in

கோடை விடுமுறை நினைவுகள்!!! By ஆதி வெங்கட்

கோடை விடுமுறை நினைவுகள்!!!

மே மாதம் என்றால் கோடை விடுமுறை தான் நினைவுக்கு வரும். எங்கே செல்லலாம்? எவ்வளவு நாள் தங்க முடியும்? எவ்வளவு செலவு ஆகும்? தங்க ஏதாவது இடம் கிடைக்குமா?

அங்கே குளிர் இருக்குமா? இல்லையென்றால் இங்கே இருப்பது போல இருக்குமா? என்று வரிசையாக கேள்விகளும், திட்டமிடலும் இருக்கும்

கோடை விடுமுறை என்றாலே கோடை வாசஸ்தலங்களுக்கும், சுற்றுலா மையங்களுக்கும் சென்று வருவது என்பது  இப்போதைய கலாச்சாரமாகி விட்டது. அதை விட இந்த கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருப்பது தான் சிறப்பு என்பது போல ஆகிவிட்டது..

ஆனால் என் சிறு வயதில், ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நான் பிறந்த ஊரான சிவகங்கைக்குத் தான் அழைத்துச் செல்வார்கள். கடைசி பரீட்சை முடிந்த அன்றே கிளம்பி விடுவோம். 

கோயமுத்தூரிலிருந்து பேருந்து பிடித்து மதுரை சென்று, அங்கிருந்து இன்னொரு பேருந்தில் ஒரு மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை சென்றடைவோம்.

பெரும்பாலும் அப்பாவும் எங்களுடன் வருவார். இல்லையென்றால் அம்மா, நான், தம்பி மூன்று பேரும் செல்வோம்.

கோவையிலிருந்து மதுரைக்கு 4½ மணிநேரம். சிவகங்கைக்கு 1 மணிநேரம். ஆக மொத்தம் 5½ மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை அடையலாம்.

இதுவே அன்றைய நாளில் எனக்கு பெரிய பயணமாகத் தோன்றும். அதன் பிறகு டெல்லிக்கெல்லாம் 40 மணி நேரத்துக்கும் மேற்பட்ட ரயில் பிரயாணத்தை நான் மேற்கொண்டதை நினைத்தால், எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

அத்தை / மாமா வீடு

அப்போது சிவகங்கையில் என் அத்தையும் (அப்பாவின் அக்கா) மாமாவும் (அம்மாவின் தம்பி) இருந்தார்கள்.

பெரிய சிவன் கோவில் இருக்கும். அதற்கு எதிர் புறமாக அத்தையின்  அந்த கால வீடு. நெடுக போய்க்கொண்டே இருக்கும்.

முதலில் வராந்தா. அங்கிருந்தே மாடிக்கு செல்லும் வழி இருக்கும். வராந்தாவைத் தாண்டிச்  சென்றால் ஏழு, எட்டு தூண்களுடன் கூடிய ‘ரேழி’ என்று சொல்லப்படும் பெரிய அறை இருக்கும்.

அடுத்து இடதுபுறம் ஒரு சிறிய அறை. அதற்கடுத்து கூடம். கூடத்தின் ஒரு புறம் பூஜையறைக்கு வழி, அடுத்து ஸ்டோர் ரூம்.

அதைக் கடந்தால் பெரிய சமைலறை. சமையலறைக்கு நடுவில் பெரிய முற்றம். அதை தாண்டி கிணற்றடி. இதன் இரு புறங்களிலும் இரண்டு அறைகள். விறகுகள் அடுக்கி வைக்க.

அப்புறம் தோட்டம். தோட்டத்தில் ஆறேழு தென்னை மரங்களும், செம்பருத்தி, நந்தியா வட்டை போன்ற பூச்செடிகளும் இன்ன பிறவும் இருந்தது. 

கிணற்றடியில் தண்ணீர் இறைத்து, துவைத்து, குளித்து அமர்க்களம் செய்வோம்.

இரவில் அங்கேயே இருக்கும் தாழ்வாரத்தில் எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொள்ள, அத்தை சாதத்தை உருட்டி கையில் பிசைந்து போடப் போட, நாங்கள் அதன் நடுவே குழி செய்ய, அது கொள்ளும் அளவு குழம்பு விடுவார். அதோடு சாப்பிட்டால் அளவே இல்லாமல் உள்ளே போகும்.

செம்பருத்தி இலைகளை பறித்து தோய்க்கும் கல்லிலேயே வைத்து கசக்கினால் நுரை வரும் அதை தலையில் தேய்த்து குளிப்போம். காலையில் பூஜைக்கு மலர்கள் பறிப்பது எங்கள் வேலை.

அப்பா, அம்மாவை விட்டு நானும் தம்பியும் முதல் முறையாக அத்தை வீட்டிற்குச் சென்ற சமயம், நான் தோட்டத்துக்குச் சென்று மலர் பறிக்கும் போது, என் அத்தை பையன் தோட்டத்து கதவை வெளியிலிருந்து பூட்டி சாவியை ஓட்டுக்கு மேலே வீசிவிட, நான் அழுது கதறி, பின்பு எல்லோரும் ஓடி வந்து அவனை திட்டி சாவியை எடுத்து கதவைத்  திறந்தார்கள்.

இந்த அமர்களத்தில் எனக்கு ஜுரம் வந்து படுத்தது, அதற்காக திரும்பவும் அத்தை பையனுக்கு கிடைத்த திட்டு இன்றும் நினைவிருக்கிறது 😊

மாலை வேளைகளில் சிவன் கோவிலுக்கு சென்று வருவோம். இரவு நேரத்தில் அத்தை வீட்டில் சொன்ன குட்டிக் குட்டிக் கதைகளைக் கேட்க ஆர்வமாயிருக்கும்.

அதைக் கேட்பதில் அலாதியான சந்தோஷம் எங்களுக்கு. அவர் சொல்லிய கதைகளில் சுண்டு விரல் உயரமுள்ள பையனின் கதை, ராஜா ராணி கதைகள் என நிறைய கதைகள் நாங்கள் விரும்பிக் கேட்டவை.

மாமாவின் வீடு அடுத்த தெருவிலேயே இருந்தது. இங்கும் அங்குமாய் இருப்போம். காலையில் அத்தை வீட்டில் சாப்பிட்டால் மதியம் மாமா வீட்டில்.

மாமா எங்களை நிறைய சினிமாக்களுக்கு அழைத்துச் செல்வார். ஒரு முறை மாமா, மாமி, அம்மா மூவரும் இரவுக் காட்சிக்கு பேய் படத்துக்கு செல்லும் போது, என்னையும் தம்பியையும் பாட்டியுடன் சம்பூர்ண ராமாயணத்துக்கு அனுப்பியதும் மறக்க முடியாதது.

மாமா சாப்பிட நிறைய வாங்கித் தருவார். அப்படி நான் ரசித்து, ருசித்து சாப்பிட்டவற்றில் சிலவற்றை சொல்கிறேன்.  

ஆறுமுகம் கடை வறுபயிறு, சுண்டல்

மாலை 5   மணி ஆகி விட்டால் ஆறுமுகம் என்பவரின் கடை வாசலில் கும்பல் அலை மோதும். காரணம் அவர் கடையின் ஸ்பெஷலான வறுபயறும், சுண்டலும் தான்.

ஒரு மணி நேரத்தில், கொண்டு வந்த அனைத்துமே காலி ஆகி விடும். அவ்வளவு சுவையானதாக இருக்கும். சிறு வயதில் சாப்பிட்ட சுவை, இதை எழுதும் போதும் என் நாக்கில் தெரிகிறது.

மனோகரன் கடை ரோஸ் மில்க்

இந்த கடையின் ஸ்பெஷல் ரோஸ் மில்க் மற்றும் ப்ரூட் மிக்ஸ் இரண்டும். ஒரு பாத்திரத்தையோ, தண்ணீர் ஜக்கையோ எடுத்துக் கொண்டு மாமா வீட்டின் கொல்லைபுறக் கதவைத் திறந்து போனால், நடக்கும் தொலைவில் கடைத்தெருவில் இருக்கும் மனோகரன் கடை வந்துவிடும்

அங்கு சென்று ரோஸ் மில்க்கோ, ப்ரூட் மிக்ஸ்ஸோ வாங்கிக் கொண்டு ஓடி வருவோம் [அப்போது தானே ஜில்லென்று சாப்பிட முடியும்].

அப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் கிடையாதே. இப்போது வீட்டிலேயே சுகாதாரமாக செய்தாலும், ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் அந்த சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை.

நுங்கு, இனிப்புகள் நெல்லிக்காயை தேனில் ஊறப் போட்டு கொடுப்பது என்று நிறைய ஐட்டங்கள் உண்டு.

அப்போது பாட்டி சாதாரணமாக கீரை வாங்கி சுத்தம் செய்து வேக வைத்து மசித்து தாளித்துக் கொட்டினாலே அவ்வளவு சுவையானதாக இருக்கும்.

இத்தனை சாப்பிட்டால் வயிறு சும்மா இருக்குமா? இதற்கும் ஒரு வைத்தியம் உண்டு.

அத்தை வீட்டில் நல்ல கொழுந்து  வேப்பிலையை பறித்து அரைத்து  எல்லா குழந்தைகளுக்கும் ஒவ்வொரு உருண்டை வாயில் போட்டு சிறிய டம்ளரில் மோர் விட்டு எங்கள் வாயில் ஊற்றி அழுத்தி மூடிவிடுவார்கள். 

எத்தனை ஆட்டமும் ஓட்டமும் காட்டினாலும் இந்த வேப்பிலை உருண்டை வைத்தியத்தில் இருந்து தப்ப முடிந்ததில்லை என்பதில் எனக்கு இன்னமும் வருத்தம் உண்டு… 🙂 

சின்ன அத்தை வீடு இராமநாதபுரத்தில் மாவட்டத்தில் இருந்தது. அவர்கள் வீடு நாற்பது ,ஐம்பது பேரை கொண்ட கூட்டு குடும்ப வாழ்க்கை.

பந்தி பந்தியாக சாப்பாடு நடக்கும். அவர்களுக்கு சொந்தமாக ஹோட்டல் இருந்ததால் காலை டிபன் அங்கிருந்து வந்து விடும். நிறைய வாண்டுகள் இருந்ததால் பொழுது போவதே தெரியாது. அங்கிருந்ததும் எனக்கு ஜாலியான அனுபவம் தான்.

பெரிய வகுப்புகள் வந்ததும் ஊருக்கு போகும் வாய்ப்பே இல்லாமல் போனது. இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைப்பது கடினம் தான்.

இன்று வரையிலும் இனிமையான கோடை விடுமுறை நாட்கள் அவை. வாய்ப்புக் கிடைத்தால் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் இது போன்ற அனுபவங்களைத் தர முயற்சி செய்யலாம்.

தொலைக்காட்சியும், அலைபேசியும் மட்டுமே பொழுதுபோக்கல்ல… மனிதர்களைப் படிப்பதும் நல்லதொரு பொழுதுபோக்கு தான் இல்லையா!!!

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்

ஆதி வெங்கட்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                        

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website (Crossed 50 thousand Visitors) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. விடுமுறை தின நினைவுகள் அருமை. ஆனால் முன்னாடியே படிச்சிருக்கேனோ? அதுவும் அந்த வறுபயறு, சுண்டல், ரோஸ்மில்க்? 🙂 என்ன இருந்தாலும் சொந்தங்களோடு கழித்த நாட்களின் அருமை இப்போதெல்லாம் வராது. எங்க நாத்தனார் பையரும் உங்க அத்தை பையரைப் போல் எங்க குழந்தைகள் குளிக்க, கழிவறைக்குச் செல்லனு போனால் இடைவழிக்கதவைப் பூட்டி விட்டுச் சொல்லவே மாட்டார். குழந்தைகள் கதவைத் தட்டும் சப்தம் கேட்டு வந்து கதவைத் திறப்போம். இல்லைனா இடைச்சுவர் வழியா மேலே வெந்நீர்/தண்ணீர்னு ஊத்தி விட்டுடுவார். குழந்தைகள் பாவம் நனைந்து கொண்டு அழுத வண்ணம் இருப்பாங்க! அதெல்லாம் ஒரு காலம்.

  2. அருமையான கோடை விடுமுறை நினைவுகள் ஆதி! வெடி இன்ட்ரெஸ்டிங்க்.

    எனக்கு நாங்கள் வள்ளியூர், திருக்குறுங்குடி என்று சென்றது நினைவு வந்தது..

    வாழ்த்துகள்

    கீதா

பெண் வன்கொடுமை (சித்தரிக்கும் ஓவியம்) By Divya Krish – மே 2021 போட்டிக்கான பதிவு

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 18) -✍ விபா விஷா