2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வத்ஸலா மிகுந்த சிந்தனையுடன், தன் கையிலிருந்த குடும்ப ஆல்பத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வயது ஐம்பத்தி ஐந்து, கணவனை இழந்தவள். கணவன் ரகுபதி மிகவும் நல்லவன். நல்லவர்களைத்தான் கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொள்வார் என்பது உண்மைதான் போலும்.
வத்ஸலா ஹைஸ்கூலில் தலைமை ஆசிரியையாக இருந்தாள். அவர் தலைமைச் செயலகத்தில் செக்ஷன் ஹெட் ஆக இருந்தவர். அவருடைய அத்தனை வேலைகளிலும் வத்ஸலாலைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார். வீட்டு வேலைகளையும் (சமையலையும் சேர்த்துத்தான்), பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ள அவருடைய கிராமத்திலிருந்து ஆதரவில்லாத ஒரு விதவைச் சகோதரியையும் அழைத்து வந்து வீட்டோடு வைத்து விட்டார்.
அன்னம்மா என்று பெயர் கொண்ட அந்தப் பெண்மணியும் தன் பெயருக்கேற்றாற்போல் எல்லோருக்கும் பிரியமானதைக் கேட்டு செய்வதோடு, வத்ஸலாவையும் யாரும் தொந்தரவு செய்யாமல் அவளுக்கு எல்லாவித்தத்திலும் உறுதுணையாய் நின்று பார்த்துக் கொண்டாள். அதனால் வத்ஸலாவிற்கும், ரகுபதிக்கும் அவளை மிகவும் பிடித்து விட்டது.
எல்லாமே நன்றாக ஓடிக் கொண்டிருந்தால் எப்படி? கடவுளை மறந்து விடுவோமில்லயா?
வத்ஸலாவிற்கு மூன்று ஆண்பிள்ளைகள். எல்லோரும் நன்றாகப் படித்து வெவ்வேறு வெளிநாடுகளில் குடியேறி, அந்த நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அந்தந்த நாட்டின் குடிமகனாகி விட்டார்கள். பெரியவன் கனடாவிலும், இரண்டாவது மகன் லண்டனிலும், மூன்றாவது மகன் பிரான்ஸிலும் செட்டிலாகி விட்டார்கள்.
எந்த நாட்டுக் குளிரையும் வத்ஸலா, ரகுபதி இருவராலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதம் இருந்து விட்டு இந்தியா திரும்பி விட்டனர்.
“இனிமேல் எங்களால் உங்களிடம் வந்து இருக்க முடியாது. நீங்கள் தான் எங்களிடம் வரவேண்டும்” என்பார்கள்.
பிள்ளைகள் அவர்கள் சென்ற நாடுகளில் மரமாக வேரூன்றி விட்டார்கள். மரத்தை எங்காவது பிடுங்கி வேறிடத்தில் நடமுடியுமா? அவர்களுக்கோ, இல்லை அவர்கள் பிள்ளைகளுக்கோ சென்னை வந்தால் வெயில் தாங்க முடியவில்லை என்று ஒரே மாதத்தில் ஓடி விடுவார்கள்.
ரகுபதியும் பிள்ளைகளை அவர்கள் போக்கில் தான் விடுவார். அவர்கள் சந்தோஷத்திற்கு எந்தவிதத்திலும் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பது தான் அவரின் குறிக்கோள்.
வத்ஸலா மட்டும் அடிக்கடி நொந்து கொள்வாள்.
“இதற்காகவா மூன்று பிள்ளைகளைப் பெற்றோம்? நம் நாட்டில் இருப்பதற்கில்லாமல் ஒவ்வொருத்தரை ஒவ்வொரு நாட்டிற்கு தாரை வார்த்து விட்டோம்” என்று புலம்புவாள். அப்போதெல்லாம் ரகுபதி தான் அவளுக்கு ஆறுதல் சொல்வார்.
“இதுவரை சில காலம் பெற்றோருக்காக வாழ்ந்தோம். பிறகு நம் குழந்தைகளுக்காக வாழ்ந்தோம். இனிமேல் நாம் நமக்காக வாழ்வோம். உனக்கு நான் எனக்கு நீ என்று வாழ்க்கையைத்தான் என்ஜாய் பண்ணுவோமே, அதைவிட்டு வருத்தப்படுகிறாயே. எல்லாவற்றையும் பாஸிட்டிவாகத் தான் பார்க்க வேண்டும், அப்போது தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்” என்று புத்திமதி கூறுவார்.
பிள்ளைகளும் முதலில் வாரம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மாதம் ஒரு முறை என்றானது. பிறகு அவர்களாகப் பேசுவதே குறைந்து விட்டது. கேட்டால் வேலைப்பளு என்றார்கள், டைம் டிபரன்ஸ் என்றார்கள்.
அந்த நேரத்தில் தான் ரகுபதி அடிக்கடி களைப்பாக இருக்கிறது என்று படுத்துக் கொண்டார். அப்போது இங்குள்ள பிரபல மருத்துவமனையில் பலவிதமான பரீட்சைகள் செய்து இரைப்பையில் புற்றுநோய் என்று கண்டுபிடித்தார்கள். கொரானா வேறு பயங்கரமாக இருந்த வருடம். முக்கியமான எல்லா விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. மூன்று பிள்ளைகளும் போனில் பேசுவதோடு தான் திருப்தி அடைய வேண்டியிருந்தது.
ரகுபதி மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டார். வத்ஸலாவோ தன்னிச்சை ஓய்விற்கு விண்ணப்பித்து தன் ஐம்பதாவது வயதில், கணவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி தன்னிச்சை ஓய்வு பெற்றாள்.
கீமோதெரபி, ரேடியோதெரபி என்று என்னென்னவோ வைத்தியம் செய்தார்கள். ஒவ்வோரு முறையும் கோவிட் டெஸட் வேறு. ரகுபதி மிகவும் நொந்து விட்டார். உடல்வலியும் மனவலியும் சேர்ந்து அவரைத் துன்புறுத்தின. இதில் வத்ஸலா வேறு எங்கு கோவிடால் பாதிக்கப் படுவாளோ என்று அஞ்சினார். அப்போது தான் பிள்ளைகள் தன்னுடன் இல்லையே என்று மனதிற்குள் வருந்தினார்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் இல்லையா வத்சலா? நீயாவது நல்ல ஆரோக்யமாக இருக்க வேண்டும்” என்று கூறுவார்.
இத்தனை வலியில் ஒரு நாள் ஒரு ரெஜிஸ்டர்ட் பத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அதில் வீடு, ரொக்கம், நிலம் எல்லாவற்றிற்கும் இவள் ஒருத்திதான் வாரிசு என்று நிர்ணயித்திருந்தார்.
“இப்போது, இந்த நிலையில் இது அவசியம் தானா? பிள்ளைகள் இருக்கிறார்களே, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் தேவையில்லாமல் மனதை அலட்டிக் கொள்ளாதீர்கள்” என்றாள் கண்களில் நீர் வழிய.
“அசடு… ஆயிரம் இருந்தாலும் உனக்கென்று எல்லாம் வேண்டும். இத்தனை காலம் எங்கள் நலனுக்காக வாழ்ந்த நீ எப்போதும் சுதந்திரமாக, பிள்ளைகளே ஆனாலும் மற்றவர் கையை எதிர்ப்பாரக்காமல் வாழ வேண்டும். அதற்குப் பணம் ஒன்றுதான் ஆதாரம். நீயாக நினைத்தாலும் உன் காலத்திற்குப் பிறகுதான் நீ யாருக்கு விரும்புகிறாயோ அவர்களுக்கு கொடுக்க முடியும் என்று பதிவு செய்திருக்கிறேன். என் காலத்திற்குப் பிறகுதான் நீ மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றவர், பிறகு சில நாட்களிலேயே வத்சலாவைப் பிரிந்தார்.
அவரே அன்னம்மாவிற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை எழுதி வைத்திருந்தார். அவளும் எப்போதும் வத்ஸலாவுடனே இருக்கத்தான் விரும்பி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
ஆனாலும் இப்போதெல்லாம் வத்ஸலாவிற்கு, ‘நாம் ஏன் வாழ வேண்டும்? யாருக்காக வாழ வேண்டும்?’ என்ன எண்ணம் அடிக்கடி மனதில் தோன்றிக் கொண்டிருந்தது.
ஒருநாள் அவள் அருகில் உள்ள கோயிலுக்கு மனஆறுதல் தேடிப் போய் வந்தாள். அப்போது அவளுக்கு இவளுடைய தோழி வசந்தா டீச்சரிடமிருந்து போன்.
“வத்ஸலா, உன் ஸ்டூடன்ட் மாலதியை ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“நன்றாக ஞாபகம் இருக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்து, நம் பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த அழகான பெண். எல்லோரும் அவளை ‘கிளியோபாட்ரா’ என்று கிண்டல் செய்வார்களே. அவள் கூட ஒரு இராணுவ வீரரை கலப்புத் திருமணம் செய்து கொண்டாளே” என்று நினைவு கூர்ந்தாள்.
“ஆம் அவளேதான். அதன்பிறகு அவள் கணவன் சென்ற வருடம் ஏதோ உள்நாட்டுக் கலவரத்தால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார். இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இவ்வளவு நாட்கள் கடந்தும், ஜாதி வெறி பிடித்த அவள் உறவினர்கள் மாலதியை அடித்தே கொன்று விட்டார்களாம். நாங்கள் சில ஆசிரியர்கள் போய் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டோம்” என்றாள் வசந்தா டீச்சர்.
“அப்படியா, அப்படியானால் அந்தக் குழந்தை?” என்றாள் வத்சலா.
“அது ஏதோ குழந்தைகள் காப்பகத்தில் இருக்கிறதாம்”
“டீச்சர் நீங்கள் சொல்வது கேட்க என் நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது. நிலவிற்கு மனிதன் போகும் இந்த காலத்தில் கூடவா சாதி வெறி. அதுவும் அவளுடைய உறவினர்களே என்றால் வேதனையாக இருக்கிறது. நம் கையே நம் கண்ணைக் குத்துமா? இது மிகவும் அநியாயம். மீடியாக்களில் அவ்வப்போது காட்டும் இனக் கொலைகள் எல்லாம் மிகைப்படுத்தப் பட்டவையோ என்று நினைத்தேன்” என்றவள் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டுப் போனை வைத்தாள்.
அன்று இரவு வத்ஸலாவால் தூங்க முடியவில்லை. மாலதியின் அழகிய சிரித்த முகமே தோன்றியது. அடுத்த நாள் தூங்கி எழுந்தவுடன் வசந்தா டீச்சருக்குப் போன் செய்தாள். தன் மனதில் எழுந்த எண்ணத்தைக் கூறினாள். அந்தக் குழந்தையை முறைப்படி தத்தெடுத்து அவளே வளர்க்க விரும்புவதாகக் கூறினாள்.
“நன்றாக யோசித்தாயா? ஏனெனில் நமக்கே வயதாகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் நமக்கே மற்றவர்கள் உதவி தேவை. அதுவுமில்லாமல் நம் வயிற்றில் பிறந்த பிள்ளைகளே நமக்கு உதவுவதில்லை. இதெல்லாம் எப்படியிருக்குமோ? அதுவுமில்லாமல் பெண் குழந்தை வேறு. வளர்ந்த பிறகு அம்மாவைப் போல் பெற்றவர்களுக்குத் தெரியாமல் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டால்? வயதான காலத்தில் இந்த வேதனையெல்லாம் தேவையா? நன்றாக யோசி” என்றாள் வசந்தா டீச்சர்.
“இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. எந்த விவசாயியும் சென்ற வருடம் இந்த மாத்தில் புயல் அடித்ததால், இந்த வருடம் பயிர் செய்யக் கூடாது என்று நிலத்தை தரிசாகப் போட்டு வைப்பதில்லை. எல்லாம் அவரவர் விதிப்படி தான் நடக்கும். அத்துடன் நாட்டிற்காகப் போராடிய ஒரு இராணுவ வீரனின் குழந்தை அநாதை என்ற பெயருடன் வாழக் கூடாது. அதனால் உனக்குத் துணையாக இன்னும் இரண்டு டீச்சர்களோடு கிளம்பு. அந்தக் குழந்தையை சட்டப்படி நான் அழைத்துக் கொள்கிறேன். இந்த உதவியை மட்டும் எனக்கு செய்” என்றாள் உறுதியாக.
ஒரு மாதத்தில் வத்சலா விரும்பியபடியே சட்டப்படி குழந்தை அவளிடத்தில் வந்து விட்டது. ‘கங்கா’ என்று பெயரிட்டாள். கங்கையைப் போல் தூய்மையானவள், வேகமானவள் என்று பொருள் என்றாள். அவள் பிள்ளைகளும் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
‘மனநிம்மதியோடு இருந்தால் அதுவே போதும்’ என்றார்கள்.
கங்கா வீட்டிற்கு வந்த பிறகு தான் வத்சலாவின் மனதில் இருந்த ‘நாம் ஏன் வாழவேண்டும்? யாருக்காக வாழவேண்டும்’ என்ற கேள்வி மனதிலிருந்து நீங்கியது. வாழ்க்கையில் மீண்டும் புது வசந்தம் வந்தது. அவளுக்கு எப்போதோ படித்த ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸின் கவிதை நினைவிற்கு வந்தது. அதன் ஆங்கில வார்த்தைகள் ஞாபகம் இல்லை.
ஆனால் தமிழில் ஒரு சினிமாப் பாட்டு அதே அர்த்தத்துடன் ‘கோடை மறைந்தால் இன்பம் வரும்‘ என்று அடிக்கடி அவள் மனதில் தோன்றியது.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings