in

பொங்கலோ பொங்கல்! (கீதா சாம்பசிவம்) – – January 2021 Contest Entry

பொங்கலோ பொங்கல்!

தீபாவளி வந்தாச்சானு மட்டும் தான் கேட்கணுமா என்ன? பொங்கலும் வந்தாச்சானு கேட்கலாம் இல்லை?  அதான். இந்த வருஷம் எந்தப் பண்டிகைக்கும் தனிப் பதிவு போடவே இல்லை 🙂

எல்லாம் நிறையப் போட்டாச்சு என்பதோடு அந்தச் சமயங்களில் இருந்த சூழ்நிலையும் ஒரு காரணம்

இப்போக் கொஞ்சம் சாவகாசமாப்  பொங்கல் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்

தை நீராடல் – பாவை நோன்பு

சங்க காலத்தில் “தை நீராடல்”, “பாவை நோன்பு” என்றெல்லாம் அழைக்கப்பட்டது பொங்கல் பண்டிகையாக இருக்கலாம் என்பது சிலர் கூற்று.  

ஏனெனில் நல்ல மழையையும், விளைச்சலையும் காண்பதற்காகவே இயற்கை அன்னையை, பூமித்தாயைப் போற்றிக் கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்

மார்கழி மாதம் முழுவதும் வாசலில் பெரிய பெரிய கோலங்களைப் போட்டு அதில் சாண உருண்டைகளை வைத்துப் பூஷணிப்பூ / பறங்கிப்பூக்கள் வைப்பது உண்டு

இதில் உள்ள தாத்பரியம் என்னவெனில், முன்பெல்லாம் அந்த வீட்டில் திருமணம் செய்யத் தயாராகக் கன்னிப் பெண்கள் இருப்பதைக் குறிக்கும் என்பார்கள். இப்போதெல்லாம் அழகுக்கு மட்டுமே கிடைக்கும் இடங்களில் / ஊர்களில் வைக்கப்படுகிறது.  

சாண உருண்டையைப் பிள்ளையாராகக் கருதுவார்கள்.  இந்தச் சாண உருண்டையை ஒரு சிலர் வரட்டியாகத் தட்டிப் பொங்கல் அன்று அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவதாகவும், மற்றும் சிலர் வழக்கப்படி சாண உருண்டைகள் சேகரிக்கப்பட்டு, பொங்கலுக்கு மறுநாள் ஒரு கூடையில் அவற்றைப் போட்டுக் கொண்டு சிறு குழந்தைகள் ஒன்று கூடிக் கிளம்புவார்கள்.  

வீடு வீடாகச் சென்று கும்மியடித்துப் பாடிக் காசுகளை வாங்கிக் கொண்டு, அதில் பொரிகடலை, நாட்டுச் சர்க்கரை வாங்கிக் கூடைப் பிள்ளையாருக்குப் படைத்து விட்டு, பின்னர் ஊர்ப் பொது வாய்க்காலில் அந்தச் சாண உருண்டைகளைக் கரைப்பார்கள்.  இந்த வாய்க்காலில் கரைக்கப்படும் சாணம் எருவாகி, ஊரின் நிலங்களுக்கு நீர் பாய்கையில் பயிர்களைச் செழிப்பாக வளர வைக்கும் என்பது நம்பிக்கை. 

கும்மிப் பாடல்

ஒரு மாதம் கோலத்தில் வைத்த சாணப் பிள்ளையார் அந்த மாதம் முழுதும் சுவரில் காய்ந்து கொண்டு இருப்பார்.  ஆனாலும் வாய்க்காலில் கரைக்கையில் சிறு குழந்தைகளுக்குத் துக்கம் தாங்க முடியாமல் அழுகை வந்துவிடும்.  அப்போது அவர்கள் பாடும் கும்மிப் பாடல் கீழ்க்கண்டவாறு:

“வட்ட வட்டப் பிள்ளாரே, வாழக்காயும் பிள்ளாரே

உண்ணுண்ணு பிள்ளாரே ஊமத்தங்கா பிள்ளாரே

வார வருசத்துக்கு வரவேணும் பிள்ளாரே

போன வருசத்துக்குப் போயி வந்தீர் பிள்ளாரே

வாடாம வதங்காம வளத்தினோமே பிள்ளாரே

வாய்க்காலு தண்ணியிலே வளர விட்டோம் பிள்ளாரே

சிந்தாம சிதறாம வளத்தினோமே பிள்ளாரே

சித்தாத்துத் தண்ணியிலே சிந்துறோமே பிள்ளாரே

போய் வாரும் போய் வாரும் பொன்னான பிள்ளாரே

வர வேணும் வர வேணும் வருசா வருசம் பிள்ளாரே”

என்று பாடி ஆடிக் கொண்டு பிள்ளையாரை வழியனுப்பி வைப்பார்கள். இனி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் விதம் குறித்துப் பார்ப்போமா?

போகிப் பண்டிகை

பொங்கல் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவது நம் மரபு.  முதல்நாளை போகி என்னும் “பழையன கழிதல்” நடைபெறும். ஊர்ப் பொதுவில் ஓர் இடத்தில் அவரவர் வீட்டுப் பழைய பாய், கூடைகள், முறங்கள் போன்ற இயற்கையான நாரினால் செய்யப்பட்ட பொருட்களைப் போட்டு எரிப்பார்கள்

இப்போது போல் அப்போது ப்ளாஸ்டிக் குடங்களோ, ப்ளாஸ்டிக் பாய்களோ கிடையாது.  மக்கள் இயற்கையாய்க் கிடைக்கும் நார்களில் இருந்தும், பூமியில் கிடைக்கும் மண்ணிலிருந்துமே பாத்திரங்கள், பாய்கள், படுக்கைகள் செய்து பயன்படுத்தினார்கள்.  இவற்றை எரித்துப் புதியதாய்ப் பொங்கலுக்கு வாங்குவார்கள்.  

இந்த வழக்கம் இன்று ரப்பர், ப்ளாஸ்டிக், தெர்மாகோல், பாலிதீன் பைகள் போன்றவற்றைப் போட்டு வலுக்கட்டாயமாய் எரித்து மூச்சு விடத் திணறும் அளவுக்குப் புகைமண்டலத்தை எழுப்பும் வழக்கமாக ஆகி விட்டது.

அதோடு முன்பெல்லாம் கிராமங்களில் இந்தப் பழைய பொருட்களைப் போட்டு எரிக்கும் தீயிலிருந்தே நெருப்பு எடுத்துப் போய்ப் பொங்கல் பானைக்கு அடுப்பு மூட்டும் வழக்கமும் இருந்து வந்தது

வீடு மெழுகுதல்

பொங்கலுக்கு முதல் நாளே வீடு சுத்தம் செய்யப்பட்டுப் பொங்கல் பானை வைக்கும் இடம் நல்ல பசுஞ்சாணத்தினால் சுத்தம் செய்யப்படும்.  சாணத்தினால் மெழுகுவார்கள். அவரவர் வழக்கப்படி அரிசி மாவினால் கோலம் போடுவார்கள்.  

ஒரு சிலர், அடுப்பு வைக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் போலக் கோலம் போடுவார்கள்.  சில வீடுகளில் பொங்கல் வைத்துப் பின்னர் வழிபாடு நடத்தும் இடத்தில் சூரியன், சந்திரன் போல் கோலம் போடுவார்கள்.  இது அவரவர் வீட்டு வழக்கத்தை ஒட்டியே வரும்.

மூன்று கற்கள் வைக்கும் காரணம்

மனித மனத்தின் முக்கிய மூன்று கரணங்கள் ஆன, மனம், வாக்கு, காயம்  ஆகியவற்றை நினைவு கூரும் விதமாக, மூன்று கற்கள் முக்கோணமாய் வைக்கப்பட்டு, பொங்கல் வைக்கப்பட்டதாய்த் தெரிய வருகிறது.

முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்

பொங்கல் பானை

பொங்கல் வைக்கப் போகும் பானை, ஒரு சிலர் புத்தம் புதியதாக வாங்குவார்கள்.  மண் பானை இல்லாமல் வெண்கலமாய் இருந்தாலும் சில வீடுகளில் புதிய பானை வாங்குவது வழக்கம்.  

மற்றபடி, சென்ற வருடங்களில் உபயோகித்த வெண்கலப் பானையையே நன்கு சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி, மஞ்சள் கொத்துக் கட்டிப் பாலும் நெய்யும் சேர்த்து, வீட்டில் இறைவனை வழிபடும் பூஜை இடத்தினருகே வைத்து வழிபட்டு, பின்னர் பொங்கல் பானையை வைக்கவெனத் தயார் செய்த அடுப்பில் நல்ல நேரம் பார்த்து ஏற்றுவார்கள்.

மகர சங்கிராந்தி

சூரியன் மகர ராசியில் நகர ஆரம்பிப்பதால் மகர சங்கிராந்தி எனவும் அழைக்கப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையில், பொங்கல் வைப்பதை சங்கராந்தி காலம் ஆரம்பிக்கும் தை மாசம் பிறக்கும் நேரத்தில் செய்வதைச் சில வீடுகளில் வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள்.  

சூரியன் தெற்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதையே மகர சங்க்ரமணம் அல்லது உத்தராயண புண்யகாலம் என்கிறோம். பொங்கல் பொங்கி விட்டு அன்றைய தினம் விளையும் எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைப்பது பல வீடுகளில் வழக்கம்.

பொதுவாக இதற்கு நாட்டுக்காய்களான, கத்திரி, வாழை, சேனை, பூஷணி, பறங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, அவரை, மொச்சை, கொத்தவரை, சிறு கிழங்கு, பெருகிழங்கு  போன்றவையே பயன்படுத்துவார்கள்.  

காலப் போக்கில் இன்றைய பழக்கத்திற்கு ஏற்ப ஒரு சிலர் உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், செளசெள போன்றவையும் தக்காளியும் சேர்க்கின்றனர்.

இனிப்பான பொங்கலை உண்பதற்குக் காரமான குழம்பு தான் தொட்டுக் கொள்ள உதவும் என்று மட்டுமில்லாமல், இறைவனுக்கு நிவேதனமாகவும் படைப்பதால் பூமியில் விளையும் அனைத்தும் அவன் அருளால் கிடைத்தது என்று நன்றி கூறும் விதமாகவும் இதைச் செய்கின்றனர்.  

மண்ணின் அடியில் விளையும் கிழங்குகள், மண்ணின் மடியில் படரும் கொடிகளின் காய்கள், செடிகளின் காய்கள், மரங்களின் காய்கள் என அனைத்து வகைக்காய்களும் இந்தக் குழம்பில் இடம் பெறும். பின்னர் அந்தக் குழம்பை தினம் தினம் சுண்ட வைத்துக் கொஞ்ச நாட்களுக்குச் சாப்பிடுவதுண்டு.

பொங்கல் நிவேதனத்தின் தாத்பர்யம்

பொங்கல் நிவேதனத்தில் பயன்படும் மஞ்சள் கொத்து மங்கலத்தையும், தோகையுடைய கரும்பு இனிப்பையும், இஞ்சிக் கொத்து காரத்தையும், வெற்றிலை, பாக்கு துவர்ப்பையும் கொடுக்கின்றன என்பதால், இந்தச் சுவைகள் அனைத்தும் வாழ்வில் இடம் பெறும் என்பதையும் கூறாமல் கூறுகிறது.

மற்ற மாநில பொங்கல்

தமிழ் நாட்டில் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, மற்றச் சில மாநிலங்களில் மகர சங்கிராந்தி எனவும், லோகிரி எனவும், மஹாபிகு எனவும் அழைக்கப்படுகிறது.

விவசாயிகள் அவர்கள் விவசாயத்துக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுவார்கள்.  ஏர்க்கலப்பை, கருக்கரிவாள், மரக்கால், உழக்கு, கூடை முறங்கள், களைக்கொட்டு,மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருட்கள் இதில் அடங்கும்.

ஆந்திராவில் பொங்கல் சமயத்தில் பொம்மைக்கொலு வைப்பார்கள் என்றும் தெரிய வருகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அன்று பட்டம் விடும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

மேலும் எள், வேர்க்கடலை ஆகியவற்றில் வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவோ, வில்லைகளாகவோ செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள்.  இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு வலுப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.

மஹராசன் பொங்கல்

நிலைப்படிகளை நன்கு கழுவிக் கோலம் போட்டு மாவிலைக் கொத்துகளாலும், வேப்பிலைகள், பூளைப்பூ போன்றவற்றால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள்.

வாசலில் சூரியனுக்கு வழிபாடு நடப்பதால் பெரிய தேர்க்கோலம் ஒற்றைச் சக்கரத்தோடு போடுவார்கள்.  ஒரு சிலர் வாசலிலேயே வடக்கே சூரியனின் உருவத்தையும், தெற்கே சந்திரனின் உருவத்தையும் வரைவார்கள்.

தீஞ்ச தீபாவளி (வெடிகள் வெடிப்பதால் தீய்கிறது அல்லவா), காஞ்ச கார்த்திகை (கார்த்திகைக்கு அப்புறம் மழை நின்றுவிடும்.  மண் காய்ந்து கொண்டு வரும்), இவை எல்லாம் போய் நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்யும் நாளை, மஹராசன் பொங்கல் என உழவர்கள் சொல்வார்களாம்.

ஆண்டாளின் மார்கழி உற்சவம்

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் மார்கழி உற்சவம் பொங்கல் அன்றே நிறைவு பெறும். அன்று தண்டியல் எனப்படும் வாகனத்தில் ஆய்ச்சியரைப் போல் கொண்டை போட்ட வண்ணம் எழுந்தருளும் ஆண்டாளுக்கு, பக்தர்கள் கரும்பு, மஞ்சள் எனப் பல பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள்.

அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆண்டாள் திருவீதிகளில் உலாவரும் காட்சி சிறப்பாக இருக்கும்  என்று தெரிய வருகிறது. 

எல்லார் வீட்டிலும் அவரவர் வழக்கப்படி பொங்கல் கொண்டாடி இருப்பீங்க.  இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து, அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அடுத்தபடி என்ன என்று பார்க்கலாமா?    

மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா.

பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆடு, மாடுகளை மேய்த்தான் என்பது தெரியும். அதனாலும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிறோம்.  

மேலும் இந்திரனுக்கும், வருணனுக்கும் உரிய திருநாளாக போகியைக் கொண்டாடுகிறோம். மழைக்கு தெய்வம் இந்திரன்.  ஆகவே நல்ல மழை வேண்டி இந்திரனையும், வருணனையும் வழிபடுகிறோம்.

அடுத்து பயிர்களின் விளைச்சலுக்கு வெப்பமும் வேண்டும் என்பதால் சூரியனை வழிபடுகிறோம்.  

சூரியன்

காச்யபர் என்னும் ரிஷியின் மகன் ஆன சூரியன், அவருடைய இன்னொரு மனைவியின் மகன் ஆன அருணன் உதவியோடு தன் பயணத்தைத் தினம் தொடங்குகிறான்.

இந்த சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில் தோன்றவும் இல்லை.  மறையவும் இல்லை.

சூர்ய சதகம் என்னும் ஸ்லோகத்தில் 18 மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம்.  ஸ்லோகம் எடுக்க கூகிளாரின் உதவியை நாடினால் மற்ற மொழிகளில் வருகிறது, தமிழில் வரலை 🙁

ஆனால் சூரியன் உதயமோ அஸ்தமனமோ இல்லாதவன் என்றும், அவன் ஒளி பரவினால் அந்த இடத்தில் அப்போது பகல் எனவும், ஒளி பரவாத திசை இரவு எனவும் கூறுவதாய் அறிகிறோம்.

ஒரு கண்டத்தில் சூரியன் ஒளி வீசிப் பிரகாசிக்கும் போது, இன்னொரு கண்டத்தில் நிலவு பிரகாசிக்கிறது என்பதையும் அந்தக் காலத்திலேயே அந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளனர்.

அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப்படும் முன்னரே நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

மாட்டுப் பொங்கல் காரணம்

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதற்கான காரணம் நந்தி தேவருக்கு ஈசன் கொடுத்த சாபத்தினாலேயே மாட்டுப் பொங்கல் ஏற்பட்டதாய் கூறினாலும், விவசாயத்துக்குப் பெரும்  உதவி செய்யும் கால்நடைகளை வழிபடுவதே மாட்டுப் பொங்கல் ஆகும்.

முன்பெல்லாம் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமெல்லாம் தீட்டுவார்கள்.  இப்போதெல்லாம் அதைப் பார்க்க முடிவதில்லை. பொதுவாகவே மக்கள் மனதில் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே வருகிறது.  

என்றாலும் இளைய தலைமுறை எப்படி அறிந்து கொள்வார்கள் என்பதினாலேயே, இதை எல்லாம் எழுதியானும் வைக்கலாம் என்பது முக்கிய எண்ணம்.

கோ தூளிகா மண்டலம்

மாடுகளைக் காலை வேளையில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வார்கள்,  மாலையானதும் அவை வீடு திரும்பும் நேரம், விளக்கு வைக்கும் நேரமாய் இருக்கும்.

அப்போது எழும்பும் தூசியை “கோ தூளிகா மண்டலம்” எனச் சொல்வார்கள்.  இது உடலில் படுவதால் நன்மை பயக்கும் என்றும் நம் முன்னோர்களின் நம்பிக்கை.  

கிராமத்துத் திண்ணைகளில் குழந்தைகளோடு இந்தக் காற்றுப் படுவதற்காக மக்கள் அமர்ந்து காத்திருப்பார்களாம்.  இதைப் போலவே மாட்டுப் பொங்கல் அன்றும் “கோ தூளிகா மண்டலம்” ஏற்படும் வண்ணம் தெப்பம் அமைப்பார்கள் என்று அறிகிறோம்.

தெப்பம்

பசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப் பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம், பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம்.  

தெப்பச் சுவர் அரைசாணாவது இருக்க வேண்டும்.  என்றால் சாணம் எவ்வளவு எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  இந்தத் தெப்பத்தில் நவதானியங்கள், மஞ்சள், பூக்கள், இவற்றைப் போட்டு நீர் நிரப்புவார்கள்.

தெப்பத்தின் நான்கு பக்கமும் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும்.  பின்னர் பொங்கல் செய்து படைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றுக்கும் தூபம், தீபம் காட்டி அவற்றோடு இந்தத் தெப்பத்தை மும்முறை வலம் வருவார்கள்.  

அப்போது கிளம்பும் கோ தூளிகாவின் மகிமையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.  பின்னர் முடியும் நேரம் கால்நடைகளின் கால்களை தெப்பத்தின் மீது வைத்து தெப்பநீர் மதில் தாண்டி வெளிப்படச் செய்வார்கள்.

இது மிகவும் சிலாக்கியமான ஒரு வழக்கமாக அந்நாட்களில் இருந்து வந்ததாய்த் தெரிய வருகிறது.

கணுப்பண்டிகை

ஒரு சிலர் பொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகையாகவும் கொண்டாடுவார்கள்.  முதல்நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும் அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள்.

அந்த மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து, வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச் சொல்வார்கள்.  

ஆசீர்வாத வாழ்த்துப் பாடல்

மஞ்சள் கீறுகையில் சொல்லும் ஆசீர்வாத வாழ்த்துப் பாடல் மிகவும் சுவாரஷ்யமானது  

இதில் வரும் சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து என்பதின் அர்த்தம் கேட்க ஆச்சரியமாக இருக்கும்

அந்தக் காலங்களில் பெண்களை ஐந்திலிருந்து ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் செய்து வைப்பார்கள்.  அதில் வயதில் குறைந்த மாப்பிள்ளைகளும் அமையலாம்.  வயது முதிர்ந்த மாப்பிள்ளைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.  அப்படியான பெண்கள் பால்யத்திலேயே விதவையாகவும் ஆகி இருக்கிறார்கள்.  

ஆகவே, அது எல்லாம் நடக்கக் கூடாது என்பதாலேயே, சிறு வயதுப் பிள்ளையாக உனக்கு ஈடாக இருக்கக் கூடியவனைத் திருமணம் செய்து கொண்டு, அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனிடம் குடும்பம் நடத்தி, குழந்தைகள் பெற்றுச் சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தும் பாடலே இது.

அந்த வாழ்த்துப் பாடல் இதோ

“தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும்

பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்

சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு

பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துக்

கொண்டவன் மனம் மகிழத் தையல் நாயகி போலத்

தொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக

மாமியார் மாமனார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்றப்

பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க

உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி

புது மாப்பிள்ளை மருமகளோடு புதுப் புது சந்தோஷம் பெருகி

ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி என்றென்றும் வாழணும்

எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும்!”

இதிலே வரும் சின்னாம்படையான் என்பது அந்தப் பெண்ணின் வயதை ஒத்த சிறு பிள்ளைகளைக் குறிக்கும். இளம் வயதில் திருமணம் செய்து கொண்டு பின்னர் அந்தப் பிள்ளையும் இவளைப் போலவே வளர்ந்து பெரியவன் ஆனதும், அவனோடு கூடி இருந்து குடும்பம் நடத்திக் குழந்தைகளைப் பெற்று மன மகிழ்ச்சியோடு அனைவருடனும் சேர்ந்து இருந்து வாழவேண்டும் என வாழ்த்திப் பாடும் பாடல் இது.

இன்றைய காணும் பொங்கல்

பொங்கல் முடிந்து நான்காம் நாள், இப்போதெல்லாம் “காணும் பொங்கல்” அன்று மக்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு, திரைப்படங்கள், கடற்கரைகள், பொருட்காட்சிகள், மிருகக் காட்சி சாலை போன்ற இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதற்கான நாள்

உறவினர்களோடும் ஒருவருக்கொருவர் கூடிக் கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் தினம் ஆகும்.

இவ்விதம் பொங்கல் பண்டிகையானது நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த வருஷமும் அவ்வாறு விமரிசையாகப் பொங்கல் விழா நடைபெற்று உலக மக்கள் அனைவரின் துன்பமும், துயரமும் தீர்ந்து ஆரோக்கியத்துடனும், மன அமைதியுடனும் வாழப் பிரார்த்திப்போம்

“சஹானா” இதழின் YouTube சேனலில் “கோயமுத்தூர் சமையல்” வீடியோக்கள் சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

9 Comments

  1. பொங்கலைப் பற்றிய தகவல் களஞ்சியம். இதுவரை ஒரு சில விஷயங்கள் மட்டுமே தெரியும். கனுப்பாடல் விளக்கங்களும் அருமை..தெரிந்து கொண்டேன்.. பகிர்வுக்கு நன்றி மாமி.

  2. பொங்கல் தகவல்கள் அருமை! சிறு வயதில் எங்கள் பெரிய அத்தை மஞ்சள் கீறி விடும்பொழுது ஏதோ வாய்க்குள் முணுமுணுப்பார். அதில் “சின்ன ஆம்படையான், பெரிய ஆம்படையான்” என்ற வார்தைகள் காதில் விழும். இப்போதுதான் முழு பாடலும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி!

    • உண்மை தாங்க, அர்த்தம் புரியாமலே பல விஷயங்களை கடைபிடித்து வந்திருக்கிறோம். அர்த்தம் புரிந்து செய்யும் போது, இன்னும் ஈடுபாடுடன் செய்வோம் என நினைக்கிறேன் 

பரிசு அறிவிப்பு – “டிசம்பர் 2020 பிரபல பதிவுப் போட்டி” வெற்றியாளர் 

சிறுதானிய பொங்கல் (ஆதி வெங்கட்) January 2021 Contest Entry