2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18
“த பாரு தெய்வானை… நான் வரும் போதே உன்கிட்ட என்ன சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்? இங்க வந்ததும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாது… நாம நல்ல விஷயம் பேசப் போறோம்னு சொல்லித்தானே கூட்டிட்டு வந்தேன்!… அதை மறந்திட்டு வந்த உடனேயே ஆரம்பிச்சிட்டியே?” மனைவியைத் திட்டினார் ராமச்சந்திரன்.
அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்ட தெய்வானை, தள்ளி நின்று கொண்டிருந்த பத்மாவதியைப் பார்த்து, “வாங்க சம்மந்தியம்மா… வந்து என் பக்கத்துல உட்காருங்க… ஒரு விஷயம் பேசணும்” என்றாள்.
ராமச்சந்திரனும் வித்யாவைப் பார்த்து, “வித்யா நீயும் உட்காரும்மா” என்றார்.
எல்லோரும் அமர்ந்த பின், “இங்க பாருங்க சம்மந்தியம்மா…. நாம இழந்தது எதுவாயினும்… அதை விடச் சிறந்தது… கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிடைத்தது எதுவாயினும் அதுவே ஆகச் சிறந்தது என்று எண்ணுவது தன்னம்பிக்கை” என்று ராமச்சந்திரன் ஆரம்பிக்க, பத்மாவதியும் வித்யாவும் எதுவும் புரியாமல் விழித்தனர்.
“ஓ.கே… நான் நேரடியா விஷயத்துக்கே வர்றேன். இந்தச் சமுதாயத்துல வித்யாவைப் போல ஒரு சின்னப்பெண்… இளம் பெண்…. இவ்வளவு சின்ன வயசிலிருந்து விதவையா காலம் தள்ளுவதென்பது உண்மையிலேயே ரொம்ப ரொம்பச் சிரமம். அதனால…” இழுத்தார்.
“அதனால…..?” பத்மாவதி கேட்டாள்.
“ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெச்சிடறது நல்லதுனு எனக்குத் தோணுது”
பத்மாவதியும், வித்யாவும் அதைக் கேட்டு அமைதி காக்க, “நாங்க எங்க கருத்தைச் சொன்னோம்… அவ்வளவுதான். மேற்கொண்டு முடிவெடுக்கறது உங்க பிரியம்” என்றாள் தெய்வானை.
மறுமணத்தைப் பற்றி பேச வந்தவர்களிடம், ‘உங்கள் மருமகள் உண்டாயிருக்கானு சொன்னால் என்ன நடக்கும்? எங்க வாரிசைப் பெத்துக் குடுத்திட்டு அப்புறமா மறுகல்யாணம் பண்ணிக்கம்மானு சொல்லுவாங்களோ?’ யோசித்தாள் பத்மாவதி.
அவள் யோசிப்பதையும், வித்யா அமைதியாயிருப்பதையும் கவனித்த தெய்வானை, “ஏங்க அவங்களுக்கு யோசிக்கறதுக்கு கொஞ்சம் அவகாசம் குடுக்க வேண்டாமா?” என்று தன் கணவரைப் பார்த்துச் சொல்லி விட்டு
பத்மாவதி பக்கம் திரும்பி, “அம்மா… நல்லா நிதானமா யோசிச்சு ஒரு முடிவெடுங்க. நீங்க என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதம். என்னடா சம்மந்தி விட்டுக்காரங்க ஏதாச்சும் தப்பா நினைச்சுக்குவாங்களோனு நீங்க தயங்கவே வேண்டாம். நமக்கு ஒரே எண்ணம் நம்ம வித்யாவோட எதிர்காலம் நல்லபடியா இருக்கணும், அவ்வளவுதான்” என்றாள்.
“அப்ப நாங்க கிளம்பறோம், நீங்க உங்க முடிவை போனில் சொன்னால் கூடப் போதும்” என்றபடி ராமச்சந்திரன் எழ
“அய்யய்ய… என்ன நீங்க வந்திட்டு எதுவுமே சாப்பிடாமப் போனா எப்படி?” பத்மாவதி கேட்க,
“எல்லாம் நல்லபடியா நடந்தா, கூடிய சீக்கிரத்துல விருந்தே சாப்பிடறோம்” சிரித்தவாறே சொல்லி விட்டு வாசலை நோக்கி நடந்தார் நாமச்சந்திரன்.
அவர்கள் சென்றபின், “என்ன வித்யா? என்னாச்சு உனக்கு? அவங்க வந்து உனக்கு நல்லதுதானே சொன்னாங்க? இத்தனை சின்ன வயசிலிருந்து நீ விதவையா வாழ்ந்தா அது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சுக்கிட்டு… நீ மறுகல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்றாங்கன்னா… அவங்களோட நல்ல மனசை நாம புரிஞ்சுக்கணும்” என்றாள் பத்மாவதி.
அதைக் கேட்க வித்யாவின் உள் மனம் அவளை நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது. நெஞ்சின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்தது போல் நெஞ்சு கனத்தது.
“பாவம்… இவங்களோட மகனைக் கொன்னதே நான்தான்னு தெரியாம, என்னோட எதிர்கால வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கறாங்க. இப்படிப்பட்ட மனிதர்களோட மனதை நான் ரணப்படுத்திட்டேனே? இந்தப் பாவம் என்னைச் சும்மா விடுமா?” மனதிற்குள் சொல்லுவதாய் எண்ணிக் கொண்டு சன்னக் குரலில் உளறி விட்ட வித்யாவின் தோளை சட்டெனப் பற்றி, வெறிகொண்டவளாய்த் திருப்பினாள் பத்மாவதி.
“ஏய்… இப்ப என்ன சொன்னே? என்ன சொன்னே? எங்கே அதை மறுபடியும் திருப்பிச் சொல்லு, திருப்பிச் சொல்லு” அவளை உலுக்கினாள் பத்மாவதி.
“அது… வந்து… ஒண்ணுமில்லையே…. ஒண்ணுமில்லையே!” சமாளித்தாள் வித்யா.
ஆனால், அவள் சற்றும் எதிர்பாராத விதமாய் அவள் முகத்தில் ஒரு பேயறை விழுந்தது. பொறி கலங்கிப் போன வித்யா சுதாரிக்கும் முன், இன்னொரு கன்னத்தில் மற்றுமொரு பேயறை விழுந்தது. நிற்க முடியாமல் தள்ளாடினாள் அவள்.
பக்கத்திலிருந்த பாட்டில் நீரை அவள் முகத்தில் பீய்ச்சியடித்த பத்மாவதி, “ஒழுங்கா சொல்லிடு… மாப்பிள்ளையை என்ன பண்ணினே?’’ கர்ண கடூரக் குரலில் கேட்டாள்.
“அம்மா… என்னைய மன்னிச்சிடுங்கம்மா… நான் மாபெரும் தப்புப் பண்ணிட்டேன்!…”
வித்யா ஒப்புக் கொள்ள, “அந்த மனுஷன் உனக்கு என்ன பாவம்டி பண்ணினார்? அவரை எதுக்குடி கொன்னே?” அழுதபடி கேட்டாள் பத்மாவதி.
“அம்மா… உண்மையில் அன்னிக்கு அவரைக் கொல்ல கரண்ட் ஷாக் வைக்கலை. நான்… நான் … தற்கொலை செஞ்சுக்கத்தான் கரண்ட்ல கையை வெச்சேன். அது தெரியாமல் அவர் என்னைத் தொடப்போக, என் உடம்பிலிருந்த மின்சாரம் அவர் உடம்பிலும் பாய்ஞ்சிடுச்சு. என்ன காரணமோ தெரியலை கொஞ்ச நேரத்துல என்னைத் தூக்கி கட்டிலுக்குக் கீழே வீசிய மின்சாரம்… அவரை மட்டும் கெட்டியாப் பிடிச்சுக்கிச்சு. அதனாலதான் நான் தப்பிச்சிட்டேன்… அவர் இறந்திட்டாரு”
வித்யா சொல்லி முடிக்க, அவள் முகத்தில் காறி உமிழந்த பத்மாவதி, “ச்சீய்… நீயெல்லாம் ஒரு பொம்பளையா?… நீ ஏண்டி என் வயித்துல வந்து பிறந்தே?” அழ ஆரம்பித்தாள்.
“அம்மா… மனைவியை இழந்த அந்த விஜயசந்திரன்… செத்துப் போன மனைவி மேலே உயிரையே வெச்சிருக்கான். அவ நினைப்பால வேற கல்யாணமே பண்ணிக்காம தனி மரமா வாழ்ந்திட்டிருக்கான். அவ குடியிருந்த மனசுல இன்னொருத்தியைக் குடி வைக்க என்னால் முடியாது!ன்னு சொல்றான்!”
“சரி… அதுக்கென்ன இப்ப?”
“அதே மாதிரி சுந்தரும் என் மேல் அதிக அன்பு வெச்சிருப்பாரா?… நான் செத்தா என்னை நினைச்சுக்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்காம வாழ்வாரா?… நான் வாழ்ந்த அந்த இதயத்துல இன்னொருத்தியை அனுமதிக்க மாட்டாரானு பார்க்கத் தோணிச்சு. அதை நான் பார்க்கணும்ன்னா… நான் செத்தால்தான் பார்க்க முடியும்னு புரிஞ்சுது. அதுக்காகத்தான் தற்கொலை முடிவெடுத்தேன்”
தலையைத் தூக்கி தன் மகளை வெறித்துப் பார்த்த பத்மாவதி, “வித்யா… நாளைக்கு நாம டாக்டர்கிட்டப் போறோம்” என்றாள் தீர்மானமாக
“எந்த டாக்டர்ம்மா… அந்த லேடி டாக்டரா?”
“இல்லை… மனோதத்துவ டாக்டர்”. ஹக்கென்று அதிர்ந்தாள் வித்யா.
அன்றிரவு முழுவதும் தாறுமாறான சிந்தனை ஓட்டத்தால் உறக்கத்தைத் தொலைத்து விட்டு புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தாள்.
‘எதுக்கு மனநல டாக்டர்கிட்ட? நான் பைத்தியம்ன்னே முடிவு பண்ணிட்டாங்களா? எப்படி அப்படியொரு முடிவு பண்ணலாம்? நான் தெளிவாய்த்தானே இருக்கேன். கணவனை இழந்த நான் ஆறுதலுக்காக மனைவியை இழந்து வாடும் விஜயசந்திரனை மறுமணம் செய்துக்கப் போறேன்னு சொன்னது எவ்வளவொரு தெளிவான முடிவு. அப்படியிருந்தும் என்னை மனநல மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போனா என்ன அர்த்தம்? அங்கே போய் நான் அப்பாவைக் கொன்ற விஷயத்தையும்… சுந்தரைக் கொன்ற விஷயத்தையும் அந்த டாக்டர்கிட்ட சொன்னா அது எனக்கு ஆபத்தாயிடாதா? ஒரு வேலை அந்த டாக்டர் யோக்கிய சிகாமணி மாதிரி போலீஸ்ல போட்டுக் குடுத்திட்டா தேவையில்லாத பிரச்சினைகள் வருமே? என்ன செய்யலாம்?’
திடீரென ஏதோ முடிவு செய்தவளாய் உறங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பினாள்.
“என்னடி? என்னாச்சு? எதுக்குத் தூங்கறவளை எழுப்பறே?” கோபமாய்க் கேட்டாள் பத்மாவதி.
“அம்மா… நான் மனநல மருத்துவர்கிட்ட வரலை”
“ஏன்?”
“எதுக்கு வரணும்?” திருப்பிக் கேட்டாள்.
“சில நேரங்கள்ல… என்ன செய்யறோம்ன்னே தெரியாம நீ சில மோசமான காரியங்களை செஞ்சிருக்கே. இதை இப்படியே வளர விட்டா… எதிர்காலத்துல இன்னும் என்னென்ன நடக்குமோனு பயமாயிருக்கு. அதான் இப்பவே அதுக்கொரு டிரீட்மெண்ட் எடுத்திட்டு… அதுக்குப் பிறகு உன்னோட மறுமணத்தைப் பத்தி முடிவெடுக்கலாம்னு நினைக்கிறேன், அவ்வளவுதான்”
“அவசியமில்லைம்மா… இப்ப நான் எல்லாத்தையும் உணர்ந்திட்டேன். என்னை நம்பு… இனிமேல் அந்த மாதிரி எதுவும் நடக்காது” உறுதிபடச் சொன்னாள் வித்யா.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings