in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11

இருவரையும் சந்தோஷமாக வரவேற்றாள் வத்சலா. அவளுடன் இருந்தவர் அவள் கணவர் போலும். அந்த ஆள் இவர்களை ‘வா’ என்று கூட அழைக்கவில்லை.

“வத்சலா, உன் கணவர் எப்போது ஊரிலிருந்து வந்தார்?” என்று கேட்டான் விக்னேஷ்.

“இன்று காலையில் தான் வந்தார் விக்னேஷ், கார் வாங்கியிருக்கிறார். வெளியில் நிற்கிறதே அது நம்முடைய கார் தான், சாயந்திரம் வீட்டிற்கு வரலாமென்று இருக்கிறோம். ஆமாம், நீங்கள் இருவரும் ஒன்றாக வந்திருக்கிறீர்களே… ஏதாவது விசேஷமா?” என்றாள் வத்சலா. பேசிக் கொண்டே போய் இருவருக்கும் ஜூஸ் எடுத்து வந்தாள்.

“இன்று மாலை வீட்டிற்கு வருகிறாய் அல்லவா, அப்போது பேசிக் கொள்ளலாம்” என்று கொஞ்ச நேரம் குழந்தையோடு விளையாடிவிட்டு சியாமளாவை அழைத்துக் கொண்டு   கிளம்பினான் விக்னேஷ்.

ஆட்டோவில் போகும்போது சியாமளா மிக அமைதியாக வந்தாள்.

“சியாமளா, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” என விக்னேஷ் கேட்க

“வத்சலாவின் கணவர் பார்வை சரியில்லையா, இல்லை எனக்குத்தான் மூளை சரியாக வேலை செய்யவில்லையா என்று தெரியவில்லை” என்றாள் சியாமளா.

“உனக்கு மூளை நன்றாகத்தான் வேலை செய்கிறது. நான் என்ன நினைத்தோனோ அதையேதான் நீயும் நினைக்கிறாய் என்று நினைக்கிறேன்” என்றான் விக்னேஷ்.

“அம்மாவிடம்  வத்சலாவின் கணவர் ஊரிலிருந்து வந்ததை மட்டும் சொன்னால் போதும், நம் மனதில் தோன்றியதை சொல்ல வேண்டாம்” என்றாள்.

“சரி” என்று ஏதோ யோசனையில் தலையை ஆட்டியவன், ஆட்டோவை வீட்டிற்குத் திருப்பினான்.

வழியில் ஓரிடத்தில் மக்கள் கூட்டம், ஆக்ஸிடென்ட் போலிருக்கிறது. ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டு, முட்டிக் கொண்டிருந்தன. பைக்கில் வந்தவர் ஹெல்மெட் ஒரு பக்கம், அவர் ஒரு பக்கமாக விழுந்து கிடந்தார். பைக் ஒரு பக்கம் சாய்ந்து கிடந்தது. பொது ஜனம், காரில் வந்தவரிடம் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தது.

“மாமா ஆட்டோவை நிறுத்துங்கள். விழுந்தவர் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார், யாரும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்காமல் விவாதித்துக் கொண்டிருக்கிறார்களே”

“நமக்கென்ன சியாமளா வம்பு. நாமே ஊர்பட்ட வேலையை வைத்துக் கொண்டிருக்கிறோம், போலீஸ் கேஸ் வம்பு வழக்கு என்றாகி விடும்”

“விபத்தைப் பார்த்து விட்டு உதவி செய்யாமல் போவது மனிதத்தன்மையில்லை மாமா. அந்தக் கார் நம்பரை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். நாம் அவரைப் பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போய் விடலாம். நேரம் ஆகஆக அடிப்பட்டவருடைய பொருட்கள் காணாமல் போய் விடும்” என்றாள் சியாமளா பதறியவாறு. கார் எண்ணை குறித்துக் கொண்டு, தன் கையிலிருந்த செல்போனில் போட்டோவும் எடுத்துக் கொண்டான் விக்னேஷ்.

“அன்னை தெரசாவின் அவதாரமா  சியாமளா நீ” என்றவன் சிரித்துக் கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கினான். சியாமளா கையிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து விக்னேஷிடம் கொடுத்து கீழே விழுந்தவருக்குத் தண்ணீர் கொடுக்கச் சொன்னாள்.

அருகில் போய் அந்த ஆளின் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் அடித்து முகத்தைக் கொஞ்சம் தண்ணீர் அடித்து முகத்தை மெதுவாக கழுவி விட்டான் விக்னேஷ். விழுந்தவர் கண்களைத் திறந்தார். கூட்டத்திலிருந்த ஒருவர் ஓடிப்போய் சோடா ஒன்று வாங்கி வந்தார். சோடாவிலிருந்த கேஸ் போனபிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் அதைக் குடிக்க வைத்தான் விக்னேஷ். காலில் பலமான அடி போல் இருக்கிறது, அந்த ஆளால் எழுந்திருக்க முடியவில்லை.

 “ரொம்ப வலிக்கிறது” என்றார். திரும்பிப் பார்த்தால் அவரை இடித்த கார் அங்கு இல்லை, கார்காரர் ஓடி விட்டிருக்கிறார்.

“நீங்கள் என் ஆட்டோவில் வந்து விடுங்கள். உங்கள் பைக்கில் முக்கியமான பொருட்கள் இருந்தால் எடுத்து வந்து தருகிறேன், முதலில் அருகில் உள்ள மருத்துவமனைக்குப் போகலாம்” என்றான் விக்னேஷ்.

பைக் சாவியை விக்னேஷிடம் கொடுத்தார். வண்டியில் சில பைல்களும் டைரியும் இருந்தன. ஏதாவது கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது என்று தன் ஹேண்ட் பேகைத் திறந்து ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொடுத்தாள் சியாமளா. இருவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்  மாதவன். ஆம், அவர் பெயர் மாதவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

மாதவனை வண்டியில் ஏற்றும் போது கையில் ஒரு நோட் புக்குடன் வந்தார் டிராபிக் கான்ஸ்டபிள். பொதுமக்கள் யாரும் காரின் பதிவு எண்ணைக் குறித்துக் கொள்ளாமல் காரின் உரிமையாளரிடம் சண்டைக்கு நின்றிருந்ததால் போலீஸ்காரருக்கு யாராலும் காரின் பதிவு எண்ணைத் தர முடியவில்லை. விக்னேஷ் தன் செல்போனில் காரின் எண்ணுடன் எடுத்த போட்டோவை கான்ஸ்டபிளிடம் காட்டினான். அவரும் அவற்றுக்கு குறித்துக் கொண்டார்.

மோட்டார் பைக்கை கான்ஸ்டபிள் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு மாதவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். மாதவனுடைய ஹெல்மெட்டை சியாமளா எடுத்துக் கொண்டாள். மாதவனை மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள், அங்கிருந்த பெரிய டாக்டர்களுக்கெல்லாம் அவரை நன்கு தெரிந்திருந்தது. எல்லோரும் அவரைப் பிரியமுடனும், மரியாதையுடனும் நடத்தினார்கள்.

 நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது, இரத்தத்தின் பிரிவு ஏ-பாஸிட்டிவ் என்று தெரிவித்தார். விக்னேஷ் தன்னுடையதும் ஏ-பாஸிட்டிவ் பிரிவு என்று இரத்த தானம் செய்தான். மாதவனின் அடிப்பட்ட காலை எக்ஸ்ரே எடுத்தார்கள். முட்டிச்சில்லு உடைந்திருந்தது, அதனால் தான் அவரால் நடக்க முடியவில்லை. அடுத்த நாள் அவருக்கு சர்ஜரி வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அவருக்கு நன்கு நினைவு வந்ததால் தன் செல்போனை எடுத்து வீட்டிற்குப் போன் செய்தார், அவர் மனைவி  அருகில் உள்ள மருத்துவமனையில் கைனகாலஜிஸ்டாக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் அவர் மனைவி நிர்மலாவும் வந்து விட்டார். நிர்மலா… விக்னேஷிற்கும் சியாமளாவிற்கும் நன்றியைத் தெரிவித்தார். அவள் தன் கணவரைப் பார்த்துக் கொள்வதாகவும், இவ்வளவு நேரம் காத்திருந்து எல்லா உதவிகளையும் செய்ததற்காகத்  தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாகக் கூறினார். மாதவன் தன் ஹேண்ட்பேகிலிருந்து விசிட்டிங் கார்டை கொடுத்தார், மாதவன் எம்.ஏ; பி.எல்  என்று இருந்தது. பெரிய கிரிமினல் லாயர். சியாமளாவும், விக்னேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நான் ஒன்று கேட்டால் தப்பாக நினைக்க மாட்டீர்களே, நீங்கள் கணவன் மனைவியா?” என்றாள் நிர்மலா.

சியாமளா வெட்கத்தால் தலை குனிந்தாள். “இன்னும் சில நாட்களில் தான் எங்கள் திருமணம், அந்த வேலையாகத்தான் போய் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது தான் வக்கீல் சாரை அந்த நிலையில் பார்த்தோம்” என்றான் விக்னேஷ்.

“சியாமளாவின் வெட்கத்தைப் பாருங்களேன்” என்று கூறி விட்டு  மாதவனைப் பார்த்து சிரித்தாள் நிர்மலா.

மாதவனுக்கு ஏதோ சாப்பிடக் கொடுத்துக் கொண்டே, “விக்னேஷ் சியாமளா இனிமேல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம், உங்கள் திருமண அழைப்பிதழ் எங்களுக்குத் தருவீர்களா?” என்றாள் நிர்மலா .

“கட்டாயம் மேடம்” என்றார்கள் சியாமளாவும் விக்னேஷும்.

“நாம் தான் நண்பர்களாகி விட்டோமே, இனிமேல் மேடம் எல்லாம் வேண்டாம், ஓகே?” என்றாள் நிர்மலா .

“ஒரு நிமிடம்” என்ற மாதவன், தன் கைப்பையிலிருந்து நூறு ரூபாய் கட்டு ஒன்றைக் கொடுத்து, “இதை நீங்கள் கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.

“நண்பர்கள் என்ற பிறகு நட்பைப் பணத்தால் எடை போட வேண்டாம் ப்ளீஸ்” என்ற விக்னேஷ், எத்தனை கூறியும் பணத்தை வாங்க வாங்க மறுத்து விட்டான். தன் செல்போனில் இருந்த மாதவனின் மோட்டார் பைக்கை இடித்த காரின் படத்தை நிர்மலாவின் செல்போனுக்கும், மாதவனின் செல்போனுக்கும் அனுப்பி விட்டு விடைபெற்றுக் கிளம்பினார்கள்.

அடுத்த நாள் வந்து பார்ப்பதாகவும், ஏதாவது உதவித் தேவைப்பட்டால் போன் செய்யுங்கள் என்று இருவரது செல்நம்பரையும் கொடுத்தான் விக்னேஷ். இந்த கலாட்டாவில் வத்சலாவின் கணவனைப் பற்றி சுத்தமாக மறந்து விட்டார்கள்.

அடுத்த நாள் சியாமளாவைப் பள்ளியில் கொண்டு விட்டு,  மாதவன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்தான் விக்னேஷ். மாதவனை ஆப்பரேஷன் தியேட்டருக்கு அனுப்பி விட்டு நிர்மலா தனியாக மிகவும் டென்ஷனாக நின்றிருந்தாள். விக்னேஷ் இருந்தது அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

“டாக்டர் மேடம், நாங்களெல்லாம் டென்ஷனாக வெளியில் நிற்கும் போது கூலாக ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வரும் தொழில் உங்களுடையது. நீங்களே டென்ஷன் ஆகலாமா?” என்று ஆறுதல் கூறினான். நிர்மலாவிற்கு மதிய உணவும் ,காபியும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான்.

ஆபரேஷன் முடிந்து மாதவனை ஐ.சி.யு’விற்கு மாற்றினர். நிர்மலா தான் ஒரு டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள், அதனால் அவளுக்கு அங்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அன்று மாலைப் பள்ளியிலிருந்து நேரே வீட்டிற்குப் போய் அத்தையிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, சமையலையும் முன்னின்று அவளே செய்தாள் சியாமளா.

விஷ்ணுவிற்கும் தர்ஷணாவிற்கும் சாப்பாடு கொடுத்து விட்டு, ஒரு கேரியரில் இரண்டு பேருக்கு ஆகும் அளவிற்கு சாப்பாடும் எடுத்துக் கொண்டாள். அத்தையும் நிறைய உதவிகள் செய்தாள். வாழையிலைகளையும் கழுவி சுருட்டி வைத்தாள்.

அத்தைக்கு சாப்பாடு போட்டு, மருந்துகளையும் கொடுத்து விட்டு தர்ஷணாவிடமும் விஷ்ணுவிடமும் அத்தையைப் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி விட்டு விக்னேஷிற்குப் போன் செய்தாள்.

“இந்த இரவு நேரத்தில் தனியாக வரவேண்டாம். ஒரு ஐந்து நிமிடம் காத்திரு. சரவணனுக்குப் போன் செய்து விட்டேன், அவன் உன்னை பிக்-அப் செய்து இங்கு கொண்டு வந்து விடுவான். பிறகு நாம் இருவரும் திரும்பி விடலாம்” என்றான் விக்னேஷ்.

அவன் சொல்லியபடியே ஆட்டோவை எடுத்து வந்தான் சரவணன். சரவணனையும் முருகேசனையும் ஏற்கெனவே சியாமளாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளான், அதனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் சியாமளா அவனுடன் மருத்துவமனைக்குச் சென்றாள்.

“அண்ணா… வீட்டில் அண்ணியும் குழந்தைகளும் சௌக்கியமா?” என்று சரவணனை நலம் விசாரித்தாள் சியாமளா.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எல்லாம் உனக்காக (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன், மும்பை

    புனைவுலகம் (சிறுகதை) – ராஜேஸ்வரி