2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மேலே வேகமாக பேன் ஓடிக் கொண்டிருந்த போதிலும் கவிதாவிற்கு வியர்த்துக் கொட்டியது. பட்டுப்புடவை சரசரக்க தலை முழுவதும் கூடைப் பூவைச் சுற்றி வைத்த தோழியர்கள் ஜன்னல் வழியே தன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.
‘எப்படி சமாளிக்கப் போகிறேன் சங்கர்? உங்களை மனதில் வைத்துக் கொண்டு இன்னொருவன் முன்னால் போய் நின்று நமஸ்காரம் செய்து, அவன் பாடச் சொன்னால் பாடி காபி கொடுத்து…’ நினைத்தாலே அழுகை வருகிறது.
ஏற்கனவே வந்த இரண்டு மூன்று வரன்களை தட்டிக் கழித்து விட்டேன். ஆனால் இந்த முறை எனக்குத் தெரியாமல் மாப்பிள்ளை வீட்டாரை வரவழைத்து விட்ட அம்மா, என்னை வேலைக்குப் போகாமல் மடக்கிப் போட்டு விட்டாள்.
‘சங்கர்… சங்கர்… எங்கிருக்கிறீர்கள்? ஒரு வாரமாக உங்களையும் பார்க்க முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.’
இப்படியே பின்கட்டு வழியாக ஓடிப் போய் விடலாமா? சுவர் ஏறிக் குதித்து ஆட்டோ பிடித்து சங்கர் ஆபீசிற்கு போய் விடவேண்டும். ‘வா இப்போதே திருமணம் செய்து கொள்வோம். என்னை வேறொரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கப் பார்க்கிறார்கள். இனி என்னால் தாங்க முடியாதப்பா…’ என்று சொல்லி விடலாமா.
‘நான் ஓடிப் போனால் இந்த வீட்டிற்கு எத்தனை அவப்பெயர். எனக்கு அடுத்த தங்கை ஷாலினிக்கு வரன் வருவது எத்தனை கஷ்டம். என் அம்மா அப்பாவிற்கு எவ்வளவு அவமானம். ஆனால் இவர்களுக்கு பயந்து எனக்கு பிடிக்காத மாப்பிள்ளையை நான் நமஸ்கரித்து அவன் என்னை அசிங்கமாக பார்த்து… ஓ…! வேண்டவே வேண்டாமே…’
அவளுடைய சிந்தனையை அம்மா கலைத்தாள்.
“கவிதா எழுந்திரும்மா. போய் எல்லோருக்கும் காபி கொடு…” என்றாள்.
‘நான் வரவில்லை’ என்று மறுத்து விடுவோமா…? இந்த அம்மாவால் என்ன செய்து விட முடியும்?’ மனதில் நினைத்தாலும் காபி டிரேயை வாங்கிக் கொண்டு தோழிகள் சிரித்துக் கும்மாளமிட மாப்பிள்ளை வீட்டார் அமர்ந்திருந்த ஹாலுக்குள் தலைகுனிந்தவாறு வந்தவள், காபியை எல்லோருக்கும் மத்தியில் வைத்தாள்.
“நமஸ்காரம் பண்ணும்மா…” என்றார் அப்பா.
‘ஏன் நமஸ்காரம் பண்ண வேண்டும்?’ என்று அவள் மனது மறுத்தாலும் விழுந்து நமஸ்கரித்தாள்.
“மாப்பிள்ளையை பார்த்துக்கோ… அப்புறம் நான் மாப்பிள்ளையா பார்க்கவில்லை என்று சொல்லிவிடக் கூடாதில்லையா?” என்றாள் பெண்ணின் அக்கா.
“என்ன மாப்பிள்ளை, பெண்ணைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார் கவிதாவின் அப்பா.
“எனக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. ஆனால் குனிந்த தலையைக் கூட தூக்காமல் குனிந்து கொண்டேயிருந்தால் பெண்ணின் முகத்தை எப்படிப் பார்ப்பது?” என்றான் மாப்பிள்ளை.
‘கேட்ட குரலாக இருக்கிறதே இது… இது… என் சங்கர் குரலல்லவா… அவரா என்னைப் பெண் பார்க்க வந்திருக்கிறார். நம்ப முடியவில்லையே?’ மறு ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன பொண்ணு… என்னைப் பிடிச்சிருக்கா…?” என்று கண் சிமிட்டினான்.
மிகச் சந்தோஷத்துடன் உடல் அதிர்ந்து போக, எழுந்து உள்ளே ஓடினாள் கவிதா.
உள்ளே வந்த அப்பாவின் காலில் விழுந்து, “மிக்க நன்றிப்பா… உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலப்பா… எப்படி… எப்படி… நீங்கள் சங்கரை…?” பேச முடியாமல் தத்தளித்தாள் கவிதா.
“பெத்த பிள்ளைகளை முதலில் முழுசுமாக புரிஞ்சுக்கிறவன்தாம்மா நல்ல தகப்பன். முதலில் நான் சொன்ன வரன்களை நீ தட்டி விட்டபோதே, உன் மனதில் யாரோ இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். கொஞ்சம் சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று நினைத்து உனக்குப் பிடித்த சங்கரை ஆபீசில் சந்தித்து… அப்புறம் எல்லாம் தடபுடலாக நடந்தது…” என்றார்.
“ரொம்ப நன்றிப்பா… ரொம்ப சந்தோஷம்…” என்ற கவிதா, தந்தையின் கைகளை சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பொங்கி வழிந்தது.
உள்ளே வந்த அம்மா, “ம்… எனக்கும் கொஞ்சம் மிச்சம் கொடு கவிதா” என்றவுடன், எல்லோரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings