அன்பு வணக்கம்,
சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தைப் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நல்ல வாய்ப்பிற்கு முதலில் என் நன்றிகளைக் கூறுகின்றேன்
நூலின் பெயர் : என் கதை
எழுதியவர்: கமலா தாஸ்
வெளியீடு: காலச்சுவடு இந்திய கிளாசிக் (தன் வரலாறு )
பக்கங்கள்: 159
விலை : ரூ.190/-
சமீபத்தில் நான் படித்து திகைத்துப் போன ஒரு புத்தகமெனில் ‘என் கதை’ தான். கமலாதாஸின் தைரியமும், ஆளுமையும் என்னை வியக்க வைத்தது
தமிழில் மொழி பெயர்த்தது என்கிற உணர்வே வரவில்லை. கமலாதாஸ் என்னருகில் அமர்ந்து பேசுவது போலவே இருந்தது
அவரின் உள்மனம் எதிர்பார்த்த ஆத்மார்த்தமான அன்பு, கடைசி வரை கிடைக்கவே இல்லை என்கிற நிதர்சன வரிகளைப் படித்த பொழுது, என் இமைகள் கண்ணீரால் கவிழ்ந்தன
எங்கள் ஆங்கில பாட புத்தகத்திலும், 2 வருடங்களுக்கு முன்பு அவரது கவிதை ஒன்று பாடமாக வந்திருந்தது (My Grandmother’s House)
பாட்டியின் நினைவுகள் பற்றியும், அந்த பாட்டி வீடு இன்று பேய் வீடு போல ஆனது என்றும் எழுதியிருப்பார். அந்த கவிதை வரிகளும் இந்த இடத்தில் நினைவிற்கு வந்தன
இவ்வரிகளை எழுதிய போது அவர் கமலா சுரையாவாக மாறியிருந்தார். ஏதேனும் ஒன்றிலாவது தன் மனம் பேரின்பம் அடையட்டும் என்கிற அடங்கா ஆர்வத்துடனும், தணியாத தவிப்புடனும்
இத்தனை வெளிப்படையாக தனது அந்தரங்கத்தினை பொது வெளியில் பகிர்ந்திட எழுந்த சூழல் அவருக்கு வாய்த்தது என்று கடந்து விட முடியாது. அவரே ஏற்படுத்திக் கொண்ட சூழல் என்று உணர்ந்தால், அவரின் உள்ளத்துணர்வுகள் நமக்கும் புரியும்.
பெண்களின் வாழ்க்கை என்றுமே ஆண்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு எந்த காலமும் விதிவிலக்கு அல்ல என்று மீண்டும் ஒரு முறையாக அழுத்தி பதிகிறார் தன் நினைவுச் சுவடுகளை என் கதையில்.
தன் வாழ்நாளெல்லாம் பரிசுத்தமான அன்பிற்காக பரிதவித்த ஒரு சின்னஞ்சிறிய பறவையானது, தனக்கான கூண்டிலிருந்து விட்டு விடுதலையாகி இறுதியில் இயற்கையோடு கலந்ததாய் நாம் எத்தனையோ படித்திருப்போம்.
அது அத்தனையும் நம் கண் முன்னே ஒரு அழகிய இளம் பெண்ணிற்கு நிகழ்ந்ததாய் படிக்கின்ற போது நமக்குள் ஏற்படும் ஆதுரம் நிச்சயம் அவருக்குச் சென்று சேரும்
வாய்ப்புள்ளோர் அவசியம் படியுங்கள் கமலாதாஸ் என்கிற ஆளுமையை
#ad
#ad