in ,

ரட்சகன் (குறுநாவல் – பகுதி 4) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3

இதுவரை

நம் குடும்பத்தைப் பற்றி இத்தனை தெளிவாகத் தெரிந்திருக்கும் அந்த நாராயண நம்பூதிரி யார்? குடும்பத்தில் நடக்கும் தொடர் மரணங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்றபடியே யோசித்துக் கொண்டிருந்தான் ரகு.

இனி

முதன்முதலில் பார்த்தது போல கொஞ்சம் கூட இல்லாமல் ஆனால் அத்தனை ஆத்மார்த்தமாக தங்கள் பரம்பரையைப் பற்றி நாராயண நம்பூதிரி தன்னிடம் விசாரித்தது ரகுவுக்கு   ஆச்சர்யத்தையும், அவர் மீது மதிப்பையும் ஏற்படுத்தியது.

கோவிலிலிருந்து வீட்டுக்கு வரும்வரை இதுபற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் ரகு.

கோவிலிலிருந்து  வீட்டுக்கு வந்தவன் கை, கால்களை அலம்பிக் கொண்டு ஈஸி சேரில்  உட்காரவும் , மனைவி மைதிலி தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். தண்ணீரை வாங்கிக் குடித்தவன் சில நிமிடங்கள் சிந்தனையிலேயே இருந்தான்.

தங்கள் குடும்பத்தைப் பற்றி நாராயண நம்பூதிரி சொன்ன பிறகு,  வீட்டுக்கு வருமாறு தான் அழைத்தும் உடனே வராமல் மறுநாள் காலை  பூஜைக்கு வீட்டுக்கு வருவதாகச் சொன்னது மட்டும் ரகுவின் மனதுக்கு ஏனோ நெருடலாகப்பட்டது.

சற்று நேரம் அமைதியாக இருந்த ரகுவைப் பார்த்த மைதிலி, “ஏன்னா அமைதியா இருக்கேள்?” என்று கேட்க,

“ஒண்ணுமில்ல. ஏதோ யோசனை. அவ்வளவு தான்” என்றவன், “மன்னிம்மா, உனக்கு நாராயண நம்பூதிரின்னு யாரயாவது தெரியுமா?”என்றான்.

“சிறிது நேரம் நெற்றிப் புருவத்தைச் சுருக்கி யோசித்த மன்னிம்மா, ம்….. ஞாபகம் வரது. உங்க அப்பாவுக்கும் அவருக்கும் நல்ல ஸ்நேகிதம் இருந்தது. அடிக்கடி பார்த்துக்க மாட்டாளே தவிர அந்யோன்யம் ஜாஸ்தி. எந்த ஊர் கோவில்-ல கும்பாபிஷேகம் நடந்தாலும் இவா ரெண்டு பேரும் கண்டிப்பா பூஜை காரியத்துல இருப்பா. ரெண்டு பேருக்கும் வேதத்துல தெளிவான மந்திர உச்சரிப்பும், பக்தியும் இருந்ததால  எல்லாருக்கும் இவா மேல ஒரு பெரிய மரியாதையையே உண்டு. எல்லாம் பெரியவாளோட அனுக்கிரஹம் தான்.  என்ன ஒன்னு, அறிவைக் குடுத்த ஆண்டவன் ஆயுசை தான் குறைச்சுட்டான்” என்று வருத்தப்பட,

“அதையே நெனச்சுண்டு இருக்காத மன்னிம்மா. பரம்பரை பரம்பரையா கோவிலுக்கு சேவகம் பண்றதே  கடவுளோட பூரணமான அனுக்ரஹம் தான. ஆனா, நாராயண நம்பூதிரி  இந்த ஊர்க்காரர் இல்லயே. கேரளாவுல ஏதோ ஒரு கிராமம்-னுல்ல கேள்விப்பட்டேன்” என்றான்.

“ஆமா. கேரளாவுல ஒரு குக்கிராமம் தான். சரி….. திடீர்னு ஏன் நாராயண நம்பூதிரியைப் பத்தி கேக்கற? எதாவது பிரச்சனையா?” என்று கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்ல. அவர் இன்னைக்கு கோவிலுக்கு வந்திருந்தார். தர்மகர்த்தாவும் உடனே அவரைப் பார்க்க வந்து மரியாதை பண்ணினா. அப்பறம் என்னைப் பத்தியும், அப்பா போனதைப் பத்தியும் நம்பூதிரிகிட்ட சொன்னா. அவரும் ரொம்ப ஆத்மார்த்தமா பேசினார். எனக்கு என்னவோ போல ஆயிடுத்து” என்றான் ரகு.

“அது என்னவோப்பா, எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, உங்க அப்பாவும் அவரும் எப்பவும் சில விஷயங்களை தனிச்சு தான் பேசுவா” என்று ஒரு புதிரையும் சேர்த்தே சொன்னாள் மன்னிம்மா.

“அவர் நம்மாத்துக்கு நாளைக்கு வரன்னு சொல்லியிருக்கார். நம்ம கோத்திரக்காரா எல்லாரும் கண்டிப்பா இருக்கணுமாம். நாளைக்கு நம்மாத்துக்கு வந்து  பூஜையைப் பண்ணீட்டுதான், எதுவா இருந்தாலும் சொல்வாராம்” என்றான் ரகு.

“இதைத்தான்டா, நீ கோவில்ல இருந்து வந்தவுடனே முதல்ல சொல்லியிருக்கணும்.  நடராஜனுக்கு ஃபோனைப் போட்டு வரச் சொல்லு. அப்படியே உங்க அத்தைகளுக்கும் சொல்லிடு. நாளை பின்ன எந்த பிரச்சனையும் வரக் கூடாது” என்றாள் மன்னிம்மா.

“அதெல்லாம் சொல்லிட்டேன்.  எல்லாரும் இன்னைக்கு ராத்திரிக்கே வந்துடுவா” என்றான். நீண்டநாள் கழித்து அத்தைமார்களும், சித்தப்பாமார்களும் வந்ததில் மன்னிம்மா முகத்தில் மிகுந்த சந்தோஷத்தைப் பார்க்க முடிந்தது.

தாங்கள் இந்த வீட்டில் சிறுவயது முதல் ஓடியாடிய பழைய கதைகள், தங்களது குழந்தைகள் தற்போது என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்று ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

நாராயணன் நம்பூதிரியைப் பற்றி ரகு சொன்னபோது, தான் கற்றுக்கொண்ட வேதத்தை தனக்குப் பிறகு அடுத்த தலைமுறைக்கு  கொண்டு சேர்க்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் ஒரு குருகுலம் நடத்திக் கொண்டு வருவதாகவும்,  பிரஸ்னம் பார்ப்பதில் வல்லவர் என்றும் தனக்குத் தெரிந்ததைச் சந்துரு சித்தப்பா தெரிவித்தார்.

இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு கூடத்தில் ஜமக்காளத்தை விரித்து படுத்துக் கொண்டவர்களின் மனதில் மறுநாள் நாராயண நம்பூதிரி  வீட்டுக்கு வந்து பூஜையை முடித்து விட்டு என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  மனம் முழுக்க வியாபித்திருந்தது. நீண்டநாள் கழித்து நிறைய நினைவுகளை அசை போட்டவர்கள் அசதியில் உறங்கிப் போயினர்.

மறுநாள் காலை பூஜைக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் மைதிலி தயாராக எடுத்து வைக்க, காலை ஏழு மணி போலவே நாராயணன் நம்பூதிரி அவர் சிஷ்யர் இருவரோடு வீட்டுக்கு வந்தார்.

வீட்டிற்குள் வந்தவர் நேராக முத்தத்தில் கால் அலம்பிக்கொண்டு பிறகு கூடத்தில் வந்தமர்ந்தார். சுவற்றில் மரக்கட்டையால் ரீப்பர் அடித்து மாட்டியிருந்த குடும்பப் படங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டவர், “எல்லாருக்கும் நமஸ்காரம். வீடு ரொம்ப அழகா இருக்கு. இப்படி அக்ரஹார வீடும், வீடு முழுக்க மாட்டி வச்சுருக்கும் குடும்பப் பட ஃபோட்டோவுக்கும் உண்டான அழகு இன்னைக்கு கட்டற வீட்டுல இருக்கா. என்னவோ மாடர்ன்-ங்கற பேர்-ல  புதுசு புதுசா கட்ட ஆரம்பிக்கறா. பழசை மறந்துடாத இருந்தா சரிதான்” என்றவர்

மன்னிம்மாவைப் பார்த்ததும், “ என்னை ஓரமை(ஞாபகம்) இருக்கோ?” என்றார்.

“ம்……எம் புள்ள நாகராஜனோட ஸ்நேகிதன். ஆனா, நடராஜன் தான் இப்ப இருக்கான்” என நடராஜனை அறிமுகப்படுத்தினாள் மன்னிம்மா.

நடராஜனிடம் நலம் விசாரித்தவர்,  “எந்த கவலையும் படவேண்டாம் கேட்டியோ. அந்த சோமேஸ்வரன் எல்லாத்தையும் பாத்துப்பார்” என்றார்.

“பூஜைரூம் எங்க இருக்கு?” என்று கேட்டவரிடம், கூடத்திலிருந்து சமையலறைக்குப் போவதற்கு முன், பூஜைக்கென இருந்த தனி அறையைக் காண்பித்தாள் மைதிலி.

தெய்வீகமாக எல்லா விக்ரஹங்களுக்கும், ஸ்வாமி படங்களுக்கும் பூ வைத்து, விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி வைத்திருந்தாள் மைதிலி. அந்த அறையே தெய்வீகமாக இருந்தது.

“என்டே குருவாயூரப்பா” என்றவாறே  நமஸ்கரித்த நம்பூதிரி பலகையில்  உட்கார்ந்து கொண்டு, ஒருசில ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டு தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் நிறத்திலான சுருக்குப் பையிலிருந்து சோழிகளை எடுத்தார். முதலில் ஸ்வாமியைப் பார்த்து வணங்கியவர், மூன்று முறை  சோழிகளை உருட்டிப்போட்டு பிரஸ்னம் பார்த்தார்.

சில சோழிகள் நிமிர்ந்தும், சில கவிழ்ந்தும் விழ, கண்ணை மூடியவர் ஒருசில நிமிடங்கள் தன் மனக்கணக்கினை கணித்துக் கொண்டார்.

எல்லோரும் அருகிலிருந்த ஒரு பாயில் உட்கார்ந்து கொள்ள,“இந்த வீடு வாங்கி எவ்ளோ வருஷமாறது?” என்ற நம்பூதிரியிடம்

“சரியா வருஷம் தெரியல. ஆனா, தாத்தாவோட  காலத்துல வாங்கினது தான்” என்றான் நடராஜன்.

“தெரிஞ்சோ, தெரியாமலோ ஏதோ தப்பு நடந்துருக்கு. சிவன் சொத்து குலநாசம்னு சொல்லுவா. சிவன் கோயிலுக்குச் போனா உட்கார்ந்துண்டு எழுந்துக்கறச்ச ஒட்டிக்கும் மண்ணைக் கூட  உதறீட்டு வரணும்-னு சொல்லுவா. அதனால ஏதாவது கோவில் பொருள்  உங்களுக்கு தெரியாம இந்த வீட்டுல இருக்கான்னு கொஞ்சம் யோசிங்கோ” என்றார் நாராயணன் நம்பூதிரி.

“கோவிலுக்கு எடுத்துண்டு போற  பிரசாதப் பாத்திரத்தைத் தவிர வேற எதையும் நான் வீட்டுக்கு எடுத்துண்டு வரமாட்டேனே” என்றான் ரகு.

“நீங்க சொல்லுங்கோ” என்று நடராஜனைக் கேட்க,

“சித்தப்பாவுக்கு அத்தனைக்குத் தெரியாது. தாத்தாவுக்குப்பறம் நாகராஜ சித்தப்பா தான் பாத்துண்டா. இப்ப நான் பாத்துக்கறேன் ”  என்றவனிடம்,

“நீ சித்த நாழி மிண்டாண்டு இருக்கயோடா (பேசாமல் இருடா)” என்று கோபமாக சொன்னவர் நடராஜனை ஆழமாகப் பார்த்துவிட்டு, “நீங்க சொல்லுங்கோ?” என்றார்.

சிறிது நேரம் யோசித்த நடராஜன், “எங்க அப்பா கோவிலுக்குப் போகும்போது எப்பவும் கை-ல பின்னிய ஒரு கூடைல தான் பிரசாதத்தை  எடுத்துண்டு போய்ட்டு வருவார். ஆனா ஒருநாள் கூடைல ஒரு சின்ன பெட்டியை எடுத்துண்டு வந்தவர், அலமாரில வச்சுட்டு நாளைக்கு மறக்காம அதை எடுத்துண்டு போகணும்-னு சொல்லீண்டு இருந்தார். ஆனா அப்பறம் அது என்னாச்சுன்னு தெரியல. அப்பாவும் நெஞ்சுவலி வந்து காலமாயிட்டார்.

ஆனா, இத்தனை நாள் இது என் ஞாபகத்துக்கு வந்தது இல்ல. திடீர்னு நீங்க கேட்கவும், இப்ப தான் ஞாபகத்துக்கு வரது. வேற எதுவும் எனக்குத் தெரியாது” என்றார் நடராஜன்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உசுருக்கு உசுரு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மணி எழுதிய லெட்டர் (சிறுகதை) – நாமக்கல் வேலு