நித்யதிருப்தா
எப்பொழுதும் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பவள்.
ஆன்மாக்களாகிய தன் பக்தர்களிடத்தில் குறைகள் இருந்தாலும், அதை மனதில் கொள்ளாது அவர் செய்யும் வழிபாடுகளால், சாஸ்வதமாக திருப்தி அடைபவள்.
அவளுக்கென்று எந்த ஆசைகளும் இல்லாததால் மட்டும், நித்ய திருப்தாவாக இருப்பவள்
அது மட்டுமல்ல, அவளது அடியார்களின் ஆசைகளையும் தீர்த்து வைத்து, அவர்களையும் நித்யதிருப்தாவாகச் செய்பவள்.
அவள் அதற்கு மேலும் அடியயார்களுக்கு ஆசையே வராதவண்ணம் அவர்களை வழிப்படுத்தி, அவர்களையும் வசப்படுத்துபவள்.
ஆசையை தீர்த்து வைப்பதை விட ஆசையே ஏற்படமல் செய்வது மிகவும் உத்தமம்.
திருமூலர் அதனால் தான் அடித்து கூறினார் “ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடுயாயினும் ஆசை அறுமின்” என
இன்றைய காலகட்டத்தில் அப்படி நித்யதிருப்தாவாக ஒரு மனிதன் இருக்க முடியுமா?
ஆம் இருந்தார் ஒருவர் நம்முடைய காலகட்டத்திலேயே.
அவர் தான் மஹாகவி பாரதியார்.
நாம் இன்றைக்கு எந்த விஷயங்கள் எல்லாம் சந்தோஷம் என்று நினைத்து திருப்தி அடைவது போல் நினைக்கிறோமோ, அவைகள் ஒன்றுமே இல்லாமல் இருந்தும் நித்யதிருப்தாவாக இருந்தார்.
வீடு வாசல் கிடையாது, உனவுக்கு வசதி கிடையாது, உடுக்க துணி வகைகள் கிடையாது
ஆங்கிலேயன் தொல்லை தாங்காமல் பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் அலைந்து கொண்டிருந்தார்
இருந்தாலும் அவர் என்ன சொன்னார் தெரியுமா “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா”
நாமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம். அம்பிகையை முழுவதும் நம்பிவிட்டாவர்களுக்குத் தான் இது சாத்தியம்
பக்தநிதி
பக்தர்களுக்கு மிகப் பெரிய நிதியாக விளங்குபவள். அடியவர்கள் எதை கேட்டாலும் அதை அவர்களுக்கு அளித்து, என்றும் குறையாத நிதியாக விளங்குபவள்.
மற்ற நிதிகள் எல்லாம் ஒரு காலத்தில் அழிந்து விடும், திருப்தியளிக்காமல் போனாலும் போகலாம்
ஆனால் பக்தர்களுக்கு அவள் அளிக்கும் பக்தி என்ற நிதி இருக்கிறதே, அது அள்ள அள்ள குறையாது, திருப்தியளிக்காமலும் போகாது.
நிகிலேஸ்வரி
இந்த அண்ட சராசரத்துக்கும் ஈஸ்வரியாக இருப்பவள்.
அகிலமென்றால் உலகம். நிகிலம் என்றால் இந்த உலகத்தையும் சேர்த்து உள்ள ஈரேழு பதினான்கு உலகத்திற்கும் ஈஸ்வரியாகவும் தலைவியாகவும் இருந்து காப்பவள்.
மனித வர்க்கம் மட்டுமல்லாமல், புல், பூண்டு, புழு, மரம், செடி, கொடி, பறவைகள், பாம்பு, கல், கணங்கள், அசுரர்கள், முனிவர்கள் மற்றும் ஒரு செல் உள்ள தாவரங்கள், ஆகிய எல்லாப் பதினான்கு பிறப்புக்களுக்கும் அவள்தான் தாயாக இருந்து காக்கும் நிகிலேஸ்வரி.
சதி
அம்பாளுக்கு சதி என்ற பெயர் உண்டு. இது அவளுடைய பதிவிரதா தன்மையை சிறப்பிக்கும் வண்ணம் அமைந்தது.
தக்ஷனுக்கு மகளாக பிறந்த போது அவளுக்கு அவன் சதி என்ற பெயரைத் தான் வைத்தான். பிறகுதான் தாக்ஷயணி என்ற பெயர் வந்தது.
சதி என்றால் உடன்கட்டை என்ற வார்த்தையோடு இதை சேர்த்துக் கொள்ளக் கூடாது
தக்ஷன் இந்த பெயரை வைத்த போது அவன் நினைக்கவில்லை, அவனே பிற்காலத்தில் தன் மகளுக்கே பிரச்சனையை கொடுத்து சிவனையும் அவளையும் பிரித்து வைத்து சிவனை அவமானப்படுத்தி, தன் கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாத தாக்ஷயணி, தந்தையான தக்ஷனை அழித்து அவளும் அக்னி குண்டத்தில் விழுந்து தான் சதி என்பதை நிரூபித்தாள்
சதி என்றால் சத்தோடு சேர்ந்தவள், அதாவது சிவப்பரம்பொருளோடு ஐக்கியமானவள். அதனாலும் சதி என்ற பெயர் வந்தது
ஜனனி
ஜனனி என்றால் நாம் ஜனனம் எடுப்பதற்கு காரணமானவள். அப்படியென்றால் நாம் ஜனனம் எடுக்காமல் இருக்க வேண்டும் என்றாலும் அவள் தான் அருளவேண்டும்.
ஜனனி என்றால் நம்மையெல்லாம் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில், லலிதா பரமேஸ்வரியாக அவதாரம் செய்தவள்.
புதார்ச்சிதா
புதனால் அர்ச்சனை செய்யப்பட்டவள். நவகிரங்களும் தான் அவளை வணங்கி துதிக்கின்றனர்.
அப்படியென்ன புதனுக்கு மட்டும் சிறப்பு. புதன் தான் ஞானத்தை அளிப்பவன். ஆனால் புதனுக்கே ஞானத்தை அளித்தவள் லலிதா பரமேஸ்வரி தான்.
நாம் எல்லோரும் ஞானம் வேண்டித்தான் அம்பாளிடம் துதி செய்கிறோம்.
அதனால் தான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த சக்தி உபாசகனான மகாகவி பாரதியார் “நன்றது செய்திடல் வேண்டும் அந்த ஞானம் வந்தால் போதும் வேறேது வேண்டும்” என்று பாடினான்.
அதனால் தான் புதன் அவளை வணங்குகிறான். அப்படி புதனுக்கே ஞானத்தை அளித்த அம்பாளை வணங்கினால் நமக்கும் அவள் ஞானத்தை அருளுவாள்.
உமா
லலிதா ஸகஸ்ர நாமத்தில் உமா என்ற நாமம் வருகிறது.
மூன்று அக்ஷரங்களை உடையது தேவியின் உமா என்ற திருநாமம்.
எப்படி அ+உ+ம் பிரணவ மந்திரமான ஓம் என்பது படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கிறதோ; அதே மாதிரி தள் அக்ஷரங்களை கொஞ்சம் மாற்றி அமைத்தால் உ+ம்+அ = உமா என்ற நாமத்தை அளிக்கும்.
இதில் காத்தல் முதலில் வந்து, படைத்தலும் அழித்தலும் பின்னே வருகிறது.
படைத்தல் அழித்தல் இவைகளைக் காட்டிலும், காத்தல் தான் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த ஜகத்தை காப்பவளே அவள் தானே
அதனால் தான் உமா என்று கூறி வணங்குகிறோம்.
உ என்ற சப்தம், சிவபெருமானான சந்திரசேகரனைக் குறிக்கிறது
மா என்றால், அவனுடைய கிருஹபத்னி, அதனாலும் உமா என்ற வாக்யம் பொருந்தும்
ஹிமாவான் புத்ரியான பார்வதி, சிவனை அடைவதற்காக தவம் செய்ய புறப்படுகிறாள். அவளுடையா தாயார் அவளை “உ” என அழைத்து
“மா”வேண்டாம் போகாதே நீ அடையப் போகின்ற சிவன் இங்கேயே கைலாசத்திலாயே இருக்கிறார், நீ எதற்கு தவம் செய்யப் போக வேண்டும் என்கிறாள்
“உ” என்றால் அழைத்தல் என்ற பொருள், “மா” என்றால் “போகாதே” என்று பொருள். அதனாலும் உமா என்ற நாமாம் தேவிக்கு பொருந்தும்
ஸ்ரீ சக்ரராஜ நிலையாம்
ஸ்ரீ சக்கர மகாமேரு என்பது, சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீலலிதா மகாதிரிபுரசுந்தரியின் மகாசாம்ராஜ்யம்.
இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு.
ஸ்ரீசக்கரத்தை வழிபடும் போது, அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்ய முடியும்.
ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹாதிரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.
சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கரர் பேசும் போது, ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து, பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸிவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல்லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மகாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்
ஸ்ரீ மகாதேவியின் பாதத்தூளியை எடுத்து ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிக் கொண்டு இருக்கிறார்.
ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தினால் பொடியாக்கி, தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக் கொண்டார்.
பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும், ஸ்ரீ லலிதா மகாதிரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று, சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.
தேவி சிவனை அன்பால் நோக்கிய போது, வல்லபை ஸித்திலட்சுமியுடன் ஸ்ரீகணபதி தோன்றினார்.
ஸ்ரீகணபதியும், முருகனும் ஸ்ரீசக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள்
ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்
நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர்.
இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மகா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மகாதிரிபுரசுந்தரியின் அருளைப் பெறுவோம்
ஸ்ரீ சக்ரராஜ நிலயா ஸ்ரீ மத் திருபுரசுந்தரி!!
அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் கடைசியாக முடிவது அவள் யார் என்ற விளக்கத்துடன்.
அவள்தான் திருபுரசுந்தரி. இதையே அபிராமி பட்டரும் “திரிபுரசுந்தரியாவது அறிந்தனமே” என்கிறார்
இந்த திருபுரசுந்தரி, பிரும்மத்தையும் இந்த ஜீவனையும் ஒன்றாக சேர்க்கக் கூடியவள். அவள் எங்கு இருப்பாள், ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவள்
அப்படிப்பட்ட லலிதாவை திருபரசுந்தரியை வணங்கி இப்பொழுது விடைபெறுவோம்
பின்பு ஒரு சமயம் அம்பாளின் அருளோடு தொடருவோம்
இதுவரை வந்து படித்தவர்களுக்கு நன்றி.
வாய்பளித்த புவனா(சஹானா) கோவிந்துக்கு நன்றி
இந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு
- நவராத்திரி வழிபாடு உருவான கதை
- கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
- நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
- நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
- நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
- நவராத்திரிக்கான பாமாலை
- நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
- லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள்
- அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள்
- அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்
கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
GIPHY App Key not set. Please check settings