in

ஊனம் (சிறுகதை) – எழுதியவர் : சியாமளா வெங்கட்ராமன் – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு 

ஊனம் (சிறுகதை)

விசாலம் ஜெயராம் தம்பதியின் ஒரே செல்லப் பெண் சுனிதா

ஜெயராம் விசாலம் தம்பதிக்கு திருமணமாகி ஆறு வருடம் குழந்தையில்லை. போகாத கோவில் இல்லை பார்க்காத டாக்டர் இல்லை, பிறகு கடவுள் அருளால் பிறந்தாள் சுனிதா

குழந்தை தங்க விக்ரகம் போன்று, தலை நிறைய முடியுடன் மிக அழகாக இருந்தது. குழந்தையை பார்ப்பவர்கள் மறுதரம் திரும்பிப் பார்க்காமல் போக மாட்டார்கள்

வாய் கொள்ளாத சிரிப்புடன் இருந்த குழந்தையை, தம்பதிகள் இருவரும் மிகப் பெருமையுடன் வளர்த்தார்கள். முதல் பிறந்த நாளை மிக ஆடம்பரமாக கொண்டாடினார்கள்

நாட்கள் வேகமாக ஓடியது

ஒரு நாள் விசாலம் குழந்தையை கூடத்தில் விளையாட உட்கார வைத்து விட்டு சமைத்துக் கொண்டிருந்தாள்

திடீரென்று குக்கரின் சேப்டி வால்வு வெடித்தது, அந்த சத்தத்தை கேட்டு விசாலம் “ஐயோ” என அலறினாள். சத்தம் கேட்டு கூடத்தில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஜெயராமன் ஓடி வந்தார்

ஆனால் குழந்தை சுனிதா எதுவுமே நடக்காதது போல் உட்கார்ந்திருந்தாள். இதைப் பார்த்ததும் இருவருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது

குழந்தை பயந்திருக்கும் என எண்ணி பதறியவர்கள், அது ஒன்றுமே நடக்காதது போல் உட்காந்திருப்பதை கண்டு விழித்தனர்

குழந்தையை சோதிக்க எண்ணி, ஒரு பாத்திரத்தை எடுத்து குழந்தையின் அருகில் கீழே போட்டனர். அதற்கும் அது திரும்பிப் பார்க்கவில்லை

குழந்தைக்கு காது கேட்கவில்லை போல என்ற சந்தேகத்துடன், குழந்தையை எடுத்துக் கொண்டு ஒரு ENT மருத்துவரிடம் சென்றனர்

டாக்டரிடம் நடந்ததை கூற, சோதித்து பார்த்த டாக்டர் “குழந்தைக்குப் பிறவியிலேயே காது கேட்கும் தன்மை இல்லை” என்றார்

அப்போது தான் குழந்தை எந்த வார்த்தையும் பேசவில்லை என்பது நினைவுக்கு வர, டாக்டரிடம் கூறினார்

“காது கேட்காததால் குழந்தைக்கு பேசும் திறனும் இல்லை” என்றார் டாக்டர் 

மனம் கேட்காமல் பெரிய பெரிய மருத்துவமனைகளுக்கு குழந்தையை அழைத்துச் சென்று பரிசோதித்தார்கள். அனைவரும் ஒன்று போல, பேச்சும் கேட்கும் திறனும் கிடைக்காது என்றார்கள்

அப்போது இன்று உள்ளது போல் நவீன வசதிகள் இல்லை. எனவே, குழந்தையை செவிடு & ஊமை (deaf&dumb) குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்க்கும்படி டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அங்கு அவர்கள் குழந்தைக்கு தக்கபடி பாடம் சொல்லித் தருவார்கள் என்று கூறினார்கள்

அது ஒன்றுதான் வழி என முடிவெடுத்த பெற்றோர், அப்பள்ளியில் குழந்தையை சேர்த்தார்கள், குழந்தையும் மிக சந்தோசமாக பள்ளிக்கு சென்றது

சுனிதாவுக்கு  முழு கவனமும் வேண்டுமென உணர்ந்ததும், இன்னொரு குழந்தை வேண்டாமென முடிவெடுத்தனர் அவளின் பெற்றோர்

குழந்தையை நல்லபடியாக வளர்க்க, தன் ஆசிரியை வேலையை விட்டு நீங்கினாள் விசாலம். அவளை பள்ளிக்கு கொண்டு விட்டு அழைத்து வர இருசக்கர வாகனம் கற்றுக் கொண்டாள்

சுனிதா, சுறுசுறுப்புடன் அனைத்து பாடங்களையும் ஆசிரியர்களே வியக்கும் வண்ணம் நன்றாக படித்தாள். அவளைப் பார்ப்பவர்கள் யாரும், அவளுக்கு குறை உள்ளது என்பதை அறியவில்லை.

வருடங்கள் வேகமாக ஓடியது. கல்லூரி படிப்பு முடித்து பட்டம் வாங்கினாள் சுனிதா

ஊனமுற்றவர்கள் கோட்டோவில் பேங்கில் அவளுக்கு வேலை கிடைத்தது. அவளின் சுறுசுறுப்பும் திறமையும் கண்டு, மேலதிகாரிகள் ஆச்சரியப்பட்டார்கள்

அவளுக்கு திருமண வயது வந்தததும், எல்லா பெற்றோரைப் போல் சுனிதாவின் பெற்றோரும் அவளுக்கு வரன் தேட ஆரம்பித்தார்கள்

அவளின் ஊனத்தைக் காட்டி அனைவரும் நிராகரிக்க, வயது ஏறிக் கொண்டே போனது.

பெற்றோர்கள் இருவரும் தங்களுக்குப் பின்னால் சுனிதாவை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று கவலைப்பட ஆரம்பித்தார்கள்

இதைப் பார்த்த சுனிதா ஒரு முடிவுக்கு வந்தாள். அதைத் தன் பெற்றோரிடமும் கூறினாள்

முதலில் மறுத்த அவர்கள், சில நாட்களில் அவள் சொல்வது சரி என்று உணர்ந்தனர்

சுனிதாவின் முடிவுப்படி, அவளைப் போன்ற ஊனமுற்ற ஒருவனை மணமகனாக தேட, பேப்பரில் விளம்பரம் கொடுத்தார்கள்

இவர்கள் கேட்டபடி ஒரு வரன் வந்தது. ஆனால் அவனுக்கு கழி இல்லாமல் நடக்க முடியாத கால் ஊனம். பெற்றோர்கள் இருவரும் இதைக் கண்டு மனம் வருந்தினர். ஆனால் சுனிதா அந்த வரனை பார்க்கும் படி கூறினாள்

அந்த மணமகன் வருண் மிக அழகாக இருந்தான். நல்ல வேலை நல்ல குடும்பம், மிக நன்றாகப் பாடுவான்

அவனுடைய அழகில் மயங்கி, சுனிதா அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள்.

ஜெயராமும் விசாகமும் தங்கள் ஒரே பெண்ணின் திருமணத்தை மிக விமரிசையாக கொண்டாட முடிவு செய்தனர்

திநகரில் மிகப் பெரிய கல்யாண மண்டபத்தில் நடத்த முடிவு செய்தனர். சமையலுக்கு மிகப் பெரிய காண்ட்ராக்டரை ஏற்பாடு செய்தனர். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து மகிழ்ந்தனர்.

திருமண நாளும் வந்தது, திருமண மேடையில் சுனிதாவும் வருணும் உட்கார்ந்திருப்பதை பார்த்த அனைவரும், “மிக அழகான ஜோடி” என வாழ்த்தினார்கள்.

ஜெயராம் விசாலம் இருவரும், ஓடிஓடி அனைவரையும் கவனித்து சந்தோஷப்படுத்தினார்கள்.

மாலையில் நடைபெற இருக்கும் நலங்கு வைபவத்திற்கு அனைவரையும் இருக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

மாலையில் நலங்கு தொடங்கியது

அதில் மணமகன் பாடல் வேண்டிய இடத்தில், வருண் தன் இனிய குரலில் பாடி அனைவரையும் கவர்ந்தான்.

சுனிதாவிற்கு அவன் பாடுவது கேட்கா விட்டாலும், அவன் கண்களில் தெரியும் காதல் உணர்ச்சியை கண்டு சந்தோஷப்பட்டாள்

நலங்கு நிகழ்ச்சி நேயர் விருப்பம் போல் அமைந்தது

சுனிதாவும் வருணம், தங்கள் ஊனத்தை மறந்து மிக சந்தோசமாக குடும்பம் நடத்தினார்கள்

ஒரு ஆண் ஒரு பெண் என அடுத்தடுத்து இரு குழந்தைகள் பிறந்தது. குழந்தைகள் மிக அழகாகவும் புத்திசாலிகளாகவும் இருந்தது.

இதைப் பார்த்த சுற்றமும் நட்பும், உடல் ஊனம் ஒரு பொருட்டே இல்லை மன ஊனம் தான் கேடு என்றனர்

விசாலமும் ஜெயராமும் தங்கள் மகளிடம் கேட்காத மழலைச் சொற்களை, பேரக் குழந்தைகளிடம் கேட்டு பூரிப்படைந்தனர்!!!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. அருமை. இப்படிச் சில தம்பதியரைச் சுற்றங்களில் பார்த்திருக்கேன்.

  2. கதாசிரியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    அருமையான நேர் மறை சிந்தனையை ஊக்குவிக்கும் கதை நடை…
    தங்கள் படைப்பில் சில பல கதைகள் படிக்கும் ஆவலுடன்

“புத்தக வாசிப்புப் போட்டி – பிப்ரவரி 2021” அறிவிப்பு

கொடைக்கானல் பயணம் (நித்யலக்ஷ்மி) – பிப்ரவரி 2021 போட்டிப் பதிவு