in ,

சொற்களின் ஆளுமை (சிறுகதை) -✍ மாக்ஸிம் சூர்யா, கடலூர் மாவட்டம்

சொற்களின் ஆளுமை (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 89)

தூங்காமல் வெறுமனாக கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தான். நேரம் ஆகிவிட்டதா என்று பார்ப்பதற்காக மட்டும், அவ்வப்போது கண்களைத் திறந்து சுவரில் மாட்டியிருந்த வட்ட வடிவ கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான்.

இன்னும் கொஞ்ச நேரம் தான் இருந்தது. ‘இப்போது தான் செய்யப் போகும் காரியத்தை பார்த்து எல்லோரும் வாயடைத்துப் போய் விடனும்’ என்று மனதில் உள்ளூர மகிழ்ந்தவாரே படுத்திருந்தான்.

சிறிது நேரத்திற்கு பிறகு படுக்கையை விட்டு எழுந்து, காலையிலேயே தான் வாங்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் பீரோவிலிருந்து எடுத்தான்.

லைட்டை போட்டால் எங்கு மனைவி எழுந்து கொள்வாளோ என்ற அச்சத்தில், மஞ்சள் நிறமாக எரிந்து கொண்டிருந்த ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்திலேயே, தன் வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கினான்.

சிறிய மஞ்சள் நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் மங்கிய வெளிச்சத்தில் வெளிறிய நீல நிற வர்ணம் பூசப்பட்டு இருந்த சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரம், நேரம் 11 :55 காட்டியது

சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். அதற்குள் தன் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்து இருந்தான்.

சிவப்பு நிறத்தில் மஞ்சளும் வெள்ளையும் கருப்புமாக பொட்டு வைத்தார் போன்று இருந்த பலூனை பெரிதாக ஊதி, தூங்கிக் கொண்டிருந்த ரம்யாவின் காதருகே சென்று சிறிது நேரம் அமைதியாக காத்து நின்றான்

திடீரென்று தன் கையில் வைத்திருந்த பலூனை டப் என்று பெரும் ஓசையுடன் உடைத்தான். ஏதோ ஒரு பெரிய ஒலி காதருகே வெடித்ததை கேட்டு பதற்றத்தில் திடுக்கிட்டு எழுந்தாள் ரம்யா

தூரத்திலிருந்து மாதா கோவிலின் மணியோசை நேரம் பன்னிரண்டு ஆனதை அறிவித்துக் கொண்டிருந்தது.

“ஹாப்பி பர்த்டே மை டியர்” என்று பெரும் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டே கூறினான்.

அவன் வாழ்த்தியதற்கு பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாதவளாய், சின்ன புன்முறுவலுடன் “தேங்க்ஸ்ங்க” என்று மட்டும் சொன்னாள்.

‘வீடு முழுக்க இவ்வளவு அலங்காரம் செய்தும், இவளுக்கே தெரியாமல் பிறந்தநாள் கேக்கை வாங்கி வந்து சரியாக 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று பார்த்தால், பெருசா எதுவும் அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக நன்றி மட்டும் சொல்கிறாளே’ என்று நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டவனாய், கோபத்தில் பக்கத்தில் இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்

பெட்டை விட்டு எழுந்து கலைந்திருந்த புடவையை சரி செய்து கொண்டு, நடப்பதற்கு இடையூறாக மர நாற்காலியில் ‘ஹாப்பி பர்த்டே மை டியர்’ என்று எழுதி இருந்த கேக்கை நாற்காலியோடு சேர்த்து தள்ளினாள்

நாற்காலியை ஓரமாக தள்ளி வைக்கும் போது தரையில் போட்டிருந்த டைல்ஸில் கிரீச் என்று ஒலி எழுந்தது. சிறுபிள்ளை போல் உடைந்த பலூனை கையில் வைத்து சப்தம் எழுப்பிக் கொண்டு கோபத்தில் உட்கார்ந்திருந்த கணவனின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் ரம்யா

ரம்யா அருகில் வந்து அமர்ந்தது பிடிக்காதவனாய், கோபத்தில் திரும்பி உட்கார்ந்தவனின் முகவாய் கட்டையை செல்லமாக பிடித்து திருப்பி, “நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க, நான் பர்த்டே கொண்டாடுவதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு” என்று துக்கம் கலந்த குரலில் ரம்யா கூறினாள்

“பர்த்டே செலப்ரேட் பண்றத விட்டுட்டியா? ஏன், எதனால விட்டுட்ட? நமக்கு கல்யாணம் ஆனதக்கப்புறம் வர உன்னோட முதல் பிறந்தநாள் இது. எவ்வளவு பெருசா கொண்டாடலாம்னு இருந்தேன், இப்படி சொல்றியே” என்று ரம்யாவின் கணவன் வருத்தப்பட, அந்த நாள் நினைவுகளை கணவனிடம் பகிரத் தொடங்கினாள் ரம்யா

சிரியர் பயிற்சி பள்ளியில் முதல் நாள் ரம்யா கொஞ்சம் பதற்றமாக இருந்தாள்.

“தனக்கு ஆங்கில இலக்கியம் படிக்க ஆசை” என்று அப்பாவிடம் கூறிய போது

“அதுலாம் ஒன்னும் தேவை இல்ல, காலேஜ் மூணு வருஷம் படிச்சிட்டு அதுக்கப்புறம் B.Ed படிச்சு எக்ஸாம் எழுதி வேலைக்கு போகணும்ங்கிறது ரொம்பவே கஷ்டம்.

நம்ம குடும்பம் இப்ப இருக்கிற நிலைமைக்கு, நீ டீச்சர் டிரெய்னிங் ரெண்டு வருஷம் முடிச்சிட்டு ஏதாவது கோச்சிங் சென்டர் சேர்ந்து படிச்சா, சீக்கிரமாவே அரசாங்க வேலைக்கு போயிடலாம்னு கோதண்டம் மாமா சொல்றாரு

எனக்கும் அதான் சரின்னு படுது. பொண்ணுங்க டீச்சர் வேலைக்கு படிக்கிறது தான் பாதுகாப்பாகவும் பெருமையாகவும் இருக்கும்” என்று சொன்னவர்

ரம்யாவின் விருப்பத்தை கேட்காமலே, வடலூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அட்மிஷன் போட்டு விட்டார். ரம்யா பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் சீட்டும் கிடைத்து விட்டது.

பதற்றத்தோடு உள்ளே நுழைந்த ரம்யாவிற்கு, பெரும் ஆச்சரியமாக இருந்தது. வகுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தனர். அதிலும் வயதில் மூத்த பெண்களே அதிகம் இருந்தனர்

ஆண்கள் ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். முதலில் ஆச்சரியமாக இருந்தாலும், அதிக அளவில் பெண்கள் இருந்ததால் கொஞ்சம் மனம் நிம்மதி அடைந்தாள்

பின்னால் இருந்த அனைத்து பெஞ்சுகளிலும் மாணவ ஆசிரியர்கள் உட்கார்ந்திருந்தனர். கரும்பலகைக்கு முன்பாக இருந்த முதல் பெஞ்சில் மட்டும் இடம் இருந்தது.

அதில் ஒரே ஒரு மாணவி மட்டும் உட்கார்ந்திருந்தாள். கொஞ்சம் தயக்கத்துடன் சென்று முதல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள் ரம்யா

அன்று முதல் வகுப்பு, ‘கணிதம் கற்பித்தல்’. ஒல்லியான சிவந்த தேகம், புதிதாக சுண்ணாம்பு அடித்த சுவற்றில் சிறுபிள்ளைகள் கரியல் கிறுக்கியதை போன்று முன் வழுக்கை விழுந்த தலைமுடி

ஒடுங்கி லேசாக குழி விழுந்த கன்னங்கள். குகையிலிருந்து பூனைக்குட்டி எட்டிப் பார்ப்பது போன்ற சிறிய கண்கள் என பார்க்கவே மிரட்டும் தொனியில் இருந்தார் உலகநாதன் ஆசிரியர்

அனைத்து மாணவர்களும் கணித ஆசிரியர் ரொம்ப கெடுபிடியான பேர்வழியா இருப்பாரோ என்று தான் நினைத்தார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தான் தெரிந்தது, அவர் மாணவர்களிடம் அன்பாக பழகும் தன்மை கொண்டவர் என்று

“எங்க தோட்டத்துல விளையுற பலாப்பழம் போன்றவருடி இந்த உலகநாதன் வாத்தியார்” என்று, பாசிகுளத்தில் இருந்து படிக்க வந்த சுகந்தி எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பாள்

“பலாப்பழம் மேலோட்டமாக பார்க்க கரடுமுரடாக இருந்தாலும், உள்ள இருக்கிற சொலை தித்திப்பாய் இருப்பதைப் போல் உலகநாதன் இனிமையானவர்” என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.

உண்மையில் அவரும் அப்படிப்பட்டவர் தான். கணிதம் கற்பத்தலன்றி இடையிடையே உலக நிகழ்வுகளையும் பொது அழறிவுகளையும் அனுபவரீதியான  சின்ன சின்ன கதைகளையும் சொல்லி மாணவர்கள் சோர்வடையாமல் பாடம் நடத்துவார்.

பள்ளி நாட்களில் கணிதம் என்றாலே பிடிக்காத சில மாணவர்கள் கூட, கணித வகுப்பு என்பதற்காகவே ஆவலோடு காத்திருப்பார்கள். மற்ற பாட வேளைகளில் கூட அவரையே வரச் சொல்லி தொந்தரவும் செய்தார்கள்.

ரம்யாவுக்கு எப்படியோ ஒரு மாத காலம் பல்லைக் கடித்துக் கொண்டு ஓடி விட்டது. அந்த சூழலும் கொஞ்சம் பழகிப் போயிருந்தது. ஆனாலும் பெரிதாக யாரிடமும் பழகாமல் தான் இருந்தாள்.

சுமார் ஒன்றரை மாத காலத்திற்கு பிறகு தான், முதல் முறையாக வகுப்பிற்கு வந்தாள் காவேரி. அவள் நடந்து வரும் தோரணையே யாருக்கும் அடங்காதவள் போல் இருந்தது

ரம்யா கூட முதல் நாள் வகுப்பிற்கு வரும் போது பயந்து பயந்து தான் உள்ளே நுழைந்தாள். மிகவும் இயல்பாக முகத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் பதற்றம் இல்லாமல் நடந்து வரும் காவேரியை பார்த்து, ரொம்ப திமிர் பிடித்தவள் போல என்று நினைத்தாள் ரம்யா.

ரம்யா மட்டுமல்ல, வகுப்பில் இருந்த அனைவரும் அப்படித் தான் நினைத்திருக்கக் கூடும். அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே காவேரி கருதியிருக்க மாட்டாள்.

 “ஹாய்… என் பெயர் காவேரி” என்று கையை நீட்டியவாறு ரம்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள் காவேரி

“ஹாய்… என் பெயர் ரம்யா” என்று ரத்தின சுருக்கமாக முடித்துக் கொண்டாள்.

காவேரியிடம் பேச கொஞ்சம் தயங்கியவளாக இருந்தாள் ரம்யா. ஆனால் காவேரி நன்றாக பேசக்கூடியவளாகவும் பழகக் கூடியவளாகவும் இருந்தாள். தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகவே பேசுபவளாக இருந்தாள்

ஓரிரு மாதங்களில் ரம்யாவும் காவேரியும் நல்ல தோழிகளாகி இருந்தனர். வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் ‘இணைபிரியா தோழிகள்’ என்று கூறி கிண்டல் செய்யும் அளவுக்கு, அவர்களின் நட்பு இறுகி இருந்தது

ஒன்றாகவே சாப்பிடுவது ஒன்றாகவே ஊர் சுற்றுவது என எப்போதுமே ஒன்றாக இருந்தனர். ஒரு சில விடுமுறை நாட்களில், காவேரி ரம்யாவின் வீட்டிற்கே வந்து விடுவாள்.

“வீட்ல யார்கிட்டயாவது சொல்லிட்டு வந்தயா” எனக் கேட்டால்

“போய் சொல்லிக் கொள்ள வேண்டியது தான்” என்று அலட்சியமாக சொல்வாள்.

“ரம்மு இன்னிக்கு செம திரில்லிங்கான சம்பவம் நடந்தது” என்று முகமெல்லாம் பூரிப்பு பொங்க புன்னகையுடன் கூறினாள் காவேரி.

“என்ன திரில்லிங்கான சம்பவம்?” என்று கேட்டாள் ரம்யா

“நான் தினமும் பஸ்ஸை விட்டு இறங்கும் போது பூக்கடை கிட்ட நின்னு ஒருத்தன் என்னையவே தினமும் பார்த்துக் கொண்டிருக்கானு சொன்னல்ல, அவன் இன்னைக்கு திடீர்னு என் முன்னால் வந்து, நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்லிட்டான்”

“அப்படியா… நீ என்ன சொன்ன?” என்று ரம்யா ஆர்வம் தாங்காமல் கேட்டாள்

“நான் என்ன சொல்லுவேன், ஒன்னும் சொல்லல. அவன நேரா பக்கத்துல இருந்த சிவன் கோயிலுக்கு கூட்டிட்டு போனேன். இது மாதிரி ஏதாவது நடக்கும் என்று தெரிந்து தான் என் பேக்ல ஒரு மஞ்ச கயிறு வச்சிக்கிட்டு இருந்தேன்.

அந்தக் கயிறை அவன் கையில் கொடுத்து, நீ என்ன உண்மையாவே சின்சியரா லவ் பண்றதா இருந்தா என் கழுத்துல இந்தத் தாலியை கட்டுனு சொன்னேன். அவ்வளவு தான் ஆளு அரண்டு போயிட்டான். ஆள விடு தெய்வமேனு ஒரு கும்பிடு போட்டுட்டு ஓடியேப் போயிட்டான்” என்று வகுப்பே அதிரும்படி சிரித்தாள் காவேரி

“சப்போஸ் அவன் தாலி கட்டியிருந்தா என்ன பண்ணியிருப்ப?”

“என்ன பண்ணுவேன். அவன அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு போய் இவன் தான் உங்க மருமகனு அறிமுகம் செஞ்சு வச்சுருப்பன். அப்புறம் உங்க எல்லாரையும் கூப்பிட்டு ட்ரீட் கொடுத்து இருப்பேன்” என்று இடது கண்ணை மூடி ஜாடை காட்டியவாறே சொல்லி சிரித்தாள்.

காவேரியை நினைத்தாலே ரம்யாவிற்கு ஆச்சரியமாய் இருந்தது. அதே சமயம் பெருமையாகவும் இருந்தது. இருக்க இருக்க ரம்யாவின் மனதில் காவேரி ஒரு படி மேலே போய் கொண்டிருந்தாள்

இப்படியே ஓராண்டு முடிந்து விட்டிருந்தது. அன்று வியாழக்கிழமை. காவேரி வகுப்பிற்கு வரவில்லை. ரம்யா மட்டும் வகுப்பில் தனியாக அமர்ந்திருந்தாள்

‘ஏன் இன்னும் காவேரி வரல? இன்னிக்கு என்னோட பிறந்த நாள் என்கிறதால ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்க போறாளோ? என்ன பண்ண போறா?’ என்ற யோசனையிலேயே மகிழ்ச்சி பொங்க காத்துக் கொண்டிருந்தாள் ரம்யா

அவள் வந்தவுடன் காவேரிக்கு முதலில் கொடுத்து விட்டு தான் பிறகு மற்ற மாணவர்களுக்கு கொடுக்கணும் என்று இனிப்பை கொடுக்காமலேயே பேக்கில் பத்திரமாக வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.

அன்றும் முதல் பாடவேளை வழக்கம் போல உலகநாதன் ஆசிரியர் கணிதம் கற்பித்தலை சுவைபட பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறி, குழந்தைகளுக்கு கணிதத்தை எப்படி கற்பிக்க வேண்டும் என்பதை நடத்திக் கொண்டிருந்தார்

முதல் பாடவேளை முடிய கொஞ்சம் நேரமே இருந்தது. அலுவலகத்தில் அக்கவுண்டன்ட் ஆக வேலை பார்க்கும் மஞ்சு, வகுப்பின் உள்ளே வந்து உலகநாதன் ஆசிரியரின் காதில் மெதுவாக ஏதோ சொல்லி விட்டு போனாள்

அவள் போனவுடன் சற்று இறுகிய முகத்துடன் பாடம் நடத்துவதை நிறுத்தி விட்டு, தயங்கி தயங்கி மாணவர்களைப் பார்த்து, “ஸ்டூடண்ட்ஸ்… ஒரு பெரும் துக்கமாயமான சம்பவம் நடந்து இருக்கு, அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை” என்று மங்கிய குரலில் சொன்னார்.

“என்ன சொல்லப் போகிறாரோ?” என்ற பெரும் குழப்பத்தில் மாணவ ஆசிரியர்கள் அனைவரும் அமைதியுடன் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நம்ம வகுப்பை சேர்ந்த காவேரி, இன்னிக்கு தற்கொலை பண்ணி இறந்துட்டாங்கனு ஆபீஸ்க்கு போன் வந்திருக்கு” என்று சொன்னது தான் தாமதம், வகுப்பே அதிரும்படி வெடித்து அழ ஆரம்பித்தாள் ரம்யா

அவளை சமாதானப்படுத்திக் கொண்டே அவளுடன் சேர்ந்து மற்ற மாணவிகளும் அழுதனர்.

சிறிது நேரம் பொறுமையாக இருந்து விட்டு, நம்மை விட்டு பிரிந்து சென்ற காவேரிக்காக ஒரு சில நிமிடம் அஞ்சலி செலுத்துவோம் என்று கூறினார் உலகநாதன்

அனைவரும் எழுந்து நின்று காவேரிக்காக அஞ்சலி செலுத்தினர். ரம்யாவின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளி, காவேரி ரம்யா என்று எழுதி ஹார்ட் போட்டிருந்த மர பெஞ்சில் விழுந்து வழிந்தது

கண்ணாடிப் பெட்டியில் வைத்திருந்த காவேரியின் உடலை பார்த்து கதறி கதறி அழுது கொண்டிருந்தாள் ரம்யா. மற்ற மாணவிகளும் அவளைப் பிடித்துக் கொண்டு அழுதனர்

மாணவர்கள் பூமாலையை இறந்து கிடக்கும் காவேரியின் உடலின் மேல் வைத்து விட்டு ஓரமாக நின்றனர். மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து போயிருந்த உடலை வாழயிலை சுற்றி வைத்து அதன் மேலே வெள்ளை துணி போட்டு மூடி இருந்தனர்.

நல்ல சிவப்பான காவேரியின் முகம், நெருப்பு பட்டு கருத்துப் போய், ஆங்காங்கே காயத்துடன் பார்ப்பதற்கே மிகவும் வருத்தமாக  இருந்தது.

காவேரி இறந்துவிட்டாள் என்பதை ரம்யாவால் நம்பவே முடியவில்லை. அதுவும் தற்கொலை செய்து கொண்டு விட்டாள் என்பதை அறவே நம்ப முடியவில்லை.

தற்கொலை என்பது கோழையின் தோழன் என்று எப்போதுமே சொல்லக் கூடியவள். தன் வீட்டருகே இருந்த பெண்ணொருத்தி கணவன் குடித்து விட்டு தினமும் அடிப்பதால் தற்கொலை செய்து கொண்டாள், இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று காவேரி எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பாள்

அப்படிப்பட்டவள் இப்படி ஒரு காரியத்தைச் செய்தால் என்பது யாருமே ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது.

“யாராவது அப்பன் திட்டுனதுக்கு எல்லாம் இப்படி செஞ்சுக்குவாங்களா” என்று சொல்லி மாறிமாறி மார்பில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் காவேரியின் அம்மா.

“தங்கமான பொண்ணு, எல்லார்கிட்டயும் அன்பாயிருப்பா. என்ன தான் ஆம்பள மாதிரி வாய் பேசினாலும், மரியாதையா நடந்துக்குவா. இப்படிப்பட்ட புள்ளய எங்கேயாவது போய் செத்து தொலைடி தேவிடியானு பெத்த புள்ளைய சொல்லுவானா.  அழுவறான்  பாரு குடிகார நாயி சொல்றதையும் சொல்லிட்டு இப்ப உக்காந்து அழுவறான்  பார் குடிகாரன்” என்று கூட்டத்தில் யாரோ பேசிக் கொண்டிருப்பது ரம்யாவின் காதில் விழுந்தது.

ழைய நினைவுகளில் இருந்து மீண்ட ரம்யா, வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே, “என்னோட பிறந்தநாள் அன்னைக்கி என் பெஸ்ட் ஃப்ரண்ட் இறந்ததால தான், இனிமே பர்த்டேவே கொண்டாடக் கூடாதுனு  முடிவு எடுத்தேன்” என தொண்டை அடைக்க கணவனிடம் கூறினாள்

“நீ சொல்றதெல்லாம் சரி தான் ரம்யா மா, உன் வருத்தமும் எனக்கு புரியுது. ஆனா நீ சந்தோசமா இருக்கறத தான உன் பிரெண்டும் விரும்புவா? அப்படி இருக்கறப்ப, இந்த ஸ்பெஷல் நாளை துக்க நாளா நீ நினைக்கிறது அவ ஆன்மாவுக்கு சாந்தி தருமா சொல்லு?” என கணவன் கேட்க, அவன் கூற்றில் இருந்த நியாயம் புரிந்து மௌனமானாள் ரம்யா 

மனைவியை எழுப்பி தோளோடு அணைத்த வாறே பால்கனிக்கு அழைத்துச் சென்றவன், “இங்க பாரு டா, சில விஷயங்கள் ரொம்ப ஸ்பெஷல், அதுல கல்யாணத்துக்கு பின்ன வர்ற முதல் பிறந்த நாளும் ஒண்ணு. அது காலத்துக்கும் நம்ம நினைவுல பொக்கிஷமா இருக்கணும்னு தான் நான் ஒண்ணு ஒண்ணையும் யோசிச்சு செஞ்சேன்” என்ற கணவனின் வருந்திய குரல், ரம்யாவின் மனதை நெகிழச் செய்ய 

“நீங்க சொல்றது சரி தாங்க, நான் சந்தோசமா இருக்கறத தான் காவேரி விரும்புவா. அவளோட இருந்த நல்ல நினைவுகளை நினைச்சு இனி இந்த நாளுல சந்தோசமா இருப்பேன்” என்றாள் ரம்யா

மகிழ்வுடன் அவன் தன் மனைவியை அணைத்துக் கொள்ள, அதே நேரம் ரம்யாவின் தலையை உரசியபடி ஒரு காகம் பறந்து சென்றது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    செல்வபிரபுவும்  ஐந்து ரூபாயும் (சிறுகதை) -✍ ரமா கவிதா, சென்னை

    எரியும் கனவுகள் (சிறுகதை) -✍ செ.வைஷ்ணவி, திண்டுக்கல்