in ,

விடுபட்ட சிறகுகள் (சிறுகதை) – ராஜேஸ்வரி

எழுத்தாளர் ராஜேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘அதிதி ஓய்வு இல்லம்’ என்ற பொன்னிற எழுத்துக்கள் முப்பதடி உயரத்தில் எழுந்து நின்ற கருங்கல்லாலான திறந்தவெளி வளைவில் ஆங்கிலத்திலும் தமிழிலும் சூரிய ஒளியில் மின்ன, அதை ஏக்கமும் சிறிது அச்சமும் கொண்ட கண்களால் நிமிர்ந்து பார்த்தபடி காரிலிருந்து இறங்கினாள் பார்வதி.

பின்னால் இறங்கிய தன் கணவன் குருபாலனை ஏறிட்டு முகம் இறுகினாள்.

குருபாலன் அவள் பார்வையை தவிர்க்க திரும்ப “வாங்கம்மா, வாங்கய்யா” என்று ஓட்டமும் நடையுமாக வந்த இளைஞனைக் கண்டு முகம் மலர்ந்து புன்னகைத்தார்.

தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்த இளைஞன் அவர்களின் சாமான்களை இறக்கி, இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு மூன்றாவது மாடியில் அவர்கள் தங்கும் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றான்.

வாசலில் கோலமிடப்பட்டிருந்ததை கண்ட பார்வதியின் இறுகிய மனம் சிறிது நெகிழ்ந்தது.

பூட்டைத் திறந்து விட்டு “அம்மா, மூணு மணியிலிருந்து நாலு மணி வரைக்கும் கௌரி நல்லநேரம். பால் காய்ச்சிருங்க. இந்தாங்க, இதுல பால், பழம், வெத்தலை பாக்கு, பூஜை சாமான் எல்லாமே இருக்கு. என்று ஒரு பையை நீட்டி விட்டு “மத்த சாமானெல்லாம் எடுத்துட்டு வந்துடறேன்” என உரிமையாக சொல்லிவிட்டு அகலமான புன்னகையுடன் நகர்ந்தான்.

கைப்பேசி அழைக்க, எடுத்த குருபாலன், “ம்..வந்துட்டோம்பா, இதோ, அம்மாகிட்ட குடுக்கறேன். பாரூ…. இந்தா…சந்தோஷ் பேசறான்” என்று நீட்டினார்.

கண்ணில் நீர்க் கோர்க்க அப்புறமா பேசறேன் என்று ஜாடை காட்டி விட்டு நகர்ந்தாள் பார்வதி. “சந்தோஷ், அம்மா பால் காய்ச்சராங்க, நாளைக்கு பேசுவா. நீ கவலைப்படாத நாங்க நல்லா இருக்கோம்”.

சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தார்.

இரண்டு நாட்கள் கடினமாக நகர்ந்தது. பார்வதியின் வழக்கமான இடைவிடாத பேச்சு கேட்காத காதும் மனதும் வலித்தது குருபாலனுக்கு.

மூன்றாம் நாள் காலை பாரூ.. கேண்டீன்ல “உனக்கு தோசை வாங்கிட்டு வரவா? என்று கிளம்பியவரை தடுத்து, “ஏன்? நாக்குக்கு உளுந்த வடை கேட்குதா? நானே சமைக்கறேன். ஒன்னும் போக வேண்டாம். ஆஸ்துமா இருக்கறது ஞாபகமில்லயா? சந்தோஷ் வேற பக்கத்துல இல்ல. நாம தனியா இருக்கோம்” என்று மிரட்டும் தொனியில் பேசியவளை கண்டு “அப்பாடா, பார்வதி நார்மலாயிட்டா என்று மனதிற்குள் ஆசுவாசமானார்.

“இங்க எல்லாரும் இருக்காங்க நம்மை பாதுகாக்க, பயப்படாம இருக்கலாம்”. என்றார்.

“எத்தனை பேர் இருந்தாலும் பெத்த புள்ள பக்கத்துல இருங்கறமாதிரி வருமா? “என்று சிறிது கோபம் கலந்த வருத்தமான குரலில் கூறினாள்.

“சரி….ன்னு சொல்லு, நாளைக்கே லண்டனுக்கு டிக்கட் புக் செஞ்சிடறேன். சந்தோஷ் நம்மளை போக வேண்டாம்..னு கெஞ்சினான். நீதான் கேட்கல…என்றவரை

இடைமறித்த பார்வதி, “ஆமா, அந்த குளிர் நாட்டுல வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிருக்கு. அக்கம்பக்கத்துல பேச யாருமில்ல. ஒரு கோவில் குளம்..னு ஒன்னுமில்ல. எனக்கு அதெல்லாம் சரிபட்டு வராது. அங்க என்னால காலம் பூரா வாழ முடியாது. நம்ம நாட்டுக்கு வந்தப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு.”

“அப்புறம் ஏன் புலம்பற?”

“ஆமா, என்னோட வேதனை உங்களுக்கு புலம்பலாகத்தான் தெரியும். நீங்க ஆம்பள. பாசமெல்லாம் ஈஸியா விட்டுடுவீங்க. ஏன்? அவன் அங்க தான் வேலை பாக்கணுமா? இங்க வேலை பார்த்து வசதியா வீடு, கார்…னு தானே இருந்தோம். என்னிக்கு கல்யாணமாகி ராதா வந்தாளோ? அவன் மனசை மாத்தி ஒரு வருஷத்துல அவ இஷ்டப்படி சாதிச்சிட்டா. வெளிநாட்டுல பிள்ளையைப் பெத்து அங்கயே செட்டிலாயிட்டாங்க. நாம வயசானவங்க தனியா இருக்கோமேன்னு அக்கறை இருக்கா? உங்களுக்குத்தான் அந்த காலத்துல டெல்லிக்கு மாற்றலாகி போனோம். உங்க அம்மா வந்துடு..ன்னு சொன்னதும் உடனே நாம வரலயா? அதுவும் சந்தோஷ் அப்போ கைக்குழந்தை. நான் உங்க பேச்சை கேட்டு நடக்கலயா? இந்த காலத்துல பெண்கள் எல்லாம் ஒரே அடம். தான் நினைச்சதை சாதிக்கணும்..னு.” புலம்பித் தீர்த்தாள் பார்வதி ஆத்திரம் தீர. அன்று முழுவதும் அவ்வப்போது வருத்தமாகவும், கோபமாகவும், புலம்பலாகவும் பேசியதில் இரவு உணவின் போது தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கினாள்.

பதறிப்போன குருபாலன் அவசர அழைப்பிற்காக இருந்த பட்டனை அழுத்த மறந்து இடதுபக்கம் ஐம்பது அடி தள்ளி இருந்த அடுத்த ஃபிளாட்டின் கதவை தட்ட, அங்கே தங்கியிருந்த சாந்தி வேகமாக வந்து முதலுதவி செய்தாள். பின் இல்லத்திலிருந்த மருத்துவமனையில் சேர்த்தாள்.

இரண்டு நாட்கள் கழித்து.. “ஹாய்,பார்வதி..எப்படி இருக்க? என்று சிநேகமாய் புன்னகைத்தபடி உள்ளே நுழைந்தாள் சாந்தி.

“ஹாய், ரொம்ப ரொம்ப நன்றி. உங்க உதவி இல்லேன்னா இவர் கஷ்டப்பட்டிருப்பார்”. என்றாள் பார்வதி கண்ணில் கண்ணீர் துளிர்க்க.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் வர்றதுக்கு முன்னாடியே கார்த்திக் டாக்டரை கூட்டிட்டு வந்துட்டான். இங்க எல்லாரும் நம்மளை நல்லாப் பாத்துப்பாங்க.” என்றாள் சாந்தி.

“ஆமா…இனிமே இவங்க தானே பாத்துக்கணும்” சொல்லும்போதே சிறிது உதடு துடித்தது பார்வதிக்கு.

“சரி…வா, கொஞ்சம் காலாற நடந்துட்டு வரலாம்” என்றாள் சாந்தி.

மெதுவாக எழுந்து கணவனிடம் கண் ஜாடையில் சொல்லிவிட்டு சாந்தியின் கைப்பிடித்து நடந்தாள். 

“உனக்கு உடம்புக்கு ஒன்னுமில்ல. நீ இன்னும் அடிமையா இருக்க. அவ்வளவுதான்” என்ற சாந்தியை புரியாமல் பார்த்தாள் பார்வதி.

“சுதந்திரம் இல்லைன்னா அடிமை..ன்னு தான் அர்த்தம்.” என்றாள் சாந்தி.

“எப்படி சொல்றீங்க?”புரியாமல் கேட்டாள் பார்வதி.

“ஓ.கே.நீ என்னை சாந்தி..ன்னு கூப்பிடலாம். எனக்கு உன்னை விட ஐந்து வயது தான் அதிகம். அறுபத்தைந்து தான்” என்று சிரித்து விட்டு, “நீ ஆஸ்பத்திரில இருக்கும்போது அன்னைக்கு சாயங்காலம் என்கிட்ட நீ ரொம்ப மனசு விட்டு பேசிகிட்டு இருந்த. நான் காதுல போட்டிருந்த வளையம் உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாய். அப்புறம், இவருக்கு பிடிக்காததனால நான் போடறது இல்ல விட்டுட்டேன் அப்படின்னு சொன்னாய். கல்யாணத்திற்கு அப்புறம் இந்த குடும்ப வழக்கம் ..னு மூணு கல் மூக்குத்தி விருப்பமே இல்லாம போட்டுக்கிட்டிருக்கேன்னு சொன்ன. அந்த மாதிரி நீ சொல்லாத விஷயங்கள் உனக்குள்ள நிறைய இருக்கலாம். நீ விட்டுக் கொடுத்து உன்னுடைய விருப்பங்களை தியாகம் செய்த சின்னச் சின்ன விஷயங்கள் நிறைய இருக்கலாம். பிடித்த விஷயங்களை சுதந்திரமா செய்ய முடியலன்னா அதுக்கு அடிமை என்று தானே பெயர்” என்றாள் சிரித்துக் கொண்டே சாந்தி.

“அப்புறம் உன் மருமகளை பத்தி என்கிட்ட நிறைய சொன்ன. அவ தன் இஷ்டப்படி நடந்துக்கிறா. பிடிவாதமா இருக்கா. அப்படின்னு… இந்த காலத்துப் பிள்ளைகள் தன்னோட சுதந்திரத்தை யாரும் பறிக்கிறதுக்கு அனுமதிக்கிறது இல்ல. அதுதான் உண்மை. நாம மத்தவங்களுக்காக நிறைய தியாகம் செஞ்சு வாழ்ந்தோம். ஆனால் அதனால கிடைச்சது நமக்கு மனஅழுத்தம் தவிர வேறு ஒன்னும் இல்லை. உண்மை அதுதான். இப்போ உனக்கு கிடைச்சுருக்கிறது தனிமை..ன்னு நினைச்சு பயப்படாத, வருத்தப்படாத. இது உனக்கான சுதந்திரமான காலம்னு நினைச்சுக்கோ. உனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சு பாரு. மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்போ உன்னால எல்லாரையும் புரிஞ்சுக்க முடியும்.” பேசிக்கொண்டே தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் சாந்தி.

உள்ளே நுழைந்ததும் ஏதோ பேச்சுலர்ஸ் ரூமிற்குள் வந்தது போல இருந்தது பார்வதிக்கு. ஹாலின் சுவரில் ஆங்காங்கே சில இயற்கை காட்சிகளின் படங்கள், நடிகர்களின் படங்கள் ஆல்பம், பாப் மியூசிக் பாடுபவர்களின் படங்கள், இரண்டு குட்டி பொமரேனியன் நாய்களின் படங்கள், பறவைகளின் படங்கள் எல்லாம் ஒட்டப்பட்டு இருந்தன.

கண்ணிற்கு பசுமையாய் ஆங்காங்கே சில பூந்தொட்டிகளும் பெரிய பெரிய இலை செடிகளும் இருந்தன. டெடி பேர் பொம்மைகள் ஆங்காங்கே பெரிதும் சிறிதுமாக இருந்தன. 

அதை எல்லாம் பார்க்க பார்க்க, பார்வதியின் மனதில் இறுகி கட்டப்பட்டிருந்த சிறகுகள் தன் முடிச்சை அவிழ்த்துக் கொண்டு விடுபட்டது போல் இருந்தது.

சொல்ல மறந்துட்டேனே. இன்னிக்கு ஈவ்னிங் இங்க இருக்கற லேடீஸ் கிளப் ல .. பேக் டூ ப்ளே. அதாவது நாம சின்ன வயசுல விளையாடிய விளையாட்டுகள் எல்லாம் விளையாடிய போறோம். அதனால உன் விருப்பபடி ஆடை, அலங்காரம் செஞ்சுகிட்டு வரலாம்.

வீட்டிற்கு வந்ததும் முதல் காரியமாக பெட்டியில் 30 வருடங்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற சுடிதாரை ஆசையுடன் எடுத்தாள் பார்வதி. மனது தன் சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு பறக்க தயாரானது.

எழுத்தாளர் ராஜேஸ்வரி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆயிரம் ரூபாயும் ஒரு அறையும் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    பேசும் சித்திரம் (சிறுகதை) – ராஜேஸ்வரி