்பரித்துச் சிரித்தனர்.

அவர்களின் அன்பான உபசரிப்பில் வயிறு மட்டுமல்ல, இருவரின் மனதும் நிறைந்தது.

“கவிதா, லேசா தூற ஆரம்பிச்சிருச்சு. இந்தா, இப்பவே  இந்த ஸ்வெட்டரை போட்டுக்கோ. நைட் கண்டிப்பா பெரிய மழை வரும்னு நினைக்கிறேன் அப்புறம் கரண்ட் போயிரும் தேட முடியாது” என்றார் ஆதவன்.

அருகில் வந்த கவிதா, “அதனால என்ன? நீ தான் என் பக்கத்துல இருக்கியே. உன்னை இறுக்க கட்டிகிட்டா, எனக்கு குளிரே தெரியாது” என்று சிரித்தாள்.

“செல்லத்துக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷம் போல இருக்கு” என்று சொல்லியபடி அவள் கையை மென்மையாக பற்றி மெதுவாக இழுத்து படுக்கையில் தான் முதலில் அமர்ந்து பின் அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

தன் நெஞ்சில் அவள் முதுகை சாய்த்து இடுப்பில் கை கொடுத்து இழுத்து அணைத்து, அவள் வலது தோளில்  தாடையை பதித்து அவள் கன்னத்தோடு கன்னம் சேர்த்தார்.

“ம்…ஆமா,  கணேசன் வீட்டுக்கு போயிட்டு வந்தது மனசுக்கு சந்தோசமா இருந்தது. நம்ம பிருத்வி..க்கு இந்த மாதிரி நடக்கலைன்னு ஒரு சின்ன வருத்தம் இருக்கு.” என்றாள் கவிதா.

“நம்ம பிருத்வியோட முதல் பர்த்டேல இருந்து  நமக்கு உறவுக்காரர்கள் தான் நிறைய கிடைச்சுட்டாங்களே, இப்ப நம்ம பிரித்விக்கே ஒரு ரோஹன் பிறந்தாச்சு. கவி, இந்த மழைக்காலம். நம்முடைய காதல் வாழ்க்கையை திரும்பக் கொண்டு வந்த மாதிரி இருக்கு எனக்கு. நாளைக்கு நம்ம லைஃப் டே ,என்ன ஸ்பெஷல்?”

“சஸ்பென்ஸ்” என்று சொன்னபடியே  ஆதவனின் முகத்தோடு முகம் புதைத்தாள் கவிதா. அவர்களின் மனம் கடந்த காலத்தில் புதைந்தது.

பத்தொன்பது வயது கவிதாவிற்கும், இருபத்தி இரண்டு வயது ஆதவனுக்கும் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த இரவு வேளையின் நிசப்தம், ரயிலின் சக்கரம் தண்டவாளத்தில் உருளும் ஓசை, யாராவது தங்களைப் பின் தொடர்கிறார்களா? என்கிற அச்சம், உண்மையறிந்து டி.டி.ஆர்…இறக்கி விட்டு விடுவாரா? என்கிற பதட்டம் எல்லாம் சேர்ந்து அவர்களின் மனம் நடுங்குவது கைகளில் தெரிந்தது.

நடுக்கத்தைக் குறைக்க இருவரும் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்தனர். பார்ப்பவர்களுக்கு, அவர்கள் உறவுகளை எதிர்த்து வீட்டை விட்டுத் தனியே வந்தவர்கள் என அப்பட்டமாய் தெரிந்தது. இரவு நேரமமாதலால் நிறைய பேர் கவனிக்கவில்லை.

அதிகாலை , எங்கும் பசுமை நிறைந்த மலைப் பிரதேசமான உதகை மண்டலத்தில் இறங்கியவுடன் பயம் கொஞ்சம் குறைந்தது. அங்கிருந்த ரிஜிஸ்டர் ஆஃபிஸில் பதிவுத் திருமணம் செய்தபின் மனதிலுள்ள பயம் முற்றிலும் நீங்கியது.

நண்பன் கொடுத்த முகவரியில் இருந்த யூகலிப்டஸ் தைல தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான். ஒரு சிறிய அஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீட்டில் குடித்தனம் ஆரம்பித்தனர்.

அன்று ஞாயிறு… காலை முதல் மாலை வரை ஊர் சுற்றிவிட்டு டிபன் வாங்கி வந்து இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர்.

மடியில் படுத்து உறங்கிவிட்ட ஆதவனைப் பார்த்து கவிதா கண்ணீர் சொரிந்தாள். தனக்காக இந்த எளிய வாழ்க்கை வாழும் தன் காதலனை எண்ணி எண்ணி பெருமிதமடைந்தாள். கண்கள் மூடி  நினைவுகளில் மூழ்கினாள்.

கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்த ஆதவன், “அம்மா…சமையல் பிரமாதம்,  நம்ம சுசீலா ஆன்ட்டி சமையல் சாப்பிடாம…நாக்கு செத்துப் போச்சு” என்று ருசித்து சாப்பிட்ட ஆதவனைப் பார்த்து

“தம்பி, நம்ம சுசீலா இறைவனடி சேர்ந்துட்டாங்கப்பா…. இருபது வருஷமாக உழைச்சவங்க… அதான் அவங்க மகளை சமையலுக்கு வச்சுட்டேன். அம்மா கைப்பக்குவம் மக கிட்ட இருக்கு” என்றாள் சிறிது வருத்தத்துடன் காதம்பரி.

“எப்போம்மா…?..எப்படிம்மா…? எனக்கு யாரும் சொல்லவே இல்லையே” அதிர்ச்சியுடன்   ஆதவன் கேட்டான்.

“உனக்கு பரீட்சை நேரம்…. பரீட்சை நடந்துட்டு இருந்ததுனால சொல்ல வேண்டாம்..னு.. நான் தான் சொன்னேன். இப்பதான் ஒரு மாசத்துக்கு முந்தி …”

“கவிதா,.. அந்த குருமாவை எடுத்துட்டு வாம்மா” என்றாள் காதம்பரி.

“ஆதவன் கவிதாவை ஆர்வத்துடன் எதிர் நோக்க ,”இத வந்துட்டேன்..ம்மா” என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்த கவிதாவின்  மருண்ட மான் விழிகளும் புன்னகைத்த சிறிய இதழ்களும் ஆதவனை கவிதை எழுதத் தூண்டின.

அவளை ரசித்து ரசித்து கவிதைகள் எழுதினான். அவள் சமையலை ருசித்து ருசித்து சாப்பிட்டான். கவிதைகளை காதல் மடல்களாக அவளிடம் தூது அனுப்பினான். கவிதா அவன் கவிதைகளில் கரைந்தாள். அவன் நினைவுகளிலும் உருகினாள்.

கவிதையை, ஒருநாள் அவளிடம் நேரடியாக கொடுக்கும் சமயம் அவனுடைய இரண்டாவது அண்ணி அதை பார்த்துவிட்டாள்.

மறுநாளிலிருந்து கவிதா அந்த வீட்டிற்கு வரவில்லை. ஒரே சமூகத்தில் பிறந்திருந்தும், தூரத்து உறவினர்களாக இருந்தும் கவிதா, ஆதவன் காதலுக்கு அந்தஸ்து ஒரு பெரிய தடையாக இருந்தது. பணத்தில் விஸ்தாரமாக இருந்தவர்கள் மனதில் ஏழையாக இருந்தனர்.

ஆதவன் கல்லூரியில் இருந்தபோது கவிதாவிற்கு திருமணம் நிச்சயமான செய்தி நண்பர்கள் மூலம் தெரிந்ததும், தாமதிக்காமல் நண்பர்களின் உதவியுடன் அவளை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு வெளியேறினான்.

நினைவுகளின் தொடர்ச்சியாக உறக்கம் அவளை அணைத்தது.

தூக்கம் கலைந்த ஆதவன், கவிதாவின் மடியிலிருந்த தன் தலையை மெதுவாக தூக்கி, சுவற்றில் தலைசாய்த்தபடியே தூங்கிய கவிதாவை மெள்ள பாயில் படுக்க வைத்தான். அவள் கைகளைப் பற்றி முத்தமிட்டான். அவள் தனக்காக படும் கஷ்டங்களை எண்ணி மனமுருகினான். பழைய நினைவுகளில் நீந்தினான்.

“கவி..ம்..மா….கவி…” அழைத்தபடி வந்தவன்…கதவு பூட்டியிருப்பதைப் பார்த்து காத்திருக்கத் தொடங்கினான். ஃபோனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு மணி நேரம் ஆயிற்று. மனம் பதை பதைத்தது. தேடினான்.

எங்கு சென்றாளென்று அவனுக்கு புரியவில்லை. மீண்டும் வீட்டிற்கு வந்தான். இருந்தாள். உயிர் வந்தது ஆதவனுக்கு.

“எங்க போன? கவி” சிறிது கோபமாகக் கேட்டான்.

“வீட்டுல சும்மா..தான இருக்கேன்.அதனால சில வீடுகளுக்குப் போய் வேலை செய்ய கேட்டுட்டு வந்தேன்.” என்றாள்

நீ எதுக்கு வேலைக்குப் போகணும்?.நான் உன்னை என் ராணி மாதிரி வெச்சுப்பேன். என்று அன்பாகக் கூறிய ஆதவனிடம்

“எனக்காக உங்க மேற்படிப்பை பாதியிலேயே விட்டுட்டு தொழிற்சாலையில் வேலை பாக்குறீங்க. பேராசிரியர் ஆகணும் என்கிற உங்க கனவை நினைவாக்க என்னால முடிஞ்ச சின்ன உதவி” என்று  கூறிய கவிதாவை அழுந்த முத்தமிட்டான்.

“சரி ஆனா நீ எந்த வீட்டுக்கும் போய் வேலை செய்ய வேண்டாம். நீ வீட்ல இருந்தபடியே தொழில் செய்யலாம். உனக்கு கைவந்த கலையான சமையல் செஞ்சு கொடுத்து சம்பாதிக்கலாம்.”

கவிதா சமையல் செய்தாள். சமையலுக்குத் தேவையான பொடிகள் செய்தாள். அவளது வியாபாரம் சிறுக சிறுகப் பெருகியது. அவர்களுக்கு பிருத்வி பிறந்தான்.

ஆதவன் படித்தான். பேராசிரியர் ஆனான் பெருகிய வருமானத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்து அங்குள்ள மலை ஜோதி குழந்தைகளுக்காக ஒரு சிறு பள்ளிக்கூடம் கட்டி கட்டணமில்லாமல் படிப்பை கொடுத்தான்.

வசதியான மனம் படைத்தவர்கள் பண உதவி செய்தனர். பள்ளி பெரிதாக விரிவடைந்தது. ஆதவன் புகழ் பரவியது. விட்டுப்போன சொந்தபந்தங்கள் சில அவர்களை ஏற்றுக் கொண்டன. ஆனால் ஆதவனின் தந்தை மட்டும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

காலம் ஓடியது. இன்று அவர்களது இரு பந்தைதாவது “வாழ்க்கை நாள்”.

அவர்கள் வாழ்க்கை ஆரம்பித்த நாள். அதிகாலை எழுந்து தாங்கள் வந்த இரயிலை சந்தோஷத்துடன் பார்த்துவிட்டு வந்தனர்.

“ஆமாம்., என்ன சஸ்பென்ஸ்?..நம்ம பிருத்வி வெளிநாட்டிலிருந்து வரானா?” என்று கவிதாவை கொஞ்சியபடி கேட்டார் ஆதவன்.

இந்தாருங்கள் என்று கவிதா நீட்டிய அழைப்பிதழில் அனைத்திந்திய சிறு தொழில் மேம்பாட்டு அமைச்சகம் இந்த வருட சிறந்த பெண் தொழிலதிபருக்கான விருது பெறுபவர் கவிதா ஆதவன். விருது வழங்குபவர் பெரிய தொழிலதிபர் சிவசாமி.

தன் தந்தையின் பெயரை படித்து ஆச்சரியமடைந்த ஆதவன் “இது நிஜமாகவே சஸ்பென்ஸ்தான்.” என்றான்.

“அவ உனக்குப் பொருத்தம் கிடையாது. அவளுக்கு சமையல் தவிர வேற ஒன்னும் தெரியாது. படிப்பு கம்மி. அவளை கட்டிக்கிட்டா நீ ரொம்ப கஷ்டப்படுவ. நான் சொல்ற பெண்ணைக் கட்டிக்கிட்டா நம்மளோட அந்தஸ்துக்குப் பொருத்தமா இருக்கும். உனக்கு பேரும், புகழும் கிடைக்கும். என் பேச்சை கேட்கலைன்னா… உனக்கு ஒரு பைசா கிடையாது. யோசிச்சுக்கோ” என்று சொன்ன தன்தந்தை, மனம் மாறி தங்களை ஏற்றுக் கொண்ட செய்தி கவிதா, தன்  வாயில் திணித்த இனிப்பை விட தித்தித்தது ஆதவனுக்கு.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உதவாக்கரை (சிறுகதை) – சசிகலா ரகுராமன்

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 13) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்