2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“வாங்க சித்தப்பா…..எப்படி இருக்கேள்? வீட்டுல சித்தி, குழந்தேள் எல்லோரும் சௌக்யம் தான” என்று நாகராஜன் விசாரிக்க,
“எல்லாரும் நன்னா இருக்காடா நாகராஜா. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவையாவது நங்கவள்ளி வந்து உங்களையெல்லாம் பாக்கலன்னா என்னவோ போல இருக்கு. இப்பல்லாம் முன்ன மாதிரி கண்ணும் தெரியறதில்ல. வலது கண்ணு சுத்தமா போயாச்சு. இன்னொரு கண்ணுல பாதி பார்வைதான் இருக்கு. அதனால, வெயிலானாலும் ரெண்டு மணிநேரம் கழிச்சு வெளிச்சத்தோட கிளம்பீடறேன்டா. தப்பா எடுத்துக்காத” என்று சந்துரு சித்தப்பா சொல்ல,
“அதெல்லாம் நெனக்கமாட்டேன் சித்தப்பா. இத்தனை வயசுலயும் அண்ணா பசங்கள பார்க்கணும்னு இருபது கிலோமீட்டர் பஸ்ஸுல வந்துட்டு போறேளே. அதே பெருசு” என்றான் நாகராஜன்.
அதற்குள், சமையற்கட்டிலிருந்து டவரா டம்ளருடன் காஃபியை எடுத்துக் கொண்டு வந்த நாகராஜனின் மனைவி அருந்ததி, “சித்தியும், குழந்தேளும் சௌக்யமா இருக்காளா சித்தப்பா?” என்று கேட்டுக்கொண்டே தன் சின்ன மாமனாருக்குக் காஃபியைக் கொடுத்தாள்.
“எல்லாரும் நன்னா இருக்காம்மா. குழந்தைங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கா? ஒழுங்கா பள்ளிக்கூடம் போறாளா?” என்று விசாரித்தவர் தன் மனைவி சீதாலட்சுமி கொடுத்தனுப்பிய மல்லிப்பூவையும், வீட்டில் செய்து கொடுத்தனுப்பிய பட்சணத்தையும் கொடுத்தார்.
“அதெல்லாம் ஒழுங்கா போறா சித்தப்பா. எதுக்கு சித்தப்பா இத்தனை பட்சணம். சித்திக்கு எதுக்கு சிரமம்?” என்று கேட்க ,
“ஒரு சிரமும் இல்ல. ரெண்டு வீட்டுக்குமா சேர்த்து பண்ணினா. அவ்வளவுதான். அவளுக்கும் வீடு, குழந்தைங்கன்னு சரியா இருக்கு. அது தான் என்னோட வரமுடியல. உங்களையெல்லாம் ரொம்ப கேட்டா” என்றார் சந்துரு சித்தப்பா.
பின்ன. வீட்டை விட்டுட்டு, குழந்தேள விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் ஆத்து பொம்மனாட்டி இறங்க முடியுமா. இங்கேயும் அதே கதைதான். அம்மா வீட்டைப் பாத்துண்டா தான் குழந்தேள் நன்னா வளருவா” என்று தன் ஓர்ப்பிடியை(ஓரகத்தி) விட்டுக் கொடுக்காமல் பேசிய மன்னிம்மா, “போன வாரம் தான் சேலத்துல இருந்து கிட்டு வந்துட்டு போனார். அங்கேயும் எல்லாரும் நன்னா இருக்காளாம்” என்றார்.
தன் இளம் பிராயத்திலேயே ராஜாமணியைத் திருமணம் முடித்து வந்தவள் சிவகாமேஷ்வரி. சிறுவயதிலேயே தாய், தந்தையர் இறந்துவிட்டதால் அண்ணன் ராஜாமணிதான் கோயில் பூஜையை செய்து கொண்டு கூடப் பிறந்தவர்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டார். பரம்பரை வீடு அக்ரஹாரத்தில் இருந்ததால் கோயில் வருமானத்தில் ஜீவனம் சென்று கொண்டிருந்தது.
அண்ணா ராஜாமணிக்கு அடுத்து சந்துரு என்கிற சந்திரசேகர். அடுத்து கிருஷ்ணன், தங்கம், செல்லம் என ஐந்து பேரும் கூடப்பிறந்தவர்கள். ஏழைவீடாக இருந்த போதிலும் பாசத்தில் கோடீஸ்வரர்களாக இருந்தார்கள்.
ராஜாமணி தன் மாமன் வழி மகள் சிவகாமேஸ்வரியையே திருமணம் முடித்து வந்த போது, கொழுந்தன்மார்களும், நாத்தனார்மார்களும் சிவகாமி-யை அம்மா ஸ்தானத்தில் வைத்து “மன்னிம்மா” என்றே அழைத்தனர்.
திருமணமாகி அவர்களின் குழந்தைகளும் அவ்வாறே அழைக்க சிவகாமிக்கு “மன்னிம்மா” என்ற பெயரே நிலைத்துப் போனது.
“நீங்க சௌக்யமா இருக்கேளா மன்னிம்மா?” என்று கூடத்தின் மூலையில் கட்டிலில் படுத்திருந்த தன் அம்மாவிற்குச் சமமான மன்னிம்மாவை கொழுந்தனார் சந்துரு கேட்கவும்,
கட்டிலில் மெதுவாக எழுந்து உட்கார்ந்து கொண்டு,”நன்னா இருக்கேம்ப்பா” என்றவள்,
“சின்னவன் பாபு பொண்டாட்டி ரமா, பேரன் குமாரைக் கூட்டீண்டு மாவரைக்கப் போயிருக்கா. பெரியவ அருந்ததி தான் சமையலை கவனிச்சுக்கறா. நான் தான் ஓஞ்சு போயிட்டேன். நீங்க எல்லோரும் சௌக்யம் தானே” என்று பலகீனமான குரலில் கேட்டாள் எண்பத்தைந்து வயதைக் கடந்த மன்னிம்மா.
“இத்தனை நாள் நம்ம குடும்பத்துக்குன்னே உழைச்சுருக்கேள். இதுக்கு மேல என்ன வேணும்? நம்ம உடம்பும் மெஷின் தான மன்னிம்மா. பசங்க தான் எல்லாரும் பெருசாயிட்டாளே. இனி எல்லாத்தையும் அவா பாத்துப்பா. நீங்க பெரியவாளா இருந்து வழிநடத்தினா போறும். ரெஸ்ட் எடுங்கோ” என்று பெற்ற மகனுக்குண்டான பாசத்தோடு சொன்னார் கொழுந்தனார் சந்துரு.
அண்ணன் ராஜாமணி சிவகாமேஷ்வரி தம்பதியருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள். ராஜாமணியின் காலத்திற்குப் பிறகு இரண்டாவது மகன் நாகராஜன் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்துவரும் சேலம் நங்கவள்ளி சோமநாதர் சிவன்கோவில் பூஜை கைங்கரியப் பொறுப்பினை அப்பா ராஜாமணியின் விருப்பப்படி ஏற்றுக்கொண்டு செய்து வந்தான்.
பெரியவன் கணேசன் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்ததால், மனைவி மற்றும் இரு மகன்களோடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தான்.
பணி செய்து கொண்டிருந்த நேரத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கணேசனும் இறந்து போக, மனைவி ராஜேஷ்வரிக்கு போலீஸ் வேலை கிடைத்தது. இளவயதிலேயே கணவனை இழந்த ராஜேஸ்வரி, வேலைக்கும் போய்க் கொண்டு பெற்றோரின் உதவியுடன் தன் இரு மகன்களையும் கவனித்துக் கொண்டாள். பெரியவன் சரவணன் என்கிற ரகு. சிறியவன் சீதாராமன்.
நாகராஜனுக்கு அடுத்தவன் நடராஜன். கோவையில் ஒரு மில்லில் வேலை செய்ததால், குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தான். கடைசி தம்பி பாபு நங்கவள்ளியிலேயே ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்துகொண்டிருந்ததால் இருவரும் திருமணத்திற்குப் பிறகு மன்னிம்மாவோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.
மன்னிம்மாவும், கொழுந்தனார் சந்துருவும் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருக்க, “அண்ணா……அண்ணா……என்று அழைத்துக் கொண்டு வந்த பக்கத்து வீட்டு ராமகிருஷ்ணன்,
“எங்காத்துல டி.வி. சரியா தெரியமாட்டேங்கறது. அதான் இங்க டி.வி. சரியா தெரியறதான்-னு கேட்டுட்டுப் போக வந்தேன்னா” என்றான்.
கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்த நாகராஜன், “இரு. பாத்துட்டு சொல்லறேன்” என்று கோவிலுக்கு எடுத்துக் கொண்ட கோவில் பையைக் கீழே வைத்துவிட்டு டி.வி.யை ஆன் செய்தான்.
“கோவிலுக்கு கிளம்பினதுக்கப்பறம் எதுக்கு மத்த வேலைய தலை-ல போட்டுக்கற நாகராஜா” என்ற மன்னிம்மா,
“உனக்கு வேற வேலையே இல்லையாடா ராமகிருஷ்ணா? மழை நேரத்துல சித்த நேரம் டி.வி. பார்க்காத இருந்தா தான் என்ன குறையப் போறதுன்னேன்?” என்றார்.
“இருக்கட்டும் மன்னிம்மா. நான் பாத்துக்கறேன். திட்டாதீங்கோ” என்றவன், திரையில் காட்சிகள் சரியாக வராததைப் பார்த்துவிட்டு,
“மழை லேசா தூரருதுனால கூட வீடியோ வராம இருக்கலாம். மழைக்கு முன்ன அடிச்ச சூறைக்காத்துல டிஷ்-ல அலைன்மென்ட் மாறியிருக்கும். வாடா….. என்னன்னு போய்ப் பார்க்கலாம்” என்றவர்,
வீட்டின் பின்புற சுவற்றில் ஏணியை வைத்து ராமகிருஷ்ணனின் துணைகொண்டு ஏறி, டிஷ்-ஐ மெதுவாக திருப்ப, திடீரென ஷாக்கடித்து உடனே கீழே விழுந்து மூர்ச்சையானான் நாகராஜன்.
நிமிடத்தில் எல்லாம் நடந்தேறிவிட, “ஐயோ….நாகராஜா….. என்னடா ஆச்சு உனக்கு?” என மன்னிம்மாவும், சந்துருவும் நாகராஜனைத் தொட முயற்சி செய்வதற்குள்,
பதட்டப்பட்ட ராமகிருஷ்ணன், பிறகு உடனே சுதாரித்துக் கொண்டு “ஜயோ….. சுவர யாரும் தொடாதீங்கோ. சுவத்துல மழைத்தண்ணி ஈரம் இருந்ததனால, அண்ணா மேல மின்சாரம் பாய்ஞ்சிருக்கு போல. மெயின் சுவிட்சை அணைச்சுட்டு வரேன். அதுவரை யாரும் எதையும் தொடாதீங்கோ” என்று இன்னும் பெரிய ஆபத்து ஏற்படாமல் தவிர்த்தான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings