sahanamag.com
சிறுகதைகள்

அனல் மேலே பனித்துளி ❤ (பொங்கல் சிறப்புச் சிறுகதை) – சஹானா கோவிந்த்

ன்று மிகவும் உற்சாகமாய் இருந்தான் சங்கர். ஒரு மாத இரவு பகல் பாராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றியில் மிதந்து கொண்டிருந்தான்

பெரிய கிளயன்ட்டின் ப்ரோஜெக்ட் கிடைத்ததில், தனக்கு கீழ் பணிபுரியும் நிறைய பேரின் வாழ்வாதாரமான வேலையைக் காப்பாற்றிய நிம்மதியில் இருந்தான்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பணம் படைத்தவர்கள் வசிக்கும் இடத்தில், அரை ஏக்கரில் மாளிகையாய் அமைந்த தன் வீட்டை நெருங்கும் போதே, அந்த மாற்றம் சங்கரின் மனதை உறுத்தியது

கார் சத்தம் கேட்டதும், கதவு திறந்து முன் வாசலில் வந்து நிற்கும் மனைவியைக் காணோம். காரை விட்டு இறங்கும் முன் “டாடி” என தாவும் மகளையும் காணோம்

காலிங் பெல் அடிக்கவும், வீட்டில் வேலை செய்யும் சீனப்பெண் வந்து கதவைத் திறந்தாள்

“Did Preethi and her mom went out?” என சங்கர் கேட்க

“No… up…room” என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்க முயன்றாள் அப்பெண் 

அதைக் கேட்டதும் சங்கரின் முகத்தில் சற்று முன் இருந்த உற்சாகம் காணாமல் போனது

வீட்டினுள் இருந்து கொண்டே ஏன் தான் வந்தும் கீழே இறங்கி வரவில்லை என குழம்பினான்

வேகமாய் படியேறியவன், ஒவ்வொரு அறையாய் தேடி, பின் வெளிப்புற கதவைத் திறந்து டெரஸ் ஏரியாவுக்கு சென்றான் 

அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து, மனைவியும் மகளும் ஆளுக்கு ஒரு புத்தகத்தில் அமைதியாய் மூழ்கி இருப்பதைக் கண்டதும், ஆச்சர்யமானான் சங்கர் 

“ஹலோ மை ஸ்வீட் ஏஞ்செல்ஸ்” என இருவருக்கும் நடுவில் சென்று அமர்ந்ததும், மகள் அவனை விட்டு விலகி அமர்ந்தாள்

“என்னாச்சுடி செல்லம்… அம்மா திட்டினாளா?” எனவும்

“வேண்டாம்… என்னை வம்பிழுக்காதீங்க சொல்லிட்டேன்” என முறைத்தாள் அவன் மனைவி செல்வி

“மம்மி, டாடிகிட்ட பேசக்கூடாதுனு சொன்னேன்ல… ஏன் பேசற?” என பெற்றவளிடம் கோபம் கொண்டாள், அவர்களின் ஐந்து வயது செல்லம் ப்ரீத்தி

“ஏய் குட்டி வாலு… என்ன கோபம் இப்போ?” என வலுக்கட்டாயமாய் அவளை தூக்கி சங்கர் தன் மடியில் இருத்த முயல, திமிறினாள் ப்ரீத்தி

“என்ன செல்வி நீயாச்சும் சொல்லேன்?” என பாவமாய் சங்கர் கேட்க, அதற்கு மேல் செல்வியால் மௌனமாய் இருக்க இயலவில்லை

“இன்னிக்கி ப்ரீத்தி ஸ்கூல் கான்சர்டுக்கு வரேனு சொன்னீங்கல்ல, பாவம் கொழந்த எவ்ளோ எதிர்பாத்துட்டு இருந்தா தெரியுமா? நீங்க கண்டிப்பா வருவீங்கனு மிஸ் Maddyகிட்ட கேட்டு, அவ ப்ரோக்ராம் கூட, கடைசிக்கு மாத்த சொன்னா பாவம்” என மனைவி கூறவும், குற்ற உணர்வில் சங்கரின் முகம் வாடியது

“சாரி ப்ரீத்தி குட்டி… ஆபீஸ்ல…” என்றவனை பேச விடாமல் இடைமறித்த ப்ரீத்தி

“சும்மா சும்மா பொய் சொல்லாத டாடி. ஜூலி டாடி உன் ஆபீஸ் தான, அவர் எல்லாம் மொதலே வந்து அவளுக்கு எப்படி சியர் பண்ணினார் தெரியுமா? நான் ஜூலி வீட்டுலையே பொறந்துருக்கலாம், ஐ ஹேட் யு” என அழுது கொண்டே அன்னையிடம் சென்றவள், “மம்மி எனக்கு பசிக்குது” என செல்வியின் மடியில் விழுந்தாள்

மகள் காட்டிய வெறுப்பில், அதிர்ச்சியில் உறைந்து நின்றான் சங்கர்   

கணவனின் அதிர்ச்சியை புரிந்தவளாய், “உங்களுக்காக தான் சாப்பிடாம வெயிட் பண்றோம், வாங்க சாப்பிடலாம்” என பேச்சை மாற்றினாள் செல்வி

“நீங்க சாப்பிடுங்க, நான் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்” என்றபடி நகர்ந்தான் சங்கர் 

“மணி பத்தாச்சு, இன்னும் உலாத்திட்டு இருந்தா காலைல எந்திரிச்ச மாதிரி தான்” என கேலியுடன் பால்கனிக்கு வந்த மனைவியைக் கண்டதும்

“பாப்பா தூங்கிட்டாளா?” எனக் கேட்டான் சங்கர் 

“ம்… தூங்கிட்டா” எனவும்

“இன்னும் என் மேல இருக்கற கோபம் போகலியா? குட் நைட் கூட சொல்லாம போய் படுத்துட்டா” என்றான் வருத்தமாய் 

“அட போங்கப்பா, அவ சொல்றதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு” என்றாள் புன்னகையுடன்

“நான் ஒரு நல்ல அப்பாவா இல்லையா செல்வி?” என அருகில் வந்து நின்ற மனைவியின் கையோடு கை கோர்த்தபடி சங்கர் கேட்க 

“ஐயோ என்னப்பா நீங்க? கொழந்த சொன்னதப் போய் பெருசு பண்ணிக்கிட்டு. காலைல எழுந்ததும் ஹாய் டாடினு கழுத்த கட்டிப்பா பாருங்க, அவ்ளோ தான் உங்க மகளோட கோபத்துக்கு ஆயுசு” என கணவனுக்கு ஆதரவாய் பேசினாள் செல்வி

“அவ கோபத்துக்காக சொல்லலடி, எனக்கே ரெம்ப கில்டியா இருக்கு. நானெல்லாம் சின்னதுல ஒரு சின்ன விசயம் செஞ்சாக் கூட, எங்கப்பா ஊர்ல ஒரு ஆள் பாக்கியில்லாம சொல்லுவாரு. ஒவ்வொரு விசயத்தையும் கவனிச்சு எவ்ளோ என்கரேஜ் பண்ணுவாரு தெரியுமா” என பெற்றவரின் நினைவில் உழன்றான் சங்கர் 

அவனே பேசி மன பாரம் குறைக்கட்டும் என நினைத்தவளாய், மௌனமாய் செவிமடுத்து நின்றாள் செல்வி

“எப்பப் பாரு ஆபீஸ் ஆபீஸ்னு நான் ப்ரீத்தியோட டைம் ஸ்பெண்ட் பண்றதே இல்ல செல்வி. இன்னிக்கி ஸ்கூலுக்கு வரேனு சொன்னதக் கூட மறந்துட்டேன். நிஜமா ரெம்ப கில்டியா இருக்கு, உங்கள வெளிய ஒரு அவுட்டிங் கூட்டிட்டு போய் கூட ஒரு மாசம் இருக்குமல்ல?” என வருந்திய கணவனை, ஆறுதல்படுத்த முனைபவள் போல், தோளில் சாய்ந்து கொண்டாள் செல்வி

சிறிது நேர மௌனத்திற்கு பின், “நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா?” என பீடிகையுடன் செல்வி ஆரம்பிக்க 

“என்ன?” என கேள்வியாய் பார்த்தான் 

“பொங்கலுக்கு ஊருக்கு போலாமா? ரெம்ப நாளாச்சுங்க” என்றாள் ஊரையும் உறவையும் காணும் ஏக்கத்துடன்

“செல்வி சொல்ல மறந்துட்டேன் பாரு, அம்மா இன்னைக்கி கால் பண்ணி இருந்தாங்க” என்றான் அப்போது தான் நினைவு வந்தவனாய் 

“தெரியும்… அதை இவ்ளோ நேரமா சொல்லுவீங்கனு எதிர்பார்த்து பொறுமை போய் தான் நானே பேச்சை எடுத்தேன்” என்றாள் செல்வி சற்றே கோபமாய் 

“உனக்கு யாருடி சொன்னா? என்னை உளவு பாக்க ஆபீஸ்ல ஆள் செட் பண்ணி இருக்கியா என்ன?” என சங்கர் புன்னகையுடன் வினவ 

“அது ஒண்ணு தான் கொறச்சல்” என நொடித்தவள், “நான் எதேச்சையா இன்னைக்கி ஊருக்கு போன் செஞ்சேன், அத்தை தான் உங்ககிட்ட பேசினதா சொன்னாங்க”

“ஓ… சாரி சொல்ல மறந்துட்டேன்” என்றான் நிஜமான வருத்தத்துடன் 

“உங்களுக்கு ஆபீஸ் தவிர வேற என்ன தான் நெனப்புல இருக்கு. வீட்டுல இருக்கற கொஞ்ச நேரமும் போனுலயே இருப்பீங்க, அதை விட்டா லேப்டாப். எதாச்சும் பேசுங்கன்னா என்ன பேசறதுனு சலிச்சுப்பீங்க. இந்த மாதிரி அம்மா போன் பண்ணின விசயம் கூட சொல்றதில்ல” என முறைத்தாள்

“என்னடி இதுக்கு போய் இப்படி கோவிச்சுக்கற?” எனவும் 

“பின்ன கொஞ்சுவாங்களா?” என இன்னும் அதிகமாய் முறைத்தாள் 

“ஓ கொஞ்சலாமே… என் அத்தை பெத்த ரத்தினமே, எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்ல, செல்வி, என் செல்ல தமிழ்ச்செல்வி… அழகான பேருடி உனக்கு” என மனைவியின் இடையை சுற்றி அணைத்தான் சங்கர் 

“போதுமே, தேவைனா இழைய வேண்டியது… அப்புறம் அழ வெக்க வேண்டியது” என சலித்தாள்

“நான் எப்படா உன்ன அழ வெச்சேன்?” என புரியாமல் விழித்தான் சங்கர்

“அப்ப இன்னிக்கி காலைல என்னை திட்டினது கூட ஞாபகமில்லையா?” என்றவளின்  கோபம் இன்னும் பன்மடங்காகியது 

“இன்னைக்கா?” என நினைவில் கொண்டு வர இயலாமல் சங்கர் விழிக்க 

“சமாதானம் செய்யாட்டி கூட பரவாயில்ல, திட்டனதே ஞாபகமில்லைனா, உங்களத் திருத்தவே முடியாது” என கணவன் பற்றியிருந்த கையை விலக்கி எழுந்தாள் செல்வி 

“ஏய்… காலைல கெளம்பற அவசரத்துல எதாச்சும் டென்சனா பேசியிருப்பேன். அதைப் போய் பெருசுபடுத்துறியே கண்ணம்மா” என அவளை செல்ல விடாமல் தடுத்து, சமாதானம் செய்ய முயன்றான் சங்கர் 

அவனின் பாவமான பார்வையில் சற்று மனம் நெகிழ, “அப்ப நான் சொல்றத கேளுங்க, உங்களுக்கும் ஒரு சேன்ஜ் வேணும், ப்ரீத்தியும் என்ஜாய் பண்ணுவா, இந்தியா போயிட்டு வரலாம் ப்ளீஸ்” என அதிலேயே நின்றாள் செல்வி 

“எனக்கும் ஆசையா தான் இருக்கு செல்வி… ஆனா ஆபீஸ்…” என சங்கர் தயங்க 

“ஆபீஸ் வேலை எல்லாமும் எப்பவும் தான்பா இருக்கும். நாம இப்படியே இருந்தா, ப்ரீத்திக்கு நம்ம உறவு ஜனம், பேச்சுவழக்கு, கலாச்சாரம் எல்லாமும் அந்நியமாய்டும்னு பயமா இருக்குப்பா…ப்ளீஸ்” என கெஞ்சல் பார்வை பார்த்தாள் செல்வி 

மனைவியின் கெஞ்சல் பார்வையும், அவள் கூற்றில் இருந்த நியாயமும் மனதில் உறைக்க, அதற்கு மேல் மறுத்துப் பேச இயலாமல் நின்றான் சங்கர் 

“ஒகே… நீ சொல்றத செய்ய நான் முயற்சி பண்றேன், ஆனா அதுக்கு முன்னாடி நான் சொல்றத நீ செய்யணும்” என சூழ்நிலையை இலகுவாக்க எண்ணி சங்கர் கண் சிமிட்ட

“என்ன?” என பதில் தெரிந்தே கேள்வி கேட்டாள் அவன் மனைவி

“அதான் கொஞ்ச நேரம் முன்னாடி கேட்டியே, கொஞ்சறதானு, அதைச் செய்” என சிரித்தான்

“ம்… மொதல்ல நான் சொன்னத நீங்க செய்யுங்க, அப்புறம் நீங்க சொல்றத நான் செய்யறேன்… சரியா?” என அவனைப் போலவே தாடையை பற்றி கேலியாய் கூறினாள் செல்வி 

“ராட்சசி….” என அவளை பற்றி இருந்த பிடியை மேலும் இறுக்கினான் சங்கர் 

சொந்த மண்ணில் கால் பட்டதும், ஒரு நாள் முழுக்க விமானத்தில் பயணம் செய்த அலுப்பு கூட பறந்து போனது சங்கருக்கு

இந்த பயணம் தன் வாழ்வையே திசை திருப்பப் போவதை, அப்போது அவன் அறிந்திருக்கவில்லை

சொந்த ஊரை ரசிக்கும் ஆவலில், டாக்ஸி டிரைவரிடம் சற்று மெதுவாய் செல்லுமாறு பணித்தான் சங்கர் 

அறுப்புக்கு காத்திருக்கும் பச்சை பசேல் வயல் வெளியும்…

பாசாங்கற்ற மனிதர்களின் முகமும்…

சிலு சிலுவென்ற காற்றும்…

தென்றலின் இசைக்கேற்ப நடனமாடும் மங்கை போல் தலை அசைக்கும் தென்னை மரங்களும்…

மடை நீரில் நடை பயிலும் நாரைகளும்…

வேட்டியை மடித்து கட்டி வரப்பில் எட்டி நடை போடும் உழைப்பாளிகளும்…

கண்டாங்கி சேலை முடிந்து தூக்கு சட்டி கையில் தொங்க, கதை பேசி செல்லும் பெண்கள் கூட்டமும்…

ம்ம்மா என குரல் கொடுத்து தன் பசி உரைக்கும் கோமாதாவின் குரலும்…

கழுத்து மணி ஒலிக்க அவர்களின் முன் சென்று  கொண்டிருந்த ரெட்டை மாட்டு வண்டியும்…

செம்மண் குழைத்த வீடுகளும்…

சாணி மெழுகிய திண்ணைகளும்…

வாசல் கோலத்தில் நிறைந்த சாணி பிள்ளையார்கள் மேல் பூத்திருந்த பூசணிப் பூக்களும்…

பொங்கலுக்கென வெள்ளை சாயம் பூசி இருந்த தெருக்களும்…

தூரத்தில் ஒலித்த கோவில் மணி ஓசையும்…

நகரின் பரபரப்பற்ற சூழ்நிலையும்…

பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை சங்கருக்கு

செல்வி தன் மகளிடம், தான் படித்த பள்ளி இது, விளையாடிய இடம் இது, தோழியின் வீடு இது என சிறு பிள்ளை போல் குதூகலமாய் கூறிக் கொண்டே வந்தாள்

ஆம், அவளும் அதே ஊரைச் சேர்ந்தவள் தான், சங்கரின் சொந்த அத்தை மகள் தான் செல்வி

ப்ரீத்திக்கு எல்லாமே புதிதாய் இருந்தது, உற்சாகமாய் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தாள்

மூன்று ஆண்டுக்கு முன் வந்த போது, ப்ரீத்தி சிறுபிள்ளை என்பதால், அவளுக்கு நினைவில் பதியவில்லை

வீட்டின் முன் டாக்ஸி நின்ற கணம், வயதை மறந்து ஓடி வந்த அன்னையைக் கண்டதும், தன்னையும் அறியாமல் கண் பனித்தது சங்கருக்கு

“ராசா… சங்கரு… வந்துட்டியாப்பா? வா மருமகளே… ஆத்தி என்ன பெத்த ஆத்தி” என பேத்தியை முத்தத்தால் குளிப்பாட்டினாள் சரஸ்வதி, சங்கரின் அன்னை

சற்று மிரண்டு விலகிய மகளிடம், “ஏய் ப்ரீத்தி… அப்பத்தா டா…உன் அப்பத்தா” என்றான் சங்கர் மகிழ்வுடன் 

“அம்மா எப்படிமா இருக்கீக? மேலுக்கெல்லாம் சொகந்தான?” தாயைக் கண்டதும், தாய் மண்ணின் பாஷை தானாய் வந்து ஒட்டி கொண்டது சங்கருக்கு

“எனக்கென்ன ராசா, சொகமா இருக்கேன். நீ தான் முன்னைக்கு இப்ப இளச்சாப்ல இருக்க” என மகனின் தலை கோதினாள் பெற்றவள்

அந்த உயிர்ப்புள்ள காட்சி, செல்வியின் கண்களை நிறைத்தது

தோளுக்கு மேல் வளர்ந்தாலும் என்ன, அன்னைக்கு மகன் என்றும் சிறுபிள்ளை தானே, எனத் தோன்றியது அந்த கணம்

அதற்குள் அவர்கள் வந்த சேதி அறிந்து, சூழ்ந்து கொண்ட சங்கரின் தந்தையும், செல்வி வீட்டு ஜனமும், அக்கம் பக்க உறவுகளும் என, அந்த இடமே உணர்ச்சிமயமாய் ஆனது

பின்பு உணவும் ஓய்வும் ஆனதும், வயலைக் காண மனைவி மகள் சகிதம், தந்தையையும் அழைத்துக் கொண்டு சென்றான் சங்கர்

“நம்ம ஊரு மாறவே இல்லீங்கப்பா…” என மகன் கூற

“ஆமாங்கண்ணு, மாத்தமில்லாத வர மாசில்ல, என்ன நான் சொல்றது” என சிரித்தார் தந்தை   

“உண்ம தானுங்கப்பா”என ஆமோதித்தான் சங்கர்

வயலின் நடுவில் சென்று நின்றதும், பிரபஞ்சமே தனக்கு சொந்தமானது போல் உணர்ந்தான் சங்கர்

ஒரு நாள் கூட இந்த உணர்வை, மன நிறைவை அவன் வாழும் நகரத்தில் அனுபவத்ததில்லை என்பது மனதில் உறைத்தது

“என்ன ராசா ரோசன? எந்த கோட்டைய புடிக்க?” என தந்தை கேலியாய் கேட்க

“நெல் அறுப்பு எப்பங்கப்பா?” என அதை பார்க்கும் ஆவல் கண்ணில் மின்னக் கேட்டான் சங்கர்

“நம்முளுது சேத்து வயல், நேரடி வெதப்பு தான கண்ணு, ஐ.ஆர்.இருவது ரகம், இனி தான்… நோம்பி கழிஞ்சு அறுப்பு” என்றார் 

இது என்ன / அது என்ன என கேள்வி கேட்ட மகளுக்கு, பதில் அளித்துக் கொண்டே வந்தான் சங்கர்

செல்விக்கு, தான் இப்போது காணும் சங்கரும், பரபரப்பாய் சுழலும் கலிபோர்னியா சங்கரும் வேறு வேறு ஆளோ என தோன்றியது 

ஆச்சர்யமாய் கணவனை ரசித்தபடி வந்தாள் அவள். அவனை இத்தனை சந்தோசமாய் பார்த்து நீண்ட நாட்கள் ஆனதென தோன்றியது செல்விக்கு

ஊருக்குள் ஒரு சுற்று வரும் ஆவலில், தந்தையிடம் கூறி விட்டு, மனைவி மகளை அழைத்துக் கொண்டு எட்டி நடை போட்டான் சங்கர்

தோட்டம் தாண்டி முதல் வீதிக்குள் நுழைந்ததும், கண்களை இடுக்கி பார்த்த ஒரு முதியவர், “ஆறது… நம்ம சரஸ்வதி மகன் சங்கரபாண்டியா… வந்துட்டியா ராசா? உங்காத்தா நீ வாரேனு ஊர் பூரா தண்டோரா அடிக்காத கொறதேன்…உன்ர பொண்டாட்டியா… அன்னிக்கி பாத்த மேனிக்கி அப்படியே இருக்கற போ… உன்ர மகளா இது… ஏன் இப்படி எலும்பும் தோலுமா இருக்குது புள்ள” என பொக்கை வாய் விரிய, வெற்றிலை காவி படித்த ஈறுகள் ஜொலிக்க சிரித்தார் அந்த முதிய பெண்மணி 

தன் முழுப்பெயர் சங்கரபாண்டி என்பதையே மறந்து போயிருந்த சங்கர், ஒரு கணம் பேச இயலாமல் நின்றான்

பின் சுதாரித்தவன், “ஆமாத்தா… சரஸ்வதி மகன் சங்கரபாண்டி தான்… சொகமா இருக்கீகளா?” என நேசமாய் முதியவளின் அருகில் திண்ணையில் அமர்ந்தான்

“இருக்கறன் ராசா… காடு வா வா ங்குது… வீடு போ போ ங்குது” என கூறியவளை, இடைமறித்தது ஒரு குரல்

“சங்கரபாண்டி… நீ பொறந்த காலத்துல இருந்தே ஆத்தா இதத்தேன் சொல்லிக்கிட்டு கெடக்கு… காடும் வாங்கராப்ல காணோம்… வீடும் போங்கராப்ல இல்ல” என முதியவளின் மருமகள் சுந்தரி சிரிக்க, முதியவள் கோபமாய் முகம் திருப்பினாள்

“ஹா ஹா… சொகமாங் அத்த… எங்க மச்சான்க ஆராயும் காணல” என வீட்டின் உள்நோக்கி பார்த்தான் சங்கர்

“நம்முளுது கரும்பு காடாச்சே ராசா… இப்பத்தான கிராக்கி கரும்புக்கு… சொசைட்டிக்கு போய் இருக்காக அல்லாரும்… வர்ற நேரந்தான்… இரு கண்ணு காப்பி தண்ணி எடுத்துட்டு வாறன்… உள்ள வா செல்வி… வா குட்டி பொண்ணே, அப்படியே அப்பன உரிச்சு வெச்சுருக்கா உன்ர மக…வா கண்ணு” என சுந்தரி உரிமையாய் அழைக்க

“இல்லீங் பெரிம்மா… பின்ன வாறம்… சும்மா அப்படியே ஊர ஒரு சுத்து பாக்கலாமுன்னு காலாற வந்தோம்” என செல்வி கூற

“அதுவுன்செரிதேன், சாவுகாசமா ஒருவேள சோருங்கராப்ல வாங்க கண்ணு” என கிராமத்து பாசம் மிளிர அழைப்பு விடுத்தார் சுந்தரி

அதற்குள் ப்ரீத்தி தன் அன்னையின் காதில் ரகசியமாய் ஏதோ கேட்க, “என்ன கேக்குது புள்ள?” என முதியவள் விசாரிக்க

“உங்க காதுல ஏன் இவ்ளோ பெரிய ஓட்டைனு கேக்கறா ஆத்தா” என சிரித்தாள் செல்வி

“அதுவா… இங்க வா சொல்லுறன்” என ப்ரீத்தியை அருகில் இருத்திக் கொண்டவள், “அது… என்ற ராசா… அதான் என்ற புருஷன், என்ன கண்ணாலம் கட்டினப்ப பத்து பவுணுல தண்டட்டி போட்டாக… ஊரே மூக்குல வெரல வெச்சு பாத்தது… அந்த தண்டட்டி போட்டுதேன் காது இப்படி ஆகிப் போச்சு. அது சரி, பட்டணத்து சிங்காரி உனக்கென்ன தெரியும் தண்டட்டியும் அட்டிகையும்” என மீண்டும் பொக்கை வாய் சிரித்தது

அவள் கூரியதெதுவும் புரியாத போதும், ஏதோ மியூசியத்தில் அதிசியத்தை பார்ப்பதை போல், அந்த முதியவளை ரசித்தாள் ப்ரீத்தி

தனக்கும் முதியவளின் சிரிப்பு தொற்றிக் கொள்ள, வாய் பொத்தி சிரித்தது பிள்ளை 

இளமையும் முதுமையும் சங்கமித்த அந்த காட்சியை, தன் கைப்பேசியின் கேமராவில் அழகாய் சிறை பிடித்தான் சங்கர் 

அவர்களிடம் விடைபெற்று, ஊர் மத்தியில் இருந்த கோவில் நோக்கிச் சென்றனர் மூவரும்

கோவிலில், காப்பு கட்டு நாளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன. சங்கரைக் கண்டதும், எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்

“அடடே… சங்கரு… நீ வாரன்னு ஆத்தா சொல்லிச்சு… எப்படி மச்சான் இருக்க? வா தங்கச்சி… புள்ள அப்படியே சங்கரு தான்” என்ற சங்கரின் சிறு வயது தோழன் முத்து, ஆசையாய் ப்ரீத்தியை தூக்கிக் கொண்டான்

“நல்லா இருக்கேண்டா முத்து… நீ எப்படி? தங்கச்சி புள்ளைக எல்லாம்?” என தோழனின் நலம் விசாரித்தான் சங்கர் 

“அல்லாரும் சொகந்தான்… அவ ஆத்தா ஊட்டுல இருக்கா. மூணாவது பொம்பள புள்ள… ரெண்டு மாசந்தான் ஆச்சு, ஆத்தா சொல்லுச்சா?” என ஆவலாய் கேட்டான் முத்து

“அப்படியா? ரெண்டும் ஆம்பள புள்ளயா போச்சுனு நான் போன வாட்டி வந்தப்ப நீ மொணங்குன. ரெம்ப சந்தோஷம் முத்து… இன்னும் அம்மாகிட்ட உக்காந்து பேசவே இல்ல” என்றான் சங்கர்

“சரிப்பா… நோம்பி கழிஞ்சு நாளமத்தன நம்ம ஊட்டுக்கு ஒரு வா கரி சோறு உங்கராப்ல வா… தங்கச்சி, இவன் மறந்தாலும் நீ கூட்டிட்டு வாற… சரி தான” என உரிமையாய் செல்வியிடம் கூறினான் முத்து

“கண்டிப்பா வாரமுண்ணா” என்றாள் செல்வி, அந்த கள்ளமற்ற அன்பில் நெகிழ்ந்தவளாய்

இப்படியாய் சிறு வயது தோழர்களையும், தூக்கி வளர்த்த உறவுகளையும் திகட்டாமல் பார்த்தும் பேசியும் அந்த நாள் கழிந்தது

ங்கரின் வீட்டில், அவன் வசதிக்கென சில வருடம் முன் கட்டப்பட்டிருந்த காரை மச்சு அறையில் (மாடி ரூம்), பௌர்ணமி நெருங்கும் நிலவை செல்வியுடன் ரசித்துக் கொண்டிருந்தான் சங்கர்

மனம் நிறைவாய் இருந்தது இருவருக்கும். ஊர் சுற்றிய அலுப்பில் ப்ரீத்தி உறங்கி இருக்க, கணவனும் மனைவியும் கதை பேசிக் கொண்டிருந்தனர்

“என்ன தான் சொல்லுங்க… நம்மூரு நம்மூரு தான் இல்லியா?” என செல்வி கேட்க

“நிச்சியமா… அம்மா மடில படுத்து தூங்கற சுகம் தான் செல்வி இது” என மகிழ்வுடன் ஆமோதித்தான் சங்கர்

“ஆமாம்பா… நம்ம ப்ரீத்தி என்ன சொன்னா தெரியுமா கொஞ்சம் முன்னாடி. நாம இங்கயே இருந்துக்கலாம் மம்மி… இங்க வந்ததுல இருந்து டாடி என் கூடவே இருக்காரு… திட்டவே இல்ல… நெறய பேரு இருக்காங்க… அப்பத்தா எனக்கு கதை எல்லாம் சொன்னாங்க… அப்பிச்சி கரும்பு உரிச்சு குடுத்தாங்க… ஜாலியா இருக்கு மம்மினு சொல்றா. அவ சொல்றது நடந்தா சொகந்தான்” என்றாள் செல்வி பெருமூச்சுடன் 

“ஏய்… இது ப்ரீத்தி ஆசையா இல்ல என் பொண்டாட்டி ஆசையா… உண்மையச் சொல்லு…” என மனைவியை சீண்டினான் சங்கர்

“எனக்கும் ஆச தான்… நெனச்சா ஆத்தா ஊட்டுக்கு போலாம்… அக்கா தங்கச்சிய பாக்கலாம்… நல்லது கெட்டதுல கலந்துக்கலாம்… ஊரும் உறவுமா வாழுற வாழ்க்கை சுகந்தானேப்பா….ஏன் உங்களுக்கு இல்லையா ஆச? வந்ததுல இருக்கு பாத்துட்டு தானே இருக்கேன்… ஐயா மொகத்துல நூறு வாட்ஸ் பல்பில்ல எரியுது” என பதிலுக்கு கணவனை சீண்டினாள் செல்வி 

“ஏய்… நீ இப்படி நம்ம பேச்சு வழக்குல பேசிக் கேட்டு எம்புட்டு நாளச்சு செல்வி… கல்யாணத்துக்கு முன்ன பேசின என் மொற பொண்ணு செல்வி இப்ப கண் முன்னாடி நிக்கராப்ல இருக்குடி” என மனைவியை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான் சங்கர் 

திருமணத்திற்கு முந்திய நாட்களை பற்றி பேசியதும், வெட்கத்தில் முகம் சிவக்க “போங்க மாமா” என கணவனின் தோளில் முகம் புதைத்தாள் செல்வி 

“ஆஹா… நீ என்ன மாமானு கூப்ட்டு கூட எத்தன நாளாச்சுடி” என அவளை மேலும் சிவக்க வைத்தான் சங்கர் 

“என்ன வம்பு பண்ணினது போதும், நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல” என காரியத்தில் கண்ணாய் நின்றாள் செல்வி 

“என்ன?” என வேண்டுமென்றே அவளை பேச வைத்து கேட்கும் ஆவலில், புரியாதவன் போல் கேட்டான் சங்கர் 

“இங்கயே இருந்துரலாமா?” என ஏக்கமாய் கேட்ட மனைவியை, பாவமாய் பார்த்தான் சங்கர் 

வளர்ந்து செழித்த நாற்றை பிடுங்கி நட்டது போல், அவள் கொண்டாடும் ஊரில் இருந்து பிரித்து சென்று விட்டோமே என முதல் முறையாய் வருந்தினான் 

“என்ன மாமா பதிலே காணோம்” என செல்வி மீண்டும் கேட்க 

“நீ மாமானு கூப்படற அழகுல மயங்கி நிக்கறேண்டி” என்றான்

“ச்சு… பதில் சொல்லுங்க” என சிணுங்கினாள்

“என்ன சொல்ல? நடக்கறதா பேசு செல்வி” என்றான் பெருமூச்சுடன் 

“ஏன் நடக்காது?” என்றாள் கோபமாய் 

“விளையாடறயா? எனக்கு நாத்து நடறதோ… களை எடுக்கறதோ என்ன தெரியும் சொல்லு… இங்க இருந்து என்னடி செய்யறது?” என நிதர்சனத்தை புரியவைக்க முயன்றான் 

“ஏன் மாமா… இங்க இருக்கறவக யாரும் பொழக்கிலியா? உங்க பிரெண்ட் முத்து அண்ணன் படிச்சுட்டு ரைஸ் மில்லு வெக்கலையா இங்கயே… இன்னிக்கி பாத்தோமே சுந்தரி பெரியம்மா… அவங்க மகன் கூட அடுத்த வெதப்புக்கு அப்பறம் சுகர் மில்லு ஆரம்பிக்க போறதா அத்த சொல்லிட்டு இருந்தாக”

“ஓ… மாமியாரும் மருமகளும் சேந்து தான் அட்டாக் பண்றீங்களா?” என சங்கர் சிரிப்புடன் கேட்க 

“இல்லப்பா… பேச்சு வாக்குல அத்த சொன்னதுதேன். இங்கயே நாமளும் எதுனா தொழில் பண்ணிக்கலாமேப்பா” என கெஞ்சலாய் கணவனைப் பார்த்தாள் செல்வி 

“செல்வி செல்லம்… அமெரிக்க வாழ்க்கைக்கு பழகின நமக்கு இது கொஞ்ச நாளுல சலிச்சுடும்மா… அந்த வசதி வாய்ப்ப மனசு எதிர்பார்க்கும்… அது மட்டுமில்ல ப்ரீத்தி படிப்பப் பத்தி யோசிச்சு பாரு”

“இங்க பாருங்க மாமா… மனமிருந்தா மார்கமுண்டு… என்ன பெரிய அமெரிக்கா பேரிக்கானு? இந்த மண்ணுல தான பொறந்து வளந்தோம்… அந்த வசதி வாய்ப்பெல்லாம் வெறும் வெளிப்பூச்சு தா

இன்னும் சரியா சொல்லணும்னா அனல் மேல இருக்கற பனித்துளி போல, அதுக்கு என்ன ஆயுசு சொல்லுங்க? ஒரு நொடில அனல்ல பனித்துளி கரைஞ்சு போறாப்ல அற்ப ஆயுசு சுகம் தான் அதெல்லாம். இதான்ப்பா நம்ம இடம்

ப்ரீத்தி ஸ்கூல் பத்தி என்ன? இப்ப பக்கத்து டவுன்லையே நல்ல நல்ல ஸ்கூல் எல்லாம் இருக்கு தெரியுமா?” என்ற மனைவியின் கூற்றில் இருந்த உண்மை, சாட்டையடியாய் மனதில் விழ, சற்று நேரம் யோசனையில் உழன்றான் சங்கர் 

அவனுக்கும் கூட ஊரில் வந்து இறங்கியதில் இருந்து, இதே சிந்தனையாய் தான் இருந்தது. அதிலும் வயோதிகம் நெருங்கும் பெற்றோரின் முகம் வேறு, கண் முன் வந்து பயம் காட்டியது

இன்னும் எத்தன தான் சம்பாதிச்சாலும், தாய் மண்ணின் சுகத்திற்கு ஈடாகுமா?

இங்கு காலூன்ற வேண்டிய மட்டும் தான் சம்பாதித்தாயிற்றே. இன்னும் ஏன் அங்கு இருக்க வேண்டும்? என பல கேள்விகள் சங்கரின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன

“ம்…சொல்லுங்க” என செல்வி விடாமல் நச்சரிக்க 

“ஸ்கூல் விசயம் எல்லாம் கூட நல்லா விசாரிச்சுட்டு தான் பேசறீங்களா அம்மணி?” என கேலி செய்தான் சங்கர் 

“இன்னும் நீங்க பதில் சொல்லல மாமா” என்றாள் அதிலேயே குறியாய்

சற்று நேரம் யோசித்தவன்,பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் “இப்படி மாமானு ஆசையா என் பொண்டாட்டி கேட்டா மாட்டேன்னு எப்படிடி சொல்ல” என சங்கர் குறும்புச் சிரிப்புடன் கூற

“நெசமாவா?” என ஆனந்தத்தில் கணவனை கட்டிக் கொண்டாள் செல்வி

மகிழ்வுடன் அணைப்பில் இணைத்துக் கொண்டவன், “ஆனா அவசரப்படாத செல்வி, நெனச்ச உடனே இங்க வந்துற முடியாது. அங்க போய் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, ப்ரீத்தி ஸ்கூல் இயர் முடிஞ்சப்புறம் வருவோம் சரியா?” எனவும் 

“போதும் மாமா… நீங்க வர ஒத்துகிட்டதே போதும்” என மகிழ்ச்சியில் ஜொலித்தது செல்வியின் முகம் 

“ஆனா பின்னாடி நீ இந்த முடிவ நெனச்சு எப்பவும் வருத்தப்பட மாட்டியே?” என சங்கர் கேள்வியாய் பார்க்க 

“எனக்கென்ன பைத்தியமா?” என கோபமாய் பார்த்தாள் செல்வி

கோபத்திலும் ஜொலித்த மனைவியின் அழகிய முகத்தை ரசித்தவன், “இல்லையா பின்ன, என் மேல பைத்தியமா கட்டுனா மாமனத்தான் கட்டுவேன்னு ஒத்தகாலுல நின்னவ தான நீயி” என பழைய கதையை கூறி சங்கர் கேலி செய்ய

“ஆஹா, நாங்க தான் ஒத்தகாலுல நின்னமாக்கும், உங்க கதைய எடுத்து விடவா” என செல்வி செல்ல மிரட்டல் விடுக்க

“வேண்டாம் தாயே, நான் சரண்டர் ஆகிடறேன்” என சிரம் தாழ்த்திக் கூற

“போங்க மாமா… உங்களுக்கு எப்பவும் கேலி தான்…” என மனம் நிறைந்த சந்தோசத்தில், கணவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள் செல்வி

காலையில் தன் பெற்றவர்களிடம் இந்த முடிவைக் கூறி, அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்வை காணும் ஆவல், அப்போதே சங்கரின் நெஞ்சில் ஊற்றாய் பொங்கியது

தை பிறந்தது… அவர்கள் வாழ்வில் வழியும் பிறந்தது….

பொங்கலோ பொங்கல்…

பொங்கலோ பொங்கல்…

பொங்கலோ பொங்கல்…

மூணுகல்லு முட்டுகுடுத்து

மூணுபடி அரிசிபோட்டு

கும்மிபொங்கல் வெச்சசுகம்

குக்கர்பொங்கல் தந்திடுமா!!!

இந்த சிறுகதை, எனது “அனல் மேலே பனித்துளி” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதை. இந்த சிறுகதைத் தொகுப்பின் Link, கீழே கொடுத்துள்ளேன். இந்த புத்தகம், இம்மாத (ஜனவரி 2021) “சஹானா  இதழின் புத்தக வாசிப்புப் போட்டி”யில் இடம் பெற்றுள்ளது. நன்றி 

Book Link 👇

(முற்றும்)

 

Similar Posts

6 thoughts on “அனல் மேலே பனித்துளி ❤ (பொங்கல் சிறப்புச் சிறுகதை) – சஹானா கோவிந்த்
  1. சஹானா மின்இதழுக்கு மிகவும் நன்றி . எனது பரிசாக அருமையான சுவர் ஓவிய படங்கள் இனிமையான பொங்கல் திருநாளில் வந்து சேர்ந்தது. வாசகர்களுக்கும் எனது நன்றி . இது போல் சஹானா மின்இதழ் வாசகர்களுக்கும் பங்கு கொள்பவர்களுக்கும் பரிசுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்

  2. முன்பே படிச்சிருந்தாலும் மறுபடியும் படித்து ரசித்தேன். நல்ல உணர்வு பூர்வமான கதை. ஆனால் எல்லோரும் இப்படி முடிவு எடுப்பதில்லை என்பதும் உண்மை.

  3. பிறந்த நாட்டில் வாழ்வது இனிமை யானது , சிறந்தது என்பதனை இக்கதை தெளிவாக எடுத்து க் கூறுகின்றது . அருமை . வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!