in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 8) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7

ஹாலுக்குள் அழுகைச்சத்தம் அதிகமானது.  கடைசியாய் அவள் உடலில் இருந்த பட்டு சேலையும் அகற்றப்பட்டு, தூய வெள்ளைச் சேலை குடியேற்றப்பட்டது. சக பெண்களின் அழுகைச்சத்தம் உச்ச ஸ்தாய்க்குப் போனது.

ஆனால், ஜெயாவின் தாயோ மனதை கல்லாக்கி கொண்டு, முகத்தை இறுக்கமாய் வைத்தபடி அமர்ந்திருந்தாள். அந்த மனம் விதவை கோலத்தை ஏற்றுக் கொள்ள தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டிருந்தது.

நெஞ்சம் கனத்துப் போன நிலையில் வீடு திரும்பினாள் வித்யா.  ‘பெண்ணினத்திற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சாபம்?… இதெல்லாம் எப்ப ஒழியும்?… எப்படி ஒழியும்?’ நினைக்க நினைக்க சமூகத்தின் மேல் ஆத்திர ஆத்திரமாய்  வந்தது  அவளுக்கு.

முந்தின நாள் சாவு வீட்டில் பார்த்த காட்சிகளும்,  அதன் பாதிப்புக்களும், மறுநாள் மாலை வரை  வித்யாவின்  மனதிற்குள்  பலவந்தமாய்  உட்கார்ந்து கொண்டு போக மறுத்தன.

“என்ன வித்யா?…. ஈவினிங் இன்விடேஷன் கொடுக்க வெளியே போகணும்னு சொல்லிக்கிட்டிருந்தே…. போகலையா?” தாய் கேட்க,

பதிலே பேசாமல் அவளையே உற்றுப் பார்த்தாள் வித்யா.  பளிரென மின்னும் இளம் மஞ்சள் நிறத்தில் பட்டுப்புடவை, முகத்தில் மஞ்சள் பூசி குளித்த தேஜஸ், நெற்றியில் சற்றே பெரிய அளவிலான குங்குமம், கழுத்தில் ஏழு பவுனிலான தங்கக்கொடி, என அவள் தாய் பத்மாவதி மங்களகரமாய் இருந்தாள்.

“என்னடி நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு என்னையே பார்த்திட்டிருக்கே?…  என்ன ஆச்சு உனக்கு?” கையிலிருந்த மல்லிகைச் சரத்தை தலையில் சூடியவாறே கேட்டாள்.

“ஒண்ணும் இல்லைம்மா!… லேசா தலைவலி… அதான்”

“சரி சூடா ஒரு கப் காபி சாப்பிட்டுட்டு…. எங்கேயும் போகாமல்…. படுத்து ரெஸ்ட் எடு!… நான் கோயிலுக்கு போயிட்டு வந்துடறேன்” சொல்லியபடி வெளியேறினாள் பத்மாவதி.

அவள் செல்வதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா. அவள் கண் முன்னே நேற்று ஜெயாவின் தாய்க்கு விதவைக் கோலம் பூட்டப்பட்ட காட்சி விரிந்தது.

சட்டென்று அவளுக்குள் ஒரு அமிலக்குடுவை உடைந்து மனதின் சுவரெங்கும் விகாரம் ஒட்டிக் கொள்ள ஜெயாவின் தாய் இருந்த இடத்தில் தன் தாயை வைத்துப் பார்த்தாள்.

‘எப்படியிருக்கும் அதே மாதிரி என்னோட அப்பாவும் இறந்து, என்னோட அம்மாவுக்கும் அந்த நிலைமை வந்தால் எப்படி இருக்கும்?’. சாத்தானின் குடியிருப்பாய் மாறிப் போன அவள் மனசு அந்த காட்சியை காணத் துடித்தது.

சில நேரங்களில் இயற்கையை கூட சில மோசமான நிகழ்வுகளுக்கு காரணமாகி விடுகிறது. ஆம்!.. கொடூர எண்ணத்தோடு உட்கார்ந்திருந்த வித்யாவுக்கு சாதகம் செய்வது போல் அந்த நேரத்தில் அவள் தந்தை கிருஷ்ணனைக் கொண்டு வந்து சேர்த்தது.

“என்னம்மா வித்யா தனியா உட்கார்ந்திட்டிருக்கே?…. அம்மா எங்கே?” சட்டையைக் கழற்றி ஹேங்கரில் தொங்க விட்டபடியே கேட்டார்.

“கோயிலுக்குப் போயிருக்காங்க” இறுகிய முகத்துடன் பதில் சொன்னவளைக் கூர்ந்து கவனித்த கிருஷ்ணன்,   “அது சரி… நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே?… உடம்பு சரியில்லையா?”

 “தலைவலி” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் வித்யா.

“அப்ப… ஒரு நிமிஷம் பொறு!… சூடா காபி போட்டு தர்றேன்… எனக்கும் கூட காபி சாப்பிடணும் போலத்தான் இருக்கு” சொல்லியபடியே சமையலறைக்குள் சென்றவரை விழிகள் விரித்துப் பார்த்தாள் வித்யா.

‘சீக்கிரம் ஏதாவது செய் போ… போ… போ’ மூளைக்குள்ளிருந்த அந்த சாடிஸ குணம் விரட்டியது. கைகள் பரபரத்தன.

‘என்ன செய்யலாம்?’ கண்கள் நாலாப் பக்கமும் சுழன்றன.

“இந்தாம்மா சாப்பிடும்மா” ஆவி பறக்கும் காப்பியை நீட்டினார் கிருஷ்ணன்.

வாங்கிப் பருகினாள். ஆனால், சிந்தனை மட்டும் இன்னும் அதே நிலையில் இருந்தது. ‘என்ன செய்யலாம்?… என்ன செய்யலாம்?’

பத்து நிமிடங்களுக்குப் பிறகு,  “சரிம்மா நீ படுத்து ரெஸ்ட் எடு!… நான் கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்குப் போய் காத்தாட உட்கார்ந்திட்டு வர்றேன்” சொல்லி விட்டு அவர் சென்றதும்,   வித்யாவின் விழிகள் விரிந்தன.

மெல்ல எழுந்தாள். மெதுவாய் நடந்து மாடிப்படிகளை நெருங்கி, அதில் ஏறி மொட்டை மாடியை தொட்டாள். கிருஷ்ணன் மேற்குப்பக்க கை பிடிச்சுவர் அருகே நின்று, தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அவளுக்குள் இருந்த விகார வஸ்து உக்கிரமடைய பூனை போல் நடந்து சென்று, அவர் முதுகுக்கு பின்னால் நின்றாள்.

‘கல்யாணச் செலவுகளை எப்படி சமாளிப்பது?… எந்தெந்த டெபாசிட்களை ப்ரீ மெச்சூர்டு செய்வது?’ என்பது போன்ற யோசனைகளில் மூழ்கி இருந்ததால், கிருஷ்ணனால் வித்யாவின் வருகையை அறிய முடியவில்லை.

அந்த நிசப்த நொடியில் தான் ஒரு மாபெரும் விபரீதம் நடந்தேறியது. அவர் முதுகில் கையை வைத்து, தன் முழு பலத்தையும் பிரயோகித்து, ஒரே தள்ளாய்த் தள்ளி விட்டாள்.

குப்புற விழுந்தவர், தலைகீழாய் சென்று காம்பவுண்டு சுவற்றில் மோதி, தெறித்துப் போய் அருகிலிருந்த செப்டிக் டேங்க் மேல் “தொபீர்”ரென்று விழுந்தார்.

அரை நொடியில் அவரைச் சுற்றி ரத்தக்குளம் தோன்ற,  “ஹக்… ஹக்”கென்று இரண்டு முறை இழுப்பு வாங்கியதும், மண்ணுலகுக்கு  ‘டாடா… பை பை… சீரியோ” சொல்லி விட்டுப் பறந்தது உயிர் பறவை.

எதுவுமே நடக்காதது போல் அமைதியாகத் திரும்பி தன் அறைக்கு வந்து கட்டிலில் படுத்து , நிம்மதியாய் உறங்கலானாள்  வித்யா.

அம்மாவின் உசுப்பலில் கண் விழித்த வித்யா, தன்னிச்சையாய்க் கடிகாரத்தை பார்த்தாள். மணி இரவு எட்டேகால்.

“தலைவலி இப்ப எப்படி இருக்கும்மா?” கேட்டபடியே கோவிலில் இருந்து கொண்டு வந்திருந்த விபூதியை வித்யாவின் நெற்றியில் இட்டாள் பத்மாவதி.

“இப்பக் கொஞ்சம் பரவாயில்லையம்மா”

“அப்பா இன்னமும் வரலையா?” பத்மாவதி கேட்க,

“அதெல்லாம்… நீ போய் கொஞ்ச நேரத்திலேயே வந்துட்டார்.!… எனக்கு சூடா ஒரு கப் காபி போட்டு கொடுத்திட்டு,  காத்தாட உட்கார்ந்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு மொட்டை மாடிக்கு போனார்”. சிறிதும் தடுமாறாமல் சொன்னாள் வித்யா.

“க்கும்… அப்படியே மெய்மறந்து போய்த் தூங்கி இருப்பாருன்னு நினைக்கிறேன்!… போ வித்யா மாடிக்குப் போய் அவரை எழுப்பிக் கூட்டிட்டு வா!… நான் டிபன் தயார் பண்றேன்”

கோவிலில் கேட்ட ஒரு பக்தி பாடலை முணுமுணுத்தபடியே நகர்ந்தாள் பத்மாவதி.

அப்பா எழுப்ப முடியாத உறக்கத்தில் இருக்கிறார் என்பது தெரிந்தும் தெரியாதவள் போல் மாடிப்படிகளில் ஏறினாள் வித்யா.

போன வேகத்தில் திரும்பி வந்த மகளைப் பார்த்து,  “என்னடி நீ மட்டும் இறங்கி வர்றே?… நீ போ… நான் பின்னாடி வர்றேன்”னு சொல்லி உன்னைய விரட்டி. விட்டுட்டாரா உங்கப்பா? பட்டுப் புடவையிலிருந்து சாதாரண நூல் சேலைக்கு மாறியிருந்த பத்மாவதி, அந்த நூல் சேலையின் ஓரப்பகுதியிலிருந்த நூலில் சிக்கிக் கொண்ட தனது தாலிக் கொடியை சிரமப்பட்டுப் பிரித்துக் கொண்டிருந்தாள்.

 “இல்லைம்மா அப்பா மாடியில் இல்லை” என்றாள் வித்யா.

“என்னது மாடியில் இல்லையா?… நீதாண்டி அவர் மாடிக்கு போயிருக்காருன்னு சொன்னே?” இன்னமும் அந்தத் தாலியைக் கையில் பிடித்துக் கொண்டே கேட்டாள்.

“அப்படித்தான் என்கிட்ட சொல்லிட்டு மாடிக்கு போனார்… ஒருவேளை நான் தூங்கினப்புறம் இறங்கி வெளிய போயிட்டாரோ என்னவோ?” சரளமாய் வந்தது பொய்.

“இருக்கலாம்!… வாக்கிங் போயிருப்பார்ன்னு  நினைக்கிறேன்!… சரி எப்பவோ… வரும் போது வரட்டும்” சொல்லியவாறே சமையல் அறைக்குள் நுழைந்து டிபன் தயாரிப்பில் மூழ்கினாள் பத்மாவதி.

அப்போது அவள் பின்னால் வந்த வித்யா, “என்னம்மா… என்னாச்சு உன் தாலிக்கு?” கேட்டாள்.

“அதுவா… இந்த நூல் சேலையை மாற்றும் போது சேலையோரத்திலிருந்த நூலில் தாலிக் கொடி சிக்கிடுச்சு…” என்றாள் அவள்.

 “என்னாச்சு… எடுத்திட்டியா?”

 “இல்லை… அப்புறமா பிரிச்சுக்கலாம்னு அப்படியே விட்டுட்டேன்”

“எங்கே காட்டு… நான் பிரிச்சு விடறேன்” என்றவாறே தாயின் தாலிக்கொடியைக் கையில் பிடித்து அதில் சிக்கியிருந்த நூலை வேகமாய்ப் பிரிக்க முயன்றாள்.

 “ஏய்…ஏய்… பாத்து மெதுவா… தாலிக் கொடி அறுந்திடப் போகுது” பரபரத்தாள் பத்மாவதி.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மூன்று கோடுகள் (சிறுகதை) – திசை சங்கர்

    ஒளியின் நிழல் (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்