in

நினைக்கத் தெரிந்த மனமே ❤ (குறுநாவல் – பகுதி 1) – ✍ சுஸ்ரீ, சென்னை 

நினைக்கத் தெரிந்த... ❤ (பகுதி 1)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த குறுநாவலின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ந்த லைஃப் ரொம்ப வேஸ்ட். நானும் பார்க்கிறேன் தினமும் ஒரே மாதிரி காலைல எந்திரி, பல்லை விளக்கு, கொல்லைக்கு போ, அம்மா கொடுக்கற காப்பி தண்ணிய முழுங்கு, சீ என்னடா வாழ்க்கை. ஒரு சேன்ஞ், ஒரு இன்ட்ரஸ்டான திருப்பம் உண்டா? ஒண்ணும் கிடையாது, மண்ணு லைஃப்.

இப்படி இருந்த வாழ்வில் அந்த திருப்பம் வந்தது…

முதல்ல என்னைப் பத்தி சொல்றேன். 28 வயது கட்டிளம் காளைனு எடுத்தவுடனே பொய் வேண்டாம். வயசு 39 ஆச்சு, பேரு மூர்த்தி. 

நான் பிறந்து ஏழு மாசத்திலேயே  அப்பா போய் சேந்துட்டாரு, புண்யவான், அவரோட அரசாங்க வேலை அம்மாவுக்கு  கிடைத்தது. ஒரே அக்கா அனுபமா.

அம்மா ஆபீசுக்கு நான் ஸ்கூலுக்குனு வெளிய போக, பி.யூ.சி. முடிச்சு வீட்ல இருந்த அக்கா, TV பாத்து போரடிச்சு போய்,  காதலிக்கற முடிவுக்கு வந்தா. மாட்டினான் மகேஷு. அவசரமா காதலிச்சு சட்புட்னு கல்யாணம், அம்மா சம்மதத்தோட தான். செலவில்லாத கல்யாணம், அம்மாவுக்கு கசக்குமா என்ன?

இப்ப அக்கா சென்னைல. மகேஷ் அத்தான் ஐ.டி கம்பெனி மேனேஜர். அம்மா ரிடயர்டு ஆகி பென்ஷன்ல இருக்கா . நானும் தான் பென்ஷன்ல (அம்மாவோட பென்ஷன்ல). 

மதுரை பெரிய போஸ்ட் ஆபிஸ் தெரியுமா, ஒரு பக்கம் குட்ஷெட் தெரு, பர்மா பஜார்னு சொல்லி கண்ட சாமான தலைல கட்ற கடைங்க, அதுல தான்… இது நமக்கு இப்ப வேணாம். 

இன்னொரு பக்கம் வடக்கு வெளி வீதி, போஸ்ட் ஆபிஸ் பக்கத்துலயே சேதுபதி ஹை ஸ்கூல், பாரதியார் வேலை பாத்த பள்ளி. நான் கூட இங்க தான் படிச்சேன், இதெல்லாம் கூட இப்ப வேண்டாம்.

நேரா நடந்தா ஆட்டோமேட்டிக் சிக்னல், மதுரைக்கு வந்த முதல் டிராபிக் சிக்னல், ஸ்கூலுக்கு வரப்ப போரப்ப 5 நிமிஷம் நின்னு சிக்னல வேடிக்கை பாப்போம். யாராவது அந்த பக்கம் வர ஆசிரியர் தலைல தட்டி ஸ்கூலுக்கு அனுப்புவார்கள்.

அதுவும் வேண்டாம் இப்ப. அப்படியே நேரா நடக்கலாம், இடது பக்கமாவே. ஆ… இப்ப வர சின்ன சந்து பேரு கமலத் தோப்பு தெரு. உள்ளே போலாம். நுழைந்தவுடனேயே வலது பக்கம் குப்பைத் தொட்டி, பெருசா வழிய வழிய குப்பை அதுல. பேர்ல தான் தெரு, நாலு பேர் கைகோத்துட்டு போனா பின்னால வரவங்க தாண்டி போக முடியாது, அவ்வளவு விஸ்தாரமான சந்து (சாரி தெரு)

ஒரு காலத்தில் நான் ஸ்கூல் படிக்கிறப்ப அது ஒரு அக்ரஹாரம், பூரா பிராமின்ஸ் தான். ஒண்ணு ரெண்டு செட்டியாரு, நாடார். எல்லாம் ஓட்டு வீடு, நடு நடுவில மச்சு வீடு. மச்சு வீடுன்னா கீழ் தளம் மேல ஓர் தளம் அவ்வளவு தான். 

அதெல்லாம் 70களில். இப்ப ஓட்டு வீடு ஒண்ணு ரெண்டு தான், மத்ததெல்லாம் புதுப்பொண்டாட்டி கணக்கா கலர் கலரா மாடிக் கட்டிடம். பழைய பிடிவாதக்கார பிராமின்ஸ் தான் ஓட்டு வீட்டோட இன்னும் இழுத்தடிக்கிறாங்க. 

15 லட்சம் பெறாத அந்த ஓட்டு வீடுகளுக்கு 50 லட்சம் வரை விலை பேசும் நகைக்கடை செட்டியார்களுக்கும், பல் பொருள் அங்காடி நாடார்களுக்கும் பழைய பிராமண பெருசுகள் மசியவில்லை.

அந்த மாதிரி ஒரு பிராமணரின் வாசல்புற அறையும், வீட்டு கடைசியில் கிணத்துக்கு முன்னால ஒரு சமையல் அறையும் தான் எங்க வாசஸ்தலம். நானும் அம்மாவும் தானே, எதேஷ்டம். இந்த எங்க வீடு ரெண்டு அதி நவீன பங்களாவுக்கு நடுவுல, லண்டனுக்கும் பாரிஸுக்கும் நடுவுல கொட்டாம்பட்டி மாதிரி.

அன்னிக்கு காத்தால எழுந்து அம்மா அடுக்களை. நான் கிணத்தடிக்கு போயி பல் தேச்சுட்டு, காபிக்காக உள்ளே போனேன். எப்பவும் போல முத காபி கும்மோணம். வீடே மணக்கும். அடுத்தடுத்து காபி கேட்டா, கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையா, நாயர் கடை காபியாகி, ரயில் பெட்டி காபியா ஆயிடும். அம்மாவும் பாவம், அவர் சொல்ப பென்ஷன்ல குடும்பத்தை ஓட்டணும், நடு நடுவே எனக்கு வேற கப்பம் கட்டணும்.

அம்மா எப்பவும் போல ஆரம்பிச்சா…

“வயசு ஏறிண்டே போறது, ஒரு பொறுப்பு வேணாம்? நல்ல உத்யோகம், நல்ல சேர்மானம், நல்ல பழக்கம் இல்லேனா யார் பொண்ணு குடுப்பா. இப்பவே அண்ணா இல்லையானு கேட்ட குழந்தேள் எல்லாம் அங்கிள் இல்லையானு கேக்கறா. தாத்தானு சொல்றதுக்கு முன்னால ஒரு நிலைக்கு வர வழியப் பாரு”

நான் என்னவோ வேணும்னு பண்ற மாதிரி அம்மா சொல்லிண்டே போறா. தினப்படி கச்சேரி தான், ஆனாலும் குத்தும். முன்னறைக்கு வந்து ஜீன்சுக்குள்ள நுழைஞ்சேன், கைல கிடச்ச சட்டையை மாட்னேன். பாண்ட் பாக்கெட்ட தட்டிப் பாத்துண்டேன், பர்ஸ் இருக்கு. 

வீட்ட விட்டு வெளிய வந்து வலது பக்கம் திரும்பினா வெளி வீதி, இடது பக்கம் திரும்பினா தமிழ்ச்சங்கம் ரோடு.

இடது பக்கம் தான் கால் வழக்கமா திரும்பும். 30 இல்ல 40 அடி தான் தமிழ்ச்சங்கம் ரோடு, திரும்ப ஒரு லெப்டு.  கொஞ்சம் நடந்தா, பெல் புட் கோர்ட். வாசல்ல ஜூஸ இத்யாதியோட ஒரு குழப்ப கடை. 

நமக்கு சிகரெட் கிடைக்கும், போய் நின்னாலே கடைப்பையன் Wills Filter pocket மூடி மட்டும் லேசா திறந்து நீட்டுவான். ரெண்டு சிகரெட் எடுப்பேன், ஒண்ணு பாக்கெட்ல ஒண்ணு உதட்டு நுனில சொகுசா உக்காரும். 

காசு கொடுத்துட்டு, சைடுல ஒரு கெட்டி நார்க் கயிறு நுனில நெருப்பு கோபத்தோட தொங்கும், அதை இடது கைல எடுத்து, லேசா சாம்பல சுண்டி உதுத்துட்டு சிகரட்டை பத்த வச்சு முதல்ல லேசா ஒரு இழுப்பு, காலை டென்ஷன் கொஞ்சம் கரையும். 

இரண்டாவது இழுப்பு கொஞ்சம் ராஜபோகம், தலைக்குள்ள பரவி தடவிக் கொடுக்கும். 

எதுத்தாப்புல திலகர் திடல், தம் இழுத்திட்டே ரோடு கிராஸ் பண்ணி புகழ் வாய்ந்த திடல் வாசல்ல நின்னு பாத்தேன். இது வியாழன் ஞாயிறுகளில் சந்தையா மாறும். திடல்னா இப்படி இருக்கணும், மையப்படுத்தி ஒரு நிரந்தர மேடை, அதுல நின்னு பேசாத தலைவர்கள் இல்லை.

நானே என் அரை டவுசர் வயசுல அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், காமராஜர், இந்திரா காந்தி, சிவாஜி கணேசன், எம.ஜி.ஆர், இன்னும் பலரை பாத்திருக்கேன். 

சிகரெட் கைல சுட்டது, உஸ்னு உதறிக் கொண்டேன்.

பழசெல்லாம் ஞாபகம் வருது. ஸ்கூல் லைஃப் விடுங்க, அது உங்களுக்கு பிடிக்காது. அக்கா கல்யாணம் பண்ணி போயிட்டா. அப்ப நான் அமெரிக்கன் காலேஜ்ல பி.எஸ்.சி முதல் வருஷம், 19 வயசு. 

அப்பல்லாம் நான் அம்மா பேச்சு கேக்கற நல்ல பையன் தான். கார்த்தால அம்மா குடுக்கற இட்லியோ, உப்புமாவோ, தோசையோ சாப்பிட்டு விட்டு, தயிர் சாதம் ஊறுகாய் எவர் சில்வர் டப்பால எடுத்துட்டு சைக்கிள்ல காலேஜ் போவேன்.

சிம்மக்கல் யானைக்கல் திரும்பி, சின்ன பாலம் (வைகை ஆத்துக்கு குறுக்கே) தாண்டினா மீனாட்சி காலேஜ் (கேர்ல்ஸ் மட்டும்). இன்னும் ஒரு 5 நிமிஷம் சைக்ளிங், நம்ம காலேஜ் வந்துடும். 

முத வருஷம் ரெகுலரா இதே அட்டவணை. காலைல 9 மணிக்கு போய்ட்டு, மாலை 4 மணிக்கு வீடு. 12th வரை தெருவில விளையாடின கபடி, பேட்மிடன், கிரிக்கட் எல்லாம் இப்ப போச்சு. முதல் வருஷம் நல்ல மார்க்கோட தேறினேன் 

2வது வருஷம் ஆரம்பம், ஆரம்பமே அசத்தல். முத நாள் சைக்கிள நல்லா துடைச்சு, கொஞ்சம் கிராப்பை தூக்கி வாரி, லேசா பவுடர் அடிச்சு, முழுக்கை சட்டை கொஞ்சம் முழங்கை வரை பட்டையா மடிச்சு விட்டு, ஸ்டைலான துவக்கம்

போன தரம் அக்காவை பாக்க மெட்டராஸ் போனப்ப அத்தான் ஒரு ரேபான் (டூப்ளிகேட்னு நினைக்கிறேன்) கூலர்ஸ் பர்மா பஜார்ல வாங்கிக் கொடுத்தார். அதையும் ஸ்டைலா மாட்டிட்டு வாசல்ல வந்து சைக்கிள் சீட்ல உக்காந்தப்பறம் உள்ளே பாத்து குரல் கொடுத்தேன்

“அம்மா காலேஜ் போயிட்டு வரேன்” அம்மாவுக்கு கேட்டிருக்குமா சந்தேகம் தான். 

ஹூக்கும் கனைப்பு சத்தம். திரும்பி பாத்தேன். நம்ம வீட்டுக்கு சரி எதிர்ல கருப்பு தாவணி, வெள்ளை பாவடை சட்டையோட ஒரு அதிரூப சுந்தரி.

நான் பார்ப்பது தெரிந்து, ஒரு உதட்டு சுழிப்போட தலையை தாழ்த்தி கண் மட்டும் என் பக்கம். 

எங்க பார்த்தோம்? சட்னு பொரி தட்டியது. ஐயோ நாராயணன் தங்கையா இது, இத்தனை நாள் ஏன் கவனத்தல பார்வைல வரல்ல? சைக்கிள் சீட்ல உக்காந்த படி யோசிக்கிறன். மாலு தானே? 

யோசிக்கறப்பவே, “மூர்த்தி இப்ப 2 வது வருஷம் டிகிரியா? பாக்க கூட பயப்படறே?” மாலு தான். என்ன தைரியமா பேசறா. 

நான் மெதுவா நடுங்கற குரல்ல, “மாலு தானே? இத்தனை நாள் எங்கே போயிருந்தே?”

“ம்… நாங்க ஒரு மாசமா இங்க தான் இருக்கோம். இனிமேலயும் இங்க தான். காலேஜுக்கு போ, வாயை சைடுல துடச்சுக்கோ”னு சொல்லிட்டு சிரிச்சிட்டே உள்ள ஓடிட்டா. 

சரியான துடுக்கு, நான் ஒரு மயக்கத்துலய காலேஜ் போனேன். எப்படி போனேன் என்ன நடந்தது காலேஜ்ல, எப்படி திரும்பி வந்தேன், ஒண்ணும் தெரியாது. 

ஒரு பெண்ணோட (அம்மா, அக்கா தவிர) பேசினது இது தான் முதல் தடவை, அதுல இவ்வளவு கிறக்கமா?

இப்ப நாங்க இருக்கிற வீட்டப் பத்தி இன்னும் விவரமா சொல்லியாகணும். வீடு அகலத்தில பாத்தா ஒரு 25 அடி இருக்கும். உள்ளே கிணத்தடி வரைக்கும் படு நீளம். வாசக்கதவு திறந்தவுடனே, நேராப் கொல்லை பக்கம் கிணறு வரை போக நல்ல அகலமான நடை. நழைஞ்சவுடனே வலது பக்கம் வாசலை ஒட்டி திண்ணை, 4 அடி அகலத்துக்கு, வெளி சுவரை ஒட்டி, அதுக்கு பூரா கம்பி அடைப்பு. 

திண்ணைல வாசலை பாத்து கம்பியை பிடிச்சிண்டு உக்காந்தா தெரு வேடிக்கை பூரா பாக்கலாம். அடுத்து அடுத்து அறைகள் வலது பக்கம் தான். முதல் அறை நாங்கள் வாடகைக்கு இருப்பது, அடுத்து ஒரு பெரிய அறை ஹவுஸ் ஓனர்து.

அப்புறம் ஒரு பெரிய ஹால், அதுவும் வீட்டுக்காரர்கள் உபயோகத்துக்கு, அதை ஒட்டி ஒரு விசால சமையலறை, அவர்களுக்கு தான். அதுக்கும் பின்னால் எங்க சமையலறை. கிணத்தை ஒட்டி பாத்ரூம், ஒரு முருங்கை மரம், ஒரு வேப்ப மரம், சின்ன சின்ன செடி கொடிகள்.

ஹவுஸ் ஓனர் சங்கரசுப்பு ஐயர், ரிடயர்டு போஸ்ட் மாஸ்டர். மாமி மடிசார் அகிலாண்டம் என்கிற அகிலா மாமி, ஒரே பையன் சீமாச்சுன்கிற சீனிவாசன் யூ.எஸ்ல இருக்கான். 

அங்கேயே வெள்ளைக்காரிய கல்யாணம் பண்ணிண்டு செட்டிலாயிட்டான். அப்பப்ப அம்மா பேர்ல பணம் அனுப்புவான். அம்மா கூட மட்டும் ஃபோன்ல பேசுவான், அது அவா குடும்ப விஷயம் நமக்கென்ன.

 இப்ப ஓரளவு இந்த வீட்டோட அனுமானம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். முன்னால இருக்கற அந்த ஒரு ரூம் தான் ஸ்டடி ரூம், அம்மாவோட பெட் ரூம் எல்லாம். முன்னால அப்பா இருக்கச்சே அப்பா, அக்கா, அம்மா, நான். கொஞ்ச நாள் எல்லாருக்கும் பெட் ரூம் அது தான்.

அப்புறம் அக்காவும் அம்மாவும் பெரிய பவானி ஜமுக்காளம் விரிச்சு படுப்பாங்க. அதோட, ரெண்டு மூணு சப்பிப் போன தலகாணி. இதெல்லாம் தான் எங்க சயன சகாயங்கள். 

மதுரைல எப்பவும் போத்திக்கற அளவு குளிர் இல்ல, எப்பவாவது அப்படி தப்பித் தவறி குளிர்ர மாதிரி இருந்தா, பழைய 8 முழ வேஷ்டி, பழைய புடவை தான் போர்வை. 

எட்டு வயசுக்கு மேலே என்னோட சயன அறை எப்பவும் அந்த ஒட்டுத் திண்ணை தான். அந்த திண்ணை என்னோட வாழ்க்கைல இப்ப வரைக்கும் ஒரு முக்கிய அங்கம். எப்பவும் படிக்க திண்ணை, அக்கா கூட செஸ் விளையாட திண்ணை, ரிகார்டு நோட் எழுத, படம் வரைய, கிராப்ட் வேலை செய்ய, எல்லாம் என் நண்பன் இந்த திண்ணை தான். 

நீங்க நம்ப மாட்டீங்க, நான் திண்ணையோட பேசுவேன். என் ரகசியம் எல்லாம் தெரிந்த ஆப்த நண்பன் அவன். கிழக்கு சீமையிலே படத்தில ஒரு பாட்டு கேட்டிருப்பீங்க, “ஆத்தங்கரை மரமே அரச மர இலையேனு” 

சூப்பரான பாட்டு அது. அதுல கடைசில வரும் ஒரு வரி, அனுபவிச்சவங்க மட்டும் தான் இப்படி ரசிச்சு எழுத முடியும். “ உன்னையும் என்னையும் தூக்கி வளத்த திண்ணையும் சுகம் தானா” 

இப்ப இன்னொரு தரம் அந்த பாட்டை கேட்டுப் பாருங்க, எனக்கும் இந்த திண்ணைக்கும் உள்ள பந்தம் புரியும்.

எங்கே இருந்து எங்கேயோ போயிட்டேன் இல்ல? தெரியுது. அடுத்தவங்க காதல் வம்புல அவ்வளவு ஆர்வம் இல்ல? பரவாயில்லை நானா தானே ஆரம்பிச்சேன், உங்களை குத்தம் சொல்லலாமா

எதுல விட்டேன், அன்னிக்கு காலேஜ்ல ஒண்ணும் ஓடல. புரொபஸர் கருப்பு தாவணி வெள்ளை பாவடையோட பாடம் எடுக்கிறார். பசங்கள்லாம் சிரிக்கிறாங்க, சட்னு இந்த உலகத்துக்கு வந்தேன்.

புரொபஸர் கோபத்தோட கேட்டார், “ஏன்பா ஹைட்ரோ கார்பன கிளாசிபை பண்ணச் சொன்னா கருப்பு பாவடை வெள்ளை தாவணியா? கெட் அவுட் ஆஃப் மை கிளாஸ்”

பசங்க கோரஸா சிரிப்பு மீண்டும். புத்தகத்தை அள்ளிட்டு கிளாசுக்கு வெளிய வந்தேன். அடுத்த கிளாசுக்கு போக மனசில்லை. சைக்கிள் ஸ்டாண்ட்ல இருந்து சைக்கிள தள்ளிட்டு வந்தேன். அஷோக் பவன்ல காபி சாப்பிட ஆசை வந்தது.

அஷோக் பவன்ல எப்பவும் காலேஜ் பசங்க கூட்டம் தான், அதுவும் மெடிகல் பசங்க ஜோடி ஜோடியா வெள்ளை கோட்டோட. இவங்களயெல்லாம் எத்தனையோ தடவை பாக்கறேன், ஆனா இன்னிக்கு கோபம் கோபமா வந்தது. 

காபி சாப்படல்ல, சைக்கிள்ல ஏறி வீடு வந்து சேந்தேன்.

அம்மா ஆபீஸ்ல இருந்து வந்திருக்க மாட்டா இன்னும். 6 மணிக்கு மேல தான் வருவா. என்ன பண்ணலாம். திண்ணைல உக்காந்து வேடிக்கை பாத்தேன். எதுத்தாப்ல தான் நாராயணன் வீடு. 

அவன் என்னை விட 2 வருஷம் பெரியவன். எங்கத் தெரு கிரிக்கட் டீம் கேப்டன், நல்ல உயரமும் உடல் கட்டோட இருப்பான். அவனுக்கு நாங்க எல்லாரும் மறுபேச்சு இல்லாம கட்டுப்படுவோம். 

இப்ப டிகிரி முடிச்சிட்டு TVSல வேலை பாக்கிறான். இப்பெல்லாம் பாத்தா ஒரு ஸ்மைலோட சரி. அவனோட வீட்டுலயும் திண்ணை இருக்கு, ஆனா நம்மது மாதிரி இல்லை. கொஞ்சம் மொட்டையா இருக்கும், கம்பி பாதுகாப்பு கிடையாது. ராத்திரில யார் வேணா படுத்துப்பா, நாராயணனோட அப்பா கார்த்தாலே வந்து துரத்தினப்பறம் சாவகாசமா எந்திருந்து போவா. 

நாராயணன் அப்பாவை பாத்தா, சொல்ல முடியாது, குட்டை கட்டையா கொஞ்சம் கருப்பா. அவனோட அம்மா சராசரியான ஆரோக்ய மாமி, சிரிச்ச முகம். மாலு சிறுசா இருக்கறப்ப, அம்மா இடுப்பில அழகான வாண்டு. நானும் அப்ப சின்ன பையன் தான், ஆனா கூட குழந்தைய தூக்கிப்பேன்

கழுத்தை இறுக்க கையால கட்டிப்பா, காலாலே இடுப்பை இறுக்குவா. கீழ இறங்குன்னா தகறாரு பண்ணுவா, கன்னத்தில பச்சுனு முத்தம் கொடுப்பா. அதுக்கப்பறம் குழந்தைய எப்படி கீழ விட மனசு வரும். 

அந்த மாலுவா இப்படி இன்னிக்கு என்னை பைத்தியமா அடிச்சுது. மூணு வருஷம் முன்னால மெட்ராஸ்க்கு அம்மாவை பெத்த பாட்டி வீட்டுக்கு போனவ தான். இப்ப தான் திரும்ப வந்துட்டா போல இருக்கு. இங்கே என்ன பண்ணுவா? 11thல தான் இருக்கணும்

இப்ப மறுபடி கனைப்பு சத்தம் கேட்டு துள்ளி எழுந்தேன், மாலு தான். நான் கதவை திறந்து நிலை மேல கைய வச்சிட்டு நின்னேன், அவ என்னை பாக்காத மாதிரி அவ வீட்டு திண்ணை நடுவுல ஓடற படில நின்னு தெருவை ரெண்டு பக்கம் பாத்தா 

“ஏ மாலு… எந்த காலேஜ்ல சேரப் போற”னு நான் கேக்க 

தன்னோட கட்டை விரல மடக்கி தன் மார்ல வச்சு ‘என்னையா?’னு கேட்டா

“ஏய்… தெருவே காலி, நானும் நீயும் தான் எதிர் எதிரே, வேற யார கேப்பேன்”

“இல்ல… சார் பொண்ணுங்கன்னா பேச மாட்டார்னு கேள்விப்பட்டேன், அது தான் டவுட்டு”

“அது மத்தவங்க கூட, மாலு கூட இல்ல”

“ஏனாம்… நாங்க என்னவாம்?”

“நீ என்னோட, என்னோட, போடி தொண தொணன்னு…”

“சொல்லுய்யா பயந்தாங்குள்ளி, போடில்லாம் சொல்றே”

“அது வந்து… நீ என்னோட ஏஞ்சல்”

(தொடரும் – நான்கு வார குறுந்தொடர் – திங்கள் தோறும் வெளியிடப்படும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

9 Comments

  1. சுஸ்ரீயின் நினைக்க தெரிந்த மனமே கதை மிகவும் அருமை. நல்ல விறுவிறுப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்

  2. கதையின் நடை பிரமாதம்..வைகை ஆற்று படுகை அருகில் உள்ள காற்று போல சும்மா ஜிலுஜிலுவென இருக்கிறது

  3. இனிய காதல் கதையின் ஆரம்பம் அருமை .வாழ்த்துக்கள்👌💐அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்👍

  4. சுபஸ்ரீ அவர்களின் “நினைக்க தெரிந்த மனமே” குறு நாவல் முதல் பகுதி அட்டகாசமாகவும், விறு விறுப்பாகவும் செல்கிறது. கதையில் காட்சிகளின் வர்ணனைகளை கதாசிரியர் நம் கண் முன்னே நிறுத்துகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள். இரண்டாம் பகுதி படிக்க ஆவலை தூண்டுகிறது .

  5. சுபஸ்ரீ அவர்களின் “நினைக்க தெரிந்த மனமே” குறு நாவல் முதல் பகுதி அட்டகாசமாகவும், விறு விறுப்பாகவும் செல்கிறது. கதையில் காட்சிகளின் வர்ணனைகளை கதாசிரியர் நம் கண் முன்னே இ. அவருக்கு என்னுடைய பாராட்டுகள். இரண்டாம் பகுதி படிக்க ஆவலை தூண்டுகிறது .

  6. சுபஸ்ரீ அவர்களின் “நினைக்க தெரிந்த மனமே” முதல் பகுதி குறு நாவல் விறுவிறுப்பாக போகிறது. ஆசிரியரின் கற்பனை நடைகள் கண் முன்னே நிறுத்துகின்றன. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

நவம்பர் 2021 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் – ‘சஹானா’ இணைய இதழ்

உயர்ந்த எண்ணம் (சிறுவர் கதை) – ✍ தமிழ் அழகினி, திருப்பூர்