2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19
“எப்படிடி நம்பறது?….”
“ஏம்மா… மனைவியை இழந்து தவிக்கும் அந்த விஜயசந்திரனும், கணவனை இழந்து வாடும் நானும், வாழ்க்கைல இணை சேர்ந்தா ஒருவருக்கொருவர் ஆறுதலாயிருப்போம்னு நான் எடுத்த முடிவு ஒண்ணு போதாதா?… நான் எவ்வளவு தெளிவா இருக்கேன்னு!… புரிஞ்சுக்க…?”
பத்மாவதி நம்பாமல் அவள் முகத்தையே பார்க்க, “இங்க பாரும்மா… என் வயித்துல வளர்ற குழந்தை மேலே சத்தியமா சொல்றேன்… நான் என்னைப் பத்தி தீர்க்கமா உணர்ந்திட்டேன்!… தனிமைத் தியானம் என்னை ரொம்பவே மாத்திடுச்சு!… இப்ப என் மனதை மிகவும் பக்குவப்படுத்தி என் கண்ட்ரோலுக்குக் கொண்டு வந்திட்டேன்!… இனிமேல் என்னை மீறி அது எதுவும் செய்யாது… செய்யவும் விட மாட்டேன்!”
“என்னது… நீ தியானம் செய்தியா?… எப்போ?… எங்கே?”
“அம்மா… தனியா இருக்கும் சமயங்கள்ல என் கண்களை மூடி நான் அமர்ந்திருப்பதெல்லாம் என் சோகத்தை மறக்க இல்லை!… அடுத்து சோகங்களே வராமல் இருக்க நான் செய்யும் மனப்பயிற்சி!… அம்மா… நீ என் வலிகளைப் புரிந்து கொள்ளாமல் போனாலும் பரவாயில்லை… குறைந்தபட்சம் எனக்கும் வலிக்கும்ன்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டா அது போதும்மா எனக்கு” சொல்லும் போது வித்யாவின் கண்கள் கலங்கி விட,
அதைக் கண்டு மனம் நொந்து போன பத்மாவதி, “அழாதடி… அழாதடி… நான் உன்னை நம்புறேண்டி…” என்றாள் மகளைத் தோளில் சாய்த்துக் கொண்டு.
பாவம், “மனம் ஒரு குரங்கு… மனித மனம் ஒரு குரங்கு,…. அதைத் தாவ விட்டால்… தப்பி ஓட விட்டால்… நம்மைப் பாவத்தில் தள்ளி விடும்” என்னும் மாபெரும் உண்மையை அவர்கள் மறந்து போனது, விதியின் வெற்றிக் கேடயம்.
மறுநாள் அதிகாலையிலேயே வித்யாவின் மொபைல் சிணுங்கியது.
நிதானமாய்க் கண் விழித்த வித்யா, படுத்தவாறே தலைமாட்டிலிருந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள்.
விஜயசந்திரன்தான் அழைத்திருந்தான்.
“ஹலோ… என்ன விஜய்… இந்த நேரத்துல?” தூக்கக் கலக்கத்தில் கேட்டாள் வித்யா.
“நான் இன்னிக்கு பூனா கிளம்பறேன்… அதான் சொல்லிட்டுப் போகலாம்னு கூப்பிட்டேன்”
படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்தாள். “பூனாவா?… எதுக்கு?”
“எங்க கம்பெனியோட பூனா பிராஞ்ச்சுக்கு என்னை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க!… இன்னிக்குக் கிளம்பறேன்… நாளை மறுநாள் அங்க டியூட்டில ஜாய்ன் பண்ணனும்”
“என்ன திடீர்னு?… நேத்திக்கு நாம ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம்… அப்பக் கூட நீ இதப் பத்தி எதுவுமே சொல்லலையே?”
“வந்து… திடீர்னு… நேத்திக்கு ஈவினிங்தான் எனக்கே தகவல் வந்தது…” சொல்லும் விஜயசந்திரனின் குரலில் இருந்த தடுமாற்றத்தைப் புரிந்து கொண்ட வித்யா நேரடியாகவே கேட்டாள்.
“உண்மையைச் சொல்லு விஜய்… இது அவங்களா செய்த டிரான்ஸ்பரா?.. இல்லை வாலண்ட்ரியா நீ போய்க் கேட்டு வாங்கிக்கிட்ட டிரான்ஸ்பரா?”
“அது… வந்து…”
“ஓ.கே…விஜய்… உனக்கு என்னை மறுமணம் செய்துக்க இஷ்டமில்லை என்கிற விஷயத்தை ரொம்ப நாசூக்கா சொல்லிட்டே… ஓ.கே…பை…”
அவன் பதில் சொல்லும் முன் பட்டென்று இணைப்பிலிருந்து வெளியேறினாள் வித்யா.
“வித்யா…. மணி என்ன?” பக்கத்தில் படுத்திருந்த அவள் தாய் பத்மாவதி கேட்டாள்.
“அஞ்சு…”
“இந்த நேரத்துல யாரு போன்ல?”
“அந்த விஜயசந்திரன்” வெறுப்பாய்ச் சொன்னாள் வித்யா.
படுத்திருந்த பத்மாவதி எழுந்தமர்ந்தாள். “சொல்லு… என்ன சொன்னார்… கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரா?” ஆர்வத்தோடு கேட்டாள்.
“இல்லை… அவன் எஸ்கேப் ஆயிட்டான்” சொல்லி விட்டு ஒரு விரக்திச் சிரிப்பொன்றை வெளியிட்டாள் வித்யா.
“என்னடி சொல்றே?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டாள் பட்மாவதி.
“அவன் கம்பெனில அவனை பூனாவுக்கு மாத்திட்டாங்களாம்… இப்பக் கிளம்பிட்டிருக்கானாம்… போகும் போது என் கிட்ட சொல்லிட்டுப் போறானாம்” நக்கலாய்ச் சொன்னாள் வித்யா.
“சரி… கல்யாணத்துக்கு என்ன பதில் சொன்னான்?” அப்பாவியாய்க் கேட்டாள் பத்மாவதி.
“அம்மா… அவனுக்கு மறுமணத்துல இண்ட்ரஸ்ட் இல்லை… அதான் நேரடியா மறுப்புச் சொல்ல முடியாம… வலியப் போய் டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் பறந்திட்டான்!… சொல்ல முடியாது…”
“ஏண்டி அவனுக்கென்னடி கேடு?… பொண்டாட்டிய இழந்திட்டு பரதேசி மாதிரி ஊர் ஊராத் திரியணும்னு தலையெழுத்தா?… அழகா உன்னைக் கட்டிக்கிட்டு… இதே ஊர்ல குடித்தனம் பண்ண வேண்டியதுதானே?… ஹும்… நல்ல எதிர்கால வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க நீ முயற்சி பண்ணுனே… ஆனா அவன்… அதை புரிஞ்சுக்காம ஓடிட்டான்!.. பரதேசி…” பத்மாவதி ஆற்ற மாட்டாமல் திட்டித் தீர்க்க.
“ம்மா…. போதும்மா… ரொம்பத் திட்டாதம்மா… உண்மையில் அந்த விஜயசந்திரனை நாமெல்லாம் கையெடுத்துக் கும்பிடணும்!… இளமையில் தகப்பனும், முதுமையில் மனைவியும் ஒரு ஆண் இழக்கக் கூடாத சொத்துக்கள்… ஆனா இந்த விஜயசந்திரன் இளமையிலேயே இந்த ரெண்டையும் இழந்திட்ட ஒரு பரிதாப ஜீவன்” என்றாள் வித்யா.
அதைக் கேட்ட தாய் வித்யாவை வினோதமாய்ப் பார்க்க, “அவன் இறந்து போன தன் மனைவி மேலே அத்தனை அன்பு வெச்சிருக்கான்!… ஒரே ஒரு வருஷம்தான் அவ கூட வாழ்ந்திருக்கான்!… அந்த ஒரு வருஷ வாழ்க்கையை நெனச்சுக்கிட்டே மீதி வாழ்க்கையையும் ஓட்டிடலாம்னு வாழ்ந்திட்டிருக்கான்!… அவன் சொல்றான்… அவன் சம்சாரம் இருந்த இதயத்துல இன்னொருத்தியைக் கொண்டாந்து உட்கார வைக்க அவனால் முடியலையாம்!… பாரு… இந்தக் காலத்துல இப்படியொரு மனுஷனா?”
“க்கும்… வாழத் தெரியாத வறடன்” மீண்டும் திட்டினாள் பத்மாவதி.
“ஹும்… பொண்டாட்டி செத்துட்டா அடுத்த வாரமே தரகரைப் போய்ப் பார்த்து, முகூர்த்தத்திலேயே இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டுற ஆட்கள் இருக்கற இந்த சமுதாயத்துல இப்படியும் சிலர் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்” என்றாள் வித்யா.
பதிலேதும் பேசாமல் பத்மாவதி மகளையே முறைக்க, “என்ன முறைக்கறே… அவன் அளவுக்கு நீ கூட உன் புருஷன் மேலேயும்… உன் மகள் மேலேயும் அன்பு வெச்சிருக்க மாட்டே” என்றாள் வித்யா.
“ச்சீய்… சும்மா வாய் புளிச்சுதா?… மாங்காய் புளிச்சுதா?ங்கற மாதிரிப் பேசாதே வித்யா!… உண்மையில் என் புருஷன் இல்லாத இந்த உலகத்துல வாழவே எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை!… ஆனாலும் வாழ்ந்திட்டிருக்கேன்… யாருக்காக…” கேட்டு விட்டு மகளைப் பார்த்தாள் பத்மாவதி.
உதட்டைப் பிதுக்கினாள் வித்யா.
“உனக்காகத்தாண்டி… இந்த உசுரையே வெச்சிருக்கேன்!… நீ செஞ்ச எல்லாமும் தெரிஞ்ச பின்னாடியும்… உன் மேலே கொஞ்சம் கூட அன்பு குறையாம இருக்குடி எனக்குள்ளார”
“ஓ… அப்ப எனக்காகத்தான் இந்த உலகத்துல் நீ வாழ்ந்திட்டிருகே?.. நான் செத்துட்டா….?” புன்னகையோடு கேட்டாள் வித்யா.
“ச்சீய்… வாயை முடுடி”
“நீ பதில் சொல்லு!… நான் செத்திட்டா…?” விடாமல் கேட்டாள் வித்யா.
“ம்… நானும் உன் கூடவே வந்திடுவேன்!… அதுக்கப்புறம் எனக்கு இங்க என்ன வேலை?” பத்மாவதியும் சளைக்காமல் பதில் சொன்னாள்.
இதழோரம் விரிந்த ஒரு இளக்காரப் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தாள் வித்யா.
“அம்மா சொல்வது உண்மையா?… இல்லை என்னை சமாதானப்படுத்த அப்படிச் சொன்னாளா?… நிஜமா அவளுக்கு என் மேல் அத்தனை அன்பு…. இருக்கா?” தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
“ஏய்… உன்னைப் பெத்தவ அவ!… கைக்குழந்தையாய் இருந்ததிலிருந்து கன்னிக் குழந்தையாய் ஆகிற வரைக்கும் உன்னைப் பொத்திப் பொத்தி வளர்த்தவ… அவளுக்கு உன் மேல் அன்பு இல்லாமல் இருக்குமா?” மனதின் ஆழப்பகுதியிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவளுக்குள் ஒரு அமிலக் குடுவை உடைந்து, மனதின் சுவரெங்கும் விகாரம் ஒட்டிக் கொண்டது.
“உண்மையிலேயே நான் செத்துப் போனா அம்மாவும் செத்துப் போவாளா?” கேள்வி எழுந்தது.
“சோதனை பண்ணிப் பார்த்திடலாமா?”
“ஏய்… முட்டாள்தனமா யோசிக்காதே… அதுக்கு நீ சாகணும் தெரிஞ்சுக்கோ”
“அவ்வளவுதானே… செத்திட்டாப் போச்சு!…ம்ம்ம்… எப்படி சாகலாம்?”
எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள். அம்மா எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“கோவிலுக்குப் போயிட்டு வர்றேண்டி”
“ம்மா… நல்லா எனக்கும் சேர்த்து வேண்டிட்டு வா” என்றாள் வித்யா.
விரக்தியாய்ச் சிரித்த பத்மாவதி, “நான் கோயிலுக்குப் போறதே… உனக்கு வேண்டிக்கத்தாண்டி” என்று சொல்லிக் கொண்டே வாசல்படியை விட்டுக் கீழிறங்கினாள்.
“அம்மா… அம்மா” என்று அழைத்துக் கொண்டே வாசலுக்கு வந்தவள், அவள் அருகில் வந்து அவள் நெற்றியில் முத்தமிட்ட, “அடச்சீ… என்ன இது கோயிலுக்குப் போகும் போது எச்சில் பண்ணிக்கிட்டு” செல்லமாய்க் கோபித்துக் கொண்டு நடந்தாள்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings