in ,

தேயாத வெண்ணிலவு (சிறுகதை) -✍ வ.நிறோஜினி, ஸ்ரீலங்கா

தேயாத வெண்ணிலவு (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 85) 

டக் தடக் என்று தாளம் போட்டபடி தண்டவாளத்தின் மீது விரைந்து கொண்டிருந்தது புகைவண்டி

தென்றல் காற்று இதமாக வருடிச் செல்ல, ஆசனத்தில் சாய்ந்து கண்களை மூடியபடி அமர்ந்திருந்த ஆதவனின் மனம், பல்வேறு கேள்விக்கணைகளின் தாக்குதல்களால் துடித்துக் கொண்டிருந்தது

“இன்று அவள் எப்படி இருப்பாள்? திருமணம் ஆகியிருக்குமா?”

இப்படி பல கேள்விகள்…… அவனது உள்ளம் கல்லூரி கால இனிய நினைவுகளை நோக்கி பந்தயக் குதிரை போல தாவி ஓடியது

பத்து வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் தான் அவளை ஆதவன் முதன்முதலாக பார்த்தான். அவள் பெயர் இளநிலா. பெயருக்கு ஏற்றாற்போல் நிலா மாதிரியே அழகானவள்

எல்லோருடனும் கலகலப்பாகவே பழகுவாள். ஆதவனும் அப்படித் தான். அந்த ஒற்றுமை தான் அவர்கள் இருவரையும் நண்பர்களாக இணைய வைத்தது

அவளது எளிமையான அலங்காரம், அழகு, அறிவு அத்தனையும் ஆதவனுக்கு பிடித்திருந்தது. காதல் என்றாலே காதடி தூரம் ஓடிப் போகும் ஆதவன், இளநிலாவைக் காதலிக்க ஆரம்பித்தது, அவனுக்கே அதிசயமாகத் தான் இருந்தது

தன் காதலை சொல்வதற்குரிய நாளை எதிர்பார்த்திருந்தான்.

ந்நிலையில் ஒருநாள், “ஆதவன் நில்லுங்கோ நில்லுங்கோ” என்றபடி ஓடி வந்த இளநிலாவை பார்த்து

“என்ன நிலா ஏன் இந்த ஓட்டம்?” என்று புன்னகையுடன் கேட்டான் ஆதவன்.

“சந்தோஷ் இருக்கானே அவன் என்ன செய்தான் தெரியுமா?” என்று மூச்சிறைத்தபடி சொன்னவளைப் பார்த்து

“சொன்னால் தானே தெரியும்” என்று கூறிவிட்டு, அருகில் இருந்த புற்தரையின் மீது அமர்ந்தான் ஆதவன்

“சந்தோஷ் என்னைக் காதலிக்கிறானாம், அதனை என்னிடமே சொல்லி விட்டான்” என்று கூறியபடி அவனருகில் அமர்ந்தாள் நிலா. திக்கென்றது ஆதவனுக்கு.

“நீ என்ன சொன்னாய்” அவனது குரலில் பதட்டம் எதிரொலித்தது.

“எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்” அவளது பதிலில் மனம் மகிழ்ந்த போதிலும்

“ஏன் நிலா சந்தோஷ் நல்ல பையன் தானே, உனக்கு ஏன் அவனைப் பிடிக்கவில்லை? ஒருவேளை நீ யாரையும் காதலிக்கிறாயா?” என்றவனை முறைத்துக் பார்த்த நிலா

“என்ன ஆதவன், நீங்களும் என்னைப் புரிஞ்சிக்கலயே. எனக்கு இரண்டு தங்கச்சிகள், அப்பாவின்ர கூலித் தொழிலை நம்பித் தான் என்ர குடும்பமே வாழுது. அவங்கட நம்பிக்கை முழுக்க நான் தான். நான் நல்லா படிச்சு நல்ல வேலை பார்க்கோணும் எட்டு ஆசைப்படுகினம்.

காதலில் விழுந்து என்ர குடும்பத்தோட கனவை நான் சிதைக்க விரும்பேல்ல.என்ர படிப்பு முடிஞ்சு வேலை கிடைக்கிற வரைக்கும் காதல் பற்றி நான் யோசிக்கவே மாட்டன். இதை எல்லாம் நான் சந்தோஷிடம் சொன்னேன். அவன் தான் புரிஞ்சுக்கவே இல்லையே” என்றாள் கவலையுடன்.

“ஓ” என்ற ஒற்றைச் சொல்லை தவிர, ஆதவனிடம் வேறு வார்த்தை இல்லை.

“எனக்கு எல்லோரும் நண்பர்கள் தான் ஆதவன். ஆனால் சந்தோஷ் என்னை காதலிப்பதாக சொல்லி விட்டான். இனிமேல் நான் அவனோட கதைக்கவே மாட்டன். என் நண்பர்கள் பட்டியலில் இருந்து அவனை நீக்கி விட்டேன். நான் செய்தது சரி தானே ஆதவன்” என்று அவள் கேட்கவும்

“ஆமாம் ஆமாம்” என்று தலையாட்டினான் ஆதவன்

அன்றிரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை. ‘இளநிலாவின் முடிவும் சரியானது தான்.நானும் என்னுடைய காதலை அவளிடம் சொல்லிவிட்டால் என்னையும் வெறுத்து ஒதுக்கிவிட்டால் என்ன செய்வது’ என்ற நினைப்பிலேயே ஆதவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது

‘இளநிலா இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. அவளுக்காக காலம் முழுவதும் கூட காத்திருக்கலாம். படிப்பு முடியட்டும். அதுவரை அவளுக்கு நல்ல நண்பனாகவே இருந்து விடுவோம்’ என்று தீர்மானித்துக் கொண்டான்

அதன்பிறகு தன் காதல் பற்றி அவளிடம் மூச்சுக் கூட விடவில்லை ஆதவன். ஆனாலும் அவனது மனதில் இளநிலா சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டாள்.

கல்லூரிப் படிப்பு முடிந்து பட்டம் பெற்று பிரியாவிடை பெற்ற அன்று, “ஆதவன்… என்னுடைய வாழ்க்கையில் உங்களைப் போல நல்ல நண்பன் கிடைச்சதுக்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லோனும்” என்று கூறும் போதே, இளநிலாவின் விழிகள் பனித்து விட்டன

‘நிலா என்னுயிரே நீதானே’ என்று கூறத் துடித்த நாவை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்

அதன் பின்னர் ஆதவனுக்கு தொழில் கிடைத்து பயிற்சி நெறிக்காக ஐந்து வருடங்கள் லண்டனுக்கு செல்ல வேண்டியிருந்தது.

அதைப் பற்றி நிலாவிடம் கூறிய போது, “ரொம்பவே சந்தோஷம் ஆதவன். கவனமா போங்கோ, லண்டனுக்கு போன பிறகு என்னை மறந்துடாதேங்கோ” என்றவளிடம்

“அட உலகத்தின் மறுபக்கத்துக்கே போனால் கூட உன்னை மட்டும் மறக்க முடியாது நிலா” என்று புன்னகையுடன் கூறி அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான் ஆதவன்

தன்பிறகு அவளை ஆதவன் சந்திக்கவேயில்லை. அவளது தொலைபேசி எண்ணும் செயலிழக்கப்பட்டிருந்தது. பல நாட்கள் முயன்று அவளது புதிய வீட்டு முகவரியை பழைய தோழி ஒருத்தி மூலமாக பெற்றுக் கொண்டான்

சுமார் பத்து வருடங்களுக்கு பின்னர், இன்று தான் இளநிலாவை பார்க்க அவளது வீட்டுக்கு வருகிறான் ஆதவன்.

“தம்பி எழும்புங்கோ” என்று யாரோ தட்ட, திடுக்கிட்டு கண்விழித்தவனிடம்

“தம்பி நீங்கள் இறங்க வேண்டிய இடம் இது தான்” என்றார் அருகிலிருந்த பெரியவர். அவரிடம் நன்றி கூறிவிட்டு இறங்கினான் ஆதவன்

அருகில் நின்ற ஆட்டோ ஓட்டுனரிடம் முகவரியை கொடுத்து விட்டு அமர்ந்தான்

ஒரு வீட்டின் முன்னால் நிறுத்திய சாரதி, “இது தான் சார் நீங்க கேட்ட வீடு” என்று கூறிவிட்டுச் சென்றான்

வசதியான வீடாகத் தெரியவில்லை. தனது குடும்பம் வறுமைப்பட்டது என்று அன்றைக்கே சொன்னாளே என்று யோசித்தபடி கதவைத் தட்டினான் ஆதவன்

கதவைத் திறந்து அவனை ஏற இறங்க பார்த்தார் ஒரு பெரியவர், இளநிலாவின் தந்தையாக இருப்பாரோ? என்று எண்ணியபடி “வணக்கம்” என்றான்.

“யாரப்பா நீ? இதுக்கு முன்னாடி உன்னை பார்த்ததாக நினைவில்லையே” என்றார் அவர்.

“நான் இளநிலாவோட படிச்சனான், அவங்கள பார்த்துட்டு போக வந்தேன்” சொல்லும் போதே சத்தம் கேட்டு வெளியே வந்த இளநிலா, ஒருகணம் திகைத்து நின்றாள்.

“வாங்கோ ஆதவன், அட அடையாளமே தெரியேல்லயே” என்றவளை விழிகளில் கூர்மையுடன் ஆராய்ந்தான் ஆதவன். முகத்தில் பழைய குறும்பு,சந்தோஷம்,கலகலப்பு எதுவும் இல்லை.

தலையில் நரை கூட இல்லை, ‘முப்பது வயதில் நரை விழுந்திடுமா மடையா?’ என்று தலையில் தட்டிக் கொண்டான் ஆதவன்

“உட்காருங்கோ ஆதவன், குடிக்க ஏதாவது கொண்டு வாறன்” என்று சொல்லி விட்டு விரைந்தாள் இளநிலா

சுற்றுமுற்றும் வீட்டை ஆராய்ந்த ஆதவனின் விழிகள் சுவரில் மாட்டப்பட்ட ஒரு புகைப்படத்தில் வந்து நிலைத்தன

‘அது இளநிலா தானா? அதுவும் மணக்கோலத்தில். அப்படியானால் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா? ஆனால் நெற்றியில் குங்குமம் இல்லையே. கழுத்தில் தாலி இல்லையே. வறுமை என்பதால் அடகு வைத்து விட்டாளா?’ மனதின் ஓரம் ஏனோ வலித்தது.

தேநீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவனருகில் அமர்ந்தாள் இளநிலா.

“திருமணம் ஆகிவிட்டது போல?” மெதுவாக கேட்டான் ஆதவன்

‘ஆம்’ என்று தலையாட்டினாள்

“என்ன செய்கிறாய் நிலா?” என்று அடுத்த கேள்வி கேட்டான் ஆதவன்

மெதுவாகப் புன்னகைத்தபடி தையல் மெசினைக் காட்டினாள் அவள். அவன் திகைத்துப் போனான்

“என்ன நிலா பட்டம் பெற்ற ஒருத்தி அரசாங்க வேலையிலோ தனியார் துறையில் பெரிய பதவியிலோ இருப்பாய் என்று நினைத்தேன். உன்னோட கணவர் என்ன செய்கிறார்?” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் இளநிலா

“படிப்பு முடிஞ்ச கையோட அப்பாவும் அம்மாவும் அதோ அந்த உத்தமரைத் தான் திருமணம் செய்து வைத்தனர்.பெரிய பணக்காரராம், என்னை விட இருபது வயது அதிகம் ஆதவன். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், என் பேச்சை இவர்கள் கேட்கவே இல்லை

வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். திருமண மண்டபத்தில் என் கழுத்தில் தாலி ஏறிய சிறிது நேரத்தில், பத்து வயது பெண் குழந்தையோட ஒருத்தி வந்து அவர் தனது கணவர் என்று கூச்சல் போட்டாள். அதன் பிறகு தான் அவரைப் பற்றிய உண்மைகள் தெரிந்தன. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்று” பெருமூச்சுடன் நிறுத்தினாள் இளநிலா.

“பிறகு என்னாச்சு?” குரலில் கவலை தெரிந்தது.

“பிறகு என்ன? அதன் பிறகும் அவரோடு வாழ முடியுமா? விவாகரத்து கொடுத்து பிரிந்து விட்டேன். வீட்டை விற்று ஒரு தங்கச்சியின் திருமணத்தை முடித்து விட்டோம். மற்றவள் படித்துக் கொண்டிருக்கிறாள். என்னை நினைச்சு கவலைப்பட்டே அம்மா படுத்த படுக்கையாகி விட்டார். தையல் மிசினை நம்பி என்ர வாழ்க்கை ஓடுது” என்றவள், அழுகையை அடக்க கஸ்ரப்படுவது புரிந்தது

அவளை அணைத்து ஆறுதல் சொல்ல ஆதவனின் மனம் துடித்தது. “அதுக்கு பிறகு இளநிலாவுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லையா?”என்று இளநிலாவின் அப்பாவைப் பார்த்து கேட்டான் ஆதவன்

“மறுமணம் செய்ய அவளுக்கு விருப்பமில்லை தம்பி. அவளுக்கு தெரியாமல் இரண்டு இடத்துலே பேசிப் பார்த்தேன், விவாகரத்து செய்தவளை மணம் புரிந்து கொள்ள யாருமே சம்மதிக்கவேயில்லை. நாங்கள் தான் அவள் வாழ்க்கையை நாசமாக்கிட்டம்” என்றார் கவலையுடன்.

ஒரு கணம் இளநிலாவை திரும்பி பார்த்தான் ஆதவன். இன்றுவரை அவளை நினைத்து தானே திருமணம் கூட செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்பவும் அவளையே திருமணம் செய்தால் என்ன? என தோன்றியதும்

“ஒரு நிமிடம் இதோ வருகிறேன்” என்று விட்டு இளநிலாவின் வீட்டை விட்டு வெளியே வந்தான்

உடனே தனது தந்தைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து முழு விபரமும் சொன்னான்.

தங்கள் ஒரே மகன், எத்தனையோ கோடிகளுக்கு சொந்தக்காரன். இவ்வளவு காலமும் திருமணமே வேண்டாம் என்று விலகி இருந்தவன், இன்று திருமணம் செய்யத் தயார் என்று பச்சைக்கொடி காட்டியதில், அவர்களுக்கு சந்தோஷமே. அந்த நிமிடமே இளநிலாவை மருமகளாக ஏற்றுக் கொண்டனர்.

இளநிலாவிடம் வந்த ஆதவன், “நிலா நான் உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்றவனை வியப்புடன் பார்த்த இளநிலா

“என்ன ஆதவன், முப்பது வயதிலேயே வாழாவெட்டி ஆகிவிட்டாளே என்று தோழிக்கு தோள் கொடுக்கும் எண்ணமா?” என்றவளின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்த ஆதவன்

“அப்படியில்லை நிலா. உன்னை நான் காதலிக்கிறேன் என்று கல்லூரியில் படிக்கும் போதே சொல்லியிருப்பேன். எங்கே நீ என்னை  விட்டுப் பிரிந்து விடுவாயோ என்ற பயம் தான் என் காதலை உன்னிடம் சொல்ல விடாமல் தடுத்து விட்டது.

இப்பவும் நீ திருமணமாகி சந்தோஷமாக இருப்பாய் என்று எண்ணித் தான் வந்தேன். ஆனால் நிலைமை இப்படி ஆகிவிட்டது. இன்று வரை என் மனதில் உன்னை தவிர வேறு யாருமே இல்லை” என்றான்

கண்களில் நீர் நிரம்பி கன்னத்தில் வழிந்து கொண்டிருக்க சிலையென நின்றாள் நிலா

“ஆதவன், விவாகரத்து பெற்ற ஒருத்தியை மருமகளாக ஏற்க உங்கள் பெற்றோருக்கு சங்கடமாக இருக்கும். வேண்டாம் ஆதவன். நீங்கள் ரொம்ப நல்லவர், என்னால கஷ்டப்பட வேண்டாம். நான் அமாவாசை நிலா, என் வாழ்க்கையில் வளர்பிறையே கிடையாது. என்றுமே பூரணை நிலாவாக ஜொலிக்க முடியாது” என்றாள் கண்ணீருடன்

அவளது கைகளை பற்றிக் கொண்ட ஆதவன், “நான் எனது பெற்றோருடன் பேசிவிட்டேன் நிலா, அவர்கள் சம்மதித்து விட்டார்கள். இந்நேரம் இங்கே வந்து கொண்டிருப்பார்கள்.மறுமணம் செய்து கொள்வது தவறில்லை நிலா.

இதுவரை நீ அமாவாசை நிலாவாக இருந்திருக்கலாம், ஆனால் இந்த ஆதவனின் அன்பு ஒளி இனிமேல் உன்னை எப்பவும் பூரணை நிலாவாக மாற்றி வைக்கும். என்னுடைய இந்த பூரணை நிலாவின் வாழ்வில் இனிமேல் தேய்பிறையே கிடையாது. இது தேயாத வெண்ணிலவு” என்றவனை விழிகளில் காதலுடனும் நன்றியுடனும் பார்த்தாள் நிலா

“தம்பி… என்ர பொண்ணு வாழ்க்கை இப்படியே கருகிப்போய் விடுமோ என்று தவித்துக் கொண்டிருந்தேன்.அவளின்ர வாழ்க்கையில ஒளியேற்றி வைத்த உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ” என்று நா தழுதழுக்க கூறினார் இளநிலாவின் தந்தை.

அவருடைய கைகளை பற்றிய ஆதவன், “என்ன மாமா இது. இளநிலாவோட குடும்பம் இனி மேல் என்ர குடும்பம் தானே. அவளோட அம்மாவின்ர வைத்திய செலவும் தங்கச்சியோட படிப்புச் செலவும் இனிமேல் என்ர பொறுப்பு. இதுக்கெல்லாம் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், என்னை உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்றான் சிரித்தபடி

இனிமேல் ஆதவனின் அன்பு ஒளியால் இளநிலாவின் வாழ்க்கை பௌர்ணமியாய் ஒளிரும்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வசப்பட்டது வாழ்வா வானமா (சிறுகதை) – ✍ ஆர்த்தி சுவேகா

    பரிகாரம் (சிறுகதை) -✍ B.ராஜா, சென்னை