in ,

ரட்சகன் (குறுநாவல் – பகுதி 5) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4

இதுவரை

நாராயண நம்பூதிரியின் பூஜையில் நடராஜன் சித்தப்பா சொன்ன விஷயம் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. இதுவரை யாருக்கும் தெரியாத பெட்டியின் விஷயம் தெரிந்ததற்குப் பிறகு அதன் மீதான ஆர்வமும், பயமும் எல்லோர் மனதிலும் குடிகொண்டது.

இனி

“அந்த பெட்டி இப்ப எங்க இருக்குன்னு ஏதாவது ஞாபகம் இருக்கா? அதைக் கட்டாயம் எடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்கு” என நம்பூதிரி ரகுவிடம் சொல்லவும்,

“ம்…….பழைய சாமானெல்லாம் கூடத்துக்கு அடுத்து இருக்கற அறைக்கு மேல இருக்கற பரண் மேல தான்  போட்டு வைப்போம். என்ன ஒன்னு, பழைய காலத்து சாமானெல்லாம் கொஞ்சம் உள்ள தள்ளி இருக்கும். அதனால, எடுக்கறத்துக்கு கொஞ்ச நாழியாகும். ஆனா, சித்த நாழி பொறுத்தா பெட்டி ஏதாவது கிடைக்கிறதான்னு  வேணா தேடிப் பார்க்கறேன்” என்றான் ரகு.

“இந்தப் பெட்டிக்கும், ஆத்துல நடக்கற சம்பவங்களுக்கும் கூட ஏதாவது  தொடர்பிருக்குமோன்னு  எனக்குத் தோணறது.

அதனால, கூட யாரையாவது துணைக்கு வச்சுண்டு அந்த பெட்டி கிடைக்கிறதான்னு பார்த்துடு ரகு” என்றார் நம்பூதிரி.

பிறகு நம்பூதிரியின் சிஷ்யர்களின் ஒருவரின் உதவியுடன் பரணில் ஏறியவன் முன்பக்கமாக இருந்த நவராத்திரி பொம்மைகள் பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துத் தர, அவர் பெட்டிகளை வாங்கி கீழே இறக்கி வைத்தார்.

பிறகு வெண்கலப் பாத்திரங்கள், பண்டிகைக்கென வைத்திருக்கும் பெரிய பித்தளைப் பாத்திரங்கள், பழைய இரும்பு பாத்திரங்கள் மரக்குதிரை, கட்டை வண்டி, பல்லாங்குழி, பரமபத அட்டை என ஒவ்வொன்றாக  பார்த்துக் கொண்டிருந்த போது மற்ற பொருட்களுக்கிடையே   அழகிய வேலைப்பாடுள்ள பழமையான பித்தளைப் பெட்டி ஒன்று கண்ணில் தென்பட்டது. மெதுவாக அதைக் கையில் எடுத்தவன் அதன் கலைநய வேலைப்பாட்டைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனான். அப்படி ஒரு பெட்டி வீட்டில் இருப்பதே அதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது அவனுக்கு  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அழகான மரப்பெட்டியின் நாற்புறமும் கலைநய வேலைப்பாடுகளுக்கு நடுவே இரு பெரிய கரு நாகங்கள்  ஒன்றையொன்று எதிரெதிராக பின்னணிக் கொண்டு ஒன்று சேரும் இடத்தில் அந்தப் பெட்டிக்கான பூட்டினைத் திறக்கும் சாவியின் சிறு துவாரம் அமைந்திருந்தது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே அத்துவாரம் கண்ணுக்குத் தெரிவதாகவும் இருந்தது.

பார்ப்பதற்கே வித்தியாசமான  இருந்த அந்தப் பெட்டியைத் திறக்க நினைத்தவன், அதற்கான சாவியை  அந்த இடம் முழுக்கத் தேடிப் பார்த்தான். பிறகு, எதுவும்  கிடைக்காமல் போகவே,  பெட்டியை எடுத்துக்  கொண்டு மெல்ல கீழே  இறங்கினான் ரகு.

பெட்டியை எடுத்துக்  கொண்டு இறங்கியவன்   நடராஜன் சித்தப்பாவிடம் ஆசையோடு காண்பிக்க, “ இந்த பெட்டி தான். இதைத்தான் எங்கப்பா கொண்டு வந்தார்-னு சொன்னேன்” என்றவரிடம்

“இந்த பெட்டிக்கான சாவி மட்டும் எங்கு தேடியும் கிடைக்கல சித்தப்பா” என்றான் ரகு.

ஒரு நிமிடம் யோசித்த சந்துரு சித்தப்பா ஏதோ ஞாபகம் வந்தவராய், “மன்னிம்மா…….அப்பா ஏதாவது பத்திரமா கொடுத்தா ஒரு டப்பால-ல போடுவயே, அதை எங்க வச்சுருக்கன்னு ஏதாவது ஞாபகம் இருக்கா?” என்று  கேட்டார்.

ம்….. என்று யோசித்தவள், “சமையற்கட்டைத் தொட்டு பாத்திரம் போட்டுவக்கற மரப்பெட்டியில இருந்தா உண்டு. ஒரு சாதாரண இரும்பு பால் டப்பாவுலதான் எல்லாத்தையும் போட்டு வச்சுருப்பேன்” என்றாள்.

“எத்தனை தான் பாத்திர சாமான் பெட்டி வச்சிருப்ப மன்னிம்மா?” என்று சலித்த ரகுவிடம்,

“ஒரு பண்டிகை பருவம், ஸ்ரார்த்தம் -னு எல்லாத்துக்கும் சமைக்க பாத்திரம் வேண்டாமா? அதுக்குன்னு எல்லாத்தையும் அடைப்பாச்சாரமாட்டம் வெளிய வச்சுக்க முடியுமா? இன்னைக்கெல் லாம் ஒண்ணுமே இல்லை. ஒரு நாள், கிழமைன்னு எல்லாரும் சேர்ந்தாலே வீட்டுல இருபது பேர் இருப்பா. அதனால, வேணுங்கற பாத்திரத்தை  எடுத்துண்டு அப்பறம் எல்லா பாத்திரத்தையும் அலம்பி காயவச்சு எடுத்து வச்சுடுவோம்” என்றாள்.

“சரி, சரி. அதுலயும் பார்த்துடறேன்” என்றவன்  மரப்பெட்டியைத் திறந்து

தேடத்தேட எல்லோருக்குமே ஓர் ஆர்வமும், பெட்டிக்குள் என்ன தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஒன்று சேர்ந்து மனம் படபடத்தது. சிறிய சிறிய பாத்திரங்களுக்கு  நடுவே,  பால்பொடி டப்பா போன்று ஒரு இரும்பு டப்பா கண்ணில் படவும்,

“சித்தப்பா மன்னிம்மா சொன்ன மாதிரி இங்க ஒரு இரும்பு டப்பா கிடைச்சுடுத்து” என்றான் ரகு. அந்த டப்பாவைத் திறக்கவும், அந்த சிறிய டப்பாவுக்குள் வீட்டிலிருக்கும் இரும்பு பீரோவுக்கான சாவி, மற்ற கதவுகளுக்கான   சாவி, அதோடு ஒரு பழைய பித்தளை சாவி என அத்தனையும் இருந்தது.

“எவ்வளவு முக்கியமான சாவி, பால் டப்பாவுல போய் போட்டு வச்சுருக்கயே மன்னிம்மா? என்றவனிடம்,

“முக்கியமான பொருள் எல்லாத்தையும் ஒரே இடமா வச்சாதான் ஞாபகம் இருக்கும். புதுசா பத்திரப்படுத்தறேன்னு எங்கயாவது புது இடத்துல வச்சுட்டாதான், சுத்தமா மறந்து போய் தேடீண்டே இருப்பேன்” என்று தன் இயல்பை அழகாய்ச் சொன்னாள் மன்னிம்மா.

எல்லோரும் பெட்டியை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க, கோவில் பூஜை செய்யும் ரகுவைக் கொண்டு பெட்டியைத் திறக்கச் செய்தார் நம்பூதிரி.

ரகு பித்தளைப் பெட்டியைத் திறக்க, “ஓம்” என்ற வைரக்கல் பதித்த தங்கத்தாலான அணிகலன் ஒன்று, பின்பக்கத்தில் சற்று குழிவுடன், பார்க்க வித்தியாசமாக இருந்தது. அதற்குக் கீழே ஓலையில் ஓர் செய்யுளொன்றும் இருந்தது.

“காற்றிலாடும் அம்பலத்தானவன்

கால்கைகளாடும் நடராஜரூபமே

அழிக்குமவனிடத்துக்     காப்பவன் தான் காத்திட

வேலவன் கைதனிற்க் கிடைத்த

திறவுதனை மலைநாட்டில்

சயனத்திலிருக்கு மென்னிடம் கொணர

பார்வை என் படுமிடத்துக்

கிடைக்குமே நல்வழி

தீங்கில்லை ஒரு போதும்

காப்பது எம் பணியே”*

என்று அந்தப் பெட்டிக்குள்ளிருந்த ஓலைச் சுவடியை நன்றாக  உள்வாங்கிப் படித்த நம்பூதிரி,

“நடனத்துக்குத் தலைவன் நடராஜன். உலகத்தின் கடைக்கோடி கதவு திறக்கும் வேளையில், வேறு உலக ஜீவராசிகள் பூமிக்கு வரும் வேளையில், பூட்டினைக் கொண்டு மறுகதவைச் சாத்திவிடு” என்ற சூட்சம அர்த்தம் கொண்ட பாடலிது” என்றவர்,

“ரகு உனக்கு வேற ஏதாவது  பேர் இருக்கா?” என்று கேட்க,

திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டி விரதமிருந்து பிறந்த பையன் இவன். அதனால ரகுவுக்கு சரவணன்-னு இன்னொரு பேரும் உண்டு” என்ற தகவலையும் மன்னிம்மா சொல்ல, ரகு ஆமோதித்தான்.

“எடுத்த நீ வேலனின் மறுபெயராம் சரவணன். என்டே குருவாயூரப்பா…… நின்ட கருணையே கருணை” என்று கண்ணை மூடி மனமுருக வேண்டிக் கொண்ட நம்பூதிரி,

“இந்த பெட்டியைத் பத்தி தெரிஞ்சுக்கறத்துக்கு முன்னாடி ஒரு முக்கியமான வரலாறையும் இந்த குடும்பம் தெரிஞ்சுக்கணும். ஏன்னா இந்த வரலாறோட நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கேள்” என்று தனக்குத் தெரிந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார் .

சில நூறு ஆண்டுகள் முன்பு வரை  கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மூன்றும் தமிழகமாய் இருந்தபோது மலைநாடு என்பது இன்றைய கேரளாவையே குறிப்பதாக இருந்தது. பெரும்பாலும் காட்டுப்பகுதிகள் நிறைந்த இடமாகவே அது இருந்தது.

தமிழ் மன்னர்கள் மேற்குப் பகுதிவழியைக் கடந்து செல்லும் போதெல்லாம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுக்குச் செல்வதும், பத்மநாப ஸ்வாமியை வேண்டிக் கொண்டு நிறைய காணிக்கைகள் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

எனவே, நன்கொடையாக வந்த எண்ணிலடங்கா கோடாணுகோடி செல்வங்களை பாதுகாப்பாக வைக்க காட்டிற்கு ஒட்டியபடி பகைவர் யாரும் அறியாவண்ணம் ஓர் அரண்மனை   அமைப்பது ஒன்றே இதற்கு  சிறந்த வழி என தீர்மானித்தவர்கள் கோவிலையொட்டி, அதன் பின்புறம் நிறைய அறைகளுடன், பாதாள சுரங்கத்தினைக் கொண்ட ஒரு மிகப்பெரிய அரண்மனையையே உருவாக்கினர்.

பொக்கிஷங்களை வைப்பதற்கெனவே  கட்டப்பட்டாலும், அதன் பாதுகாப்பு கருதி மன்னர்களும், மடாதிபதிகளும் கோவிலுக்கு வந்து தங்குவதற்காகக் கட்டப்பட்ட அரண்மனை மாளிகை என்றே   பொதுவெளியில் சொல்லப்பட்டது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மணி எழுதிய லெட்டர் (சிறுகதை) – நாமக்கல் வேலு

    நானிருக்கேன் அம்மா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை