in ,

ரட்சகன் (குறுநாவல் – பகுதி 7) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6

இதுவரை

நடப்பவை அனைத்தும் புதிராய் ரகுவுக்கும், நடராஜனுக்கும் தோன்றினாலும் நாராயண நம்பூதிரியின் மீது நம்பிக்கை வைத்தவர்கள், எல்லாவற்றையும் நல்லபடியாக முடித்துக் கொண்டு ஊர்திரும்ப வேண்டும் என்ற எண்ணத்திலேயே கேரளாவை நோக்கி  பயணித்தனர்.

இனி

காரிலிருந்து இறங்கிய நாராயண நம்பூதிரி மன்னர் குடும்பத்திடம் தன் வணக்கத்தைத் தெரிவிக்க, “இங்கு எதுவும் பேசவேண்டாம்.  அந்தரங்க வழியில் போகும் போது எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம்”  என்பதனை மலையாளத்தில் மெதுவாய்ச் சொல்லவும், அனைவரும் கோவில் குளத்தையொட்டி இருந்த அடுத்த தெருவின் கடைக்கோடிக்கு விரைந்தனர்.

நீங்கள் கோவில் விஷயங்களை முடிக்கும் வரையில் நகரில் கோவிலை ஒட்டி யாரும் வராதவாறு போக்குவரத்தை சரிசெய்துவிட்டோம். அரசாங்கம் உங்களுக்கு இந்த விஷயத்தில் முழுபாதுகாப்பு அளிக்கும் என்று மன்னரிடம் சொல்லி விட்டு அரசாங்க அதிகாரி கிளம்பிச் சென்றார். பொதுவாக கோவிலின் நடைமுறைகளில் அரசாங்கம் தலையிட உரிமையில்லை. திருவாங்கூர் சமஸ்தானமும், ஆகமவிதிகளைப் பின்பற்றும் பூஜாரிகள் குழு எடுக்கும் முடிவே இறுதியானது.

நம்பூதிரியுடன் ஓட்டமும் நடையுமாக நடராஜனும், ரகுவும் நடப்பவற்றை நம்பமுடியாமல் பின்தொடர்ந்து சென்றனர். கோவில் குளத்தையொட்டி இருந்த மேற்கு மேற்கு மாட வீதியில்  அனைவரும் நடக்க தெருமுனை வந்ததும்  மன்னர் சுற்றிலும் ஓர் பார்வை பார்த்துவிட்டு, தெருமுனைச் சுவற்றின் மீது படர்ந்திருந்த செடிகளை அகற்றிட, ஓரத்தில்  சிறிதாய் வெளியே நீட்டிக் கொண்டிருந்த ஒரு இரும்புக் கம்பியினைத் தன் கைகளைக் கொண்டு கீழ் பக்கமாக அழுத்தினார் . சுவற்றில் ஒரு  சிறுபகுதி  மட்டும்  சற்றே உள்சென்று, ஒரு விளக்கேற்றும் தீபம்  வைக்கும் திட்டு போன்ற கல்லான அமைப்பு தென்பட்டது.

பிறகு மன்னர் தான் வைத்திருந்த சாவியினைக் கொண்டு விளக்கு வைக்கும் இடத்தில் இருந்த சந்தின் வழியே தான் வைத்திருந்த சாவியைக் கொண்டு சரியாகப் பொருத்தித் வலதுபுறம் திருப்ப, அருகிருந்த கற்கள் சற்றே ஓசையுடன் நகர்ந்து வழி கொடுக்கவும்,  சுரங்கப்பாதை ஒன்று உருவானது.

மன்னர்கள் கோவிலுக்கு வரும் நாட்களில் பொதுமக்களுக்கான வழிகள் கோவிலைச் சுற்றிலும் அடைக்கப்படும் என்பதால், அங்கு நடந்து கொண்டிருப்பவை யாவும்,   யாரும் அறியா ராஜரகசியங்களாகவே இருந்தது.

திறந்த சுரங்கப்பாதையின் உள்ளே அனைவரும் சென்ற மன்னர், உள்பக்க சுவரோரத்தில் இருந்த இரும்புக் கம்பியை மேற்பக்கமாக அழுத்தவும், யாவரும் உள்நுழைந்து வந்த சுரங்கப்பாதையின்   வழி தானாக மூடிக் கொண்டது. ரகு ஒரு முறை தான் நின்ற இடத்தைச் சுற்றிப் பார்த்தான். எதிரில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவிற்கு அந்த இடத்தைச் சுற்றிலும் அமானுஷ்யமான அமைதியுடன் மையிருட்டாக இருந்தது.

“இங்க இருந்து  கோவிலுக்கு எப்படிண்ணா போகணும்?” என்று நம்பூதிரியிடம் ரகு கேட்க,

உடனே,  “யாரும் பயப்படவேண்டாம். கவலைப்படாம என் பின்னாடியே வாங்கோ” என்ற  மன்னர்   பத்மநாப ராஜா,

சுரங்கத்தின் சுவற்றையொட்டி   மூலையில் மாட்டியிருந்த எண்ணெய் படிந்த கட்டையைக் கையில் எடுத்தவர், நம்பூதிரியிடமிருந்து வாங்கிய தீப்பெட்டியின் உதவி கொண்டு தீப்பந்தம் ஏற்றியதோடு இருமருங்குகளிலுமிருந்த எண்ணெய் கொப்பரையில் தீபமேற்ற, சங்கிலித் தொடராக எண்ணெய் செல்வதற்கும் தீபம் எரிவதற்கும் இடமிருந்ததால்  சிறிய கற்தூண்களின்  கொப்பறைகளிலும் தீபங்கள்  எரிய ஆரம்பித்தன.

நடக்க நடக்க சுரங்கப்பாதை வழி குறுகலாகிக் கொண்டே போனது. சற்றே எல்லோருக்கும் மூச்சு விட சிரமமாகவும்,

“இந்த காலத்துல இப்படி ஒரு சுரங்கப்பாதை இருக்கும்.   நாமளும் அதுல   நடந்து போவோம்-னு  நான் கனவுல கூட நெனச்சு  பார்க்கலடா ரகு. இங்க இப்படி வந்ததே என்னோட பூர்வ ஜென்ம புண்ணியமா நான் நெனக்கறேன்டா” என்ற நடராஜ சித்தப்பா,

“எனக்கு ரொம்ப கால்வலிக்கறது ரகு.  இதுக்கு மேல என்னால ஒரு எட்டு கூட நடக்க முடியாது. எனக்கு என்னவானாலும் பரவாயில்லை.  நான் வாழ்ந்து முடிஞ்ச கட்டை. வயசாறது. நீ  திரும்ப வீட்டுக்குப் போயிடு. இது ஏதோ பெரிய விஷயம் போல இருக்கு. நாமெல்லாம் சாதாரண மனுஷா. வாழ்க்கைல இது வரைக்கும்  எல்லாரையும் நாம இழந்தது போதும். நம்ம வீட்டுக்கு நீ ஒருத்தனாவது மிஞ்சணும்” என்று  குரல் உடைந்து நடராஜன் சித்தப்பா வருத்தப்பட்டு சொல்லவும்,

“இன்னும் கொஞ்ச தூரம் தான். நம்மகிட்ட நேரமும் ரொம்ப குறைவா தான் இருக்கு. அதனால் யாரும் எதுவும் பேசாம நடங்கோ. எதுவா இருந்தாலும் காரியத்தை முடிச்சுட்டு பொறுமையா பேசிக்கலாம்” என்ற நாராயண நம்பூதிரி எதைப்பற்றியும் யோசிக்காமல் எல்லோரையும் அவசரப்படுத்தினார்.

கைத்தாங்கலாக சித்தப்பாவைப் பிடித்துக் கொண்ட ரகு, “இவர் என்னோட சித்தப்பா. நடக்கவே முடியலன்னு சொல்றார். நீங்க புரிஞ்சுக்காம மிரட்டற மாதிரி பேசறேளே?” என்று ரகு கோபப்பட,

“நீங்க நெனக்கற மாதிரியெல்லாம் ஒண்ணும் ஆகாது. ஒருவேளை நாம இந்த காரியத்தை செஞ்சு முடிக்காம போனா ஏற்படப் போற அழிவை நெனச்சு அவர் பதட்டப்பட்டு பேசீட்டார். உங்க குடும்பத்தோட பாதுகாப்புக்கு நாங்க பொறுப்பு” என்றார் மகாராஜா.

பிறகு எந்தவிதத் பேச்சும் இல்லாமல் எல்லோரும் அமைதியாக அசதியில் நடந்து கொண்டிருக்க, சென்ற வழி    ஒரு சிறிய கதவுக்கு முன் கொண்டு போய் விட்டது.

திருவாங்கூர் மன்னர்  கதவுக்கருகே  இருந்த சுவற்றின் ஓரத்தின் கீழே இருந்த கல்மீது வரையப் பட்டிருந்த  நட்சத்திரக் கோலத்தை கைகளால் தரைநோக்கி உள்அழுத்த,  நின்ற சமதளத்தின் அருகே இரு பெரிய கற்கள் பக்கவாட்டில் நகர்ந்து கொள்ள  கீழே இறங்கும் படிக்கட்டுகள் கண்களுக்குத் தென்பட்டன.

எல்லோரும் ஒவ்வொருவராக இருபது படிகள் இறங்கி ஒரு பெரிய அறை வழியே நடக்க, மீண்டும் வந்த இருபது படிக்கட்டுகளில் பொறுமையாக ஏறி முடிக்கவும், அனைவரும் அனந்த பத்மநாப சுவாமி கோயில் கருவறைக்கு முன் அறையை அடைந்திருந்தனர்.

அறையின் கதவு முழுவதும் தங்கத்தாலான  வேலைப்பாடுகளைக் கொண்டதாகவும், கதவின் இருமருங்கிலும்  இரு நாகங்கள் ஒன்றையொன்று நேரெதிர் பார்த்துக்கொள்வது போலவும் அமைக்கப்பட்டிருந்தது.

பின்பு மன்னர் தன்னிடமிருந்த ஒரு சாவியைக் கொண்டு  பூட்டினைத் திறக்கவும், நாராயண நம்பூதிரி ஒரு நாகராகத்தினை மனமுருகப் பாடினார். உடனே கருவறைக் கதவின் தாழ்ப்பாளினைச் சூழ்ந்து பின்னிக் கொண்டிருந்த தங்கத்தாலான இரு  நாகங்கள் நெளிந்து நகர்ந்து இருபக்கமும் விலகிக்கொண்டது. பின்னர் மன்னர் தன் பலம் கொண்டு இருகைகளாலும்  கதவினைத் திறக்க அனைவரும் அனந்த பத்மநாப   ஸ்வாமி சயன கோலத்தில் இருக்கும் கருவறையை அடைந்தனர்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நேர்மையை நேசி (சிறுகதை) – மனோஜ் குமார்

    அனுபவம் (சிறுகதை) – மனோஜ் குமார்