in

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 18) -✍ விபா விஷா

நீரினைத்... ❤ (பகுதி 18)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முன் ஜென்மத்தில் தங்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றி யாதவும், ஜானவியும் கூறவும், அதைக் கேட்ட அவர்களது நண்பர்கள் அந்தக் கொடுமைகளையெல்லாம் அப்பொழுது நேரடியாகப் பார்த்தது போலவும், அவர்களே அதையெல்லாம் அனுபவித்தது போலவும் கலங்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்திலும் இவர்கள் இருவரையும் நிம்மதியாக வாழ விடாத அந்தக் கயவனை அந்தக் கணமே மண்ணோடு மண்ணாகப் புதைக்க வேண்டுமென்ற ஆத்திரம் வந்தது அனைவருக்கும்.

“அண்ணா… உங்க ரெண்டு பேருக்கும் எப்ப முன் ஜென்ம ஞாபகம் வந்துச்சு? ” எனக் கேட்டாள் யாதவின் தங்கை சாதனா

“எனக்கு…” என சற்று யோசித்த யாதவ், “எனக்கு அந்த அநங்கன பார்த்ததும் முன் ஜென்ம நினைவுகள் வந்துச்சு. ஆனா ஜானவிக்கு, இன்னைக்கு அவளோட எலும்புக்கூட்டை பார்த்ததும் வந்துச்சு” என, அதைக் கூறும் போது, சிறு தயக்கத்துடன் கூறினான்.

அதைக் கேட்ட மற்றவர்கள் அதிர, “அப்ப… ஜானு.. இன்னைக்கு உங்க சைட்ல கிடைச்சுது…” என மாதுரி இழுக்க,  மெளனமாய் ‘ஆமாம்’ என தலையசைத்தாள் ஜானவி 

அவள் விழிகளிலேயே அவளது வேதனையை உணர்ந்த சாதனாவும், மாதுரியும், தாங்களும் அதே வேதனையை அனுபவித்தவர்களாய், “ஹையோ ஜானு…” என்று அவளைக் கட்டிக் கொண்டு கதறினார்கள்.

சற்று நேரத்தில் அனைவரும் சமாதானமான பின், குகன் ஒரு விஷயத்தைப் கேட்டான்.

“யாதவ்.. உங்களுக்கு அந்த உதயசேனன் யாருனு தெரியுமா?” என்ற குகனின் கேள்விக்கு

“எங்களுக்கு அவன் யாருனு தெரியும். அதாவது அவன் முகம் எப்படி இருக்கும்னு ஞாபகமிருக்கு. ஆனா, அவன் இப்ப எங்கிருக்கான், என்ன செய்றான்னு எதுவும் தெரியாது” என்றான் யாதவ் 

அனைவரின் மனமும் பழைய நினைவில் கனத்துப் போய் இருக்க, “எல்லாரும் நைட்டு இப்படி மாடியிலேயே செட்டில் ஆகிடறதா உத்தேசமா? எல்லாரும் வீட்டுக்குப் போய்த் தூங்குங்க, மத்ததெல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்” என்றான் யாதவ் 

“ஹ்ம்க்கும்… இனிமே எங்க தூங்கறது? தூங்கிட்டு இருக்கற கோழியை எழுப்பிக் கொக்கரக்கோனு கூவ சொல்ல வேண்டியது தான்..” என கவின் கூற, மற்றவர்கள் மென் சிரிப்புடன் கலைந்து சென்றனர்.

றுநாள் காலை அனைவரும் அவரவர் வேலைக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்க, அந்நேரம் யாதவின் தொலைபேசி சிணுங்கியது.

அதை எடுத்து யாரென்று பார்த்தவன், மறுமுனையில் இருப்பது குகனென்று அறிந்ததும் உடனே உயிர்பித்தான் 

“எனி நியூஸ் குகன்?” என குழப்பத்துடன் கேட்டான் யாதவ் 

அதற்குக் குகன், கண்டேன் சீதையை என்பது போல, “குட் நியூஸ்” எனவும் 

“என்ன குகா?” என ஆர்வம் மேலிடக் கேட்டான் 

“ஆனந்தன் கண் முழுச்சுட்டான், அவன்கிட்ட நாம இப்பவே விசாரிக்கப் போகணும். நீங்க நேரா ஹாஸ்பிடலுக்கு வந்துடுங்க யாதவ்” என்றதுடன் அழைப்பு துண்டிக்கப்பட, மனைவியிடம் கூறிவிட்டு அடுத்தக் கணமே கிளம்பினான் யாதவ் 

அங்கே மருத்துவமனைக்குச் செல்லும் வரையில் கூட, யாதவின் மனம் திடுக் திடுக்கென அடித்துக் கொண்டே இருந்தது.

ஆனந்தனை இதற்கு முன் தன் பிறந்த நாளன்று முதன்முறையாகப் பார்த்த போது கூட, முன் ஜென்மத்தின் கசப்பான நினைவால், யாதவின் மனதில் அவ்வளவாகப் பிடித்தம் ஏற்படவில்லை.

ஆனால் இப்பொழுது அவனது உண்மையான உள்ளத்தையும், ஜானவிக்காக அவன் செய்த தியாகங்களையும் அறிந்த பின், “இப்படிப்பட்ட ஒருவனையா சந்தேகித்தோம்” என வருந்தினான் 

இதையே தான் முன் தினம் ஜானவியும் கூறினாள். 

நடுநிசியில் மற்ற நண்பர்களை வழியனுப்பி விட்டுத் தங்கள் அறைக்கு வந்த பின்னர், ஜானவி யாதவிடம், “அப்ப உதயசேனன் என்னையும் ஆனந்தனையும் பத்தி சொன்னதை நீங்க நம்பிட்டீங்க இல்ல?” என்று கேட்க, யாதவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை

“இல்ல ஜானவி… அது அந்தக் கடைசி நேரத்துல… நீங்க ரெண்டு பேரும் காணாம போனது, அந்த வெடிபொருளும் தொலைஞ்சது… இதெல்லாம் சேர்ந்து, நான் கொஞ்சம் குழம்பி போய்ட்டேன்” எனவும்

அவனை நோக்கி வேதனையான சிரிப்பை உதிர்த்தவள், “ஆனந்தன் மரணஅடி பட்டப்ப கூட, அந்த வெடிபொருள பத்தி வாயை திறக்கலை. என்னை அந்த உத்யசேனன் ஏதாவது பண்ணிடுவானோங்கற பயத்துல தான் அவர் உண்மைய சொன்னார். அவர் கடைசியா என்னை பார்த்த பார்வையில் எத்தனை வேதனை இருந்துச்சு தெரியுமா? ஆனா நீங்க அவரை இப்படித் தப்பா நினைச்சுட்டீங்க. 

அப்பறம் உங்கள உயிருக்கு உயிரா நேசிச்ச என்னையும் நீங்க தப்பா தான் நினைச்சு இருக்கீங்க.  நீர் தேடி நீண்டு போற வேரா, ஜென்ம ஜென்மமா  உங்க காதலை தேடிட்டு, ஒவ்வொரு நிமிஷமும் உங்களுக்காக ஏங்கிட்டு இருந்த என்னை நீங்க தப்பா நினைச்சுட்டீங்க இல்ல?” என வேதனை மிகுந்த குரலில் ஜானவி கேட்க, இதயத்தில் அமிலத்தைக் கொட்டியது போல் உணர்ந்தான் யாதவ் 

தன் ரணத்தை விட, அவளை தான் நம்பாமல் இருந்தது அவளுக்கு அதிக ரணத்தை அளித்திருக்கும் என்பதை உணர்ந்த யாதவ், ஜானவியிடம் பலவாறாக மன்னிப்பை வேண்டினான்.

ஆனால் எதற்கும் ஜானவி மசியவில்லை, அவனை மன்னிக்கவும் இல்லை

முடிவாக, “இந்தப் பேச்சை, எல்லாப் பிரச்சனைகளும் முடிந்ததும் வெச்சுக்கலாம்” என பட்டுக் கத்தரித்தார் போலக் கூறி விலகிச் சென்றாள் 

அதனால் எப்படியாவது ஆனந்தனிடமாவது மன்னிப்பை வேண்ட வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தான் யாதவ்

ஆனந்தனேனும் தனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டால், மனம் சற்று சமாதானமாகும் என எண்ணினான்

ருத்துவமனையின் உள்ளே சென்றதும், ஓடிச்சென்று ஆனந்தனின் இரு கரங்களையும் பற்றியவன், “என்னை மன்னிச்சுடு ஆனந்த்” என விழிகளில் உவர்நீர் சுரக்க வேண்டினான்.

“மறந்துடுங்க யாதவ், இனி எதுக்கு அதெல்லாம்? இப்ப நமக்கு முக்கியம், கண் முன்னாடி இருக்கற பிரச்சனை, அந்த உதயசேனன் தான்” என்றான் ஆனந்தன் பெரிய மனதுடன் 

“ஆமாம் ஆனந்த்… ஆனா அந்த உதயசேனன் யாரு எங்க இருக்கான்னு எதுவும் தெரியலையே” என யாதவ் பெருமூச்சுடன் கூற 

“அந்த விவரமெல்லாம் ஆதி சாருக்குத் தான் தெரியும்” என்றான் ஆனந்தன்

அதைக் கேட்டதும் ஒரு விஷயம் நினைவுக்கு வர, “அது சரி, ஆதி சாருக்கு நீ அநங்கன்னு தெரியும் தான? உனக்கு எப்போ முன் ஜென்ம நினைவு வந்துச்சு? உன்கிட்ட அவர் உதயசேனன பத்தி எதுவுமே சொல்லலியா?” என யாதவ் கேட்க 

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே வரலாற்றுத் துறையில ஆர்வம் அதிகம். அதனால தான் நான் வரலாற்றுத் துறையில் எடுத்து படிச்சேன். அப்போ தான் எனக்கு என் காலேஜ்ல ஆதி சாரோட அறிமுகம் கிடைச்சது. அப்பப்போ அவரோட ஆராய்ச்சிகள் பத்தி அவர் எனக்குச் சொல்வார். காலேஜ் முடிச்சதும் ஆதி சார்கிட்ட அசிஸ்டன்ட்டா சேர்ந்தேன். 

அப்ப ஒரு இடத்துல நாங்க ஆராய்ச்சியில் இருந்தப்ப, என்னோட ஓவியம், உன்னோட ஓவியம், அந்த உதயசேனனுடைய ஓவியம், ரணசிங்கனுடைய ஓவியம் எல்லாம் அங்கங்க கிடைச்சுது. அதைப் பார்த்து எனக்கு மட்டுமில்ல ஆதி சாருக்கும் பயங்கர ஆச்சர்யம்

அவருக்கு சில விஷயங்கள் ஏற்கனவே தெரிஞ்சு தான் இருந்துச்சு. அவருக்கு நான் தான் அநங்கன்னு தெரிஞ்சு ஏகப்பட்ட மகிழ்ச்சியும் கூட. அப்ப ஆதி சார் எனக்கு முன் ஜென்ம நிகழ்வுகள் சிலதை என்கிட்ட சொல்ல, எனக்கு கொஞ்சம் கொஞ்சமா உங்க நினைவுகள் எல்லாம் வந்துச்சு. அப்புறம் நான் அமெரிக்கா போய்ட்டேன் 

கடைசியா, ஆதி சார் காணாம போறதுக்கு முன்னாடி பேசினப்ப, அந்த உதயச்சேனனோட ஆட்கள் மழவர் நாட்டு மலையில், உங்க அந்த வெடி பொருளோட மூலக்கூறு பத்தி ஏதாவது தகவல் கிடைக்குமானு தேடிட்டு இருக்காங்கனு சொன்னார். ஆனா அது எங்க இருக்குனு தானே கண்டுபிடிச்சுட்டதாவும் சொன்னார். மறுநாள் வந்து அதை க்ளியரா படிச்சு பார்க்கப் போறதாவும் சொல்லிட்டு இருந்தார். 

அதைக் கேட்டதும், உடனே கிளம்பி வரலாம்னு நான் நினைச்சேன். அந்த நேரம், அமெரிக்காவுல என் தங்கையோட பிரசவநாள் நெருங்கிட்டதால என்னால உடனே கிளம்ப முடியாம போச்சு. ஆனா நான் வர்றதுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சு” என பெருமூச்சுடன் நிறுத்தினான் ஆனந்தன் 

அப்படி இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, யாதவுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது 

அதை உயிர்ப்பித்து காதில் வைத்தவன், அடுத்த கணம் உடல் உறைய, காதிலிருந்த அலைபேசியை நழுவ விட்டான்.

தொலைவில் இருந்து அவனை பார்த்து கொண்டிருந்த குகன், ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து விரைந்து அருகில் வந்தான் 

“என்னாச்சு யாதவ்? ஏன் இப்படி உறைஞ்சு போய் நிக்கறீங்க?” என பதற 

அதற்கு அவனிடம் பதிலின்றிப் போக, அவனை ஒரு உலுக்கு உலுக்கியவன், “யாதவ்.. என்று அங்கிருந்தோர் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் கத்தினான் குகன் 

அதில் சுயநினைவைவுக்கு திரும்பிய யாதவ், உடல் நடுங்க, “குகா.. ஜானு…ஜானுவ கடத்திட்டங்க..” என்றான் 

அதைக் கேட்டு ஆனந்தன் குகன் இருவரும் அதிர்ந்தனர் 

“யாரு… யார் கடத்துனாங்க யாதவ்?” என ஆனந்தன் கேட்க

கண்களில் கொலை வெறியுடன் பற்களைக் கடித்த யாதவ்  “உதயசேனன்” என்றான்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                   

                

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website (Crossed 50 thousand Visitors) 

(தொடரும்… வெள்ளி தோறும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கோடை விடுமுறை நினைவுகள்!!! By ஆதி வெங்கட்

    பனி விழும் மலர் வனம் ❤ (மெட்டுக்கு என் வரிகள்) – புவனா(சஹானா) கோவிந்த்