2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14
ஒரு பெரிய எவர்ஸில்வர் அண்டா புதியதாக வாங்கி, நன்றாக சுத்தம் செய்து, துடைத்து அதற்கு விபூதி குங்குமம் சந்தனம் எல்லாம் வைத்து, லட்டு பிடித்து அதில் அடுக்கி வைத்தனர். எறும்பு ஏறாமல் பத்திரம் செய்து விட்டனர்.
திருமணத்திற்கு சாப்பாட்டு மெனுவை வரிசையாக அடுக்கினான் விக்னேஷ்.
“டேய், இப்படியெல்லாம் சாப்பாடு போட்டால் போண்டியாக வேண்டியதுதான்” என்றான் சரவணன்.
“பிறகு எப்படி?” என்றான் விக்னேஷ் புரியாமல்.
“அண்டா நிறைய லட்டு இருக்கிறது. இலையில் ஒரு லட்டு, ஒரு வாழைப்பழம், ஒரு தொன்னையில் பருப்புப் பாயசம், சாதம், உருளைக் கிழங்கு பொரியல், கோஸ் பச்சைப் பட்டாணிப் பொரியல், கத்திரிக்காய் முருங்கைக்காய் மாங்காய் போட்டு சாம்பார், எலுமிச்சை ரசம், மோர். இந்த மெனு எப்படி இருக்கிறது?” என்று கேட்டான் சரவணன்.
சாப்பாட்டிற்குண்டான பட்ஜெட் தொகையை சரவணனிடமும், முருகேசனிடமும் கொடுத்து விட்டான் விக்னேஷ். அவர்கள் அந்தத் தொகைக்குள் முடிக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர். ரொம்ப முக்கியமான விஷயமாக இருந்தால் தவிர விக்னேஷைத் தொந்தரவு செய்யவில்லை.
திருமண நாளும் வந்தது. திருமணப் பெண்ணின் பெற்றோர் செய்ய வேண்டியதெல்லாம் மாதவனும் நிர்மலாவும் செய்தனர். நல்ல சுபமுகூர்த்தத்தில் கடவுளின் ஆசியோடு, சியாமளாவின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் விக்னேஷ். மாதவன் தம்பதியர், திருமணத்திற்கு ஒரு பெரிய தொகையும் பரிசளித்தனர்.
அவர்கள் கிளம்பும் போது, “எல்லா சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு உடனே ஜூனியராக வந்து சேர்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் மாதவன். சியாமளாவின் அதிர்ஷ்டம் என்று கொண்டாடினாள் அத்தை.
வத்சலாவும் அவள் கணவனும் குழந்தையோடு வந்தனர். ரூபாய் ஐயாயிரத்து ஒன்று என்று மொய் எழுதி விட்டு சாப்பிட்டு உடனே கிளம்பினர். அவரவர்கள் கொடுத்த மொய்ப் பணத்தை அந்தந்த கவரிலேயே வைத்தனர் சரவணனும் முருகேசனும்.
வத்சலா முகூர்த்த நேரத்தில் தான் வந்தாள். நல்ல டிரஸ் , விலையுயர்ந்த நகைகள் எல்லாம் போட்டிருந்தாள், ஆனால் கண்களில் மட்டும் தெளிவில்லை. தர்ஷணாவும் விஷ்ணுவும் குழந்தையைக் கீழே விடாமல் கொஞ்சிக் கொண்டிருந்தனர். திருமணப் பந்தலில் சரவணன் குடும்பத்திற்கும், முருகேசன் குடும்பத்திற்கும் மரியாதை செய்தனர். கமலா, கௌரி, அவள் தாயார் மூவரும் திருமணத்திற்கு வந்து ஆயிரத்தி ஒரு ரூபாய் என்று மொய் எழுதினர்.
சியாமளாவிற்கு ஒரு வார விடுமுறையும் முடிந்தது. உள்ளத்தாலும் உடலாலும் சியாமளா விக்னேஷின் மனைவியாகி விட்டாள், வேலையிலும் போய்ச் சேர்ந்து விட்டாள். விக்னேஷும் தன் டிகிரி சான்றிதழ்களை மாதவனிடம் காட்டி, ஜூனியர் வக்கீலாக சேர்ந்து விட்டான். விக்னேஷ் முதல் நாள் மாதவனிடம் வேலைக்குப் போய் வந்தவுடன் ஓட்டுவதற்கு ஆட்டோவை சுத்தம் செய்தான். அதைப் பார்த்த சியாமளா சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறாய் சியாமளா?” என்றான் விக்னேஷ் .
“மாதவன் சார் வீட்டிற்குப் போய் வந்தவுடன் ஆட்டோவில் சவாரிக்குக் கிளம்பி விடுவீர்களா? சட்டப் புத்தகங்கள் திரும்பத் திரும்ப படிக்க வேண்டாமா? ஆண்டியின் மீறல் கோடு அப்படியே நேரே மண்டைக்குள் ஏறி விடுமா?” என்றாள் .
“என்ன சொல்கிறாய், படிக்க வேண்டுமா? நான் தான் படித்து டிகிரி வாங்கியிருக்கிறேனே” என்றான் விக்னேஷ்.
“நீங்கள் படித்ததெல்லாம் சட்டம் தான், ஆனால் அதன் பிறகு எவ்வளவு அமெண்ட்மென்ட் வந்திருக்கும். அதெல்லாம் தெரிய வேண்டாமா? தொழிலில் முன்னேறுவது என்றால் எப்படி? இரண்டு மூன்று வருடங்கள் உங்கள் மூலம் நிறைய வருமானம் எதிர்பார்க்க முடியாது, என் ஒருத்தி சம்பளத்தில் தான் வண்டி ஓட வேண்டியிருக்கும். நீங்கள் மாதவன் சாரிடம் யோசனை கேளுங்கள், அவர் தெளிவாகச் சொல்லுவார். எங்கள் அப்பா கம்பெனி நடத்தியபோது அவரின் ‘லீகல் அட்வைசர்‘ இ.பி.கோ எண்களை எல்லாம் மனப்பாடமாக சொல்வார். டாக்டர் தொழிலாகட்டும், வக்கீல் தொழிலாகட்டும், இஞ்ஜினீயர், டீச்சர், எல்லோருமே தங்கள் பாடத்தில் ‘தரோ’வாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும்” என்றாள் சியாமளா.
“அடேயப்பா, உனக்கு எவ்வளவு விஷயம் தெரிகிறது” என்று ஆச்சர்யப்பட்டுப் கொண்டே அருகில் வந்து அவள் கன்னத்தைக் கிள்ளினான். அவன் கையிலிருந்த அழுக்கு அவள் கன்னத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. சியாமளா வீட்டினுள் திரும்பியதும், உள்ளே நுழைந்ததும் அவளைப் பாரத்து வாயை மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் தர்ஷணா. அத்தை எழுந்து வந்து சியாமளாவின் கன்னத்தைத் துடைத்து விட்டு, அவளும் சிரித்துக் கொண்டே போய் விட்டாள். வெட்கத்தால் சிவந்தாள் சியாமளா.
“எல்லாம் இந்த விக்னேஷத்தால் தான்” என்று வெட்கப்பட்டாள், ஆனாலும் மனம் மிக சந்தோஷமானது.
விக்னேஷ், தன் தொழிலில் முன்னேற வெகுவாக முயற்சித்தான். மாதவனிடம் யோசனை கேட்டான், அவரிடம் ஜூனியர்களாக இருந்த சக வக்கீல்களோடும் நட்புடன் பழகி தொழிலில் எப்படி முன்னேறுவது என்று கற்றுக் கொண்டான். ஆட்டோவை சரவணன் மூலமாக, ஒரு நல்ல பையனுக்கு வாடகைக்கு விட்டான் விக்னேஷ். அந்தப் பையன் வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வாடகைப் பணம் கொண்டு வந்து தந்து விடுவான்.
சியாமளா தன் மருமகளாக வந்த பின், விக்னேஷ் பற்றிய கவலைகளை மறந்தாள் அத்தை. தர்ஷணாவும் ஹௌஸ் சர்ஜன் கோர்ஸில் சேர்ந்து விட்டாள். மிக அமைதியானப் பெண்ணாகத் தன்னை மாற்றிக் கொண்டாள். விஷ்ணு, கிண்டியில் உள்ள அண்ணா யூனிவர்ஸிட்டியில் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயரிங் கோர்ஸில் சேர்ந்து விட்டான்.
தர்ஷணா அட்டகாசம் செய்து கொண்டு படித்தாள் என்றால், இவன் எப்படி எப்போது படிக்கிறான் என்றே தெரியாது. ஆனால் எந்த டொனேஷனும் இல்லாமல் விரும்பிய பாடம் படித்தான். ஆறடி உயரமும், வெள்ளை வெளேரென்ற நிறமும், சுருண்ட கிராப்பும், அரும்பு மீசையும், அவனைப் பேரழகனாக காட்டியது. மாமா அத்தை, சியாமளாவிடம் மிக அனுசரணையாக நடந்து கொண்டான். அவனுடைய நிதானமான, அமைதியான நடவடிக்கை சியாமளாவிற்கு அவனிடம் பிடித்தமான ஒன்று.
இவர்கள் எல்லாரையும் தவிர, அந்த வீட்டில் புத்தம் புதிய மலர் ஒன்று பூத்திருந்தது. விக்னேஷ், சியாமளாவின் செல்ல மகள் தான் அது . ரோஷிணி என்று பெயர் வைத்தனர். விக்னேஷ் வீட்டில் இருந்தால் மகளைத் தரையிலேயே விட மாட்டான், அவன் தோளில் மடியில் கழுத்தில் என்று உட்கார்ந்து கொண்டிருப்பாள்.
சமையல் செய்து கொண்டே யோசனையில் இருந்தாள் சியாமளா. காலம் எவ்வளவு வேகமாக ஓடி விடுகிறது.
விக்னேஷ் – சியாமளா திருமணம் முடிந்து தங்கள் வீட்டிற்குப் போன வத்சலா, பிறகு வரவேயில்லை. அவளையும் அவள் கணவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்க வேண்டும் என்று விரும்பினாள் அத்தை. அதனால் அவர்களை அழைக்க வீட்டிற்குப் போன் செய்து விட்டுப் இருவரும் போனார்கள்.
வத்சலா அவர்கள் இருவரையும் கண்டபடி பேசி வெளியே போகச் சொன்னாள். அவள் கணவருக்குத் தகுந்த மரியாதை கொடுக்கவில்லை என்று கோபத்துடன் கத்தினாள்.
“எனக்கே உங்கள் வீட்டில் மரியாதை இல்லை, சரியான வரவேற்பு இல்லை. இப்போது எதற்கு வந்தீர்கள்? போங்கள் வெளியே” என்றாள்.
மௌனமாக ஆட்டோவில் ஏறிக் கொஞ்ச தூரம் போன பிறகு வண்டியை நிறுத்தச் சொன்னாள் சியாமளா.
“என்ன சியாமளா, இங்கு நடந்தது எதையும் அம்மாவிடம் சொல்லக் கூடாது அது தானே?” என விக்னேஷ் கேட்க
“அதுவும் தான். ஆனால் அது மட்டுமில்லை, நாம் இங்கே வரக் கூடாதென்றால் வத்சலா போன் பண்ணும் போதே சொல்லியிருப்பாள் இல்லையா? மேலும் அவள் அப்படியெல்லாம் பேசக் கூடிய பெண்ணும் அல்ல. அந்தக் கௌசிக் தான் ஏதோ விளையாடுகிறான்” என்றாள் சியாமளா.
“அவன் என்ன சொன்னாலும் இவள் நம்மை அப்படிப் பேசலாமா?” என்றான் விக்னேஷ் கோபமாக.
“நீங்கள் வேறே விஷயம் தெரியாமல் கோபித்துக் கொள்கிறீர்களே. ஆட்டோவை அப்படியே திருப்பி இரண்டு வீடுகள் முன்னால் ஒரு ஓரமாக நிறுத்துங்கள். நடந்து போய் அவர்கள் வீட்டில் பார்த்தால் தான் வத்சலா ஏன் அப்படி நடந்நு கொண்டாள் என்று புரியும்” என்றாள் சியாமளா.
“நீ என்ன பெரிய சி.ஐ.டி’யா? வத்சலாவே அவனை நம்பி ஓடியவள் தானே, இப்போது அவன் பணம் அவளை அப்படிப் பேச வைக்கிறது” என்றான் விக்னேஷ் கோபமாக.
“அதையும் தான் பார்க்கலாமே, ஆனால் வத்சலாவப் பற்றி என்னால் துளியும் தவறாக நினைக்க முடியவில்லை” என்றாள் சியாமளா.
ஆட்டோவை இரண்டு வீடுகளுக்கு முன்னால் நிறுத்தி விட்டு நடந்து போனார்கள். தெருக்கதவு திறந்து கிடந்தது. இரண்டு வீடுகளுக்கு அப்பாலும் உள்ளிருந்து வந்த பேச்சு சப்தமும், சிரிப்பு சப்தமும் காதைப் பிளந்தன. இவர்கள் உள்ளே நுழைந்ததும் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.
(தொடரும் – வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings