பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அரிசியில் தான் பொங்கல் செய்து சுவைத்து வருகிறோம்
அரிசியைப் போன்றே, இல்லை அரிசியை விடவே கூடுதலான சுவையுடனும், செரிமானத்திற்கு எளிதாகவும் இருக்கும் சிறுதானியங்களை வைத்து, இன்று ஒரு பொங்கல் ரெசிபி பார்க்கலாம்.
சிறுதானியங்கள் வயிற்றுக்கு மிகவும் நல்லது. சமீபகாலமாக, மக்களிடையே சிறுதானியங்கள் அதிகமான முக்கியத்துவம் பெற்று வருகிறது.
அரிசி உணவை விட நார்ச்சத்து இதில் அதிகமுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்த காலத்து மக்களால் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, குதிரை வாலி, திணை,சோளம், பனிவரகு போன்றவை தான் சிறுதானியங்கள் என்பதாகும்
இவற்றை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், ஆரோக்கியம் மேம்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் ஆங்காங்கே சிறுதானிய உணவகங்களும் செயல்படத் துவங்கியுள்ளன.
அப்படிப்பட்ட சிறுதானியங்களில் ஒன்றான சாமையை வைத்து வெண்பொங்கல் செய்து பார்த்தேன். முதன்முறையாக சமைத்த போது, சற்றே பயம் இருந்தது. ஆனால் சாப்பிடும் போது அந்த எண்ணமே மாறி விட்டது. அவ்வளவு மிருதுவாகவும், சுவையாகவும் இருந்த சாமைப் பொங்கலின் செய்முறை இங்கே:-
தேவையானப் பொருட்கள்:-
- சாமை – 1 கப் (டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) ஆங்கிலத்தில் LITTLE MILLET
- பயத்தம்பருப்பு – ¼ கப்
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயம் – 1 சிட்டிகை
தாளிக்க:-
- பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
- கறிவேப்பிலை – 1 கொத்து
- ஒன்றிரண்டாக பொடித்த மிளகு – ½ டீஸ்பூன்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- நெய் (அ) எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரிப்பருப்பு – சிறிதளவு
செய்முறை:-
- பயத்தம்பருப்பை வாணலியில் சற்றே வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்
- சாமையை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறப் போடவும்
- வாணலியில் நெய்யோ அல்லது எண்ணெயோ விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும்
- குக்கரில் சாதம் வைப்பது போல் பாத்திரத்தில் சாமை,பயத்தம்பருப்பு, தாளித்த பொருட்கள், உப்பு, தண்ணீர் (1பங்கு சிறுதானியத்திற்கு 1½ கப் தண்ணீர் சரியாக இருக்கும்) பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து இரண்டு விசில் கொடுத்து நிறுத்தவும்
- சூடான, சுவையான சாமைப் பொங்கல் தயார்
சட்னி, சாம்பாரோடு சாப்பிட சுவையாக இருக்கும். சாதாரணமாக அரிசியில் செய்யும் பொங்கலில் அரிசியையும், பருப்பையும் வேகவைத்துக் கொண்டு, கொஞ்சம் மசித்து விட்டு தாளித்துக் கொட்டுவது தான் வழக்கம்.
ஆனால் இதை நீங்கள் மசித்தால் கூழாகி விடும். அதனால் தாளித்த பின்னர் குக்கரில் வைப்பது தான் சரி. நேரிடையாக குக்கரிலேயே தாளித்தும் செய்யலாம். எப்படி வசதியோ அப்படி செய்து கொள்ளுங்கள்.
இந்த சிறுதானியங்களை அரிசிக்குப் பதிலாக பயன்படுத்தி, அடை, உப்புமா, இட்லி, தோசை, பிடி கொழுக்கட்டை போன்றவையும் செய்யலாம். வேறு ஏதாவது சிறுதானிய உணவுடன் பின்னர் சந்திக்கிறேன்.
சஹானா இணைய இதழ் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்
Link to my youtube channel – https://www.youtube.com/channel/UCQc6JED6cw2B_CJnGvSj4UQ
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்
“சஹானா” இதழின் YouTube சேனலில் “கோயமுத்தூர் சமையல்” வீடியோக்கள்👇
GIPHY App Key not set. Please check settings