in ,

சரஸ்வதியும் சாஹித்ய அகாடமியும் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

குக்கரில் இருந்து விசில் சப்தம் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. தன் ஆஃபீஸ் அறையில் இருந்து பாஸ்கர் சமையல் அறையை எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தான். சரசு எழுந்து வந்து குக்கரை நிறுத்துவாள் என்று எதிர்பார்த்தான் பாஸ்கர்.

இந்த வீட்டில் ஏற்கனவே பலமுறை குக்கரில் விசில் சப்தம் வந்து கவனிக்காமல் விட்டதில் சேப்டி வால்வு பிய்த்துக் கொண்டு, குக்கரின் மேல்மூடி பிய்த்துக் கொண்டு கூரையை தொட்டு விட்டு கீழே வந்து விழுந்திருக்கிறது. அப்போது கூட இவளுக்கு புத்தி வரவில்லையென்றால் என்ன செய்வது?

இவனுக்குக் கோபத்தில் காதுகள் கூட சூடாகின.

“ஏய் சரஸ், குக்கர் கத்துவது காதில் விழவில்லையா?” என்று கத்தினான்.

“ஏன் உங்களுக்குக் காதில்லையா?” என்று கத்தினாள் பதிலுக்கு ‘ஆணுக்குப் பெண் இங்கே நிகர்’ என்ற பாரதியாரின் பாட்டுக்கு எடுத்துக்காட்டான புதுமைப் பெண் அல்லவா.

“குக்கர் வெடித்ததில் நம் காலனியில் உள்ள எல்லா மக்களும் நம் வீட்டில் கூடி விட்டார்களே, மறந்து விட்டாயா?” என்றான்.

“நான் ஒன்றும் மறக்கவில்லை. நீங்கள் போய் ஸ்டவ்வை குறைத்து வைப்பீர்கள் என்று நினைத்தேன்”

“அம்மணி சமையல் முடிக்காமல் அப்படி என்ன அவசர வேலையோ?”

“’குடும்பம்’ பத்திரிகையில் ஒரு சிறுகதை போட்டி வைத்திருக்கிறார்கள். இறுதித்தேதி முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. அதற்குத் தான் என் கற்பனைக் குதிரையைத் தட்டிக் கொண்டு இருக்கிறேன்”

“ஏன் குதிரை நொண்டிக் குதிரையோ? ஓடாமல் படுத்து விட்டதோ?”

“ரொம்ப அபசகுனம் பிடித்தவர் நீங்கள். பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?” என்றாள்.

“யாரோ பரிசு வாங்கப் போகிறார்கள்! அது எவ்வளவாக இருந்தால் என்ன?” பாஸ்கர் சிரித்துக் கொண்டே.

பாஸ்கரை கேவலமாகப் பார்த்துக் கொண்டே ஸ்டவ்வைக் குறைத்து விட்டு வந்தாள்.

“மனிதர்களாகப் பிறந்தால் கொஞ்சமாவது ‘பாஸிட்டிவ் எனர்ஜி‘ வேண்டும். உங்கள் குடும்பத்திற்கே தான் அது கிடையாதே” என்றாள் ஏளனமாக.

“ஆமாம், எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பாஸிட்டிவ் எனர்ஜி கிடையாது. நெகட்டிவ் எனர்ஜியும் கிடையாது. எல்லோருக்கும் நியூட்ரல் எனர்ஜி தான்” என்றான் கேலியாக.

ஆனால் அவளோ இவன் சொல்வதை காதில் வாங்கிக் கொண்டாற் போல் தெரியவில்லை. கால் மேல் கால் போட்டுக் கொண்டு லேப்-டாப் எதிரில் மீண்டும் அமர்ந்து கொண்டாள். பெரிய ஷேக்ஸ்பியர் என்று நினைப்பு!

இதேபோல் கதை எழுதுகிறேன் என்று அவள் அடிக்கும் கூத்துக்கு அளவேயில்லை. பாலை அடுப்பில் வைத்து விட்டு ஏ-4 பேப்பர்களை அடுக்கி வைத்துக் கொண்டு எழுதுவாள். அடுப்பில் வைத்த பால் பொங்கி தரையில் வழியும். அடுப்பும் அணைந்து காஸ் நாற்றம் அடிக்கும் போது தான் அவளுக்கு அடுப்பில் வைத்த பாலே ஞாபகத்திற்கு வரும்.

ஒருமுறை, முதல் நாள் செய்த சாம்பாரை அடுப்பில் சூடு செய்வதற்காக வைத்தவள், அது சூடாவதற்குள் நாம் ஒரு பக்கம் ஏதாவது கதை எழுதலாமே, ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று எழுத உட்கார்ந்தாள்.

‘கதையும் எழுதி முடியும், குழம்பும் சூடாகும்… ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்று நினைத்து இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள்.

கதையின் ஜோரில் சாம்பாரை மறந்தாள். ஏதோ முக்கியமான பேப்பரை மறந்து, அதை எடுக்க முதல் மாடியிலிருந்த தன் அபார்ட்மமன்டிற்கு வந்த பாஸ்கருக்கு மாடிப்படி ஏறும்போதே ஏதோ கருகிய வாசனை அடித்தது.

தரை தளத்தில் அபார்ட்மென்ட்டில்  மூக்கைப் பிடித்துக் கொண்டு, மேலே பார்த்துக் கொண்டிருந்த  அலமேலு மாமி பார்த்தவுடன் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.

“சரஸ் அடுப்பில் ஏதோ தீய்கிறது’ என்று நான் கத்த

“ஐயே பக்கத்து வீட்டில் தான் ஏதோ தீய்கிறது” என்று சொன்ன பிரகிருதி அவள்.

எத்தனையோ முறை பாத்திரம் நிறைய அடுப்பில் தண்ணீர் வைத்துவிட்டு வந்து கதை எழுத உட்கார்ந்து விடுவார் அம்மணி. தண்ணீரும் ஆவியாகி பாத்திரமும் தீய்ந்த பிறகு தான் கதையின் நினைப்பில் இருந்தே விடுபடுவார் மாண்புமிகு கதாசிரியர்.

“உனக்கு லட்சுமி, அநுத்தமா, ரமணிச்சந்திரன் என்று நினைப்பு. அதனால் தான் உன் நேரத்தையும் வீண்டித்துக் கொண்டு, போஸ்ட்டேஜ், நோட்டுப் புத்தகம், ஏ-4 பேப்பர் என்று என் பணத்தையும் பாழடிக்கின்றாய்” என்று கத்தினான் பாஸ்கர் ஒரு நாள்.

உடனே அவள்கண்களில் கண்ணீர் வழியும். அதைப் பார்த்தவுடன் இவன் மனமும் இளகிவிடும்.

“பாரடா கண்ணா , நீ இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியும் உன்னுடைய ஒரு கதையும் பிரசுரமாகவில்லை. எல்லாம் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி வருகிறது. இதனால் உனக்கும் மனக்கஷ்டம். நீ கஷ்டப்பட்டால் எனக்கும் மனம் மிகவும் சங்கடப்படுகிறது. இந்த நேரத்தில் தூங்கி ரெஸ்ட் எடுத்தால் கூட நன்றாக இருக்கும். உன் ஹெல்த்தும் நன்றாக இருக்கும்” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

அப்போது அவள், “மாமா, எனக்கு ஒரு இரண்டு மாதம் டைம் கொடுங்கள். என்னை மட்டமாக தாழ்த்திப் பேசாதீர்கள். ரொம்ப சூப்பராக இல்லாவிட்டாலும், சுமாரான கதையாவது  ஏதாவது ஒரு மேகஸினில் எழுதி வெளியிட்டுக் காட்டுகின்றேன். அப்படி எதுவும் இந்த இரண்டு மாதத்தில் முடியவில்லையென்றால், பிறகு எழுதுவதையே நிறுத்தி விடுகின்றேன். யாரும் பிறக்கும்போதே கதாசிரியர் லட்சுமியாகவோ, அநுத்தமாவாகவோ பிறப்பதில்லை. அவர்களுக்கும் ஏதோ ஒரு நேரத்தில் ஒரு பொறி தட்டி இருக்கிறது. அவர்களுக்கு வீட்டில் உள்ளோர் ஆதரவும் கொடுத்திருக்கிறார்கள்” என்று கெஞ்சினாள்.

பாஸ்கருக்கும் அவளைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது .

“நீ உன் விருப்பம் போல் இரு சரஸ். ஆனால் சமையலை முடித்து விட்டு எழுது, இல்லை ஏதாவது ஒரு ‘ஆப்’பில் சாப்பாடு ஆர்டர் செய்து விடு. இப்படி ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று பாதி சமையலில் எழுத உட்காராதே” என்றான்.

அதன் பிறகு சரஸ்வதி, ஏதோ ஆபீசிற்குப் போவது போல் காலையில் ஆறுமணிக்கெல்லாம் எழுந்து சமையல் வேலையை மிக வேகமாக முடித்து விட்டு, குளித்து பூஜையெல்லாம் முடித்து விட்டு ஏதோ எழுத வேண்டும் என்று உட்காருவாள்.

ஒருநாள் பாஸ்கர் ஹாலில் சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஏதோ ஒரு வேடிக்கை நிகழச்சி பார்த்துக் கொண்டு எதையோ கொரித்துக்கொண்டு ரொம்ப ரிலாக்ஸாக உட்கார்ந்திருந்தான்.

அப்போது சரஸ்வதி தன் ஐ-பேடைக் கையில் எடுத்துக் கொண்டு அவனிடம் வந்தவள்

“ஏங்க, எனக்காக ஒரு பத்து நிமிடம் ஒதுக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“என் வாழ்நாள் முழுவதுமே உனக்காகத் தானே வாழ்கிறேன் சரஸ்வதி. என்ன செய்ய வேண்டும் சொல். பக்கத்தில் இருக்கும் பகோடாக் கடையில் போய் பகோடா வாங்கி வரட்டுமா? அல்லது நம் நாயர் மெஸ்ஸில் போய் பரோட்டா சால்னா வாங்கி வரட்டுமா?” என்றான் நாடக பாணியில் .

“அதெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். படித்துக் காட்டட்டுமா? ஜஸ்ட் ஒரு பத்து நிமிடம் தான் ஆகும். கதை பற்றிய உங்கள் கருத்தைச் சொல்கிறீர்களா?” என்றாள்.

‘போரடிக்குமே’ என்று சொல்ல நினைத்தவன் வாயை மிகவும் கஷ்டப்பட்டு மூடிக் கொண்டு “படி சரஸ்” என்றான் .

“கதையின் தலைப்பு மண்ணும் மனிதர்களும்” என்று படித்தாள். கொஞ்ச நேரம் தான் கேட்டான். அதற்குள் அவனுக்குத் தூக்கம் தூக்கமாக வந்தது. தூக்கத்தில் லேசாக ஆடிய தலையை, கதை நன்றாக இருப்பதால் தலையை ஆட்டுகிறான் என்று நினைத்துக் கொண்டாள் சரஸ்வதி.

“கதை  எப்படி இருக்கிறது?” சரஸ்வதி.

“ரொம்ப ஜோராக இருக்கிறது” என்றான் பாஸ்கர் ‘நமக்கேன் வம்பு’ என்று நினைத்துக் கொண்டு.

‘அந்த கதையில் ஒரு காதல் இல்லை, ஒரு ஜோக் இல்லை, ஒரு சென்ட்டிமென்ட் இல்லை. கதையின் தலைப்பு மாதிரியே கதையும் மண்ணாகவே இருந்தது.  எப்படியோ போகட்டுமடா சாமி, நம்மை ஆளை விட்டால் போதும்’ என்று ஆபீஸ் வேலை பார்ப்பது போல் கம்ப்யூட்டர்  எதிரில் போய் உட்கார்ந்து கொண்டான் பாஸ்கர்.

இப்படியாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் வாழ்க்கை ஓடியது. ஒரு நாள் டிரெயினிங் என்று சொல்லி பாஸ்கரை ஆபீசில் கல்கத்தா தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினார்கள். முதலில் இரண்டு மாதப் பயிற்சியானது மூன்று மாதமாக வளர்ந்தது.

வீட்டிற்கு வந்ததும், கல்கத்தாவிலிருந்து வாங்கி வந்த பெங்கால் காட்டன் புடவைகளை மனைவியிடம் கொடுத்தவன், “என் கதாசிரிய மனைவிக்கு என் அன்புப் பரிசு” என்று கொடுத்தான்.

அப்போது தான் அவனுக்கே ஞாபகம் வந்தது. “சரஸ், நான் கல்கத்தாவிற்குப் போகு முன் ஒரு கதை படித்துக் காட்டினாயே, தலைப்புக் கூட ஏதோ ’மண்ணும் மனிதர்களும்’ என்று. என்னாயிற்று அந்தக் கதை?” என்றான் ஆவலோடு. ‘அது டுமீல் தான்’ என்று நினைத்துக் கொண்டான் மனதிற்குள்.

“ஒரு நிமிடம் இருங்கள்” என்று உள்ளே ஓடினாள்.

உள்ளே ஓடியவள் ஒரு புத்தகத்தையும், மூவாயிரம் ரூபாய்க்கான செக்கையும் கொண்டு வந்து கொடுத்தாள். அந்தப் புத்கத்தில் அவள் கதை பிரசுருக்கப்பட்டிருந்தது. பாஸ்கருக்கோ தலை சுற்றியது. இந்தக் கதையை பிரசுரித்ததும் இல்லாமல் பரிசுப்பணம் வேறு கொடுத்திருக்கிறார்கள்  என்று ஆச்சர்யப்பட்டான்.

‘நம் மூளைக்கு எட்டாத ஓர் உண்மை அந்தப் பத்திரிகை ஆசிரியரின் மூளைக்கு எட்டியிருக்கிறது போலும்’ என்று நினைத்துக் கொண்டான் .

“இது மட்டுமில்லை மாமா. என்னிடம் உள்ள மற்ற சிறுகதைகளையும் கேட்டு  ஒரு சிறுகதை தொகுப்பாகவே வெளியிட்டு இருக்கிறார்கள்” என்றாள் மிகுந்த சந்தோஷத்தோடு.

அந்தப் புத்தகத்தையும் கொண்டு வந்து  காட்டினாள். பாஸ்கரால் எதையும் நம்ப முடியவில்லை.

‘எல்லா வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்கிறார்கள். ஆனால் என்மனைவியே வெற்றியின் மொத்த உருவமாக இருக்கிறாள்’ என்று உள்ளுக்குள் பெருமைப்பட்டான் .

‘இது நிஜமா?’ என்று ஒரு முறை தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.

அந்த வருடம் சாஹித்ய அகாடெமி அவார்ட் சரஸ்வதியின் சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. ஒரு லட்சம் பரிசும், அதைவிட மனம் குளிரும் வண்ணம் எல்லோருடைய பாராட்டும் கிடைத்தது.

பாஸ்கர் ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டான். யாரையும் மட்டம் தட்டுவது மிக எளிது, ஆனால் ஆதரவாகப் பேசி ஊக்குவித்தால் கிடைக்கும் பலன் மிகப் பெரியது.

அவன் வீட்டின் ஹாலில் மனைவியின் அருகில் உட்கார்ந்து சன் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தான் பாஸ்கர். சரஸ்வதியின் கைகளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான்.

“என்னை மன்னித்து விடு சரஸ். உன்னை எப்படியெல்லாம் கேலி செய்திருக்கிறேன். நீ என்ன கதாசிரியர் லட்சுமியா இல்லை அநுத்தமாவா என்று கூட கேலி செய்தேன். ஆனால் நீ எதற்கும் கலங்காமல் உன்னை நிரூபித்து விட்டாய். அதற்கு என் வாழ்த்துக்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வழக்கு. இனி ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு ஆண் இருக்கிறான் என்று உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வோம்” என்றான் உணர்ச்சிகள் கொப்பளிக்க.

“மாமா, இனிமேல் எழுதலாமா ,இல்லை வேண்டமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் சரஸ்வதி .

அழகான கோல்டன் பேனா ஒன்றை மனைவிக்குப் பரிசாகக் கொடுத்தான் பாஸ்கர்.

“பாடப் பாடத்தான் ராகம் அவ்லவா, அதே போல எழுதிக் கொண்டே இருந்தால் உற்சாகமும் ஆதரவும் அளித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஒரு ஆணுக்கு உயிர் கொடுத்தவளே பெண். கதைக்கும் தானா உயிர் கொடுக்க முடியாது என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன்” என்றான் பாஸ்கர் பெருமையுடன்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புது வசந்தம் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    பெரியாத்தா (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி