ஞாயிற்றுக்கிழமை மாலையானதால் மெரினாக் கடற்கரை, மக்கள் கூட்டத்தில் நிறைந்திருந்தது. அத்தனை மனிதத் தலைகளை பார்த்ததாலோ என்னவோ, கடல் அலை ஆர்பரித்து வந்து கரையை அரித்துக் கொண்டிருந்தது
மக்கள் கூட்டத்தில் இருந்து ஒதுங்கி, தனியாக உடைந்த படகொன்றின் மேல் அமர்ந்து கடலை ரசித்துக் கொண்டிருந்தேன்
கரியநிறம் பூசி, இருளை உள்வாங்கிக் கொண்டிருந்தது கடல். மனம் சரியில்லாத போது, கடல் காற்றை சுவாசித்து மனதிற்கு கொஞ்சம் புத்துணர்ச்சியை ஏற்றிக் கொள்வது என் வழக்கம்.
எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியவில்லை. அலைபாய்ந்த மனது தெளிந்தாற் போல தோன்ற, கரையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
சற்று முன் நிறைந்து கிடந்த கடற்கரையில் பாதி காணாமல் போயிருந்தது. மெல்ல டூ வீலர் பார்க்கிங் அருகே வந்து என் வண்டியை சாவி போட்டுத் திருகிய சமயம், பக்கத்தில் வந்து நின்ற வண்டியில் இருந்து இறங்கினாள் அவள்
சுடிதார் துப்பட்டாவால் முகம் முழுவதும் மறைத்து நின்றாலும், என்னால் அவளை அடையாளம் காண முடிந்தது.
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும், முதல் படத்திலேயே இளசுகளின் மனதை கொள்ளையடித்துச் சென்றவள் அவள்.
அடுத்தடுத்து சில படங்கள் தோல்விப் படமாக போனாலும், இயக்குனர் ஒருவரின் படத்தில் நடித்த போது அவரோடு காதல் வயப்பட்டு, பின்னர் அவரையே மணம் புரிந்து கொண்டாள்.
சொல்லப் போனால் அந்த காதலுக்கு தூது போனவனே நான் தான். அந்த இயக்குனரின் உதவி இயக்குனராக நான் பணிபுரிந்த போது நடந்தது அது
அவர்கள் சந்தித்து பேச இடம் எல்லாம் பார்த்துக் கொடுத்து இருக்கிறேன். பிழைப்புக்கு பத்திரிக்கையொன்றில் ப்ரிலான்ஸராகவும் இருந்ததால், இந்த காதல் விவகாரங்களை கிசுகிசுக்களாக எழுதி பரபரக்க வைத்ததிலும் எனது பங்கு அதிகம்.
நான் அவளையே பார்ப்பதை கவனித்தவள், “ஹாய் நவீன்! எப்படியிருக்கே?” என்றாள்
பார்த்தும் பார்க்காதது போல் சென்று விடுவாள் என்று நினைத்தேன். என்னை ஞாபகம் வைத்து விசாரித்த போது, இவள் வித்தியாசமானவள் என்று தோன்றியது.
“பைன் மேடம்! நல்லாருக்கேன்… நீங்க?” என்று இழுத்தேன்.
“நல்லா இருக்கேன்” என்று அவள் சொன்ன பதிலில் சுரத்தில்லை.
சமீபத்தில் தான் அவளது டைரக்டர் கணவனும் அவளும் பரஸ்பர விவாகரத்து கேட்டு மனு செய்திருந்தார்கள். அதன் வலி இன்னும் இருக்கிறது போலும்
“தனியாத் தான் வந்திருக்கிங்களா?” என கேட்டதும் அவள் “க்ளுக்” என சிரித்தாள்
”வேணும்னா, யார் பெயரையாவது என்னோட சேர்த்து எழுதி பிரஸ்ஸுக்கு கொடேன், உன் செலவுக்கு ஆகும்” என்றாள்.
“ஸா.. ஸாரி மேடம் நான் கிளம்பறேன்”
“எதுவும் அர்ஜெண்ட் ஒர்க் இருக்கா? நான் தனியாத் தான் வந்திருக்கேன், கொஞ்சம் கம்பெனி கொடேன்”
“சார் வ.. வரலையா?” இழுத்தேன்.
“எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்காத நவீன். நாங்க இப்ப ஒண்ணா இல்ல, பிரிஞ்சிட்டோம். இது எல்லா மீடியாவுலும் வந்து பேஸ் புக் டிவிட்டர்ல எல்லாம் விவாதம் நடந்துகிட்டு இருக்கு, உனக்கு தெரியாதா என்ன”
“ஏன் மேடம்? என்னாச்சு?”
”நான் தீபா சந்திரனா இருக்கிறது மகிக்கு பிடிக்கலை”
“புரியலை!”
“நடந்துகிட்டே பேசுவமா? மனசுல இருக்கிறதை யாருகிட்டயாவது கொட்டினா கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். நான் மட்டும் இல்லே, எல்லா பிரபல நடிகைகளும் இப்படி ஒரு ஆள் கிடைக்காமத் தான் எதுக்கோ அடிமையாகி அப்புறம் வாழ்க்கையை இழந்துடறாங்க”
அந்த இருட்டு வேலையிலும் அவளை அடையாளம் கண்டு கொண்டு ஒரு கும்பல் “ தீபாடா…” என்று நெருங்கி வந்தனர்
அவள் முகத்தை மூடிக் கொண்டு அவசரமாக நடக்க, “வேற ஆளை செட் பண்ணிட்டியா? என குரல் கொடுத்தனர்
”ஹேய்! மைண்ட் யுவர் வேர்ட்ஸ்!”
“எதுக்கு? எதுக்குங்கறேன்? நீதான் பப்ளிக் ப்ளேஸ்ல அன்டீசண்டா பிஹேவ் பண்ணிக்கிட்டு இருக்க, கேட்டா என்னையே மூடச்சொல்றியா?” ஒருவன் எகிற, கும்பல் கூடியது.
போலீஸ் வேன் ஒன்று சைரன் அடித்து வந்ததும் கூட்டம் கலைந்தது. அதில் இருந்து இறங்கிய ஓர் அதிகாரி, “மேடம் நீங்க இப்படி தனியா இங்க வர்றது சரியில்லை, உடனே கிளம்புங்க” என்றார்
“என் டூ விலர் அங்க இருக்கு”
“மை காட்…டூ வீலர்லயா வந்தீங்க? ஆனாலும் ரொம்ப அசட்டுத் துணிச்சல் உங்களுக்கு, சார் யாரு?“ அந்த அதிகாரி என்னைப் பார்த்த பார்வையில், சந்தேகத்தோடு கொஞ்சம் பொறாமையும் கலந்திருந்தது
“இவர் சாரோட அஸிஸ்டெண்ட், எனக்கு தெரிஞ்சவர் தான். ஜஸ்ட் இங்க தான் மீட் பண்ணோம், நாங்க போயிடறோம்” என்றாள்
“என்னய்யா… மேடத்தை பத்திரமா கூட்டிட்டு போயிருவியா?” அவர் பேச்சில் கேலி துளிர்த்தது.
சில நிமிடங்களில் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து கோபத்துடன் இறங்கினான் மகி
“உன்னை யார் தனியா இங்கல்லாம் வரச் சொன்னது? வீட்ல சும்மாத் தான் இருக்கேன் என்னை கூட்டி வந்திருக்கலாமில்ல?” என அவளிடம் கத்தியவன்
என்னை விரோதமாக பார்த்து, “ஓ நீ இங்க தான் இருக்கியா?” என்றான்.
சில காந்தி நோட்டுகள் கைமாற, மகியின் காரில் ஏறி அமர்ந்து கை அசைத்தாள் தீபா. ‘போன் பண்றேன்’ என சைகை செய்தாள். அவளின் டூ வீலரை ஒரு கான்ஸ்டபிள் கொண்டு செல்ல, என் டூ விலரில் நான் வீடு வந்து சேர்ந்தேன்
தீபா சந்திரன்! எவ்வளவு பெரிய நடிகை. தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை கட்டிப் போட்டவள். நல்ல இயக்குனர் கையால் அறிமுகம் ஆனவள்.
அவள் செய்த தவறு, அடுத்தடுத்து சில பொம்மை வேடங்களில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொண்டது தான்.
அதன் பின் மகியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது தான் எனக்கு பழக்கம். மகி அப்போது ஒன்றிரண்டு படங்களை இயக்கி, இளைய தலைமுறை ஹீரோவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தான்
நாங்கள் ஒரே செட்! பல ஊர்களில் இருந்து வந்து பல இயக்குனர்களிடம் உதவியாக க்ளாப் பாயாக இருந்து பாடம் படித்து கொண்டிருதோம்
ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நாலைந்து படம் வேலை செய்ய, மகிக்கு படம் கிடைத்து இயக்குனராகி விட்டான்
அவனுக்கு அப்போது உதவி இயக்குனர்கள் தேவைப்பட, நானும் இன்னும் சிலரும் உடனிருந்தோம்
தீபாவின் முதல் படம் வந்த போதே புலம்பித் தீர்த்தான் மகி.
“அவ தான் என் ட்ரீம் கேர்ள், அவளைத் தான் கட்டணும்” என்றெல்லாம் புலம்புவான்
அவனது அதிர்ஷ்டம், தீபாவே அவன் படத்தின் ஹீரோயினாக அமைய, மிகவும் சிலாகித்து , பார்த்து பார்த்து கவனித்தான். நாங்களும் அவ்வப்போது கொளுத்திப் போட, காதல் பற்றிக் கொண்டது.
திரையுலகில் பலர் பொறாமையாக பார்த்தார்கள். பத்திரிக்கைகளுக்கு நிறைய தீனி கிடைத்தது. படம் முடிந்த சமயத்தில், இருவரும் கை பிடித்தார்கள். அத்துடன், நடிப்புக்கு முழுக்கு போட்டாள் தீபா
செல்போன் அடிக்க, பழைய நினைவுகளில் இருந்து மீண்டேன். நேரம் நள்ளிரவு பன்னிரண்டை தாண்டியிருந்தது. ‘இவ்வளவு நேரம் தூங்காமல் இருக்கிறேனா’ என்ற யோசனையுடன் செல்பேசியை உயிர்ப்பித்தேன்
”ஹலோ…நான் தீபா பேசறேன்” என்றது எதிர்முனை
“சொல்லுங்க” என்றேன்
“நீங்களும் தூங்கலயா?” என்றாள்.
“ப்ச்…மகியும் நீங்களும் ஆதர்ச தம்பதிகளா இருப்பீங்கனு நினைச்சேன். திடீர்னு பிரிஞ்சிட்டீங்களே, பழைய நினைவுகள்… தூக்கம் வரலை…” என்றேன்
“எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சதுலே உங்க பங்கு நிறையனு எனக்கும் தெரியும். பேசணும்… உங்ககிட்ட நிறைய பேசணும். நாளைக்கு ஹோட்டல் சவேரா வந்திருங்க பேசலாம், ஈவ்னிங் ஆறு மணிக்கு. குட்நைட்” என அழைப்பை துண்டித்தாள்
ஒரு பிரபல நடிகை, பிரபல இயக்குனரின் மனைவி அழைக்கிறாள் என்பதை நம்ப முடியவில்லை
நான் ஒரு சாதாரண உதவி இயக்குனன். காசுக்கு பத்திரிக்கைகளில் கிசு கிசு பரப்புபவன். என்னை நம்பி அழைக்கிறாளே
மறுநாள் மாலை ஆறுமணி. என் டூ விலரை சவேராவில் பார்க் செய்தபோது கைப்பேசி அழைத்தது
“வந்துட்டீங்களா? ரெஸ்டாரண்ட் வந்துடுங்க” என்றாள்.
உள்ளே நுழைந்ததும் கையசைத்தாள். சென்று எதிரில் அமர்ந்தேன்
“என்ன சாப்பிடறீங்க?”
“எது வேணா சொல்லுங்க? மகிக்கும் உங்களுக்கும் என்ன தான் பிரச்சனை? அதை மொதல்ல சொல்லுங்க. அவன் உங்களை ட்ரீம் கேர்ளா நினைச்சுக்கிட்டு இருந்தான்” என நான் சொன்னதை கேட்டு, வெறுமையாய் புன்னகைத்தாள்
வெயிட்டரிடம், “ரெண்டு நான், சென்னா மசாலா. அப்புறம் காபி” என ஆர்டர் செய்தவள்
அவன் அகன்றதும், “நான் ட்ரீம் கேர்ளா இருக்கிறது தான் அவரோட பிரச்சனை” என்றாள்.
“என்ன சொல்றீங்க?”
“நான் நடிக்க வந்த போதே நிறைய பேருக்கு ட்ரீம் கேர்ள் ஆயிட்டேன். ஆனா இவர் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டதும் படம் பண்ணக் கூடாதுனு சொல்லிட்டார், ஒத்துக்கிட்டேன்
அப்புறம் ஒண்ணு ரெண்டு படம் நல்ல கேரக்டர் வந்துச்சு பண்ணேன், அது அவருக்கு பிடிக்கலை. அவருக்கு அவரோட மனைவி நடிக்க கூடாது, வீட்டுல குடும்பப் பெண்ணா இருக்கணும். குழந்தை குட்டி பெத்துக்கணும், அவங்க அப்பா அம்மாவை பார்த்துக்கணும். ஒரு இருட்டான சிறையில என்னை தள்ளிட்டாரு”
“ம்…”
“டைரக்ஷன் அவரோட ப்ரொபஷன் மாதிரி ஆக்டிங் என்னோட ப்ரொபஷன். நான் ஏன் என் கெரியரை விட்டுத் தரணும். நான் வெளிச்சத்துக்கு வரதை அவர் விரும்பவே இல்ல. அதுக்கும் மேல என்னோட மதம், கேஸ்ட் அவங்களுக்கு பிடிக்கல. என்னை கட்டாயப்படுத்தி மாறச் சொல்றாங்க!”
“ஓ…”
“நான் ஏன் மாறனும்? நான் மாறிட்டா எல்லாமே மாறிடுமா? இல்லை எனக்காக அவர் மாறக் கூடாதா? நானே எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து போகணும்னு சொல்லுவார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. நல்ல வேளை குழந்தை எதுவும் பிறக்கலை. பிறந்திருந்தா பாவம் அதுவும் எங்க சண்டையிலே கஷ்டப்பட்டு இருக்கணும்”
“இதையெல்லாம் நீங்க முதல்லேயே யோசிச்சு இருக்க வேண்டாமா?”
“எங்க யோசிக்கவிட்டீங்க? நீங்க பாட்டுக்கு கிசு கிசு எழுதி குவிச்சீங்க. அவரும் கொஞ்சம் கூட என்னை யோசிக்க விடாம துளைச்சு எடுத்தாரு. எங்க வீட்டுல என்னை ஒரு பணம் காய்ச்சியா நினைச்சாங்க. இதுல இருந்து எப்படி தப்பிக்கலாம்னு, ஆத்துல விழுந்தவ எழுந்து திரும்பவும் கிணத்துல விழுந்துட்டேன்”
என்ன சொல்வதென தெரியாமல் நான் மௌனமாய் தலை குனிந்தேன்
”நவீன்… நாங்கல்லாம் வெளிச்சத்துல வாழற விட்டில் பூச்சிகள். வெளிச்சம் எங்க மேல பட்டுகிட்டே இருந்தாத் தான் உயிர் வாழ முடியும். வெளிச்சம் இல்லாத போது உயிர் இருக்காது. எப்பவும் வெளிச்சத்தை தேடிக்கிட்டே இருப்போம்.
அந்த விளக்கு எங்களை அழிக்குதுனு தெரிஞ்சாலும், அதோட ஒளி எங்களை ஈர்க்குது. அதனோட அழகு எங்களை சாய்க்குது. ஒளி வட்டத்துலயே வாழ பழகிட்ட எங்களுக்கு, அதை விட்டு இருட்டான இடத்திலே வாழப் பிடிக்காது”
“ம்…”
”நான் மகி மேல ஆயிரம் குறை சொன்னாலும், இதான் உண்மை. வெளிச்சம் என்னை கூப்பிடுது, மகி அங்கே போகாதேங்கிறார். என்னால போகாம இருக்க முடியல. எனக்கு வெளிச்சம் வேணும், புகழ் வேணும். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுனு சொல்லுவாங்க, என்னால சும்மா இருக்க முடியல
இருட்டறையில வச்சு மகி என்னை எவ்ளோ தான் தாங்கினாலும், வெளியே லேம்ப் போஸ்ட்கிட்ட இருக்கிற வெளிச்சம் தான் எனக்கு பெரிசா தெரியுது” என்றாள்
சூடாய் பேரர் கொண்டு வந்து வைத்த ‘நாண் ரொட்டி’ ஆறிப் போய் இருந்தது. ‘நடிகையின் குடும்ப வாழ்க்கையும் இப்படி ஆறிப் போய் விட்டதே’ என மனம் கனக்க அதை உண்ண ஆரம்பித்தேன்.
என்னிடம் விடைபெற்ற தீபா, பேரரிடம் பில் செட்டில் செய்து விட்டு கிளம்பினாள்
அந்த ஓட்டலின் விளக்குகள் உயிர் பெற்று ஒளிரத் துவங்க, வெளிச்சத்தை விரும்பிய தீபா, இருட்டான பகுதியில் நடந்து மறைந்தாள்
(முற்றும்)
#ad
அருமையான கதை , நடிகைகளின் உண்மை யான மன நிலையைப் பிரதிபலிக்கிறது
நடிகைகள் வாழ்க்கை எப்போவுமே பிரச்னைகளில் தான்!
Good narration.
Those who enjoyed the family life ( may be forced to be) are only enjoying the life.
Other wise be happy with the chosen life.
Film industry is an entirely different platform. Story has nicely revealed one of its dimensions .
Thanks for your review