in

மாய உலகம் (சிறுகதை) – எழுதியவர் : கரோலின் மேரி – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

மாய உலகம் (சிறுகதை)

“வா” என்று ஒரு கரம் என்னை அழைக்க, மறுப்பு சொல்லாமல் அதை பற்றி நடந்தேன்

“பயமா” என்று கேட்ட குரலுக்கு 

‘இல்லை’ என்று தலையாட்டினேன்

சிறிது நேரம் நடந்தவுடன், ஒருசில இடங்களில் மக்கள் கூட்டமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்தவாறு இருந்தனர். 

எதற்கு இப்படி நிற்கிறார்கள் அவர்கள் முகத்தில் எல்லாம் கோபமும், ஒருவித இயலாமையையும் என்று பல உணர்வுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்க அதை கண்டு குழம்பினேன். 

“அங்கு என்ன நடக்கிறது ஏன் இந்த போராட்டங்கள்?” என்று வினவ 

“அது எல்லாம் உரிமைக்கான போராட்டங்கள்” என்று பதில் வந்தது  

” உரிமைக்கா இந்த போராட்டம்?” என்று சற்று அதிர்ந்தேன். 

“ஆம் இந்த நாட்டில் நம் உரிமைகளை எல்லாம் போராடி பெற வேண்டிய கட்டாயத்தில் தான் நாம் இருக்கிறோம்” 

‘எனக்கு அய்யோ என்றானது’ 

எல்லாம் கொஞ்சம் காலம் தான், பின் சரியாகிவிடும் என்று மனதை தேற்றி கொண்டு நடந்தேன். 

மீண்டும் என் நடை நின்றது. 

அங்கே கொஞ்சம் குழந்தைகள் எல்லாம் நின்றுகொண்டு எதையோ உற்று பார்த்தவாறு நின்றார்கள்

நானும் அருகே சென்று பார்க்க அது ஒரு ஆழ்துளை கிணறு. 

இதை ஏன் பார்க்கிறார்கள் எனக்குள் கேள்வி பிறந்தது. 

என் முகத்தை பார்த்தே நான் சிந்திப்பதை உணர்ந்தவர். 

“அந்த குழந்தைகள் எல்லாம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலி ஆனவர்கள். தங்களை போல் அதில் தவறி விழுந்த சிறுவனை எப்படியும் உயிரோடு காப்பாற்றி  விடு வேண்டும் என்று நம்பிக்கையோடு பார்த்து கொண்டு இருக்கிறார்கள்” 

“பாவம் அந்த குழந்தை என்ன கஷ்டம் படுமோ சீக்கிரம் காப்பாற்ற வேண்டும்” என்று நானும் அவசரமாக ஒரு வேண்டுதல் வைத்தேன். 

என் பதிலில் அவர் முகத்தில் ஒரு கசந்த புன்முறுவல் வந்தது. 

“குழந்தை விழுந்து இரண்டு நாள் ஆகிறது” என்று கூற 

“கடவுளே சின்ன குழந்தை ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறார்கள் சீக்கிரமாக எதுவும் பண்ண மாட்டார்களா?” என்று ஆற்றாமையுடன் கேட்க 

“வா” என்று அழைத்து சென்றார். 

இந்த உலகத்தை நினைத்து மனதில் பாரம் ஏறியது. 

மெல்ல நடக்க தொடங்கினேன். 

ஒரு இடத்தில் என் கண்கள் பயத்தால் மூடியது. 

“என்ன ஆச்சு” என்ற கேள்விக்கு, ஒரு இடத்தை சுட்டி காட்டினேன் 

“அங்கே பாருங்க யாருடைய உடலோ பாதி எரிந்தும் எரியாமல் இருக்கிறது யார் என்று தெரியலை” 

“அருகே சென்று பார்” என்று கூறினார். 

பக்கத்தில் இருந்தவரின் கரத்தை பிடித்துக் கொண்டேன். 

அது ஒரு பெண்ணின் உடல். 

“அந்த பெண்ணை என்ன செய்தார்கள்” என்று நடுங்கும் குரலில் வினவினேன். 

“அந்த பெண்ணை கற்பழித்து  கொலை செய்து எரித்துவிட்டார்கள்” 

“இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?” என்று ஆதங்கமாக கேட்க 

“இல்லை” என்று தலையை அசைத்து விட்டு நகர்ந்தார். 

மனம் அடித்துக் கொண்டது அந்த பெண்ணை எண்ணி, எத்தனை வேதனைகளை அனுபவித்து இருப்பாள் என்று.. 

நடையை தொடர வேண்டுமா என்ற சலிப்பு என்னுள்  வந்தது. 

இப்படியே கொஞ்ச தூரம் செல்ல அங்குமிங்கும் மக்கள் குடத்தை வைத்துக் கொண்டு, எதையோ தேடி அலைந்து திரிந்தார்கள். 

“எதை தேடி அலைகிறார்கள்?” என்று கேட்டேன். 

“தண்ணீரை தேடி” 

“தண்ணீரா  தேடுகிறார்கள் அது எளிதாக கிடைக்குமே” என்று புரியாது கேட்டேன். 

“எளிதாக கிடைத்தது ஒரு காலத்தில் இப்போது இல்லை” 

“ஏன் மழை வருவதில்லையா?”  

“மரம் இருந்தால் தானே மழை வருவதற்கு” 

“அப்போ மரங்கள் எல்லாம்?” 

“வெட்டி விடுவார்கள்” 

‘என்ன இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் மரத்தை அழித்து விட்டு மழையை எதிர்பார்க்கிறார்கள்’ என்றே கோபமாக நினைக்கத் தோன்றியது. 

மறுபடியும் எங்கள் பயணம் தொடர்ந்தது

அந்த இடத்தை மழைநீர் சூழ்ந்து இருந்தது

பாதை தெரியாத அளவுக்கு வெள்ளம் கரை புரண்டு ஓடியது

நீரில் மூழ்கி உதவிக்காக கெஞ்சும் மக்களுக்கு, கரம் கொடுத்து உதவினர் சில இளைஞர்கள்

உணவு, உடை, இருப்பிடம் என்று அவர்களின் தேவை அறிந்து பார்த்து பார்த்து செய்தார்கள்

அதை கண்ட போது மனிதநேயம் என்ற ஒன்று இன்னும் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்

சிறிது தூரம் நடந்தேன்

நிலத்தில் ஒருவர் படுத்து இருப்பதை உணர்ந்து “என்ன ஆயிற்று இவருக்கு” என்று விசாரித்தேன்

“தண்ணீர் இல்லாமல் வாடி போய் இருக்கும் தன் நிலத்தை கண்டு நெஞ்சு அடைக்க இறந்து விட்டார்” என்று கூறியவர் ஒரு இடைவெளிவிட்டு 

“ஊருக்கே உணவு அளிக்கும் விவசாயிகளின் இன்றைய நிலை தங்களின்  வறுமையை போக்க முடியாமல்  உயிரை மாய்த்தும் கொள்ளும் பரிதாப நிலையில் தான் இருக்கிறார்கள்” என்றார். 

அதை கேட்ட போது என் நெஞ்சம் கலங்கியது. 

இன்னும் என்னென்ன பார்க்க வேண்டுமோ என்று எண்ணியவாறு பயணித்தேன். 

அங்கே ஒரு பெண்ணின் மீது பேனர் விழுந்ததால் உயிர் இழந்தார் என்று ஒரு செய்தி இருந்தது. 

“வெளிநாடு செல்லும் கனவோடு இருந்த பெண்ணை காலன் அழைத்து சென்று விட்டான்” என்று கூறினார். 

‘பேனர் வைப்பதை தடை செய்து இருந்தால் ஒரு உயிர் பலியாகி இருக்காதே’ என்று வருந்தினேன். 

சில இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நின்று ஏதோ செய்வதை பார்த்தேன். 

‘என்னவாக இருக்கும்’ என்று ஆவலுடன் அருகே சென்று பார்க்க அதிர்ந்தேன். 

ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு ஒரு சிலர் செல்பி எடுக்க, இன்னும் சிலர் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர். 

“அய்யோ கீழே விழுந்தால் என்ன ஆவது பயம் இல்லாமல் எப்படி இருக்கிறார்கள்” என்று கவலையுடன் நான் கேட்க 

அதற்கு அவர், “இந்த மோகத்தால் தான் பலர் உயிரை விட்டு இருக்கிறார்கள், இருந்தும் ஆபத்தை அவர்கள் உணரவில்லை வா போகலாம்” என்று அழைத்து சென்றார்

அங்கே ஒருவர் தன் குழந்தையை கரங்களில் ஏந்தியவாறு கண்ணீரோடு நடந்து வந்தார். 

“ஏன் அழுகிறார் அந்த குழந்தைக்கு உடம்பு ரொம்ப சரியில்லையோ” என்று  நான் மனதில்  எண்ணியதை கூற 

“இல்லை அந்த குழந்தை இறந்து விட்டது” என்றார். 

“இறந்து போன குழந்தையை எதற்கு கைகளில் ஏந்தி கொண்டு வருகிறார்” 

“ஆம்புலன்ஸ் வசதி இல்லை” 

‘என்ன கொடுமை இது’ என் மனம் ஆறவில்லை. 

அதன்பின் இரு குழந்தைகளின் அழுகை ஒலி எனக்கு கேட்டது. 

“பெற்றோரின் கள்ளக் காதலுக்கு தொந்திரவாக இருக்கும் குழந்தைகளை கொலை செய்யபடுகிறார்கள்” என்று கூற 

‘தங்களின் தவறான உறவுக்காக ஒன்றும் அறியாத குழந்தைகளின் உயிரை எடுக்கும் பெற்றவர்களை என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை’ 

இதற்கு மேல் என் மனம் தாங்காது என்பதை உணர்ந்து அவரிடம் “போதும் போதும் நான் இனிமேல் உங்களுடன் வர மாட்டேன்” என்று கூறி திரும்பி நடக்க முயன்றேன். 

“உன்னால் அது முடியாது நான் போகும் இடம் எல்லாம் நீ என்னுடன் வர வேண்டும் வா” என்று கூறி  என் கைகளை பிடித்தவாறு நடந்தார். 

இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து நடக்க தொடங்கினேன். 

பெரும் இரைச்சலுடன் வண்டிகள் வந்தன. அதில் பயணித்த இளைஞர்களின் கூச்சல் கேட்டு என் காதைகளை பொத்தினேன். 

‘எதுக்கு இந்த வேகம்’ என்று எண்ணியவாறு அங்கு நடப்பதை கவனிக்க தொடங்கினேன். 

பைக் ரேஸ் நடந்து கொண்டு இருந்தது அதிவேகமாக வண்டிகளை செலுத்தி யார் முதலில் வருவது என்று போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். 

‘இதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது கொஞ்சம் கவனம் சிதறினாலும் மரணம் தானே  இவ்வளவு வேகம் எதுக்கு?  இவர்களின் பெற்றோர்கள் இதை தடுக்கலாமே’ என்று எண்ணியவாறு நடந்தேன். 

சற்று தொலைவில் ஒரு பெண் நடந்து வந்து கொண்டு இருந்தார். 

அவரின் முகம் பார்க்க  பயங்கரமாக இருந்தது. 

“எதனால் அவர் முகம் இப்படி இருக்கிறது” என்று கேட்டேன். 

“அந்த பெண்ணிடம் ஒருவன் காதலை சொல்லி இருக்கிறான் அதை அவள் நிராகரித்து விட்டாள் அதில் கோபம் கொண்டு ஆசிடை வீசி விட்டான்” என்றார். 

எனக்கோ பகீர்  என்றானது ‘காதலிக்கும் பெண்ணை  காயப்படுத்தி இருக்கிறான் அவனின் காதல் உண்மையானது இல்லை. ஒரு பெண்ணால் தன் விருப்பத்தை கூட சுதந்திரமாக சொல்ல முடியவில்லையே’ என்று மனதில் நினைத்தேன். 

 ஒரு இடத்தில் இளைஞர்கள் சிலர் சோகமாக  அமர்ந்து இருந்தனர். 

 “எதற்கு இப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டேன். 

“அவர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை” என்றார். 

“படித்தவர்களுக்கு வேலை இல்லையா?” எனது மனம் கலங்கியது. 

‘எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து இருப்பார்கள் எத்தனை கனவுகள் கண்டு இருப்பார்கள் பாவம் அவர்கள்’ என்று வருந்தியவாறு என் பயணத்தை தொடர்ந்தேன். 

ஒரு மரத்தடியில் வயதான தம்பதி கவலையோடு அமர்ந்து இருந்தனர். 

அவர்களின் கைகளில் பெட்டி இருந்தது. 

‘ஏதோ ஊருக்கு போகிறார்கள் போல ஆனால் எதுக்கு இந்த கவலை’ என்று நினைத்து சற்று குழம்பினேன். 

“அவர்களுடைய பிள்ளைகள் அவர்களை வீட்டைவிட்டு விரட்டி முதியோர் இல்லத்துக்கு போக சொல்லி விட்டார்கள்” என்று கூறினார். 

“என்ன பெற்ற பிள்ளைகளா இப்படி நடந்து கொள்கிறார்கள்” என் மனம் அதிர்ந்தது. 

“பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்றார். 

அதன் அர்த்தம் எனக்கு விளங்கியது. 

சிறிது தூரத்தில் ஒரு பச்சிளம் குழந்தை கதறி அழுது கொண்டே இருந்தது. 

‘எங்கே இருக்கிறது குழந்தை’ என்று நானும் சுற்றி பார்தேன். 

அங்கே இருந்த குப்பை தொட்டியில் கேட்டது சத்தம். 

பதறியது என் உடல் “அய்யோ குழந்தையை யார் இப்படி விட்டு சென்றது” என்று பதறியவாறு கேட்டேன். 

“இந்த குழந்தையை பெற்றவர்கள்” என்றார். 

“பெற்றவர்களா?”  என்னால் நம்ப முடியவில்லை. 

“திருமணம் செய்யாமல் தவறான உறவால் பிறக்கும் குழந்தைகளை இந்த குப்பை தொட்டி தாங்கி கொள்கிறது” என்று கூறிவிட்டு நடந்தார். 

அங்கே ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். 

“எதற்காக தன் உயிரை மாய்த்து கொண்டார்” என்று வினவ 

“தேர்வில் தோல்வி அடைந்து விட்டாள்” என்றார். 

“அதற்கு எதற்கு உயிரை விட வேண்டும் மறுமுறை தேர்வு எழுதி வெற்றி பெறலாம் தானே” 

“வெற்றி பெறலாம் தான் ஆனால் அதுவரை இந்த சமுதாயம் சும்மா இருக்காது தேள் போல் கொட்டி கொண்டே இருக்கும் அதற்கு பயந்தே அவள் இறந்து விட்டாள்” 

‘வெற்றி பெற்றால் வாழ்த்து சொல்லும் இந்த உலகம் தோல்வியை தழுவினால் ஆறுதல் சொல்லலாம் தானே’ என் மனம் குமுறியது. 

சிலர் அங்கு நின்று இருந்தவர்களை வித்தியாசமாக பார்த்து கொண்டு இருந்தனர். 

“ஏன் அப்படி பார்க்கிறார்கள்?” என்றேன். 

அதற்கு அவர், “அவர்கள் எல்லாம் திருநங்கைகள் அதான் அப்படி பார்க்கிறார்கள்” என்றார். 

‘ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் பிறந்தது அவர்கள் தவறா?’ என்று  நினைத்து நான்  வருந்த 

“கவலை வேண்டாம் அவர்களில் பலர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்” என்று கூறினார். 

‘எனக்கோ அதை கேட்டவுடன் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது பலரின் ஏளன பார்வைகளை கடந்து வாழ்வில் சாதித்து இருக்கிறார்கள்’ என்று மகிழ்ந்தேன். 

தவறான சிகிச்சையால் தாயும், சேயும் மரணம் என்று ஒரு செய்தி இருந்தது. 

அதை படித்தவுடன் என் கண்கள் கலங்கியது. 

‘அந்த தாய் எத்தனை கனவுகள் கண்டு இருப்பார் பிறக்க போகும் தன் குழந்தையுடன் அனைத்தும் இப்படி கலைந்து விட்டதே’ 

அதைப் போல இன்னொரு செய்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி என்று இருக்க ‘எப்படியாவது வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்து இப்படி பணத்தை இழந்து  சிலர் ஏமாற்றம் அடைகிறார்கள்’ 

ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. 

பயத்தால் நடுங்கினேன்

“என்னை விட்டு விடுங்கள்” என்று கதறினாள் அந்த பெண். 

அதன்பின் அந்த கதறலை என்னால் கேட்க முடியவில்லை. 

என் நிலை உணர்ந்து அவரே கூறினார். 

“காதல் கூறியவனின் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்த அந்த பெண் அவனோடு  வெளியே வந்து இருக்கிறாள் வந்த இடத்தில் அந்த கயவன் அதான் காதலன் என்ற பெயரில் இருப்பவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவளின் வாழ்வை சிதைக்கிறான்” என்று கூற 

‘இப்படியும் இருப்பார்களா காதலன் என்று நம்பி வந்த பெண்ணின் வாழ்வை அழிக்க எப்படி மனம் வருகிறது’  

ஒருவர் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தார் ஆனால் அது பாதையில் சரியாக செல்லாமல் தறிகெட்டு ஓடியது. சிலர் மீது இடித்து காயப்படுத்தியது. 

“ஏன் இப்படி செல்கிறார்?” என்று கேட்டேன். 

அதற்கு “அவர் குடித்து இருக்கிறார்” என்று கூற 

“குடித்து விட்டு வண்டி ஓட்டுவது தவறு தானே” என்றேன். 

“தவறு தான்… சிலர் விரும்பியே அந்த தவறை செய்கிறார்கள்” என்று கூறி நடந்தார். 

ஒரு இடத்தை உற்று நோக்கினேன். 

அங்கே ஒரு சிலர் உணவு பொருட்களில் எதையோ கலந்தார்கள். 

“என்ன  செய்கிறார்கள்” என்றேன். 

“உணவு பொருட்களில் கலப்படம் செய்கிறார்கள்” என்றார். 

“என்ன கலப்படமா அதையா நாம் உண்ணுகிறோம் ” அதிர்ந்து ஒலித்தது எனது குரல். 

“வேறு வழி இல்லை வா போகலாம்?” என்று அழைத்து சென்றார். 

“இல்லை நான் இனிமேல் எங்கும் வர மாட்டேன்” என்று அடம்பிடித்தேன். 

“இன்னும் நீ பார்க்க நிறைய இருக்கிறது” 

“என்ன இருக்கிறது” 

“கொலை, கொள்ளை, கடத்தல், தீவிரவாத தாக்குதல் என்று இன்னும் இருக்கிறது” 

“போதுமே கேட்கும் போது என் உடல்  நடுங்கிறது” 

அவரின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு வந்தது. 

“இந்த உலகத்தை பற்றிய நீ என்ன நினைத்தாய்” என்று கேட்க 

“இது ஒரு மாய உலகம் என்று நினைத்தேன் இங்கு எல்லாம் நல்லது மட்டும் தான் நடக்கும் என்று நினைத்தேன். இங்கு இருப்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் என்று நம்பினேன் ஆனால் இப்போது புரிகிறது இது மாய உலகம் அல்ல, இந்த உலகத்துக்கு வந்தால் நானே மாயம் ஆகிவிடுவேன் என் நம்பிக்கை பொய்த்து போனது” 

“இப்போது பயமாக இருக்கிறதா?” 

“ஆமாம் ரொம்ப பயமாக இருக்கிறது என்னை உங்களுடன் அழைத்து சென்று விடுங்கள்” 

“அது முடியாது மகளே” 

“ஏன்?” 

“இங்கு தான் நீ பிறந்து வளர வேண்டும் என்பது விதி” 

“வேண்டாம் வேண்டாம்” என்று கத்தினேன். 

“நீ அனைத்து சவால்களையும் சந்தித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும், அதன்பின் உன்னை அழைத்து செல்ல நான் வருவேன்” என்றார் 

“அதுவரை நான் இங்கு இருக்க வேண்டுமா” என்று ஏக்கத்துடன் வெளி வந்தது என் குரல்

“ஆம் உன்னால் முடியும் மகளே எனக்கு விடை கொடு” என்று கூறிவிட்டு நகர தொடங்கினார்.

“முடியாது என்னையும் அழைத்து செல்லுங்கள்” என்று அவரின் கரம் பற்ற முயன்றேன்.

என் கரத்தை தடுத்து விட்டு வேகமாக சென்று விட்டார்.

எனக்கு அழுகையாக வந்தது.

திடிரென்று ஒரு பேச்சு குரல் கேட்டது, அதில் “இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் வலி வரவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்யலாம்” என்று யாரோ கூற

அப்போது தான் உணர்ந்தேன், என் தாயின் கருவறையில் நான் இருப்பதை. இவ்வளவு நேரம் நான் கண்டது கனவா என்று யோசிக்க தொடங்கினேன்.

‘கனவாக தான் இருக்கும், நம் உலகம் இப்படி இருக்காது’ என்று நினைத்து என்னை தேற்றி கொண்டேன்.

‘பாவம் அம்மா அவங்களுக்கு தொந்தரவு தராமல் இந்த உலகுக்கு வருவோம்’ என்று முடிவு செய்து விட்டு  பூமியில் பிறந்தது அந்த பெண் குழந்தை.

கனவு என்று நினைத்தவை எல்லாம் இங்கு தினந்தோறும் நடக்கும் பிரச்சினைகள் என்பதை  அவள் அறியவில்லை.

தான் ஆசைப்பட்ட மாய உலகத்தில் பிறந்த மகிழ்ச்சியை தன் அழுகை மூலம் வெளிப்படுத்தினாள்.

கருவறையில் இருந்த பாதுகாப்பு இனி எங்கு கிடைக்கும் என்பதை அந்த குழந்தை அறியுமா???

இனி காலம் தன் பதிலை கூறும்

உலகத்தை பற்றிய பிம்பம் குழந்தைகளின் பார்வையில் அழகானது அதில் நடக்கும், நடக்க இருக்கும்  தவறுகளை பற்றி நாம் அவர்களுக்கு புரிய வைக்க முயல்வோம்

Gift your better half these Romance Novels for Valentines Day – Amazon India Site👇

Gift your better half these Romance Novels for Valentines Day – Amazon.com (USA) Site👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. மாய உலகம்…
    சுற்றி தினம் நடக்கும் பல விஷயம்…
    அதில் குற்றம் மட்டும் கண்ட கதை களம்…
    நித்தம் நினைவலைகளில் தோன்றும்…
    எண்ணங்களில் விதைப்பது தான் விளையும்!!

கருப்புக்கண்ணாடி❤ ~ மழைவரக்கூடும்☂ ~ சுய இறங்கற்பா💐 (முத்தான மூன்று கவிதைகள்) முகம்மது கலிபா ஜாபர் – பிப்ரவரி 2021 போட்டிக்கான பதிவு

அசோகா அல்வா (சியாமளா வெங்கட்ராமன்)