2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அன்று வரப் போகும், புதிய மேலாளருக்காக, அலுவலகமே வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தது.
“மூன்று பேரைப் போட்டு, மூவரும் மறுத்துட்டாங்களாமே “.
“இவர் மட்டும் எப்படி தைரியமாக, வர ஒப்புக் கொண்டார் ?”
“இருவத்தியெட்டு வயசு தானாமே…ஆணழகனாக இருப்பாராமே. “
சதீஷ் என்ற சிறு பையன் அவ்வளவு பெரிய அலுவலகத்திற்கு, அன்று தலைமை ஏற்கப் போகிறார் என்பது தான் அன்றைய பரபரப்புச் செய்தி.
அந்த மூன்று பெண்களும், திருமண வயதில் உள்ளவர்கள்….
“ஏய்! சின்ன வயசுக்காரராம்டி.”
“இன்னும் கல்யாணம், ஆகலையாம்”
“பார்க்கலாம் …எப்படி இருக்கார்னு…” எனக் குசுகுசுவென்று அவர்களுக்குள் பேசி, களுக்கென்று சிரித்தனர்.
சதீஷ், வந்தது முதல் அந்த அலுவலகம் தலை கீழாக மாறியது… அவனுடைய ஜென்மராசியா, இல்லை முகராசியா எனத் தெரியவில்லை…அனைவரும் மந்திரக் கோலுக்கு கட்டுப்பட்டதைப் போல், அவன் ஆணைக்கு அடி பணிந்தனர். மிகவும் கெட்டிக்காரன் எனப் பெயரெடுத்தான்.
வேட்டி ஜிப்பாவில், கல்யாண புரோக்கர் போல காட்சியளிக்கும், அறுபது வயதை நெருங்கும் அவருடையக் காரியதரிசி, இந்த மூன்று பெண்களையும் அழைத்து தனியாகப் பேசினார்.
“இந்த சதீஷ் பையனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை… காலா காலத்துலே கல்யாணம் பண்ண வேண்டியதுதானே, அப்படின்னு கேட்டேன். உங்களுக்கு தெரிந்த பெண் இருந்தால், சொல்லுங்க சார்னு சட்டுன்னு சொல்லுவான்னு நினைக்கலை. அப்பா மாதிரியான என்னுடைய வயசும் அதற்குக் காரணமாக, இருக்கலாம். உங்களில் யாருக்கு அவனைப் பார்க்கலாம்?” எனக் கேட்டார்.
சத்தியமாக இதை அவர்கள் எதிர் பார்க்கவில்லை. மூவருக்குமே அவனைப் பிடித்ததால், என்ன செய்வது எனக் குழம்பி, பின் கலந்தாலோசித்து, அந்த முடிவை சதீஷிடமே விட்டுவிட, மூன்று பேரில் மிகச் சுமாராக இருந்த விமலாவை அவன் மணக்க முடிவு செய்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தன் எதிர்காலம் பற்றித் தெரியாத விமலா, சந்தோஷத்தில் திளைத்தாள்.
கடற்கரையில் ஓயாத அலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அலைகளுக்கு இடையே, இன்னொரு அலையாய் அந்த விஷயத்தை சொன்னான்.
“எனக்கொரு அண்ணா இருக்காரு. இதயம் கொஞ்சம் பலவீனமா இருந்ததால அவர் வேலைக்கும் போகலை. கல்யாணமும் பண்ணலை. இப்போ ஊரில் அம்மாவோட இருக்கார். பலர் அவரை உதவாக்கரை என என் காதுபடவே கூறுவது, வேதனையான விஷயம். கடவுளோட கணக்கை யாரறிவார்? அம்மா காலத்துக்கப்புறம் நம்மோட தான் இருப்பார். நாம அவரை மரியாதையுடன் நடத்த வேண்டும். அதுதான் நான் உன்னிடம் கேட்கும் ஒரே தட்சணை….” என்றான். அவன் மேல் உள்ள மயக்கம் என்ற பெரிய அலை இந்த அலையை விழுங்கியது.
இவ்வளவு வல்லவரு, நல்லவரு, அனாதையான தன்னை விரும்பி மணந்தது, அவளுக்கு இன்பஅதிர்ச்சியாக இருந்தது. அந்த ஆனந்தத்தில் உதித்தவன் தான் ஆனந்தன். அவன் பிறந்த ஆறே மாதத்தில், ஊரில் இருந்த சதீஷின் அம்மா இறந்துவிட, அண்ணா ஊரில் இருந்து, நிரந்தரமாக இவர்களிடம் வந்து சேர்ந்தார்.
குழந்தை “பெப்பா “‘ எனக் கொஞ்சிக் கொண்டு போக, திரும்ப பதிலுக்கு கொஞ்சக் கூடத் தெரியாத அப்பாவியாகவும், எந்த வேலைக்கும் உதவி கேட்க முடியாத உதவாக்கரையாகவும் அவர் இருப்பார் என விமலா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அடிக்கடி மனதில் “இவரால் எந்த உபயோகமும் இல்லை” எனத் தோன்றியது தான் பெருங் குற்றமோ? எல்லோரும் போல் தானே விமலாவும் நினைத்தாள். இதற்குப் போய் இவ்வளவு பெரிய அடியா?
பலவீனமான இதயம் துடித்துக் கொண்டு இருக்க, வலிமையானது என நினைத்த, சதீஷின் இதயம் திடீரென்று முன்னறிவிப்பின்றி நின்று போனது. துடித்து, அழுது, புரண்டு, மீண்டு வந்த போது, “கடவுளின் கணக்கை யாரறிவார்?” என்ற சதீஷின் வார்த்தைகளே ஒலித்தன.
வீட்டில் பேருக்கு ஒரு ஆண், என்ற அந்தஸ்தை அந்த உதவாக்கரை பெற்றதும், பெரியப்பா என்று குழந்தை அவரிடம் ஒட்டிக் கொண்டதும், ஒவ்வொரு வேளையும் குறைவில்லாமல் டிபன், சாப்பாடு, காபி என்று அவர் எதிர் பார்த்ததும் நாளுக்கு நாள், அவர் மீதான வெறுப்பு கூட காரணமானது. சொந்த வீடும், இன்சூரன்ஸ் தொகையும் கை கொடுக்க, யார் தயவுமின்றி வாழ முடிந்தது.
ஆனால், எவ்வளவு முயன்றும் அந்த உதவாக்கரையை, தன் வாழ்வில் இருந்து கழட்டி விட முடியவில்லை. சதீஷ் இல்லாத விரக்தியையும் சேர்த்து அவர் மேல் வெறுப்பைக் கொட்டினாள். அவருடன் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டாள். ஏட்டிக்கு போட்டியாக டிவியை ஆக்ரமிப்பதும் , என சதா அவருடன் ஒரு போரிடும் நோக்கிலேயே வாழ்ந்தாள்.
ஆனந்தன் வெளியூரில் கல்லூரியில் சேரவும், பெரியப்பாவுடன் மட்டுமே இருப்பதைப் பற்றி, அவனிடம் புலம்புவாள்.
“அவர் பாட்டுக்கு இருக்கட்டுமே. நீ என்ன தூக்கி வெச்சிக்கிறாயா?” என்பான். அவன் கல்லூரி முடிப்பதற்குள், அவர் காலமும் முடிந்தது. ஆனந்தன் வேலைக்குச் சேர்ந்து, அலுவலகம், வெளியூர் என சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தான், அம்மாவிடம் புதிதாக தோன்றிய அந்த மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டு பிடித்தான்.
எதிலும் பிடிப்பில்லாமல், தனக்குப் பிடித்த சீரியலைக் கூட பார்க்காமல் இருந்தாள். ஏனோ தானோவென்று ஒரு சமையல். அதையும் வேளா வேளைக்கு சாப்பிடாமல் இழுத்தடித்ததால், அல்சர் வந்து அவதிப்பட்டாள்.
பாதி நாட்கள் சாப்பிடுவதே இல்லை. சமயத்தில், சமைப்பதையும் சாப்பிடுவதையும் கூட மறந்தாள். எங்கோ வெறித்தபடி இருப்பாள். குடும்ப டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போனான்.
“உங்கம்மாவுக்கு, தீவிர மனஅழுத்தம். இப்ப தான் முதல் முறையா, தனிமையை அனுபவிக்கிறாங்க. இந்தியாவில் நாற்பது சதவீதம் பேர், இது போன்ற மன அழுத்தத்தால், பாதிக்கப்படறாங்க. என்ன தான் உங்க பெரியப்பாவைத் திட்டினாலும், அவருக்கு ஒழுங்கா சமைச்சுப் போட்டு, போட்டிக்காக கூடவே தானும் சாப்பிட்டு தன்னையும் கவனிச்சுக்கிட்டாங்க. வீட்டில் எல்லாம் முறைப்படி நடக்க பெரியப்பாவும் காரணமாக இருந்துருக்காரு. அம்மாவின் இந்த தனிமை வியாதியாக மாறுவதற்குள், உடனடியாக நடவடிக்கை எடுக்கணும். நீ உடனே ஒரு கல்யாணம் பண்ணு, எல்லாம் சரியாயிடும்” என்றார்.
“ஐயோ… நான் இன்னும் ரெண்டு வருஷம், மேல எம்.பி.எ படிக்கணும் டாக்டர்..” என்றான்.
“அப்படின்னா, ஒரு ஆளைப் போடு… இப்படியே விட்ட, அம்மாவை மீட்பது கஷ்டமாயிடும்” என்றார்.
“தேங்க்ஸ் டாக்டர். நான் ஏதாவது ஒரு ஏற்பாடு பண்றேன்” என்றான் ஆனந்தன்.
“அம்மா ! நாளை முதல் ஒரு லேடி வேலைக்கு வருவாங்க..சும்மா நீ குடுக்கிற காபி, டிபனை சாப்பிட்டுவிட்டு, கிளம்பிடுவாங்க. நான் வேலைக்கு செல்லும் போதோ, மேல் படிப்புக்கு போகும் போதோ , உனக்குத் துணையா இருப்பாங்க..”
“சரிப்பா. இவங்களுக்கு எவ்ளோ சம்பளம் ? “
“மாசம் இருபதினாயிரம் கேட்குறாங்க. நான் 15000 ரூபா தான் சொல்லியிருக்கேன். அம்மா… பெரியப்பாவோட பண்ண மாதிரி ஏட்டிக்கு போட்டி பண்ணாத…வேற ஆள் கிடைக்காது” என்றான்.
அந்த உதவாக்கரையின் மவுசு இப்போது புரிந்தது… கடவுளின் கணக்கை யாரறிவார்?
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
நல்ல கதை .. மிகவும் அருமையாக இருந்தது
மிக்க நன்றி.