in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 5)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

ந்தகோபால் அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் வர, கையெழுத்துப் போட்டு அனுப்பினாள் மஞ்சுளா. இருவரும் மியூச்சுவலாக விவாகரத்திற்கு விண்ணப்பித்து இருந்ததால், எல்லாம் சுலபமாக முடிந்தது.

விவாகரத்து கிடைத்ததும், அண்ணா அண்ணியை சமாதானப்படுத்தி விட்டு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கோபியுடன் அமெரிக்கா கிளம்பினாள் மஞ்சுளா 

நந்தகோபாலின் செயல்களினால் அவன் மேல் வெறுப்பு இருந்தாலும், அவனுடைய நினைவுகளிலிருந்து மீண்டு வர இந்தப் பிரிவு அவசியம் என்று நினைத்தாள்

குழந்தையுடன் அமெரிக்கா வந்த அவளை, சக ஊழியர்கள் முதலில் அவளைப் பரிதாபமாகப் பார்த்தாலும், குழந்தையை நல்ல பள்ளியில் சேர்த்தாள்.

முதல் மாதம் சம்பளம் வாங்கும் வரை, கிளாரா என்னும் பொருளாதாரப் பேராசிரியை தன் அபார்ட்மெண்ட்டில் தங்க வைத்துக் கொண்டாள்.

கோபியை நல்ல அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டதால், அவனுக்காக எந்த செலவும் இல்லை. ஒரே மாதத்தில் ஒரு ஸிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட் வாடகைக்குப் பிடித்து குடியேறி விட்டாள் மஞ்சுளா 

கிளாரா மற்றும் சக ஆசிரியர்கள் உதவியால் தான் அது சுலபமாக முடிந்தது.

உதவிப்பேராசிரியராக மஞ்சுளா வாங்கும் சம்பளம், அவளுக்கே ஆச்சரியம் கொடுத்தது. அவ்வளவு பெரிய தொகையை அவள் கனவிலும் யோசிக்கவில்லை. அவள் ஊதாரியல்ல, ஆடம்பரமாக செலவு செய்யவும் தெரியாது.

மாதம் ஐநூறு டாலர்கள்  அண்ணாவிற்கு அனுப்பினாள். ராகவனும் சாரதாவும் எவ்வளவோ மறுத்தும், அதை அண்ணன் மகள் ஜானகியின் மருத்துவக் கல்லூரி படிப்பிற்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.

ஜானகி தன் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை மஞ்சுளாவுக்கு அனுப்பினாள். அரசு மருத்துவக் கல்லூரியில் எந்த தடையும் இல்லாமல் ஜானகி சேர்ந்து விட்டதாக அண்ணாவும் அண்ணியும் தெரிவித்தார்கள். மஞ்சுளா மன நிம்மதியும், சந்தோஷமும் அடைந்தாள் .

கிளாராவும், இன்னும் சில நண்பர்களும் கூறிய யோசனையின் பேரில், வங்கிக் கடன் கட்ட முடியாமல் விட்டுச் சென்ற சில பழைய வீடுகளைப் பார்த்து குறைந்த விலைக்கு வாங்க முடிவு செய்தாள் மஞ்சுளா.

கிளாராவோடு, நிவேதா என்ற வங்காளிகள் பெண்ணும் மஞ்சுளாவின் நல்ல தோழியானாள். நிவேதாவிற்கு கோபி வயதில் நிஷாந்த் என்ற ஆண் குழந்தையும், சம்யுக்தா என்ற ஒரு வயதுப் பெண் குழந்தையும் இருந்தனர். அதனால் கோபிக்கு நல்ல விளையாட்டுத் தோழர்கள் கிடைத்தனர்.

ஒரு நாள் கிளாரா, நிவேதா இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு வீட்டைச் போய்ப் பார்த்தனர்.

தனி வீடு தான், முன்னால் ஒரு சிறிய தோட்டம். இரண்டு கார்கள் நிற்கும் அளவில் கார் கெரேஜ். இரண்டு பக்கமும் கொஞ்சம் பெரிய காலி இடம். ஒரு ஆரஞ்சு பழ மரம், ஒரு ஆப்பிள் மரம், எலுமிச்சை மரம் என்றும் அந்த ஊருக்கே உரிய அழகிய சிவப்பு ரோஜாச் செடிகளும் பூக்களுடன் குலுங்கின.

இரண்டு பக்கங்களிலும் பச்சைப் பசேலென்று சிறிய லான். பின்னால் ஒரு ஓரமாக கொத்துமல்லி, புதினா, பேசில் செடிகளும், வேறு சில காய்கறிச் செடிகளும், செயற்கையாக உருவாக்கப்பட்ட  சில குன்றுகளுடன் கூடிய மலை.

ஒரு ஸ்விட்சைப் போட்டால் மலையிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. கீழே ஒரு குளம். அது நிரம்பி அதிலிருந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்கிறது.

கீழே ஒரு சமையல் அறை. டைனிங் ஹால். அட்டாச்ட் பாத்துடன் கூடிய ஒரு படுக்கை அறை, அதில்லாமல் ஒரு காமன் டாய்லெட். படியேறி  மாடிக்குப் போனால் ஒரு சிறிய ஹால். அங்கே மூன்று படுக்கை அறைகள். எல்லாமே அட்டாச்ட் பாத்துடன் கூடியது.

வீடும், தோட்டமும் மஞ்சுளாவிற்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த வீடு கிளாரா வீட்டிற்கு மிக அருகில். நிவேதா  வீடும் பக்கத்து தெருவே தான்.

“மஞ்சுளா… வீடு மிகவும் அழகாக இருக்கிறது, உடனடியாக வாங்கி விடு. வங்கிக் கடனிற்கும் உடனே அப்ளை செய்து விடு” என்றனர் மஞ்சுளாவின் தோழமைகள்

“ஆமாம் மம்மி, பின்னால் இருக்கும் சின்னக் குளத்தில் அழகான மீன்களும் வாங்கி விடலாம்” என்றான் கோபி.

நிவேதாவின் மகன் நிஷாந்த் உற்சாகமாக குதித்தான்

“விலைக்கு வாங்க வேண்டாம். எங்கள் வீட்டு ‘பிஷ்டேங்க்கில்’ அழகான தங்க மீன்கள் நிறைய இருக்கின்றன. அதைக் கூட கொண்டு வந்து இந்தக் குளத்தில் விடலாம்” என்றான் குதூகலமாக.

எல்லோருக்கும் மிகவும் பிடித்து விடவே, அண்ணா ராகவனுக்கும், சாரதாவிற்கும் வீட்டின் ஒவ்வொரு மூலையும் விடாமல் போட்டோ எடுத்து அனுப்பினாள். அவர்களும், கஷ்டப் படாமல் கடனை அடைக்க முடியும் என்றால் உடனே  வீட்டை வாங்கி விடும்படி கூறினர்.

தேவையான எல்லா பத்திரங்களிலும் கையெழுத்துப் போட்டாள். வீட்டுக் கடன் பேப்பர்களிலும், வங்கிப் பேப்பரிலும் கையெழுத்திட்டு, வீட்டின் சாவியையும் பெற்றுக் கொண்டு அமெரிக்காவில் ஒரு வீட்டின் உரிமையாளர் ஆனாள்  மஞ்சுளா.

ஒரு நல்ல நாள் பார்த்து நண்பர்கள், சக ஆசிரியர்கள், அவர்கள் இலாகா டீன் எல்லோரையும் அழைத்துப் பால் காய்ச்சி புது வீட்டிற்கு குடி வந்தாள்.

இரண்டு ஆண்டுகள் வேகமாக ஓடியது. அந்த வருடம் கோடை விடுமுறைக்கு வரும்படி அண்ணா அண்ணியிடம் வற்புறுத்திக் கூறிவிட்டு, ஜானுவிடம் கொஞ்ச நேரம் ஜோக் அடித்து விட்டு, மூவருக்கும் அமெரிக்கா வர விசா பேப்பர்களை தயார் செய்து அனுப்பினாள்.

தாமதமின்றி விசா கிடைக்க, அந்த கோடை விடுமுறையில் மஞ்சுளாவின் அண்ணன் குடும்பம் அமெரிக்கா வந்து சேர்ந்தது

ஜானகிக்கு பெரிய வீட்டைச் பார்த்தும் மிகவும் சந்தோஷம். மாடிக்கும், கீழேயும் கோபியுடன் ஓடிப் பிடித்து விளயாடிக் கொண்டிருந்தாள் .

அண்ணாவோ, “டாக்டருக்குப் படி, தமிழ் இலக்கியம் வேண்டாம் என்றேன். ஆனால் தமிழ் மொழி தான் உனக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறது மஞ்சும்மா” என்று வியந்தார்.

“டாக்டர் படிப்பு உயர்ந்தது தான் அண்ணா. ஆனால் மனதிற்கு எது பிடிக்கிறதோ, அதைப் படித்தால், அதில் முழு மூச்சோடு சிறந்து நின்றால், எல்லாப் படிப்புமே சிறந்து தான்” என்றாள் மஞ்சுளா.

அண்ணி சாரதாவோ சமையல் அறையை விட்டு வெளியே வருவது இல்லை.

“அடேயப்பா! எவ்வளவு பெரிய சமையலறை. நம் சிதம்பரம் வீட்டையே இதில் அடக்கி விடலாம் போல் இருக்கிறதே” என்று வியந்தாள்.

தினமும் கோபிக்குப் பிடித்த சமையல் தான். நூடுல்ஸ், பாஸ்தா. ப்ரைட் ரைஸ் தான். அதுவுமில்லாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கோபிக்குப் பிடித்த உருளைக் கிழங்கு தான்.

“இப்படி சமைத்தால் இந்தியா போகும் போது இடுப்பைப் பிடித்துக் கொண்டு தான் போவேன் என்று நினைக்கிறேன்” என்றார் அண்ணா வேடிக்கையாக.

கோபிக்கோ மாமா, மாமி, ஜானகி எல்லோரும் வந்ததில் மிகவும் சந்தோஷம். ராகவன் அவனைக் கீழே விடுவதேயில்லை. ஒரு வயதுக் குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு சுற்றி வருவார்.

“கீழே விடுங்கள் அண்ணா அவனை. அவன் ஏழு வயதுப் பையன், மார்பு ஏதாவது பிடித்துக் கொள்ளப் போகிறது. எவ்வளவு கவனமாக இருக்கிறான், அவனைப் போய் தூக்கிக் கொண்டு” என்று கடிந்து கொண்டாள் மஞ்சுளா .

“அசடு மாதிரிப் பேசாதே மஞ்சுளா. குழந்தையைப் போய் கனமாக இருக்கிறான் என்கிறாயே. சாரதா முதலில் குழந்தைக்குத் திருஷ்டி சுற்றிப் போடு. இந்த இன்பச் சுமை இல்லாமல் இந்தியாவிற்குப் போய் எவ்வளவு ஏங்கப் போகிறேன் தெரியுமா?” என்றார் கோபியை இறுக அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு .

ஒரு மாத விடுமுறையை சந்தோஷமாகக் கழித்து விட்டு மூவரும் அரை மனதுடன் இந்தியா திரும்பினர். ஆனால் கோபி மட்டும் அங்கங்கே ஒரு பரிதவிப்பான ஏக்கத்துடன் நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் .

மஞ்சுளா இரண்டு நாட்கள் அவனை மௌனமாகக் கவனித்து வந்தாள். ஏதும் கேட்கவில்லை.

அன்று மாலை பள்ளி முடிந்து வந்தவுடன் கர்நாடிக் வாய்ப் பாட்டு வகுப்பிற்குப் போக வேண்டும். மஞ்சுளா தான் காரில் கொண்டு போய் பாட்டு டீச்சர் வீட்டில் விடுவாள். ஆனால் கோபி மாடியிலேயே இருந்தான், கீழே இறங்கி வரவில்லை.

பாட்டு வகுப்பிற்கு ஆவலுடன் கிளம்பும் அவன், ஏன் இவ்வளவு நேரமாகியும் கீழே இறங்கி வரவில்லை என்று மஞ்சுளாவிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதனால் மஞ்சுளா அவனைத் தேடி மாடிக்குச் சென்றாள்.

கோபி அவன் அறை பால்கனியில் நின்று வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். முகத்தில் ஏதோ சிந்தனை, கண்கள் கலங்கியிருந்தன.

“கண்ணா… பாட்டு வகுப்பிற்குப் போகவில்லையா?” என்றவள், கலங்கிய அவன் கண்களைப் பார்த்து, அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.

“கோபி, என்ன ஆயிற்று? ஏன் உன் கண்கள் கலங்கியிருக்கிறது? உன் நண்பர்களோடு சண்டையா? இல்லை, ஏதாவது பாடத்தில் மார்க் குறைந்து விட்டதா?” என்று கேட்டாள்

நின்றுக் கொண்டு இருந்த அவன், அவள் கழுத்தை அணைத்துக் கொண்டு, “அதெல்லாம் இல்லை அம்மா. மாமா மிக அன்பாக இருந்தார், அவர் ஊருக்குக் கிளம்பியதும் டாடி ஞாபகம் வந்து விட்டது. டாடி மட்டும் நம்முடன் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் அம்மா” என்று நிமிர்ந்தவன்

தன் தாயின் கண்களில் கண்ணீரைக் கண்டதும், “ஸாரி அம்மா, இனிமேல் அப்படிப் பேச மாட்டேன். என் பேச்சு உன்னை அழ வைத்து விட்டதா?” என்றவன், பெற்றவளின் கலங்கிய கண்களைத் துடைத்தான்

“இல்லை ராஜா, நீ மனம் திறந்து பேச வேண்டும். அப்போது தான் நான் உன் விருப்பு, வெறுப்புகளைத் தெரிந்து கொள்ள முடியும். இப்படி நீ பேசியது தான் நல்லது.  சரி கிளம்பு, நாம் பாட்டுக் கிளாசிற்குப் போகலாம்” என்று கூறி விட்டு அவன் கண்களையும் முகத்தையும் துடைத்து கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்து பாட்டு வகுப்பிற்கு அழைத்துச் சென்றாள்.

கோபியின் மனதில் அவன் தந்தை மேல் இருந்த பாசத்தை உணர்ந்து கொண்டாள் .

இரவு மணி ஏழைக் காட்டியது கடிகாரம். பழைய நினைவுகளில் மூழ்கி, ஒரு மணி நேரமாக உட்கார்ந்திருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டாள் மஞ்சுளா.

கோபியும் பியானோ பிராக்டீஸ் முடித்து, குளித்து, பைஜாமாவில் வந்து நின்றான். இருவரும் இரவு உணவு முடித்து தூங்கச் சென்றனர்.

அடுத்த நாள் காலை தூங்கி எழுந்த அவள் மனதில், மீண்டும் நந்தகோபால் வந்து நின்றான்.

அவனைப் பிரிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது தான் அவனுக்கு மனைவி, மகன் ஞாபகம் வந்தது போலும் என்று எரிச்சலுடன் நினைத்த அவள், தன் எண்ணங்களை உதறி விட்டு அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தினாள்.

அன்று சனிக்கிழமை. கோபிக்கு பியானோ கான்ஸெர்ட். பகல் பன்னிரண்டு மணிக்கே கோபிக்கு ‘லைட்’ டாக மதிய உணவும் கொடுத்துப் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள்.

காரை நிறுத்துவதற்கே இடம் தேட வேண்டியிருந்தது, அவ்வளவு கூட்டம்.

நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்காக இருந்த தனி வழியில் கோபியை அழைத்துச் சென்று, அவன் பியானோ ஆசிரியரிடம் ஒப்பித்து விட்டு பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் மஞ்சுளா.

ஸ்டேஜிற்கு அருகில் போட்டோ எடுக்க வசதியாக முட்டி போட்டு உட்கார்ந்து கொண்டு கேமராவை சரி செய்து கொண்டிருந்தவள், “மஞ்சுளா” என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தாள்

நந்தகோபால் நின்றிருந்தான்.

(தொடரும் – புதன் தோறும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயர்ந்த எண்ணம் (சிறுவர் கதை) – ✍ தமிழ் அழகினி, திருப்பூர்

    கனவுகளில் புதைந்தவன் (சிறுகதை) – ✍ Writer JRB, Chennai