in ,

பரிகாரம் (சிறுகதை) -✍ B.ராஜா, சென்னை

பரிகாரம் (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 86) 

துரவாயல் பாலத்தின் கீழே எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லுரிக்கு பக்க சாலை வழியாக சென்று, புதிதாக முளைத்திருக்கும் இரண்டு மூன்று சொகுசு அப்பார்ட்மென்டுகளை தாண்டினால், வலதுபுரம் தெற்கு பார்த்த வீடு தான் கோவிந்தம்மாள் இல்லம்

இரண்டாயிரம் சதுர அடியில் சுற்றி தோட்டம். அப்பார்மெண்ட் சூல் உலகில், பிடிவாதமாய் இருக்கும் தனித்த உலகம் தான் அவரது

மணமுடித்த கையுடன் மதுரையில் இருந்து சென்னைக்கு குடிவந்த கோவிந்தம்மாள், போரூருக்கு அடுத்து மதநந்தபுரத்தில் குடித்தனம்

இரண்டு வருடங்களுக்கு பிறகு இங்கு இடம் வாங்கி கணவனும் மனைவியும் தங்கள் கனவு வீட்டை பார்த்து பார்த்து கட்டி குடியேறினார்கள்

வருடம் ஒரு முறை சித்திரை திருவிழாவிற்க்கு மட்டும் கண்டிப்பாக மதுரைக்கு சென்று விடுவதுண்டு. அழகரை பார்த்தே ஆக வேண்டும். இருளில் கிடந்தவளுக்கு ஒளி கொடுத்தவரை தரிசிக்காமல் இருந்ததில்லை

பாஸ்டிங் சக்கரை 260க்கு மேல் இருப்பதால், டாக்டர் சோற்றை தொடக் கூடாதென்று சொல்லி விட்டார். மாலையில் இருபது நிமிடமாவது நடக்க வேண்டும். வீட்டை சுற்றி இடமிருப்பதால் அதிலேயே சற்று நடந்து கொள்வதுண்டு

கோவிந்தம்மாளின் கடவுள் பக்தி சற்று மிரள வைக்கக் கூடியது. வீட்டை மினி கோவிலாகத் தான் வைத்திருப்பார்.

தன் பூசையறையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நடுநாயகமாக வீற்றிருக்க, இடதும் வலதுமாக சுமார் நாற்பது தெய்வங்களாவது அருள் பாலித்துக் கொண்டிருக்கும்

தினமும் அவற்றிற்க்கு பூசையுண்டு, பூக்களுண்டு, நெய்வேத்தியமுண்டு. தை, ஆடி, புரட்டாசி மகாளய அம்மாவாசைகளில், வீடு கழுவி சுவாமி படங்கள் துடைத்து பூக்கள் சூடி பூசைகள் நடைபெறும்

கோவிந்தம்மாளின் பக்தியும் நாளொரு வண்ணம் வளர்ந்து கொண்டிருந்ததே தவிர குறையவில்லை. வியாழன் தோரும் மூன்று சக்கர வண்டியில் வீதியில் வரும் மினி சாய் பாபா கோவில்காரனை கூட விட்டு வைப்பதில்லை.

கணவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டுவிட்டார்

கடவுள் பக்திக்கு பிறகு அவரின் உயிர் இந்த வீட்டில் தான் இருக்கிறது. வீட்டையும் தோட்டத்தையும் பராமரிப்பதிலேயே அவர் வாழ்தலின் அர்த்தத்தை கண்டார்

ஏழு மலை ஏழு கடல் தாண்டி கிளியின் உடலில் அரக்கனின் உயிர் இருப்பதை போல, கோவிந்தம்மாளின் உயிர் இந்த வீட்டில் இருந்தது

இன்றும் விசேஷம், ஆடிப்பூரம். சுமங்கலி பூசைக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலைக்காரி வந்து பாத்திரம் விளக்கி துணி துவைத்து கொடுத்து விட்டால், மாலை பூஜைக்கான வேலைகளை ஆரம்பித்து விடலாம்

பத்தரைக்கு வர வேண்டிய வேலைக்காரி வேணி, இன்னும் வரவில்லை. முன்னறையில் தொலைக்காட்சியில் ஏதோ மௌனமாய் ஓடிக் கொண்டு இருந்தாலும், மனம் ஒன்றவில்லை

கணவர் வேலைக்கும் பையன் கல்லூரிக்கும் சென்று விட்ட பிறகு, தனிமை பயமுறுத்துகிறது. யோசித்தாலே பதட்டம் வருகிறது, ஏதோ ஒன்று தன்னை பார்த்து சிரிப்பது போல

அதுவும் போக, தற்சமயம் அடிக்கடி அந்தக் கனவு. வீட்டின் கதவை படபடவென்று யாரோ தட்டுகிறார்கள், கோவிந்தம்மாள் கதவைத் திறக்கிறார். படரென்று அந்தப் பெண் உள்ளே நுழைந்து நின்றாள்

நடுவயதிருக்கும், ஆரடிக்கு மேல் உயரம், முகம் ஒரு பக்கம் சாந்தமாகவும் மறுபக்கம் விகாரமாகவும் இருந்தது

மஞ்சள் நிற சேலை உடுத்தி இருந்தாள், கை முழுவதும் கண்ணாடி வலையல் அணிந்திருந்தாள்

“இது தான் ஓன்வீடா?”

“ஏய் யாரு நீ? என்ன வேணும் ?”

அவள் பதில் சொல்லவில்லை

நடுக்கூடத்தில் நின்று வீட்டை சுற்றி சுற்றி பார்க்கிறாள், பின் தன் சேலை துடை வரை வழித்து நடுக்கூடத்தில் மூத்திரம் பெய்கிறாள்

இவ்வளவு தான் கனவு

கோவிந்தாள் மூச்சு திணறி பதறி எழுந்து விடுகிறார். மாதம் இரண்டு முறையாவது வந்து விடுகிறது

நினைக்கும் போதே வியர்த்து விட்டது. அதே கனவு, கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே வருகிறது

‘கடவுளே என்னை இந்த துர்சொப்பனத்திலிருந்து காப்பாத்தப்பா’

காலிங்பெல் அடித்த தன்மையிலேயே அது வேலைக்காரி வேணி தான் என்பது புரிந்துவிட்டது. காலிங்பெல்லுக்கு வலிக்காமல் ஒரு மெல்லிய ஒற்றை அழுத்தல்

குக்கூ என்று கூவத் துவங்கிய குயில் பாதியிலேயே மெளனித்து விடும், ஏழையின் அழைப்பு

கோவிந்தம்மாள் தன் பாரமாகிப் போன பருத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு வாசல் நோக்கி நடந்தார். இந்த பாழாய்ப் போன சர்க்கரை வியாதி தன் வாழ்கையை உப்பு சப்பற்றதாக்கி விட்டதை சபித்தபடி

“கொஞ்சம் லேட்டாயிருச்சுமா, கடகடன்னு எல்லாத்தையும் முடிச்சு கொடுத்துற்றேம்மா”

“சரி சரி சீக்கிரம் போ, அய்யா வேற வந்துருவாங்க”

“தோ முடிஞ்சிறும்மா”

பரபரவென்று வேலைகளை ஆரம்பித்தாள். வீட்டை பெருக்கி, பாத்திரங்களை கழுவி, துணிகளை துவைத்து முடித்த போது மணி இரண்டரை ஆகி விட்டிருந்நது

இடுப்பு கடுகடுத்தது, பசியால் தலைவலித்து. காபி குடித்தால் தேவலாம் போல இருந்தது, ஆனால் குடுத்தால் தான் குடிக்க வேண்டுமென்கிற வைராக்கியம், கேட்கவில்லை

வேணிக்கு நாற்பத்தி எட்டு வயதை போல தெரியாத, உருவி விட்டார் போன்ற உடம்பு. தினம் பத்து பன்னிரெண்டு மணி நேர வேலையென்றாலும், சலிக்காமல் செய்கிறாள்

பனிக்காலங்களில் வரும் இருமல் தொந்தரவு தவிர, பெரிதாய் உடம்பு தொந்தரவு செய்வதில்லை

அந்த சம்பவத்திற்கு பிறகு, கட்டியவன் பிரிந்த பிறகு, கதறி கலங்கி கண்ணீர் வற்றிய பிறகு இந்த வைராக்கியம் பிறந்தது

ஒரே பெண் தான். யாரிடமும் கையேந்தாமல், சோரம் போகாமல் வளர்த்து விட்டாள். இந்த கல்யாணம் மட்டும் முடிந்து விட்டால் போதும்

நேற்று கூட கூடுவாஞ்சேரியிலிருந்து பெண் பார்த்து விட்டு போனார்கள். ஒரு வகையில் சொந்தக்காரப் பையன் தான்

‘பாக்க நல்ல மாரி தான் தெரியுறான், எதோ மெடிக்கல் ரெப்பாம். மாசம் 25 ஆயிரம் வருங்குறான், நீங்க பாத்து செய்ங்க அத்த’ன்னு சொல்லிட்டு போய்டான்

‘மொட்டையசாமி முடிச்சு கொடுத்துருய்யா, இந்த வருச திருவிழாக்கு கெடா வெட்டி மொட்ட போட்டுறன்யா’ மனதுக்குள் நூறாவது முறையாக நோர்ந்து கொண்டாள்

“என்ன வேணி வந்ததுல இருந்து நானும் பாத்துட்டு தான் இருக்கேன், ரொம்ப யோசனையாவே இருக்க”

கோவிந்தம்மாளள் காபி டம்ளருடன் உலுக்கிய பிறகு தான் நினைவுக்கு மீண்டாள்

மடமடவென்று அன்னாந்து குடித்து விட்டு, காபி டம்ளரை மறுபடி கழுவி வைத்து விட்டு, “பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், அந்த ரோசனைதாம்மா. கொறஞ்சது அஞ்சு சவரனாவது போடனும்லம்மா”

“எவ்ளோ சேத்து வச்சிருக்க?”

“எங்ங்கம்ம்மா ரெண்டு பவுனுக்குநாக்கு தள்ளுது, அன்னைக்கு மட்டும்…” வேணி மௌனமாகி விட்டாள்

“என்ன அன்னைக்கு மட்டும்?” என கோவிந்தம்மாள் கேட்க

இப்பொழுதும் துல்லியமாக நினைவில் இருக்கிறது அந்த துயரம்

“நல்ல ஞாபகம் இருக்கும்மா. மதுரையில சித்திரை திருவிழா, அழகர் எதிர்சேவை. கள்ளழகர் அழகர் கோவில்ல இருந்து மீனாட்சி கல்யாணத்துக்கு கெளம்பி வாராரு, ஊரோ ஜேஜேன்னு அழகர் கோவில்ல இருந்து தல்லாகுளம் கோரிப்பாளையம் வரைக்கும் சனம் மொக்கிது. பஸ்ஸெல்லாம் நிப்பாட்டி புடுவாய்ங்க.

வீட்ல ஐயா கல்யாணம் முடிந்த 3 மாதத்தில் போடுறதாச் சொன்ன 15 பவுன் நகையையும், காட்டை வித்துத் தந்த எண்பதாயிறம் பணத்தையும் எடுத்துகிட்டு ஆட்டோவுல மெயின் ரோட்டுல உடமாட்டாங்ன்னு எங்கெங்கையோ சுத்தி சுத்தி வாரன்

நடுவுல நிப்பாட்டி நிப்பாட்டி யாராரோ சனம் ஏறுது எறங்குது. ஒரு வழியா தல்லாகொலத்துல எறங்கிட்டேன். பத்தெட்டு தான் நடந்திருப்பேன், சிறுக்கிக்கு அப்ப தான் ஒரைக்கி கையில இருந்த பைய காணோம். கரன்டு கம்பில கைய வச்ச மாரி தூக்கிப் போட்டுறுச்சு

அல்லு போச்சு, அய்யோ அம்மா பையி பையின்னு கத்துறேன். சாமிய பாக்க வந்த சனம் பூராம் என்ன பாக்குது, என்னமா என்னமாங்குது. வாயில வேறு எதுவும் வரல. ஆட்டோவ தேடி கூட்டத்துல ஓடுறேன், ஆட்டோவ காணோம். பையித்தியமே புடிச்சி போச்சு”

அந்த நிகழ்வை மறுபடியும் ஒருமுறை வாழ்ந்தாள், அவள் உடல் சிலிர்த்துக்கொண்டது, மயிர்கூச்செரிந்தது

கோவிந்தம்மாள் உறைந்து போயிருந்தார், எதுவும் பேசவில்லை. அவள் உதடுகள் மெலிதாய் துடித்ததை, உள்ளிழுத்து மறைத்துக் கொண்டாள்

இதை நூறு பேரிடமாவது சொல்லிருப்பாள் போல, ஒரு அளவுக்கு மேல் அவளே தன் கதையை மூன்றாம் நபர் போல சொல்வாள். ஆனாலும் ஒவ்வொரு முறையும் முதல் முறை போல அழுகிறாள்

“அப்புறம்… எங்க போனேன் எப்படி வீட்டுக்கு வந்தேன் எதுவுமே தெரியல. டேசன்ல கம்ளைன்ட் கொடுத்தோம். பாக்குறோம், கெடச்சா தகவல் தாரம்னு சொன்னதோட சரி. இருவது வருசமாச்சு இன்னும் என் நகையும் பணத்தையும் தேடுறாய்ங்க.

அப்பறம் என்னம்மா, ஏமாத்தி கல்யாணம் பண்ணிவச்சிட்டீங்கன்னு மாமியார் வூட்ல கொடுமை. முடியலமா, வயித்துல மூனு மாச புள்ள, போடான்னு வந்துட்டேன். அந்த நாயி இன்னொரு கல்யாணம் பண்ணிகிச்சு. ஹம்ம்ம்ம்ம்… எம்மவளுக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா போதும், பாப்போம் அவ தலையில என்ன எழுதியிருக்குன்னு”

வேணி கிளம்பி போய்விட்டாள். கோவிந்தம்மாள் மட்டும் அங்கேயே உட்கார்ந்து இருந்தாள்

றுநாள் வேணி வந்த போது, கோவிந்தம்மாள் உள்ளே சென்று வந்து வேணியின் கையில் அந்த நோட்டுக்கட்டை திணித்தவுடன் உறைந்து போனாள்

“அய்யோ என்னமா இது, இவ்ளோ பணம் எதுக்குமா?”

“வச்சுக்கோ வேணி, ஒன் நெலம யாருக்கும் வரக் கூடாது. நீதான் வாழ்க்கைய தொலச்சுட்ட, உன் பொண்ணாவது நல்லாயிருக்கட்டும். பத்தாயிரம் தான், எதோ என்னால முடிஞ்சது”

வேணி அழுது விட்டாள், சட்டென்று கோவிந்தம்மாவின்  காலில் விழுந்தாள்

“தெய்வம்மா நீங்க… கொலசாமி.. நான் எப்படி இந்த கடன தீப்பேன்”

“சரி சரி விடு, சக மனுஷா கஷ்டப்படுறத பார்த்துகிட்டு எனக்கென்னனு இருந்தா நா என்ன மனுஷி. இத நீ திருப்பிக் கொடுக்க வேணாம், உன் பொண்ணு கல்யாணத்துக்கு என்னோட மெய்யீன்னு நெனச்சுக்கோ”

வேணியால் நம்ப முடியவில்லை

“நெசமாவா சொல்றீங்கமா?” திரும்பத் திரும்பக் கேட்டாள்

“ஆமா நீ இந்த பணத்தை திருப்பித் தர வேணாம், பாத்து பத்திரமா வீட்டுக்கு எடுத்துட்டு போ, இதையும் தொலச்சிடாத”

வேணி அதை ஜாக்கெட்டுக்குள் சொருகிக் கொண்டாள். அன்று அவள் கண்ணில் கோவிந்தம்மா குலசாமியாகத் தான் தெரிந்தாள்

இத்துடன் கதை முடிந்து விட்டாலும், கோவிந்தம்மாளின் சொந்த ஊர் மதுரை என்பதும், அன்று வேணி தவறவிட்ட பையை யாருக்கும் தெரியாமல் கோவிந்தம்மாள் எடுத்து வந்ததும், அந்த நகையையும் பணத்தையும் வைத்து தான் இருபது வருடங்களுக்கு முன் முகப்பேரில் சல்லிசாய் இந்த இடத்தை வாங்கியதும், பாவம் வேணிக்கு தெரிய வாய்ப்பில்லை

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

  1. அத்தனை பணத்திற்கு வெறும் பத்தாயிரம் தானா பரிகாரம்? இப்போக் கூட மனசு வரலையே!

தேயாத வெண்ணிலவு (சிறுகதை) -✍ வ.நிறோஜினி, ஸ்ரீலங்கா

நகல் (சிறுகதை) -✍ நாகராஜ் சுந்தரமகாலிங்கம், சென்னை