in ,

நவராத்திரி 8 முதல் 10ம் நாள் வரை (கீதா சாம்பசிவம்)

8 முதல் 10ம் நாள் வரை

நவராத்திரி எட்டாம் நாள்

இன்றைய தினம் அனைத்து சக்திகளும் சேர்ந்து போரிடுவார்கள். அம்பிகை ரக்தபீஜனை வதம் செய்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பாள்

இவளை நாரசிம்ஹி அல்லது துர்கையாக வழிபடுவார்கள். இந்தப் போரில் அன்னைக்கு உதவிய அனைத்து சக்திகளையும் வழிபடுதல் விசேஷமானது.

பிராம்ஹி  பிரம்மனுக்கு உரிய சக்தியாக ப்ராம்ஹி. நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் உகந்தது. ருத்ராக்ஷ மாலை தரித்து ஹம்ச வாஹனத்தில் அமர்ந்த வண்ணம் முன்னிரு கரங்களால் அபய ஹஸ்தம் காட்டிப் பின்னிரு கரங்களில் கமண்டலமும் அக்ஷமாலையும் தரித்திருப்பாள். சகல கலா வல்லியான இவளைத் துதித்தால் அனைத்துக் கலைகளும் கை கூடும்.

வாராஹி, மஹா விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் அம்சமாய்த் தோன்றியவள். அம்பிகையின் படைத்தளபதி இவளே!

தண்டினி எனவும் அழைக்கப்படுவாள். மேக வண்ணத்திலானவள். இவளுக்கு உகந்த நிறம் கறுப்பு. வராஹ முகத்தோற்றத்துடன் கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி முன்னிரு கரங்களால் அபய ஹஸ்தம் காட்டுவாள். சிம்ஹ வாஹினியான இவளை வணங்குவோர்க்குச் சிக்கல்கள், இன்னல்கள், இடையூறுகள் நீங்கும்.

மாகேஸ்வரி! முக்கண்ணனின் சக்தியான இவளும் முக்கண்கள் கொண்டவள். ஈசனைப் போலவே ஜடாமகுடத்துடன், மான், மழுவுடன்  ரிஷப வாஹனத்தில் காட்சி கொடுப்பாள். வெண்மை உகந்த வண்ணம். மங்களங்களை அள்ளித்தரும் தேவி இவள்.

இந்திராணி: இந்திரனின் சக்தியான இவள் மாஹேந்திரி என்னும் பெயரும் கொண்டவள். தங்கம் போல் மிளிரும் பொன்னிற மேனி கொண்ட இவள் சக்தி ஆயுதமும்,  வஜ்ராயுதமும் தாங்கி வெள்ளை யானை மேல் அமர்ந்த வண்ணம் அபயஹஸ்தம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குவாள்.

இன்று ஒன்பது வயதுப் பெண் குழந்தையை “துர்கை”யாகப் பாவித்து வழிபட வேண்டும். பத்மக் கோலம் போடலாம். அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப் பூக்கோலமும் போடலாம்.

பூமாலை

முல்லை மலர்கள், தாமரை மலர்கள், மருதாணிப்பூக்கள், செண்பக மலர்கள், சாமந்திப்பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிக்கலாம்.

எல்லா நிறங்களும் கலந்த வஸ்திரங்கள் கொடுக்கலாம்.

கொலுவிலும் இன்று சக்திகள் புடைசூழ வீற்றிருக்கும் துர்கையாக அம்பிகையை அலங்கரிக்கலாம். சக்திகள் புடை சூழ மலர் அம்பு ஏந்தி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் இந்த அம்பிகையைத் துதித்தால் பகை ஒழியும். சத்ரு நாசம் ஏற்படும். மனதில் தைரியமும் செயல் திறனும் அதிகரிக்கும். அத்தகைய வல்லமையைத் தருவாள் இந்த மஹாசக்தி!.

அஷ்டமி திதியான இன்று தான் சரஸ்வதி ஆவாஹனம் செய்யப்படுகிறது

பாமாலை

இன்றும் அபிராமி அந்தாதி, சரஸ்வதி துதி, சகலகலாவல்லி மாலை, லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவை சொல்லி வழிபடலாம்.

நிவேதனம்

வேர்க்கடலைச் சுண்டல் மாலையில் பண்ணலாம். காலையில் தேங்காய்ச் சாதம் அல்லது எள் சாதம் பண்ணலாம்.

இன்றைய எட்டாம் நாளும் சனிக்கிழமையாக இருப்பதால் பலரும் எள் சாதமே பண்ணுவார்கள். இல்லை எனில் பால் பாயசம் செய்யலாம்.

தேங்காய்ச் சாதம், எள் சாதம் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன்.

1. பால் பாயசம்

 • பால் பாயசம். ஒரு சின்னக் கிண்ணம் அரிசியைக் களைந்து நெய்யில் வறுத்துக் கொண்டு அரை லிட்டர் பாலில் குழைய வேக விடவும்.
 • பால் பாயசத்துக்கு என முதல் நாளே ஒரு லிட்டர் பால் வாங்கிக் குறுகக் காய்ச்சி வைக்க வேண்டும். பால் சிவந்த நிறம் வந்ததும் அதில் உள்ள ஆடைகளோடு அப்படியே எடுத்து வைக்க வேண்டும்.
 • குழைந்து வெந்த அரிசியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரையைச் சேர்க்கவும். ஒரு கிண்ணம் சர்க்கரை வரை சேர்க்கலாம்.
 • பின்னர் குறுகக் காய்ச்சிய பாலைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பாயசம் அடியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
 • பாயசம் கெட்டிப் பட்டதும் பாலில் கரைத்த குங்குமப் பூச் சேர்த்து, தேவை எனில் ஏலக்காய்ப் பொடியும் சேர்த்துக் கீழே இறக்கவும்.
 • முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா ஆகியவற்றை மெலிதாகச் சீவி வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.

2. வேர்க்கடலைச் சுண்டல்

 • வேர்க்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும். இரண்டு, மூன்று முறை நன்கு கழுவி நீரை மாற்றி வைக்கவும்.
 • சொத்தைக் கடலை இருந்தால் எடுத்து விடவும். எல்லாவற்றுக்குமே இப்படிச் செய்யலாம்.
 • மறுநாள் மீண்டும் நன்கு கழுவி குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.
 • வெந்த வேர்க்கடலையை வடிகட்டி வைக்கவும்.
 • பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, மி.வத்தல், கருகப்பிலை சேர்த்துக் கொண்டு வெந்த வேர்க்கடலையையும் கொட்டிக் கிளறவும்.
 • தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
 • காரம் அதிகம் தேவையானால் கொஞ்சம் சாம்பார்ப் பொடி அல்லது மி.வத்தல் + கொத்துமல்லி விதை வறுத்த பொடியைச் சேர்க்கவும். விநியோகத்துக்குச் சுண்டல் தயார்!

நவராத்திரி ஒன்பதாம் நாள்

சக்திகள் நால்வரைப் பார்த்தோம். இனி மற்றவர்கள்.

நாராயணி: இவளை வைஷ்ணவி என்றும் சொல்லுவார்கள். சங்கு, சக்கரங்களை ஏந்திய வண்ணம் முன்னிரு கரங்களால் அபய ஹஸ்தம் காட்டிப் பசுமை நிறத்தவளாய்ப் பரந்தாமனின் அனைத்து அம்சங்களுடனும் கருட வாஹனத்தில் காட்சி தருவாள். அனைவரையும் பாதுகாக்கும் இவளிடம் நலமும், வளமும் பெற வேண்டிக் கொள்ளலாம்.

கௌமாரி: கந்தனின் அம்சமான இவள் அவன் பெயராலேயே கௌமாரி என அழைக்கப்படுகிறாள். கந்தனைப் போலவே மயில் வாஹனத்தில் ஜடாமகுடம் தரித்து நான்கு கரங்களுடன் சக்தி ஆயுதம், வஜ்ராயுதம் தாங்கிக் காட்சி தருவாள்.

சாமுண்டி கிட்டத்தட்டக் காளி/காலியின் அம்சமான இவள் கரிய நிறத்தவள். சண்டனையும் முண்டனையும் அழிக்க அன்னையால் தோற்றுவிக்கப்பட்டவள். முக்கண் உடையவள்.

புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள்.கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை மூன்று கரங்களில் ஏந்தி ஒரு கையால் அபய ஹஸ்தம் காட்டுவாள். எத்தகைய கொடிய துன்பத்தையும் அழித்துப் போக்க வல்லவள்.

இன்றைய தினம் அம்பிகையை “சுபத்ரா” வாகப் பாவித்து வணங்க வேண்டும். இன்னும் சிலர் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள்.

ஆயுதங்களால் ஆன கோலத்தைப் போட வேண்டும். வாசனை திரவியங்களாலும் ஆயுதக் கோலம் போடலாம். கோலமாவினாலும் போடலாம்.

பத்து வயதுப் பெண் குழந்தையை “சுபத்ரா”வாகப் பாவித்து அலங்கரித்து வழிபட்டுப் பாத பூஜை செய்து வெண்ணிற மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். . குழந்தைக்குப் பிடித்தமான ஆடை, ஆபரணங்களை வாங்கிக் கொடுக்கலாம்.

இன்றைய தினம் புத்தகங்கள், ஆயுதங்கள் தவிர இசைக்கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மோட்டார் கார், சைகிள், இரு சக்கர வாஹனங்கள் அனைத்தும் வழிபாடு செய்யப்படும்.

சிலர் மறுநாள் விஜயதசமி அன்றும் செய்வார்கள். முக்கியமாக இன்றே சரஸ்வதிக்கு உரிய நாளாகக் கருதி சரஸ்வதி பூஜை செய்வதால், புத்தகம், படிப்பு, எழுத்து சம்பந்தப்பட்ட பொருட்களுக்குச் சந்தனம், குங்குமம் இட்டுப் பட்டுத்துணி சுற்றிப் பூஜையில் வைத்து மறுநாள் விஜயதசமி அன்று காலை எடுத்து நல்ல நேரம் பார்த்துக் கற்பூர ஆரத்தி காட்டிப் படிப்பார்கள்.

பாமாலை

லலிதா நவரத்ன மாலை, சரஸ்வதி துதி ஆகியவற்றால் துதித்து லக்ஷ்மி அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யலாம்.

பூமாலை

மல்லிகை, நந்தியாவட்டை ஆகிய பூக்கள் உகந்தவை. வாசனையை அள்ளித்தரும் மரிக்கொழுந்தும், துளசியும் கூட இன்றைய தினத்துக்கு உகந்தவை.

நிவேதனம்

ஒன்பதாம் நாளான சரஸ்வதி பூஜையன்று காலை நிவேதனத்தில் பருப்புப் பாயசம், அல்லது தேங்காய்ப் பாயசம், சுகியம், அப்பம், உளுந்து வடை ஆகியன முக்கியமானவை.

சிலர் எள்ளுருண்டையும் பண்ணுவார்கள். மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல்.

பாயச வகைகள் முன்னர் எழுதி இருக்கேன். அவற்றில் உள்ளபடி ஏதேனும் ஒரு பாயசம் பண்ணலாம்.

1. சுகியம் 

 • இதற்கு அரிசி மாவைப் பொடியாகத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
 • ஒரு சின்னக் கிண்ணம் அரிசிமாவிற்கு ஒரு கிண்ணம் உளுத்தம் பருப்பு. களைந்து ஊற வைத்துக் கொடகொடவென இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொண்டு, அரிசி மாவைப் போட்டு உப்புச் சேர்த்து அரை மணி நேரம் வைத்து விடவும்.
 • தேங்காய்த் துருவலில் வெல்லம் சேர்த்துக் கிளறி ஏலப்பொடி சேர்த்துத் தேங்காய்ப் பூரணம் பண்ணவும்.
 • பூரணத்தைத் தேவைக்கு ஏற்பக் குறைந்தது ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்காவது உருட்டி வைத்துக் கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு, உருட்டிய பூரணத்தைத் தயாராக இருக்கும் மாவில் போட்டு நாலா பக்கமும் மாவு பூசினாற் போல் இருக்கும் படி செய்து, அதை எடுத்துக் கொதிக்கும் எண்ணெயில் போடவும்.
 • எண்ணெய் ரொம்பக் காய்ந்தால் சீராக வேகாது என்பதால், எண்ணெய் காய்ந்ததுமே அடுப்பைத் தணித்துக் கொள்ளவும். இம்மாதிரி எல்லாவற்றையும் போட்டு எடுக்கவும்.

2. அப்பம்

 • பச்சரிசி + கடலைப்பருப்பு ஒரு மேஜைக் கரண்டி + கோதுமை ரவை ஒரு மேஜைக் கரண்டி. கழுவி ஊற வைக்கவும்.
 • மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும். அரைக்கையிலேயே வெல்லத்தூள், ஏலக்காய்ப்பொடி சேர்க்கலாம்.
 • பின்னர் எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டு நன்கு கனிந்த வாழைப்பழம் இருந்தால் அதைப் போட்டு மாவை நன்கு கலக்கவும்.
 • பின்னர் அப்பக்காரையில் எண்ணெய் விட்டு அதை அடுப்பில் வைத்துச் சூடு பண்ணி ஒவ்வொரு குழியிலும் மாவை விட்டு இருபக்கமும் வேகவிட்டு எடுக்க வேண்டும்.
 • அப்பக்காரை இல்லை எனில் மாவை சுகியம் செய்த எண்ணெயிலேயே போட்டு எடுக்கலாம். ஒரு சின்னக்குழிக்கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஒவ்வொன்றாகப் போட்டு இரு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கலாம்.

3. உளுந்து வடை

 • கால்கிலோ உளுத்தம்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு ஆகியவற்றைக் கழுவி ஊற வைக்கவும்.
 • பொதுவாகப் பண்டிகைகளுக்கு முப்பருப்பு வடை தான் பண்ணுவார்கள். தனி உளுந்து வடை பண்ணுவதில்லை.
 • ஸ்ராத்தம் போன்ற அபர காரியங்களிலேயே தனி உளுந்து வடை பண்ணுவார்கள்.
 • பருப்புக்களை ஊற வைத்துக்கொண்டு பச்சை மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் அவரவர் காரத்துக்கு ஏற்பச் சேர்த்துக் கொண்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொண்டு வடையாகத் தட்ட வேண்டும்.
 • இந்தக் காரம் வேண்டாம் மிளகு காரம் தான் வேண்டுமெனில் முதலில் உளுந்தை நன்கு அரைத்த பின்னர் மிளகு பொடி, உப்புச் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
 • மாவு கெட்டியாக இருக்க வேண்டும். இந்த மாவில் பெருங்காயம், கருகப்பிலை சேர்க்க வேண்டாம்.
 • மிளகாய் போட்டு அரைத்த மாவில் பெருங்காயம், கருகப்பிலை சேர்க்கலாம்.
 • எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு ஒரு வாழை இலையில் மாவை உருட்டிப் போட்டுத் தட்டை போலத் தட்டி நடுவில் ஓட்டை போட்டுக் கொண்டு எண்ணெயில் போட்டு இருபக்கம் சிவக்க வேகவிட்டு எடுக்க வேண்டும்.

4. கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல்

 • கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைக்க வேண்டும்
 • மறுநாள் நாலைந்து முறை கழுவி விட்டுக் குக்கரிலே உப்புச் சேர்த்துக் குழைய வேக விடவும். பின்னர் வடிகட்டி வைக்கவும்.
 • ஓர் வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் கொண்டு, காயந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயப் பொடி, கருகப்பிலை போட்டுப் பொரித்துக் கொண்டு வெந்த கொண்டைக் கடலையைப் போட்டுக் கிளறவும்.
 • இதற்குக் கட்டாயமாய் மி.வத்தல்+கொத்துமல்லி வறுத்து அரைத்த பொடியைச் சேர்க்கவும்.
 • தேங்காய்த் துருவல் போடவும். அல்லது தேங்காயைக் கீறிச் சேர்க்கவும். நன்கு கலந்ததும் சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.

நவராத்திரி பத்தாம் நாள்

விஜய தசமி: பத்தாம் நாளான இன்று அம்பிகை ராஜராஜேஸ்வரியாக அலங்கரிக்கப்படுகிறாள். வெள்ளைப் பட்டாடை தரித்து வெண் தாமரையில் அமர்ந்திருக்கும் சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம்.

மூன்று தேவியரும் ஒன்று சேர்ந்த விஜயா என்ற பெயரிலும் தேவி அலங்கரிக்கப்படுவாள்.

இன்றைய தினம் ஒன்பது நாட்கள் வழிபட்ட அனைத்துப் பெண் குழந்தைகளையும் அழைத்து அனைவருக்கும் வழிபாடு நடத்திப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

மஞ்சள் பொடி சேர்த்த வாசனை மலர்களைக் கோலத்தில் போட்டு அம்பிகையை அமர்ந்த திருக்கோலத்தில் அமர்த்தி அனைத்து வாசனை தரும் மலர்களாலும் அர்ச்சித்து,

வெற்றித்துதிகள், மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம், லலிதா நவரத்ன மாலை, துர்கா சப்த சதீ ஆகிய ஸ்லோகங்களைச் சொல்லித் துதிக்கலாம்.

விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கியஸ்வரூபிணியாகத் தோற்றமளிக்கும் அம்பிகை அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முஹூர்த்தத்திலேயே அம்பு போட்டு அசுரர்களை வதம் செய்ததால், அந்த நேரம் சுப முஹூர்த்தமாகவும் நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய முஹூர்த்தமாகவும் சொல்லப்படுகிறது.

தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்ல நேரமே இன்றளவும் அம்பு போடுதல் என்னும் பெயரில் பத்தாம் நாளான விஜயதசமி அன்று ஒவ்வொரு வருடமும் எல்லாக் கோயில்களிலும் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி அனைவராலும் கொண்டாடப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதி தேவி, ஜின ஐஸ்வர்யா, ஜின வாணி, ஆகமஸ்வரூபி என அழைத்தால், பௌத்தர்களோ மஹா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணா தாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை வழிபடுகின்றனர்.

மஞ்சுஸ்ரீ எனவும் பௌத்தர்கள் சொல்லுவது உண்டு. சரஸ்வதி பூஜையன்று வழிபடும் புத்தகங்கள், இசைக்கருவிகள், ஆயுதங்களை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துவது மிகவும் சிறப்பு.

விஜய தசமி அன்று சின்னக் குழந்தைகளைப் பள்ளியிலே சேர்ப்பதும் உண்டு. ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப்பட்ட தரையில் நெல் பரப்பி, அதில் “ஹரி ஓம்” என எழுதுவதற்குக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ உதவக், குழந்தை எழுதிப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படும்.

ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞான சக்தி என்றெல்லாம் போற்றப்படும் சரஸ்வதியை சகல கலைகளுக்கும் அதிபதியான சாரதையாகவும் துதிப்பது உண்டு. ஆதி சங்கரர் சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்து சாரதையாகப் பிரதிஷ்டை செய்தார். அத்தோடு கூட ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். மூன்று தேவிகளும் இவளே ஆவாள்.

கல்வி, ஞானம் தரும் சரஸ்வதி/சாரதை,  தனம் தரும் லக்ஷ்மியும் இவளே! வீரம் செறிந்த துர்கையும் இவளே! இவளைக் குறித்தே ஒவ்வொரு வருடமும் இந்த சாரதா நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.

#ads

‘நவராத்திரி கையேடு’ போல் அமைந்த, ‘சஹானா’வின் 2020 நவராத்திரி சிறப்பிதழை வாங்க. கீழே கொடுத்துள்ள படத்தை கிளிக் செய்யவும்👇

இந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு

 • நவராத்திரி வழிபாடு உருவான கதை
 • கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
 • நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
 • நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
 • நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
 • நவராத்திரிக்கான பாமாலை
 • நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
 • லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள் 
 • அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள் 
 • அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்

கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

  அம்பாளின் பாதாதி கேச வர்ணனை (பகுதி 2) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)

  ராங் காலும் ரங்கமணியும் 😀🤣😆(நகைச்சுவை)