www.sahanamag.com
நகைச்சுவை

ராங் காலும் ரங்கமணியும் 😀🤣😆(நகைச்சுவை)

ங்கமணி சமையலுக்கு காய் நறுக்கிக் கொண்டிருக்க, கைபேசியில் அழைப்பு வருகிறது 

“காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன், ஒரு வேலைய முழுசா செய்ய விடறாங்களா?” என முணுமுணுத்தபடி எழுந்து வந்தாள் தங்கமணி

போன் எடுத்து, “ஹெலோ” என ஸ்டைலாய் தங்கமணி ஆரம்பிக்க

எதிர்முனையில் ஒரு பெண், “சத்ஸ்ரீஅகால்ஜி” என்றாள் 

“என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க” என்றபடி, “ச்சே… இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு” என முணுமுணுத்தாள் தங்கமணி

“நை நை” என்றது எதிர்முனை 

ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி, “என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல… பிச்சுபுடுவேன் பிச்சு” என மிரட்டினாள் 

“நை நை ஜி…” என அந்த பெண் ஏதோ சொல்ல வர

“என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? மறுபடி நை நை’ங்கற” என டென்ஷன் ஆனாள் தங்கமணி

“Is this XXXXXXX?”  என ஒரு தொலைப்பேசி எண்ணைச் சொல்லி அந்தப் பெண் விசாரிக்க

“நோ நோ ராங் நம்பர்” என அழைப்பை துண்டித்தாள் தங்கமணி

“ஹ்ம்ம், வேற வேலை இல்ல இதுகளுக்கு. ராங் கால் பண்ணினதும் இல்லாம என்னை வேற திட்டுது, கொழுப்பு” என முணுமுணுத்தபடி வேலையை தொடர்ந்தாள்

சிறிது நேரத்தில் ரங்கமணி என்ட்ரி….

“ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா, என்னா வெயிலு என்னா வெயிலு, சாயங்காலம் வரைக்கும் கொளுத்துது போ” என்றபடி மின் விசிறியை சுழல விட்டார்

“ஊட்டில ஒரு வேல பாருங்க, குளுகுளுனு இருக்கலாம் வருஷம் பூரா” என்றாள் தங்கமணி கேலியாய்

“ஏன் அண்டார்டிக்கால பாத்தா வேண்டாம்பியோ?” என்றார் அவரும் பதிலுக்கு 

“ஹும்க்கும்… இங்க இருக்கற ஆக்ராவுக்கு போய் தாஜ்மகாலை பாக்க வழியைக் காணோம், இதுல அன்டார்டிக்காவாம் ஆப்ரிகாவாம்” என தங்கமணி கழுத்தை நொடிக்க

“பாத்து பாத்து, ரெம்ப திருப்பாத, சுளுக்கிக்க போகுது” என பதறினார் ரங்ஸ்

“இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல”

“ஏன் தங்கம்? என்னமோ 5ம் நம்பர் பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்ல எறங்கற மாதிரி இங்க இருக்கற ஆக்ராங்கற. அது போகணும் ரெண்டு நாளு ட்ரெயின்ல” 

“மனசிருந்தா அமெரிக்காவும் அரை மையில் தான்… மனசில்லைனா அடுத்த தெருவும் அரை நாள் தொலைவு தான்” என தங்கமணி பெருமூச்சு விட

“ஆரம்பிச்சுட்டயா உன் பழமொழி ரீமிக்ஸ் வேலைய? அது சரி, என்ன டிபன் இன்னிக்கி?” என விவரமாய் பேச்சை மாற்றினார் ரங்கமணி

“சேமியா கிச்சடி”

“எப்ப பாத்தாலும் இதே தானா? வேற எதாச்சும் வெரைட்டியா செய்யேன்”

“என்னது? எப்ப பாத்தாலும் இதேவா? இன்னைக்கி காலைல பொங்கல் செஞ்சேன், நேத்து சாயங்காலம் தோசை காலைல ஆப்பம், முந்தின நாள் சாயங்கலாம் அடை காலைல உப்மா, அதுக்கு முந்தின நாள் சாயங்காலம் இட்லி, காலைல எலுமிச்சபழ சேவை… இதுக்கு மேல என்ன வெரைட்டி செய்ய சொல்றீங்க?” என முறைத்தாள் தங்கமணி 

“அதில்லம்மா… இந்த சப்பாத்தி சன்னா, பூரி மசால், நான் குருமா, புலாவ் பச்சிடி இப்படி எதுனா செய்யலாமே?”

“அதுக்கு எவளாச்சும் ஹிந்திகாரியா பாத்து கட்டி இருக்கணும்” என தங்ஸ் கடுப்பாய் கூற 

“ஹ்ம்ம்… இப்ப யோசிச்சு என்ன புண்ணியம்?” என சலித்துக் கொண்டார் ரங்ஸ்

“ஓஹோ… அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?” என தங்கமணி டெரர் லுக் கொடுக்க 

“இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல தங்கம்… நீ மட்டும் ‘உம்’னு ஒரு வார்த்த சொல்லு….”

அதற்குள் இடைமறித்து “என்ன சொன்னீங்க?” என தங்கமணி முறைக்க 

“ஹி ஹி… அதில்ல தங்கம், உனக்கும் கூட மாட உதவியா” என்றவர், தங்கமணி ருத்ரதாண்டவம் ஆட தயாராவதை உணர்ந்து 

“ஹா ஹா, டென்ஷன் ஆகாத. சும்மா கிண்டலுக்கு சொன்னேன். நான் டிரஸ் மாத்திட்டு வரேன், கிச்சடி எடுத்து வெய்யி சாப்பிடலாம்” என்றபடி உள்ளே சென்றார்

அக்கணம் ஏனோ தங்கமணிக்கு சற்று முன் வந்த ராங் கால் நினைவுக்கு வந்தது

“ஒருவேளை அந்த பொண்ணு பேசினது ஹிந்தியா இருக்குமோ” என ஒரு நொடி நினைத்தவள்

“என்னமோ இருக்கட்டும் ராங் கால் பத்தி நமக்கென்ன” என மேல் வீட்டுக்கு விளையாடச் சென்ற மகளை அழைத்து வரக்  கிளம்பினாள்

“வா தங்கம், டிபன் வேலை எல்லாம் ஆச்சா?” என வரவேற்றாள் மேல் வீட்டு ஐஸ்வர்யா 

“செஞ்சாச்சு ஐஸு, இனி தான் சாப்பிடணும். அதான் பாப்பாவ கூட்டிட்டு போலாம்னு வந்தேன்” என்றாள்

“உனக்கு விஷயம் தெரியுமா தங்கம். நம்ம வசந்தி, அவ வீட்டுக்காரரை டைவர்ஸ் பண்ண போறாளாம்”

“ஐயையோ என்னாச்சு?” என தங்கமணி அதிர்ச்சியாக 

“அதையேன் கேக்கற? என்னமோ சொல்லுவங்களோ, கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்….னு…அப்படி தான் ஆச்சு கதை. இந்த காலத்துல யாரையும் நம்பறதுக்கில்ல” என்ற ஐஸ்வர்யாவின் அங்கலாய்ப்பிற்கு 

“ஹ்ம்ம்… ” என்றாள் தங்கமணி யோசனையாய், “சரி, அவர் டிபன் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்கார், நான் அப்புறம் வரேன்… பாப்பா வா போலாம்” என மகளை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்

அன்றிரவு, “கிச்சடி நல்லா இருந்தது தங்கம்” என ரங்கமணி புகழ

அதைக்கூட உணராதவளாய் “உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?” என வினவினாள் தங்கமணி

“என்ன இப்படி கேட்டுட்ட? கல்யாணம் ஆன புதுசுலையே சொன்னனே” என ரங்கமணி பெருமையாய் கூற

“ஆமா, வெவரங்கெட்டவ ஒருத்தி சிக்கினானு சும்மா என்ன என்னமோ புருடா விட்டீங்க, அதெல்லாம் யாரு நம்பினா?”

“அடிப்பாவி, எல்லாம் நேரம். அப்படினா நான் அப்ப சொன்ன எதையுமே நீ காதுலையே வாங்கலையா?” என்றார் பாவமாய் 

“இப்படி பாவமா மூஞ்சிய வெச்சுட்டு கேட்டாலும் அதே பதில் தான்” என பல்ப் கொடுத்தாள் தங்கமணி

“ஹும்… நான் கூட என் புது பொண்டாட்டி எவ்ளோ அக்கறையா நாம பேசறத ரசிச்சு கேக்கறானு நினைச்சு எவ்ளோ சொன்னேன்… எல்லாம் வீணா போச்சே” என பீலிங் ஆனார் ரங்கமணி 

“சரி சரி, அத விடுங்க. உங்களுக்கு ஹிந்தி நல்லாப் பேசத் தெரியுமா?” என மேட்டருக்கு வந்தாள் தங்கமணி  

“ஹிந்தி மட்டுமில்ல, பஞ்சாபி கூட கொஞ்சம் பேசுவேன்” என்றார் பெருமையாய், பின்னால் வரப் போகும் விபரீத்ததை அறியாமல் (ஹா ஹா ஹா)

“எப்படி கத்துகிட்டீங்க?” என ஆர்வம் போல் காட்டி, விசயத்தை கறக்க முயன்றாள் தங்கமணி 

“அது… எங்க ஆபீஸ்ல ஒரு பஞ்சாபி பொண்ணு இருந்தா. சும்மா சொல்லக் கூடாது, நல்ல பொண்ணு. லஞ்ச் எல்லாம் எனக்கும் சேத்து கொண்டு வருவா. அதுவும் அந்த புலாவ் & நவரத்னகுருமா டேஸ்ட் இன்னும் நாக்குலையே இருக்கு போ” என சிலாகித்தார் ரங்கமணி

தற்போது தன் நாக்கில் சனி பகவான் ‘தாம் தரிகிட தீம் தரிகிட’ என ஜதி பாட தயாராய் இருப்பதை பாவம் ரங்கமணி உணரவில்லை

கோபத்தை கட்டுப்படுத்தியபடி, “ஓஹோ.. அதான் சப்பாத்தி, நான், புலாவ் எல்லாம் வேணும்னு கேட்டீங்களோ?” என தங்கமணி கேட்க

“ஹி ஹி… ஆமாம், அந்த பொண்ணு தான் கொஞ்சம் ஹிந்தி பஞ்சாபி எல்லாம் சொல்லி குடுத்தது” என்றார்

“அவள மனசுல வெச்சுட்டு தான் கொஞ்ச நேரம் முன்னாடி ‘நீ மட்டும் உம்’னு சொல்லு’ னு சொன்னீங்களோ?”

“என்ன தங்கம் நீ…”

“அதுவும் எனக்கு கூட மாட உதவியா?”

“ஐயோ… என்னை கொஞ்சம் பேச விடேன்” 

“ஐயையோ… இப்படி மோசம் போயிட்டனே. அம்மா அப்பா, என்னை இப்படி ஒரு மனுஷன்கிட்ட சிக்க வெச்சுட்டீங்களே” என தங்கமணி அழத் துவங்கினாள் 

“என்னாச்சு தங்கம்? நீ கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன்” என ஒன்றும் புரியாமல் விழித்தார் ரங்கமணி 

“எனக்கு எல்லாம் தெரியும், அவ பேரு கூட சசிரேகா தான” என அழுகையை தொடர்ந்தாள் தங்ஸ்

“இல்லையே, அவ பேரு ஜெய்பரீத் ஆச்சே” என அந்த நேரத்துலயும் ரங்கமணி சூழ்நிலையின் விபரீதம் புரியாமல் பிழை திருத்தம் செய்ய

“ஓஹோ, அவ பேரு ஊரு போன் நம்பர் எல்லாம் மனப்பாடமா இருக்கா?”

“இல்ல தங்கம்…” என்றவரை பேச விடாமல் 

“நீங்க பொய் சொல்றீங்க, அவ பேரு சசிரேகா தான். இன்னிக்கி போன் பண்ணி இருந்தா, எடுத்த உடனே சஸ்ரிகாஜினு என்னமோ சொன்னா. என்னை கூட நை நை’னு திட்டினா. நான் சுதாரிச்சதும் வேணும்னே ராங் நம்பர் மாதிரி நடிச்சுட்டு கட் பண்ணிட்டா” 

“ஐயோ…இல்ல தங்கம்….அது வந்து…” என ரங்கமணி சொல்ல வந்ததை  காதில் வாங்காமல் 

“நான் எங்க ஊருக்கே போறேன்… நாளைக்கே போறேன்” என தங்கமணியின் புலம்பல் தொடர்ந்தது 

அதுக்கப்புறம் ரங்கமணி தனியா உக்காந்து பொலம்பினது இதான்

“அட ஆண்டவா, அது சசிரேகாவும்  இல்ல லலிதாகுமாரியும் இல்ல, சத்ஸ்ரீஅகால்ஜி. பஞ்சாபி மொழில சத்ஸ்ரீஅகால்ஜினு சொன்னா நாம வணக்கம் சொல்ற மாதிரினு இவளுக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறது. ஹும், சப்பாத்தி கேட்டது ஒரு குத்தமா? என் கெட்ட நேரம், இன்னைக்கினு பாத்து ஏதோ ஒரு பஞ்சாபி லூசு ராங் கால் பண்ணியிருக்கு, நான் வசமா சிக்கிட்டேன். இவ ஒருத்திய சமாளிக்கவே நான் திணறிட்டு இருக்கேன். இதுல இன்னொண்ணு வேறயா? ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பபா…” (ஐயோ பாவம் மனுஷன்)😀😂🙂

சஹானா இணைய இதழில் புதுப்பதிவுகள் வெளியாகும் போது, ஈமெயில் மூலம் Notification பெற விருப்பமுள்ளவர்கள், இங்கு கிளிக் செய்து Subscribe செய்யலாம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: