in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13    பகுதி 14     பகுதி 15

கௌசிக் யாரோ ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்திருந்தான். காணச் சகிக்கவில்லை இவர்களுக்கு. இவர்களைப் பார்த்தவுடன் இருவரும் திடுக்கிட்டு எழுந்து விலகி நின்றனர்.

“என்ன வேவு பார்க்க வந்தீர்களா?”  என்றான் கௌசிக்.

“இல்லை, உண்மை தெரிந்து கொள்ள வந்தோம். வாங்க மாமா போகலாம்” என்று விக்னேஷின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் சியாமளா.

“சியாமளா, விக்னேஷ்” என்று பின்னாலிருந்து வத்சலாவின் குரல் கேட்டது.

இவர்கள் திரும்பிப் பார்க்க, உள்ளே பார்க்க முடியாதபடி நிலைப்படியை அடைத்து நின்று கொண்டிருந்தான் கௌசிக். ஒன்றும் செய்ய முடியாமல், சியாமளாவோடு வீடு திரும்பினான் விக்னேஷ். கோபத்தையெல்லாம் மனதில் தேக்கிக் கொண்டு இருந்தான். அம்மாவிடம் ஒன்றும் சொல்லவில்லை.

“வத்சலா, மாப்பிள்ளை, குழந்தை எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?” என அம்மா கேட்க, பதில் செல்லத் தெரியாமல் பொதுவாகத் தலையை மட்டும் ஆட்டி விட்டுச் சென்றான் விக்னேஷ். சியாமளா ஏதோ அவசர வேலை இருப்பது போல் சமையலறை உள்ளே சென்று விட்டாள்.

‘இந்த கௌசிக் ஏதோ குளறுபடி பண்ணியிருக்கிறான், அதனால் தான் இருவரும் பதில் சொல்லாமல் நழுவுகிறார்கள்‘ என்று நினைத்துக் கொண்டாள் அம்மா.

நண்பர்கள் எல்லோரும் விருந்திற்கு வந்தார்கள். மாதவன், நிர்மலா இருவருக்கும் தர்ஷணாவிடம் வாயடிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். விஷ்ணு அமைதியாக உட்கார்ந்து இவர்களுடன் வேடிக்கை பார்ப்பான்.

சரவணனும், முருகேசனும் கௌசிக்கைப் பற்றிச் சொல்லும் விஷயங்கள் நல்லவையாக இல்லை. அடுத்த சில நாட்களில், கௌசிக்கை போலீஸ் கைது செய்ததாக எல்லாச் செய்தித் தாள்களிலும், அவன் படத்துடன் செய்திகள் வெளிவந்தன. கள்ளநோட்டுகளை நல்லநோட்டுகளாக மாற்றும் போது பிடிபட்ட அவனுடைய ஆட்கள் கௌசிக்கைக் காட்டிக் கொடுத்ததால் வந்தது ஆபத்து. கௌசிக்கன் வீட்டைச் சோதனை செய்தபோது கட்டுக்கட்டாய் கள்ளநோட்டுகள் பிடிபட்டன என போட்டோவுடன் செய்தி வெளியாகியிருந்தது. அதைப் படித்ததும், விக்னேஷின் வீட்டிற்கு ஓடி வந்தான் முருகேசன்.

“டேய் விக்னேஷ், அந்த கௌசிக் உன் கல்யாணத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் மொய் எழுதினான் அல்லவா?  அந்தப் பணம் எங்கே? செலவு செய்து விட்டாயா?” என்று கேட்டான். ஓடி வந்ததில் அவனுக்கு மூச்சிறைத்தது .

“இல்லை, எல்லா மொய்ப்பணமும் அவரவர்கள் கொடுத்த கவரிலேயே இருக்கிறது, ஏன்?” என்றான் விக்னேஷ்.

“வத்சலா கொடுத்த கவரை மட்டும் எடுத்து வாயேன்” என முருகேசன் கூற

“ஏன், அது கூட கள்ள ரூபாய் நோட்டாக இருக்கும் என்று நம்புகிறாயா?” என்றாள் அத்தை வருத்தத்துடன்.

“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நாம் அந்த வலையில் சிக்கக் கூடாது, ஜாக்கிரதையாக இருப்பது நல்லது இல்லையா? நீ அதை எடுத்து வாடா” என்றான் முருகேசன். சியாமளா திகைத்து நின்றாள்.

விஷ்ணுவும் தர்ஷணாவும் கூட விஷயம் தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். விக்னேஷ் அந்தக் கவரை எடுத்து வந்தான். அதற்குள் சரவணனும் அங்கே வந்து விட்டான். முருகேசன் அந்தக் கவரைப பிரித்தான், ஆனால் அந்த நோட்டுக்கள் அவர்களுக்கு நல்ல நோட்டுக்களாகவே தெரிந்தன.

“மாதவன் சாருக்கு வங்கியில் தெரிந்த  நண்பர்கள் இருப்பார்கள் இல்லையா? அவர் மூலமாக செக் செய்யலாம்” என்றான் விக்னேஷ்.

மூவரும் அந்தக் கவரை எடுத்துக் கொண்டு மாதவன் வீட்டிற்கு சென்றார்கள். அவரிடம் விஷயத்தைச் சொன்னவுடன், இவர்களையும் அழைத்துக் கொண்டு, தான் கணக்கு வைத்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு அழைத்துச் சென்றார் மாதவன். அந்த வங்கி அதிகாரிகள், அந்த நோட்டுக்களில் உள்ள சில தவறுகளைச் சுட்டிக் காட்டி கள்ள நோட்டுக்களே என்று உறுதியாகக்  கூறினர்.

‘நல்லவேளைத் தப்பித்தோம்’ என்ற உணர்வுடன் பெருமூச்செறிந்தான் விக்னேஷ்.

விசாரணைக்காக போலீஸ் வத்சலாவை அந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றார்கள். மாதவன் தான் முன்னின்று அவளை விக்னேஷ் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்.

“எல்லாவிதமான கெட்டப் பழக்கங்களும் அவனிடம் குடி கொண்டிருக்கின்றன. அவன் ரொம்ப அழகாக இருக்கிறான் என்ற ஒரு கர்வமே அவன் அழிவுக்குக் காரணம். நான் இனிமேல் அவனுடன் வாழ முடியாது” என்றாள் வத்சலா.

வத்சலாவைத் தன் மருத்துவமனையிலேயே நிர்வாகப் பிரிவில் ஒரு பணியில் சேர்த்து விட்டாள் நிர்மலா. தபால் கல்வி மூலம் ஒரு பட்டம் வாங்கினால் நல்லதென்று ஒரு கோர்ஸிலும் சேர்த்து விட்டாள்.

வத்சலாவின் குழந்தை நேஹா, அந்த வீட்டின் செல்லமாயிற்று. பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பில் சேரத்து விட்டார்கள். நேஹா, பாட்டியின் செல்லமாகவும், விக்னேஷிற்கும் சியாமளாவிற்கும் உயிராகவும், தர்ஷணா விஷ்ணுவிற்கு விளையாட்டு பொம்மையுமாகி விட்டாள். வத்சலா வேலைக்குப் போய் விட்டால் கூடத் தேடுவதில்லை. பெரிய மனுஷி போல் அவள் ஹோம்வொர்க் எல்லாம் அவளே பார்த்துக் கொள்வாள். ரோஷிணியும் அழாமல் விளையாட்டுக் காட்டுவாள்.

ஒரு நாள் விக்னேஷைத் தேடி மாதவன் வீட்டிற்குச் சென்றாள் சியாமளா. மாதவனோடு ஒரு கேஸ் விஷயமாக பலமான விவாத்த்தில் இருந்தான் விக்னேஷ். ஒரு கேஸ் என்று எடுத்துக் கொண்டால், தாங்கள் எந்தெந்த வழிகளில் தோற்க முடியும் என்று இருவரும் தீவிரமாக விவாதிப்பார்கள். நெகட்டிவ் பாயினட்ஸ்களை பாஸிட்டிவாக மாற்ற வேண்டும் என்று பல வழிமுறைகளை சொல்லித் தருவார் மாதவன்.

உள்ளேயிருந்து வந்த நிர்மலா, “விக்னேஷைத் தேடி மட்டும் தான் எங்கள் வீட்டிற்கு வருவீர்களா சியாமளா?” என்று சண்டை பிடித்து வக்கீலின் ஆபீஸ் அறையிலிருந்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் .

மாலை டிபனுக்காக சமையல்காரம்மா செய்து வைத்திருந்த வடையும் டீயும் கொடுத்த பின், “இன்னும் வீட்டைச் சுற்றிப் பார்க்கவில்லையே சியாமளா?” என்ற நிர்மலா, சாப்பிட்ட பிறகு சியாமளாவை வீட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றாள். அங்கே ஒரு அறையில் ஒரு சிறிய பெண்ணின் போட்டோ மாட்டப் பட்டிருந்தது. மிக அழகான போட்டோ.

“இந்தப் பெண் யார் நிர்மலா? இவ்வளவு அழகாக இருக்கிறாளே?” என சியாமளா கேட்க

“என் பெண் தான்” என்றாள் நிர்மலா.

“உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள என்றே எனக்குத் தெரியாது நிர்மலா. இப்போது உங்கள் பெண் உங்களுடன் இல்லையா? எங்கே இருக்கிறாள்? என்ன பெயர்? என்ன வயது?”

“அது ஒரு பெரிய சோகக்கதை  சியாமளா, கதை கேட்க பொறுமை இருக்கிறதா?”

“உங்களுக்குத் தயக்கம் இல்லையென்றால் எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை, சொல்லுங்கள்”

“உங்களிடம் ஷேர் பண்ணுவதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை. நாங்கள் கோயமுத்தூர் பக்கத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள், என் தாய் மாமாவிற்கு தான் என்னை திருமணம் செய்து கொடுத்தார்கள்”. சியாமளா திடுக்கிட்டுப் பார்த்தாள்.

”ஆம் சியாமளா, மாதவன் என் இரண்டாவது கணவர். நீ கதையைக் கேள், டென்ஷன் ஆகாதே. என் மாமா நல்லவர் தான், ஆனால் படிக்கவில்லை. முரட்டுத்தனமும் கோபமும் தான் அவருடைய குணங்கள். நான டாக்டருக்குப் படித்திருந்ததால் அவருக்குக் கொஞ்சம் இன்பிரீயரிட்டி காம்ப்ளெக்ஸ். இந்த நிலையில் தான் என் பெண் நித்யா பிறந்தாள். அவளுக்கு ஒரு வயது இருக்கும் போது என்னைக் கோயம்பத்தூர் மருத்துவமனைக்கு மாற்றி விட்டார்கள்.

அந்த மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவத்தில் இறந்து விட்டாள், ஆனால் என் தவறு இல்லை. போதிய ஆரோக்யம் இல்லை, சத்தான உணவிற்கும் வழியில்லை, வயலில் வேலை செய்யும் பெண். அளவிற்கு மீறிய உடல் உழைப்பினாலும், போதிய சத்தான ஆகாரமின்மையாலும் இறந்து விட்டாள். கோபமுற்ற அவள் உறவினர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து, அவசரகேஸ் என்று சொல்லி என்னை அழைத்துச் சென்று அடித்து சுயநினைவில்லாத நிலையில், ஈரோட்டிற்கும் கோயமுத்தூருக்கும் இடைப்பட்ட ஓர் இடத்தில் நாசப்படுத்தித் தள்ளி விட்டுப் போய் விட்டனர். அப்போது கோயம்பத்தூர் போவதற்காக அந்த வழியாக வந்த மாதவன் சார் என்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

எனக்கு சுயநினைவு வந்தவுடன் என் கணவருக்குப் போன் செய்து நிலைமையைக் கூறியிருக்கிறார். ஆனால் அவர் என்னை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, நான் மாதவனோடு ஓடிப் போனேன் என்று அவராகவே முடிவு செய்து விட்டார். ‘அவள் வீட்டிலிருந்து ஓடிப்போய் பத்து நாட்களாகி விட்டன. எப்போது  நினைக்கிறாளோ, அப்போது போவதற்கும் வருவதற்கும் இது என்ன சத்திரமா சாவடியா? இந்த ஊருக்குள்ளேயே அவள் வரக்கூடாது, அவள் பெண்ணையும் பார்க்கக் கூடாது  என்று கட்டுக்காவல் போட்டார். வீட்டிலிருந்த என் தங்கையையும் இரண்டாவது மனைவியாக ஆக்கிக் கொண்டார், அதனால் என் பெற்றோருக்கும் பேச வழியில்லை.

என்னை விவாகரத்து செய்து விட்டார். எல்லோருக்கும்  படிப்பு வாழ்க்கையைக் கொடுக்கும், ஆனால் நான் படித்த படிப்பு எனக்கு அவமானத்தையும் துக்கத்தையும் தான் கொடுத்தது . என் பெற்றோரே என்னை நம்பவில்லை. உயிரையும் , உடலையும் சுமந்து ஒரு நடைபிணமாய் சுற்றி வந்தேன். வயிற்றுப் பிழைப்பிற்காக மறுபடியும் பணியில் சேர வேண்டிய நிலமை. கோயம்பத்தூர் வரும்போதெல்லாம், மாதவன் இரக்கத்தோடு என்னைப் பார்க்க வருவார் .

அவர்தான்  பழகிய இந்த ஊர் வேண்டாம், இந்த மக்கள் வேண்டாம், வேறு எங்காவது மாற்றிக் கொள்ளுங்கள் என்று சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தார். நாளடைவில், என் மேல் பரிதாப்ப் பட்டும், ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்கு ஆண் துணை தேவை என்றும், அடிக்கடி இருவரும் ஒன்றாகப் போவதால் ஏற்படும் அவதூறான பேச்சுக்களை தவிர்க்கவும் எங்கள் திருமணம் நடந்தது. ஆனாலும் மாதவன் என்னிடம் மிகப் பிரியமாக இருக்கிறார்” என்று கண்களில் நீர் வழிய உதடுகள் துடிக்கத் தன் கதையை முடித்தார் நிர்மலா.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வட்டியும் முதலும் (குறுநாவல் – பகுதி 2) – வைஷ்ணவி

    கல்யாண ஊர்வலம் வரும் (சிறுகதை) – சுஸ்ரீ