in

வீணைக்கு நான் கேரண்டி (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர், கோவை

வீணைக்கு நான் கேரண்டி (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காலை காப்பியை குடித்து முடித்த சந்துரு, ராக்கெட் போல பறந்து வந்து விழுந்த அன்றைய தினசரியில் முகத்தைப் புதைத்துக் கொண்டார். செய்திகளில் மூழ்கி இருந்தவர், தினமும் 7 மணிக்கு முன் திருப்பள்ளி எழுச்சி கொள்ளாத அவர் மனைவி திரிபுரசுந்தரி அன்று ஆறரை மணிக்கே எழுந்து வந்ததைப் பார்த்து ஆச்சர்யமானார்.

சற்று நேரத்தில், “என்னங்க கொஞ்சம் இங்க வரீங்களா” என்ற மனைவியின் அன்பான அழைப்பில் ஷாக் ஆகி

என்ன இது இன்னைக்கு ஒண்ணும் சரியில்லையே, இவ எதுக்கு அடி போடறான்னு தெரியலையே” என நினைத்தவாறு “வரேம்மா” என்றார்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக, “ஒரு அரை கப் காப்பி தரட்டுமா?” என்று மனைவி கேட்டதில்

‘கச்சேரி கன்ஃபார்ம்’ என நினைத்து வீட்டைச் சுற்றி தன் பார்வையை ஒரு சுழட்டு சுழட்டினார் சந்துரு.

புது வாஷிங் மிஷின், டபிள் டோர் ஃபிரிஜ் வாங்கி ஆறு மாசம்  தான் ஆகுது. ஓவன், கிளாஸ் டாப் ஸ்டவ், அட்வான்ஸ்டு இன்டெக்ஷ்ன் ஸ்டவ் என புதிது புதிதாக பொருட்கள் சமையலறையை நிறைந்திருந்தன.

ஹாலில் கார்னர் ஸோஃபா, 52 இன்சஸ் ஸ்மார்ட் டிவி என எல்லாம் நவீனமாயிருந்தது. 

சந்துரு திருதிரு என முழித்ததைப் பார்த்து, “என்னங்க  இப்படி பார்க்கறீங்க” என்றார் சுந்தரி சிரித்துக் கொண்டே.

“இல்லை நீயாவே காப்பி தரயா அதான்” என்று திகைத்தவாறே  கூறிய சந்துருவின் மனதில், ‘திரிபு ஒரு கிளாஸ் காப்பி தரயா?’ எனக் கேட்டால் “ஆமா மனசில பெரிய கமலஹாசன்னு நினைப்பு, திரிபு திரிபுன்னு என் பேரை ஏலம் விடறீங்க, காப்பியெல்லாம் நிறைய குடிக்க கூடாதுங்க’ என அட்வைஸ் வேறு.

‘இன்னைக்கு என்ன கிளம்பப் போகுதோ தெரியலையே, சந்துரு பர்ஸ் பத்திரம்’ என அவர் மனம் அலறியது. 

“ஏங்க நாம முந்தாநாள் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போன போது ஒரு லேடியை பார்த்தோமில்ல” என்று சுந்தரி ஆரம்பிக்கவும்

“யாரு எனக்கு நினைப்பில்லையே” என நழுவினார் சந்துரு.

 “அட அவங்க கூட என்னோட பேசினாங்களே” என்று சுந்தரி கூறினார்.

“ஓ, கொஞ்சம் ஒல்லியா உயரமா ஃபேரா ரெட் கலர் பூப்போட்ட ஸாரி கட்டியிருந்தாங்களே அவங்களையா சொல்ற” என்று ஒரு ஃப்ளோவில் கேட்ட சந்துருவை முறைத்தவாரே

“யாருன்னு நினைப்பில்லேனீங்க” என்று அதட்டினார் சுந்தரி.

“சரி சரி விஷயத்துக்கு வா” என்று பேச்சை மாற்றினார் சந்துரு.

சுந்தரியும் பேச்சை வளர்த்த விரும்பாமல், “அவங்க நம்ம ஏரியாவுக்கு குடி வந்து ஒரு மாசம் தான் ஆகுதாம், அந்த லேடி நல்லா வீணை வாசிப்பாங்களாம். அவங்க பேரே சித்ரவீணாவாம்” என்று ஆச்சரியமாக கூறினார்.

“இருக்கட்டுமே” என்ற சந்துருவிடம்

“அட அவங்க வீணை க்ளாஸ் நடத்தறாங்களாம், நிறையப் பேர் அவங்க க்ளாஸில் சேர்ந்து இருக்காங்களாம்” என்றார் சுந்தரி.

“அதுக்கு?” என கேள்வி எழுப்பிய சந்துருவிடம்

“நானும் என் ஃபிரண்ஸோட சேர்ந்து வீணை கத்துக்கலாம்ன்னு இருக்கேங்க” என்றார் சுந்தரி உறுதியாக.

அன்றைய மாற்றத்தின் காரணம் புரிந்ததில் கலவரமான சந்துரு, “திரிபு உனக்கு இதெல்லாம் செட் ஆகாதும்மா. அப்புறம் மாலா அப்படிச் சொன்னா, அம்மு இப்படி சொன்னா என்னைன்னு  நீ மூட் அவுட் ஆகிடுவ” சுந்தரியை தடுக்க முடியாது என தெரிந்தும் முயற்சித்தார். 

“அப்படியெல்லாம் நடக்க சான்ஸே இல்லைங்க, ஏன்னா நாங்க எல்லாருமே பிகினர்ஸ் தான்” என்றார் சுந்தரி முகத்தில் பெருமை பொங்க.

‘என்னது இது க்ளாஸில சேர்ந்துட்ட மாதிரியே பேசறாளே’ என நினைத்த சந்துரு, “க்ளாஸில சேர்ந்தாச்சா?” என்றார் வியப்புடன்.

“ம்… இன்னைக்குத் தான் ஃபர்ஸ்ட் டே, வாரத்தில இரண்டு நாள் க்ளாஸ், மாசம் ஜஸ்ட் 1500/-ரூபாய் தான் ஃபீஸ் வாங்கறாங்க” என்றார் சுந்தரி கேஷுவலாக. 

ஐம்பது வயசுல இதெல்லாம் இவளுக்கு தேவையா, பாட்டு க்ளாஸ், டிராயிங் க்ளாஸ் போன மாதிரி இது எவ்வளவு நாளோ’ என நினைத்த சந்துரு, ‘அய்யய்யோ, வீணை வாங்கறேன்னு கிளம்பினா 40000/-ரூபாய் ரெடி பண்ணிக்கணுமா’ என கலக்கமுற்றவர், எப்படி இவளை  தடுத்து நிறுத்துவது  என விழித்தார்.

“என்ன திருவிழாவில எதையோ தொலைச்ச மாதிரி முழிக்கிறீங்க?” என மிரட்டிய சுந்தரியிடம்

“திரிபு, நீ பேசாம பாட்டு க்ளாஸே போயேம்மா” என்றார் சந்துரு கெஞ்சும் குரலில். 

“ம்ஹும், அதுதான் வீட்டில பாட்டு பிராக்டீஸ் பண்ண முடியாமத்தானே, அந்த க்ளாஸை நிறுத்தினேன்” என்றவளிடம்

“ஆமா மா  அக்கம் பக்கம் எல்லாம் சண்டைக்கு வந்துட்டாங்க இல்ல” என்ற சந்துருவை எரிப்பது போல் பார்த்தார் சுந்தரி. 

வீணை க்ளாஸ் ஆரம்பித்த இரண்டு வாரங்களில் சுந்தரி, அவள் தோழிகள் ஐந்தாறு பேர் சித்ரவீணா வசித்த தெருவில் சில பெண்கள் என பதினைந்து பேருக்கு மேல் வீணை க்ளாஸில் சேர்ந்து விட்டனர்.

சுந்தரிக்கு வீட்டில் எந்த நேரமும் சித்ரவீணாவைப் பற்றிய பேச்சுத் தான்.

“அவங்க புடவை கட்டற நேர்த்தி, மென்மையா பேசற அழகு, வீட்டை சுத்தமா வைச்சுக்கறது எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா” என்ற சுந்தரி கடைசியில், “டொய்ங் டொய்ங்ன்னு  அவங்க வீணை வாசிக்கறது எவ்வளவு அழகாயிருக்கு தெரியுமா” என முடித்தார்.

‘கடவுளே, இந்த ஜென்மத்தில இவ வீணை கத்துக்க முடியாது, டொய்ங் டொய்ங்ன்னா’ என தலையில் அடித்து கொண்டார் சந்துரு. 

அன்று மாலை சுந்தரி ஏதோ திருமணத்திற்கு செல்வது போல் ரெடியாகி வந்தவர் சந்துருவிடம், “என்னங்க நம்ம காரில் ஆர்.எஸ்.புரம் மியூசிக் சென்டர் வரைக்கும் போயிட்டு வரேன்” என்றார் கார் சாவியை ஸ்டைலாக சுழற்றியபடி.

“நீயா கார் ஓட்டப் போற?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட சந்துரு சுந்தரியின் கையில் இருந்த சாவியை வெடுக்கென்று பறித்து, “சேஃப்டி ரொம்ப முக்கியம் நானே ஓட்டறேன்” என்றார்.

தான் கார் ஓட்டும் திறமை சுந்தரிக்கு தெரிந்ததால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன் தோழிகளுக்கு போன் செய்தார். 

மியூசிக் சென்டரில்  சுந்தரியும் அவள் தோழிகளும் செய்த அலப்பறையில் கடை வேலையாட்கள் மிரண்டனர். கடையில் இருந்த வீணைகளில் திருப்தி ஆகாத சித்ரவீணா, “எனக்கு தெரிஞ்சவர்கிட்ட உங்களுக்கு எல்லாம் வீணை செய்யச் சொல்லி வாங்கித் தரேன். என் வீணையை அவர்தான் டியூன் செய்து கொடுத்தார்” என்றாள் இயல்பாக.

கடையில் வீணை வாங்க வந்தவர்கள் கடைசியில் ஆளுக்கு இரண்டு மீட்டிகள் மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பினர்.

‘அப்பாடி, 40000/- தப்பிச்சது’ என்று நிம்மதியானார் சந்துரு.

அன்று வீணை க்ளாஸில் இருந்து திரும்பிய சுந்தரி, “என்னங்க வீணை முடியற ஸ்டேஜ்ல  இருக்குதாம்” என்றார் உற்சாகமாக.

சந்துருவோ, “வீணை க்ளாஸை முடிச்சுக்கிறீங்களா, வெரி குட்” என்றார் மகிழ்சியாக.

“ஐயோ எங்களுக்கு வீணை செய்ய சொல்லியிருந்தாங்க இல்ல, அவங்ககிட்ட இருந்து மெசேஜ் வந்ததுனு சித்ரவீணா சொன்னாங்க” என்ற சுந்தரியிடம்

“என்ன விலையாம்? ” என்று கடுப்புடன் கேட்டார் சந்துரு. 

“அவரு ஒரு வீணைக்கு  ஒரு லட்சம் வாங்குவாராம். ஆனா சித்ரவீணா சொன்னதால எங்க வீணைக்கு 75000/- போதுன்னுட்டாராம்” என்றார் சுந்தரி களிப்புடன்.

“அப்படியென்ன பொல்லாத வீணை, கடையில 40000/-தானே சொன்னாங்க” என எரிந்து விழுந்தார்  சந்துரு.

“நாம ஆர்டர் கொடுத்தாச்சு, இனிமேல்லாம் வாங்க மாட்டேன்னு சொல்ல முடியாது. நமக்கு அவங்க டெலிவரி செஞ்சதும் பணம் அனுப்பினா போதும்” என்றார் சுந்தரி கண்டிப்பாக. 

இரண்டு நாட்கள் கழித்து மார்க்கெட்டிலிருந்து திரும்பிய சந்துருவிடம், “என்னங்க நான் வீணைக்கு 75000/-பணம் அனுப்பிட்டேன்” என்றார் சுந்தரி மகிழ்வுடன்.

“ஏன், அவங்க தான் டெலிவரி செஞ்சதும் பணம் அனுப்பினா போதும்ன்னாங்களே, வீணை வந்துடுச்சா?” என்று கேட்டார் சந்துரு.

“டெலிவரி செய்துட்டோம்ன்னு எனக்கே மெசேஜ் வந்துடுச்சு” என்றார் சுந்தரி ஆவலாக.

“உன் ஃபிரண்ட்ஸெல்லாம் பணம் அனுப்பிட்டாங்களா?” என்று சந்துரு கேட்க

“ஓ, எல்லாருமே அனுப்பியாச்சு. இன்னும் டூ டேஸ்ல வீணை வந்துடும். அப்புறம்  எங்க வீணையிலேயே வாசிக்கலாம்” என்றார் சுந்தரி ஆர்வமுடன்.

“எப்படி டொய்ங் டொய்ங்ன்னா?” என்று சந்துரு கேட்க

“ம்ஹும், லேடீஸ் ஏதாவது புதுசா கத்துக்கிட்டா உங்களுக்கெல்லாம் புடிக்காதே” என்று தன் முகவாயை தோளில் இடித்துக் கொண்டார் சுந்தரி. 

அன்று மாலை ரிலாக்ஸாக அமர்ந்திருந்த சுந்தரியிடம், “என்ன இந்த வாரம் வீணை க்ளாஸ் இல்லையா?” என்று கேட்டார் சந்துரு.

“சித்ரவீணா டெல்லி போயிருக்காங்க, அதான் இந்த வாரம் க்ளாஸ் கிடையாது” என்றார் சுந்தரி சலிப்புடன்.

அப்போது அவர் வீட்டு வாசலின் முன் ஒரு வேன் வந்து நின்றதும், ‘கொரியர் சர்வீஸா?’ என்று பார்க்க வெளியே வந்தார் சந்துரு.

வேனில் இருந்து இருவர் பெரிய மரப்பெட்டியை இறக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “திரிபு வீணை வந்தாச்சு போல” என்று வீட்டினுள் குரல் கொடுத்தார் சந்துரு.

“ஸார், இதில ஒரு ஸைன் போடுங்க” என ஒரு பேப்பரை சந்துருவிடம் நீட்டினார் வேன் டிரைவர்.

பேப்பரை பார்த்தவர் “என்ன டெல்லின்னு போட்டிருக்கு, தஞ்சாவூர்ன்னு சொன்னாளே திரிபு” சந்தேகம் எழ மனைவியிடம் கேட்க சந்துரு உள்ளே வந்தார். 

அங்கு சுந்தரி பயபக்தியுடன், பெட்டியை பூஜை அறையின் முன் இறக்கி வைக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். வந்த வேலை ஆட்களுக்கு 500/- ரூபாய் டிப்ஸ் கொடுத்து அனுப்பினார் சுந்தரி.

“ஏங்க பொட்டியே இவ்வளவு அழகாயிருக்கே, வீணை எவ்வளவு அழகாயிருக்கும்” என்று கூறியபடி பெட்டியைச் சுற்றியிருந்த கம் டேப்பை பிரித்தார் சுந்தரி.

சுந்தரியிடம் சந்தேகம் கேட்க வந்தவர், “திற திற எனக்கே வீணையை பார்க்க ஆசையா இருக்கு” என்றார் சந்துரு நிஜமான ஆர்வத்துடன். 

சிறு குழந்தையைப் போல் “ஒன் டூ த்ரி” என்று கூறியபடி அந்த மரப்பெட்டியைத் திறந்த சுந்தரி பேயறைந்தாற் போல் அதிர்ச்சியானார்.

மனைவியின் பேரதிர்ச்சியான முகத்தைப் பார்த்த சந்துரு பெட்டியினுள் எட்டிப் பார்த்தார். உள்ளே அழகாக ஐந்தாறு செங்கல்கள் அடுக்கி அதன் மேல் சிறிய பொம்மை வீணை வைக்கப்பட்டிருந்தது.

படபடப்புடன்  சுந்தரி சித்ரவீணாவின் மொபைலுக்கு கால் செய்தார். “நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை” அடுத்து ஆங்கிலத்தில் சொல்வதற்குள் காலை கட் செய்தார் சுந்தரி.

“அடப்பாவிகளா, இதென்ன நூதனமான கொள்ளையா இருக்கே”  எனக் கூறி தலையில் கை வைத்துக் கொண்டார் சந்துரு. 

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கோதுமை மாவு அதிரசம் (எளிமையான செய்முறை) – 👩‍🍳 கமலா நாகராஜன், சென்னை

    கோதுமை அல்வா (எளிமையான செய்முறை) – 👩‍🍳 கமலா நாகராஜன், சென்னை