in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 9) – முகில் தினகரன்

023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8

“இல்லை… இந்தச் சூழ்நிலைல அதைப் பத்திப் பேசத் தயக்கமாயிருக்கு வித்யா”

“பரவாயில்லை சொல்லுங்க!.. எது நடந்தாலும் அதைக் கடந்து போய்த்தானே ஆகணும்?”

“அது… வந்து… அம்மாவும் அப்பாவும் மேற்கொண்டு கல்யாண வேலைகளைத் தொடர்வதைப் பற்றிப் பேச அங்கே வர்றதா சொன்னாங்க? அதான் பொசிஸன் எப்படி இருக்குன்னு கேட்க கூப்பிட்டேன். அம்மா வேற இன்னும் அப்படியே இருக்காங்கன்னு சொல்றே. இந்த நிலைமையில் எப்படி வந்து பேசுறது?” சுந்தரராமன் தயங்க

“அதனால் என்ன?… பெரியப்பா… மாமா எல்லோரும் இன்னும் இங்கதான் இருக்காங்க!… அவங்களை வெச்சுப் பேசலாமே?” என்றாள் வித்யா.

“அப்ப இன்னைக்கே வரலாம்னு சொல்றியா?” சுந்தர் ஆர்வமாய்க் கேட்க

“எதுக்கும் கொஞ்சம் இருங்க!…. ஒரு வார்த்தை கேட்டே சொல்லிடறேன்” என்றவள் போனைக் கையால் அடைத்துக் கொண்டு, மற்றவர்களிடம் பேசி விட்டு,  “ஹலோ சுந்தர் இன்னைக்கே வாங்க!” என்றாள்.

“அப்படியா?” என்றவன் சிறிய அமைதிக்குப் பின்  “ஓகே” என்றான்.

“ஓகே…  சுந்தர்.

மாலை

“இங்க பாருங்க…  நடந்தது நடந்து போச்சு, யார் என்ன செய்ய முடியும்? பெரியவருக்கு மகளை கல்யாண கோலத்தில் பார்க்கறதுக்குக் கொடுப்பினை இல்லாம போச்சுனு நினைச்சா ஒருபுறம் அங்கலாய்ப்பா இருந்தாலும், மறுபுறம் அவர் நிச்சயம் பண்ணிட்டுப் போன கல்யாணத்தை நடத்துவது தான் அவரோட ஆன்மா சாந்தியடையறதுக்கு நாம செய்யற நல்ல காரியமாகப் படுது” சுந்தரின் அப்பா ராமச்சந்திரன் சொல்ல

“நீங்க சொல்றது சரிதான்!… ஆனால் சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்க? வீட்ல ஒரு கெட்ட காரியம் நடந்திருக்கு!… அந்த தீட்டு இன்னும் தீரலை!… அதுக்குள்ளார ஒரு நல்ல காரியம் செய்யணுமானு பேச மாட்டாங்களா?” என்றார் வித்யாவின் மாமா.

வசதியின்மை காரணமாய் அவர் மகனுக்கு வித்யாவைத் தர அவள் பெற்றோர்கள் சம்மதிக்காத வன்மத்தை இப்படித் தீர்த்துக் கொண்டார் அவர்.

“அதே சொந்தக்காரங்க இந்த கல்யாணம் நின்னு போச்சுன்னா இவ ராசி இல்லாதவள்…. இவள் துரதிர்ஷ்டம் பிடித்தவள்… தாலி பாக்கியம் இல்லாதவள்… அப்படின்னு நம்ம வித்யாவைத் தூற்றுவாங்களே!”

“அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.” என்றார் ராமச்சந்திரன்.

அவர்கள் ஆளாளுக்கு எதையெதையோ பேசிக் கொண்டே போக டென்ஷனான சுந்தர், “அப்பா இப்படிப் பேசிக்கிட்டே இருந்தா பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். இங்க பாருங்க கல்யாணம் பண்ணி வாழ்க்கை நடத்தப் போறது நாங்க ரெண்டு பேரும் தான் எங்க ரெண்டு பேரோட அபிப்பிராயத்தை மட்டும் கேளுங்க. மத்தவங்களை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுறீங்க?” சற்று உரத்த குரலிலேயே சொன்னான்.

அவன் அப்படி ஆவேசமாய் பேசியது வித்யாவுக்கு மிகவும் பிடித்துப் போக,  “மாமா… பெரியப்பா… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எப்படி அபிப்பிராயப்படுறாங்களோ…  அப்படியே ஆகட்டும்” என்றாள்.

“நாங்க என்ன சொல்றோம்ன்னா….” என்று வித்யாவின் பெரியப்பா இழுக்க

“வேண்டாம் பெரியப்பா நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்” அவரைக் கைமர்த்திய வித்யா, “சுந்தர்  நீங்க  என்ன  நினைக்கிறீங்க?… அதைச்  சொல்லுங்க” கேட்டாள்.

“கல்யாணம் குறித்த தேதியில்… குறித்த முகூர்த்த நேரத்தில்… நடந்தே தீரணும்… என்கிறோம்!..”

“ஓ.கே நீங்க ப்ரொஸீட் பண்ணுங்க!… நாங்க ரெடி” என்றாள் வித்யா தீர்மானமாய்.

அவள் மாமாவுக்கும், பெரியப்பாவுக்கும் முகம் இருண்டு போக, அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை வாசல்வரை சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பினாள் வித்யா.

அவள் மாமாவும், பெரியப்பாவும் தங்களுக்குள் நீண்ட நேரம் எதையோ சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருக்க, ஒரு பெரிய எதிர்ப்பைச் சமாளிக்க தன்னை மனதளவில் தயார்படுத்திக் கொண்டாள் வித்யா.  ஆனால், நடந்ததோ வேறு.

“ஹி… ஹி… வித்யா நாங்க யோசிச்சுப் பார்த்தோம்!… எங்களுக்கும் நீ சொன்னது தான் கரெக்ட்ன்னு தோணுது!… பொதுவாகவே ஒரு தரம் நிச்சயிக்கப்பட்ட திருமணம்… அந்தக் குறிப்பிட்ட நேரத்துல நடக்காம நின்னு போனா… அது தொடர்ந்து நடக்க வாய்ப்புக் கம்மினு சொல்லுவாங்க!… உண்மையில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் சொன்னதைத் தான் நாங்களும் சொல்ல நினைச்சோம்!… அதுக்குள்ளார…” என்று இருவரும் கோரஸாய்ச் சொல்லி அசடு வழியே, அவர்கள் இருவரையும் ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்து விட்டு, உள்ளறைக்குள் இருக்கும் அம்மாவைக் காணச் சென்றாள் வித்யா.

அந்தக் கல்யாண மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜகஜ் ஜோதியாய் மின்னிக் கொண்டிருந்தது. முகப்பில் நின்று கொண்டிருந்த வீடியோக்காரன் உள்ளே வருவோரை எல்லாம் தன் காமிராவில் விழுங்கிக் கொண்டிருந்தான்.

காரணமே இல்லாமல் குட்டீஸ் கூட்டம் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. பின்புறமிருந்த டைனிங் ஹாலிலிருந்து வெஜிடபிள் பிரியாணி வாசம் காற்றில் ஏகமாய்க் கலந்திருந்தது.

முன் ஹாலில், நண்பர்களுக்கு நடுவில் நின்று, கலகலவென சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான் மாப்பிள்ளை சுந்தரராமன். சமீபத்தின் கெட்ட நிகழ்வு ஏற்படுத்தியிருந்த சோகத்தழும்புகளை அங்கு பரவியிருந்த சந்தோஷ களிம்பு சுத்தமாகவே ஆற்றிவிட்டிருந்தது.

மண்டபத்தின் முன் ஆட்டோவில் வந்திறங்கிய கோமதியும் ஜெயாவும் பன்னீர் தெளிக்கப்பட்டு, வீடியோ வெளிச்ச மழையில் நனைக்கப்பட்டு, உள்ளே நுழைந்து “மணமகள்” என்று எழுதப்பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றனர்.

கண்ணாடி முன் வித்யாவை அமர வைத்து, அலங்காரம் செய்கிறோம் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு, எதையெதையோ அவள் முகத்தில் பூசிக் கொண்டிருந்தனர் ப்யூட்டி பார்லர் பெண்கள் இருவர்.  அவர்களுடைய அதி பயங்கர மேக்கப்பைப் பார்த்ததுமே எல்லோரும் சொல்லி விடுவார்கள் அவர்களிருவரும் ப்யூட்டி பார்லரில் வேலை பார்க்கிறார்கள் என்று.

“ஹாய் வித்யா…” குரல் கேட்டதும், அந்த அலங்கார அவஸ்தையிலிருந்து தற்காலிகமாய்  விடுபட்டு  தலையை  திருப்பி,  குரல்  வந்த  திசையில்  நோக்கினாள் வித்யா.

“ஹாய் கோமதி….. ஹாய் ஜெயா… ஏண்டி இதுதான் வர்ற நேரமா?… நான் என்ன சொல்லி இருந்தேன்?… மதியமே வரணும்னு சொல்லி இருந்தேனல்ல?” செல்லமாய்க் கோபித்தாள்.

“மதியமே வரணும்னு தாண்டி பார்த்தோம் முடியலையே”

“சரி… சரி.. ஏதோ மகராசிகள் இப்பவாவது வந்தீங்களே அதுவே போதும்!… ஆமாம் மாப்பிள்ளையைப் பார்த்தீங்களா?” வித்யா கேட்க

“இல்லையே?”

“கீழே பிரண்ட்ஸ்க்கு கூட நின்னு பேசிட்டு இருந்தாரே?… சரி.. என் கூட வாங்க… நானே இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன்” பாதி அலங்காரத்தில் எழுந்து நடந்த அவளின் பின்னால் கோமதியும், ஜெயாவும் தொடர்ந்தார்கள்.

மாப்பிள்ளை சுந்தரராமன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.  சந்தன நிற கோட் சூட்டில் மிக அழகாகவே இருந்தான்.

“சுந்தர்…”

வித்யாவின் குரலைக் கேட்டு திரும்பினான்.

“இவங்க என்னோட நண்பிகள்… காலேஜ் மேட்ஸ்!… இவ கோமதி!… இவ ஜெயா”

“ஹாய்… ஹாய்” என்றான்  சுந்தர்  இருவருக்கும்  தனித்தனியாய்.

பதிலுக்கு சினேகமாய் புன்னகைத்த கோமதிக்கு மனசுக்குள் அவனை நினைக்கப் பாவமாயிருந்தது. ‘ஹும்… நீ எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தாயோ தெரியலை… இவளுக்கு புருஷனா ஆகப் போறே?’

வெளித்தோற்றத்திற்கு அழகாய் இருக்கும் வித்யா என்ற அந்த மலருக்குள்  தேனுக்கு பதில்  விஷம்  இருப்பது  அவளுக்கு மட்டும் தானே தெரியும்?

“சரி சுந்தர் நீங்க உங்க பிரண்ட்ஸை கவனிங்க!… நான் என்னோட பிரண்ட்ஸை கவனிக்கிறேன்… வாங்கடி” பட்டுச் சேலை சரசரக்க வேக வேகமாய் நடந்தாள் வித்யா.

“வித்யா… ஒன் மினிட்… உங்க அம்மா எங்கே?” கோமதி கேட்டாள்.

“அவங்க மண்டபத்துக்கு வரலையே… வீட்டிலேயே இருந்துட்டாங்க!…. காலையில் முகூர்த்தத்துக்கு மட்டும் வருவாங்க” என்றாள் வித்யா.

“பாவம்டி… அவங்களை நினைச்சா நெஞ்சே வெடிச்சிடும் போலிருக்குடி” சோகமாய்ச் சொன்ன கோமதியை அதட்டினாள் வித்யா.

“ப்ச்… போதும் கோமதி… அந்தப் பேச்சை மாத்து!… நாங்களே சிரமப்பட்டு அந்த சம்பவத்தை மறந்துட்டு… கல்யாண சந்தோஷத்தில் இருக்கோம்!… நீ மறுபடி மறுபடி அதையே பேசி… எங்க எல்லோரோட மூடையும் கெடுத்துடாதே”

வித்யாவின் பேச்சில் லேசாய் கோபம் தெரிந்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒளியின் நிழல் (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்

    காமராஜர் காட்டிய வழியிலே (சிறுகதை) – மலர்மைந்தன், கல்பாக்கம்