www.sahanamag.com
நகைச்சுவை

கேயாஸ் தியரியும் தங்கமணியும்…🤣😂😃❤

“என்னங்க, நாளைக்கு நீங்க ஆபீஸ் லீவ் போடுங்க” என தங்கமணி முகமெல்லாம் பல்லாய் கூற

“ஏம்மா நீ உங்க அம்மா வீட்டுக்கு போறியா? ட்ரெயின் ஏத்தி விடணுமா?” என ஆர்வமாய் கேட்டார் ரங்கமணி

எதுவும் பேசாமல் மனைவி முறைத்த முறைப்பிலேயே, அதுவல்ல விஷயம் என உணர்ந்து, பொம்மையை பிடுங்கிய குழந்தை போல் முகம் வாடி நின்றார்

“ஹும்… அததுக்கு ஒரு குடுப்பினை வேணும்” என நினைத்தபடி, தங்கமணியை எப்படி சமாளிப்பது என யோசித்தார்

“அ… அது, நீ சந்தோசமா லீவ் போடுங்கனு சொன்னியா? அ… அதான் நான் தப்பா புரிஞ்சுட்டேன்” என சிரிப்புடன் சமாளித்தார்

“தாண்டி குதிக்குமாம் மீனு, தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டினு சொல்றாப்ல, எப்படா இவ ஒழிவானே காத்துட்டு இருங்க” என சண்டைக்கு தயாரானாள் தங்கமணி

“ச்சே ச்சே… அப்படியில்ல, அது சரி எதுக்கு லீவ் போட சொன்ன?” என பேச்சை மாற்றினார்

அவர் எதிர்பார்த்தது போலவே, தங்கமணி கோபம் மறைந்து குஷியாய் விஷயத்தைச் சொல்லத் தொடங்கினாள்

“அது, எங்க ஏஞ்சல்ஸ் கிளப் மெம்பர்ஸ் எல்லாம் சேந்து, நாளைக்கி ஆடி தள்ளுபடி ஷாப்பிங் போறோம். பாப்பாவை அந்த கூட்டத்துல கூட்டிட்டு போக முடியாது. அவ ஸ்கூல்ல இருந்து ரெண்டு மணிக்கு வந்துடுவா, அதுக்குத் தான் உங்கள லீவ் போடச் சொன்னேன்” எனவும்

“அடிப்பாவி, இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல” என்றார்

“என்ன ஓவர்? ஷாப்பிங் போறது தப்பா?”

“அதெல்லாம் இருக்கட்டும். இருக்கறது பூரா டெவில்ஸ், இதுல ஏஞ்சல்ஸ் கிளப்னு பேர் வெச்சு கொல்றீங்களே நியாயமா? மொதல்ல இந்த அபார்ட்மென்ட் லேடீஸ் கிளப் பேரை மாத்துங்க” என பொங்கி எழுந்தார் ரங்கமணி

“குப்பை பொறுக்கற குப்பம்மாவை கூட விட்டு வெக்காம லுக்கு விடற நீங்கெல்லாம் சேந்து ஜென்டில்மேன் கிளப்னு பேர் வெச்சுருக்கறத விட, இதொண்ணும் மோசமில்ல” என சமயம் பார்த்து கோல் போட்டார் தங்கமணி

“சரி அதை விடு” என பம்மினார் ரங்கமணி

“எதை விடறது குப்பம்மாவயா இல்ல ஜெண்டில்மேனையா?” என தங்கமணி அதிலேயே தொங்க

“ஆடி முடிஞ்சு ஆவணியே வந்தாச்சு. ஏற்கனவே போன மாசம் போய் அந்த சாயம் போன சாரி ஒண்ணு தண்டமா வாங்கிட்டு வந்தியே, இன்னும் என்ன?” என பேச்சை மாற்றினார்

“ஐயோ, உங்களுக்கு ரசனையே இல்ல. அது டல் பினிஷ் ஸ்டோன் வாஷ் சாரி, இப்ப அதான் பேஷன். அதை போய் சாயம் போன சாரீனு… ச்சே ச்சே…”


“சரி பேச்சை மாத்தாதே, இப்ப தான் ஆடி முடிஞ்சு போச்சே, இன்னும் என்ன ஆடி சேல் ஆடாத செல்?”

“அது, நம்ம ஐஸ்வர்யா இல்ல…”

“யாரு… காக்கா முட்டைல அம்மா ரோல் பண்ணுச்சே அந்த பொண்ணா?” என சிரிப்புடன் ரங்கமணி கேட்க

“இல்ல… கழுதை முட்டைல ஆத்தா ரோல் பண்ணின கெழவி, அலையாதீங்க. நான் சொன்னது மூணாவது ப்ளோர் ஐஸ்வர்யா அனந்தகிருஷ்ணன்”

“ஓ, வீணா போன ஐடியா எல்லாம் சொல்லுமே அந்த பொண்ணா?”

“அவ அளவுக்கு மூளை இல்லைனு உங்களுக்கு பொறாமை”

“ஹையோ ஹையோ, நல்லா ஜோக் அடிக்கற தங்கம்”

“சகிக்கல… நீங்க நாளைக்கி லீவ் போட போறீங்களா இல்லையா?  அதச் சொல்லுங்க மொதல்ல”

“மாசா மாசம் ஷாப்பிங் போனா பட்ஜெட்ல துண்டு இல்ல ஜமுக்காளமே விழும், இதுல லீவ் வேற போட்டா கிழிஞ்சது பொழப்பு”

“கண் உள்ள போதே காட்சி, கரும்பு உள்ள போதே ஆலைனு அந்த காலத்துலேயே சொல்லி இருக்காங்க. இப்ப அனுபவிக்காம பின்ன கெழவி ஆனப்புறமா விதவிதமா கட்ட முடியும்”

“நீ கெழவி ஆனாலும் அழகா தான் இருப்பே தங்கம்” என ஐஸ் வைத்து புயலை திசை திருப்ப முயன்றார்

“இந்த ஐஸ் எல்லாம் வேண்டாம், சொல்றத கேளுங்க.  இப்ப ஆடி சேல் எல்லாம் முடிஞ்சு மிச்சம் இருக்கற ஸ்டாக் எல்லாம் இன்னும் சீப்பா போட்டு இருப்பாங்களாம், இப்ப வாங்கினா ரெம்ப லாபம்னு ஐஸ்வர்யா சொன்னா. சூப்பர் ஐடியா இல்லிங்க, எங்க கிளப்ல அவளுக்கு ஐடியா ஐஸ்வர்யானு பட்டப் பேரே வந்துடுச்சு. எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கராளோ?” என தங்கமணி தன் தோழியை பற்றி சிலாகிக்க

“ஹா ஹா ஹா…ஹா ஹா ஹா” என இடைவெளியின்றி சிரித்தார் ரங்கமணி

கடுப்பான தங்கமணி, “எதுக்கு இப்ப மறை கழண்ட மாதிரி சிரிக்கறீங்க?” என செல்லமாய் கோபித்துக் கொண்டாள்

“ஆடி சேலே ஒரு குப்பை கழிச்சு விடற தந்திரம் தான். அதுலயும் கழிஞ்சதுன்னா, குப்பைல குப்பை. இது ஒரு ஐடியா, இதுக்கு பட்டம் வேற. எனக்கு என்னமோ அந்த ஐஸ்வர்யா கடைகாரனுககிட்ட கமிஷன் வாங்கிட்டு, ஆள் பிடிச்சு குடுக்கறானு தோணுது”

“உங்க புத்தி வேற எப்படி போகும்” என சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் தங்கமணி

றுநாள் மாலை, “ஸ்ஸ்ஸ்ஸ்… என்ன கூட்டம் என்ன கூட்டம்” என்றபடியே உள்ளே வந்தார் தங்கமணி

“என்ன தங்கம் ஷாப்பிங் எல்லாம் பலமா இருக்கும் போலேயே” என ரங்கமணி கேட்க

“ஆமாங்க, செம சீப் தெரியுமா?” என மனைவி மகிழ்வுடன் கூற

“குவாலிட்டி தானே, அது சீப்னு தெரிஞ்சுது தான்” என நக்கலாய் சிரித்தார் கணவர்

“உங்ககிட்ட பேச முடியாது”

“அது சரி கொழந்தை எங்க? துணி வாங்கற ஜோர்ல புள்ளைய எங்க விட்ட” என பதற

“உங்கள விட பாப்பா மேல எனக்கு நிறையவே அக்கறை இருக்கு. அவள ஐஸ்வர்யா வீட்டுல விட்டுட்டு போனேன். ஐஸ்வர்யாவுக்கு வாய்ச்சவர், சொன்னதும் மறுபேச்சு பேசாம லீவ் போட்டுட்டு பிள்ளைகள பாத்துக்கறார், உங்கள மாதிரியா?” என பெருமூச்சு விட

“தங்கம், அந்த ஆளுக்கு தாசில்தார் ஆபீஸ் உத்தியோகம். ஒரு நாள் போகலைனா கவர்ன்மென்ட் சம்மன் ஒண்ணும் வராது, என் கதை அப்படியா?”

“எதாச்சும் சாக்கு சொல்லுங்க, அதை விடுங்க. இந்த சாரீஸ் எல்லாம் பாருங்க எவ்ளோ அழகு, விலையும் ரெம்ப கம்மி. இதோ இந்த மெரூன் கலர் கிரேப் சில்க் சாரி வெறும் மூந்நூறு தான், அடக்க விலையே ஐநூறு தெரியுமா…”

“எங்க இப்படி குடு பாக்கலாம்…” என சேலையை விரித்தவர் கண்ணில், ஒரு பெரிய ஓட்டை தென்பட்டது

“என்ன தங்கம் இது? சாரில கூட இப்பவெல்லாம் ஜன்னல் கதவு இருக்கா” என நக்கலாய் கேட்க

“ஐயோ, என்ன இது? நான் கவனிக்கலையே. சரி விடுங்க, அதை சரி பண்ணிக்கலாம். இதை பாருங்க உங்களுக்கு தான் ஷர்ட், ப்ளூ கலர் அழகா இருக்கில்ல”

“நல்லாத் தான் இருக்கு. என்ன இது? காலர் கிட்ட வெளுத்து போய் இருக்கே, ஏதோ செவப்பு சாயம் வேற பட்டு இருக்கு”

“எதாச்சும் குறை சொல்லிட்டே இருங்க”

“அட உள்ளத தானே சொல்றேன்”

“எல்லாம் உங்களால தான்”

“அடிப்பாவி அந்த கடை எந்த திசைனு கூட எனக்கு தெரியாது, நான் காரணமா?” என திகைத்தார் ரங்கமணி

“பின்ன? நீங்க லீவ் போட்டுட்டு வீட்டுல இருந்துருந்தா, பாப்பா என்ன பண்றாளோ, சாப்டாளோனு கவலை இல்லாம நிதானமா பாத்து வாங்கி இருப்பேன். இந்த டென்ஷன்ல சரியா கவனிக்கல”

“என்ன கொடும சரவணா இது? எங்க இருந்து எங்க லிங்க் பண்றாங்க இந்த தங்கமணிக. இது உனக்கே அநியாயமா தோணலையா தங்கம்?”

“அநியாயமெல்லாம் ஒண்ணுமில்ல, தசாவதாரம்ல கமல் கேயாஸ் தியரினு சொல்லுவாரே, ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், நாம் எதிர்பார்க்கவே முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்’ங்கறது தான் கேயாஸ் தியரி. இப்ப நீங்க லீவு போடாத சின்ன செயலால தான், என்னால சரியா ஷாப்பிங் செய்ய முடியாம போச்சு. சோ, எல்லாம் உங்களால தான்” என தீர்ப்பு வழங்கி விட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க தங்கமணி

(ரங்கமணி என்ன ஆனாரா? கமலஹாசனுக்கு பத்து பக்க கண்டன மடல் எழுதிட்டு இருக்கார்… அவர் “வலி” தனி “வலி”😆)

Similar Posts

2 thoughts on “கேயாஸ் தியரியும் தங்கமணியும்…🤣😂😃❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: