சிறுகதைகள் சிறுவர் பக்கம்

உயர்ந்த எண்ணம் (சிறுவர் கதை) – ✍ தமிழ் அழகினி, திருப்பூர்

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“ஏன் சோகமாக இருக்கிறாய்?” என்று தியாவின் பாட்டி கேட்க

“ஒன்றும் இல்லை பாட்டி” என சமாளித்தாள்

அவள் முகத்தை பார்த்தே என்னமோ நடந்திருக்கிறது என யூகித்த பாட்டி, “இன்றைக்கு பள்ளியில் என்ன நடந்தது? ஆசிரியர் எதாவது சொன்னார்களா? சொல்லு தியா” என திருப்பி திருப்பி கேட்டுக் கொண்டே இருக்க 

“என்னால் எதும் தெளிவாக செய்ய முடியவில்லை பாட்டி. ஒரு குறிக்கோள் கூட என்னுடைய வாழ்க்கையில் இல்லை” என புலம்பினாள் தியா 

“என்ன நடந்தது தியா, சொல்லு”

“பள்ளியில் என்னுடைய நண்பர்கள் அனைவரும் எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால் நான் மட்டும் வகுப்பில் அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த வகுப்பு ஆசிரியர் என்னை ஒரு கேள்வி கேட்டாங்க பாட்டி”

“அப்படி என்ன கேள்வி மா?”

“உனக்கு என்ன ஆசை அல்லது கனவு உள்ளது? எதில் கலந்து கொண்டாலும் திரும்பி வந்து விடுகிறாய். எதற்காக இப்படி பயப்படுகிறாய் எனக் கேட்டு, எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும். ஆகையால் உயர்ந்த எண்ணங்களை வளர்த்துக் கொள் என்று கூறினார் பாட்டி”

“அதற்கு நீ என்ன கூறினாய் தியா?”

“நான் மௌனம் சாதித்தேன் பாட்டி. உயர்ந்த எண்ணங்களை பற்றி உங்களின் அனுபவத்தைக் கூறுங்களேன்”

“உயர்ந்த எண்ணங்களை பற்றியா? சரி கூறுகிறேன் நன்றாக கேள்” என ஆரம்பித்தார் 

மலை அருகே உள்ள நல்ல பசுமையான காடுகள், அதில் அனைத்து விலங்குகளும் வாழ்ந்து வந்தது. 

ஒவ்வொரு வகை விலங்குகளுக்கும் ஒவ்வொரு பகுதியாக பிரிக்கப்பட்டு இருந்தது. அந்த காடுகளில் உள்ள அனைத்து விலங்குகளும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தது. 

இப்படியே இருந்த ஒரு நாள், ஒரு பகுதியில் இருந்த நரி, குரங்குகள் வாழும் பகுதிக்கு  வந்தது

“குரங்கு நண்பரே குரங்கு நண்பரே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் கேட்கலாமா?” என்று கேட்டது

அதற்கு குரங்கு, “கேளுங்கள் நரி நண்பரே” என்றது

“சரி” என நரி கேள்வியை கேட்கத் தொடங்கியது

“உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியான காடுகளை வாங்க எத்தனை தினங்கள் ஆகும்” எனக் கேட்க

“ஒரு வருடம்” என கூறியது அந்த புத்திசாலி குரங்கு

“சரி” என அருகில் இருக்கும் யானைகள் வாழும் பகுதிக்கு சென்று இதே கேள்வியை  கேட்டது நரி

“யானையாரே யானையாரே, உங்கள் அருகில் இருக்கும் ஒரு பகுதியான காடுகளை வாங்க எத்தனை தினங்கள் ஆகும்” என்று கேட்ட நரியிடம்

யோசனை செய்து, “ஏழு மாதங்கள் ஆகும் நரியாரே” என பதிலளித்தது யானை 

இப்படியே ஒவ்வொரு பகுதியாக சென்று கேட்ட பின் காட்டுக்கே ராஜாவான சிங்கத்திடம் கேட்க சென்றது

ராஜா என்ன சொல்லியிருப்பார்?

காட்டுக்கே ராஜாவான சிங்கத்திடம் கேட்க கொஞ்சம் அச்சத்துடன் தான் சென்றது நரி

“ராஜா ராஜா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”

“என்ன கேள்வி? எதற்கு என்னிடம் கேட்கிறாய்?” எனக் கேள்வி கேட்ட நரியிடம் இரண்டு கேள்வியை கேட்டது சிங்கம்

“அனைத்து விலங்குகளிடமும் இந்த கேள்வியை கேட்டேன், உங்களிடமும் கேட்டு உங்களின் பதிலை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்” என கூறியது நரி 

‘அப்படி என்ன கேள்வியை இவன் கேட்கப் போகிறான்’ என மனதில் நினைத்தவாறே, “கேளுங்கள் நரியாரே” என்றது சிங்கம் 

“அருகில் இருக்கும் ஒரு பகுதியான காடுகளை வாங்க எத்தனை தினங்கள் எடுத்து கொள்வீர்கள்?”

திடீரென சிந்தனையில் மூழ்கிய சிங்கம், சிறிது நேரம் யோசனைக்குப் பிறகு, ஆறு வருடங்கள் ஆகும் என கூறியது

நரி அதிர்ச்சியில் முழிப்பிதுங்கி நின்றது. 

‘மற்ற வகை விலங்குகளிடம் கேட்கும் போது அவர்களே குறைந்த தினங்களை சொன்னாங்க. காட்டுக்கே ராஜா இவருக்கு மட்டும் எப்படி ஆறு வருடங்கள் ஆகும்?’ என யோசனையிலே நின்றது

அதனை பார்த்த சிங்கம், “என்ன நரியாரே இப்படி முழிக்கிறாய்? நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்ததா?” 

நரி மனதில் நினைத்ததை கூறி, “எப்படி ராஜா அவ்வளவு வருடங்கள் ஆகும்?”

வாயை பிளந்து சிரித்த சிங்கம், “நான் காட்டின் ஒரு பகுதியை மட்டும் நினைக்கவில்லை, இந்த உலகத்தில் இருக்கும் காடுகளை வாங்க ஆறு வருடங்கள் ஆகும்” என கூறினேன் என்றது 

‘இதனால் தான் சிங்கம் காட்டுக்கே ராஜா வா’ என நினைத்துக் கொண்டு 

“சரி ராஜா… நான் விடைபெறுகிறேன்” என கூறி அங்கு இருந்து சென்றது நரி. 

“இதில் என்ன புரிந்தது தியா உனக்கு” என்று பாட்டி கேட்க

“நன்றாக புரிந்தது பாட்டி, சிங்கத்தின் உயர்ந்த எண்ணத்தினால் தான் சிங்கம் காட்டுக்கே ராஜாவாக உள்ளது”

“சரியாக கூறினாய் தியா. மற்ற விலங்குகளின் எண்ணத்தை விட சிங்கத்தின் எண்ணங்களே உயர்வாக உள்ளது.  எண்ணங்கள் எப்பொழுதும் உயர்வாக இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்” என கூறினார் பாட்டி 

#Ads – Kids Story Books – Deals from Amazon 👇

 

#Ads – Children Activity Stuff – Deals from Amazon 👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 “சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்

Similar Posts

One thought on “உயர்ந்த எண்ணம் (சிறுவர் கதை) – ✍ தமிழ் அழகினி, திருப்பூர்
  1. உயர்ந்த எண்ணங்கள் (சிறுவர்
    கதை)
    சூப்பர் அக்கா வெற்றி பெற எனது அன்பான வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!