sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

எரியும் கனவுகள் (சிறுகதை) -✍ செ.வைஷ்ணவி, திண்டுக்கல்

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 90)

து ஓர் மார்கழி பொழுது. கடும் குளிரால் சூரியன் கூட வர மறுத்து சற்று அதிகமாக உறங்கிக் கொண்டிருந்தது.‌

உறக்கம் கலைந்து எழுந்த ஆதவனின் கதிர்கள் மெல்ல வானில் படரத் தொடங்கிய, பனி சிந்தும் அந்த அதிகாலை விடியலில் துயில் கலைந்து எழுந்தாள் அதித்தி.

தினமும் காலையில் செய்தித்தாளோடு தன் பொழுதைத் தொடங்கும் தாத்தாவிற்கு, “குட் மார்னிங்” சொல்வது இவள் வழக்கம்.

கட்டிடவியல் படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் கட்டிட வடிவமைப்பாளராக பணிபுரிந்து வரும் அதித்தி, விடுமுறை நாட்களில் தன் தோழிகளின் வீட்டிற்குச் சென்று அவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பாள்.

அப்படி தான் அன்றும் தன் தோழி ஓவியாவின் விட்டிற்குச் சென்று வரலாம் என்று தோன்றியது அவளுக்கு.

உடனே அவள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பாட்டியிடம், “பாட்டி இன்னைக்கு நா ஓவியா வீட்டுக்கு போய்ட்டு வரவா?” என்று கேட்க

“அதுக்கு என்னடி மா, தாராளமா போய்ட்டு வா” என்றார் சிவகாமி

அதித்தி ஓவியாவை பார்க்க தயாராகிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த அவள் தாத்தா “அம்மாடி இன்னைக்கு நீ ஓவியா வீட்டுக்கு போறனு பாட்டி சொன்னா மா. ஓவியாவோட அம்மா தமிழரசிகிட்ட இத குடுத்திரு” என்றபடி அவள் கைகளில் ஒரு கோப்பை கொடுத்தார்

“சரி தாத்தா” என்று அதை வாங்கி தன் பைக்குள் வைத்து கொண்டாள். 

அதித்தியும் ஓவியாவும் கல்லூரியில் ஒன்றாக கட்டிடவியல் படித்தார்கள். இருவரும் குடும்ப நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாக தான் செல்வர்.

கட்டிடவியல் படித்த ஓவியாவிற்கு வரலாற்றுச் செய்திகள் மீது அவ்வளவு காதல். அந்த காதல் அவளை ஒரு சிறந்த பத்திரிக்கையாளராக மாற்றியது.

என்ன தான் அவள் ஒரு சிறந்த பத்திரிக்கையாளராக இருந்தாலும், கட்டிடக்கலை மேல் அவளுக்கு இருந்த ஆர்வம் துளியும் குறையவில்லை.

ஓய்வு நேரங்களில் அதித்தியும் ஓவியாவும் கட்டிடங்களைப் பற்றியும் அதிலிருக்கும் நுணுக்கங்களைப் பற்றியும் அதிகம் விவாதிப்பர். 

கட்டிடக்கலையையும், வரலாற்றையும் இரு கண்களாக கொண்ட ஓவியாவிற்கு, ஒரு பழக்கம் இருந்தது. செய்தித்தாள்களில் வரும் சில அரிய செய்திகளை சேகரிப்பதை  வழக்கமாக வைத்திருந்தாள்.

அன்று மதியம் அவள் வீட்டிற்கு வந்திருந்த அதித்தியை வரவேற்றாள் ஓவியா. இருவரும் சுவாரசியமாக பல விஷயங்களை அலசிக் கொண்டிருந்தனர்.

உரையாடல்களுக்கு இடையே அதித்தியின் கண்கள் வீட்டு ஹாலை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவள் கண்களில் வியப்பு, குழப்பம், பெருமை என பல உணர்ச்சிகள் நாட்டியமாடியபடி சுற்றியது.

இதை கவனித்த ஓவியா “என்னாச்சு அதித்தி, எதையோ புதுசா பாக்குற மாதிரி பாக்குற?” என்றாள் குழப்பத்தோடு

“அது ஒன்னுமில்ல டி, புக் செல்ஃப் பாத்தேன்”

“ஓ அதுவா நெறையா புக்ஸ் சேர்ந்திருச்சு டி, அதான் ஒரு செல்ஃப் புதுசா வாங்குனோம்” என்றாள் ஓவியா

அவர்களின் உரையாடலில் இந்த புக் செல்ஃப்பும் இப்போது சேர்த்துக் கொண்டது.

சிறிது நேரம் கழித்து ஓவியா அதித்தியிடம், அவள் சேகரித்து வைத்திருந்த செய்திகளை எல்லாம் ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று அடித்த காற்றில் சில பக்கங்கள் பறந்தது.

அவற்றை எடுக்க அதித்தியும் ஓவியாவும் ஓடினர். அப்போது ஒரு தாள் மட்டும் அருகில் எரிந்துக் கொண்டிருந்த விறகடுப்பிற்குள் விழுந்தது.

அதை பார்த்த ஓவியாவின் அம்மா, தமிழரசி சிறிதும் யோசிக்காமல் நெருப்பிற்குள் கையை விட்டு அந்த காகிதத்தை எடுத்தார்.

அவர் விரல்களில் ஏற்பட்ட காயங்களைப் பார்த்ததும் இருவரும் பதறினர். உடனே இருவரும் தமிழரசியை அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று முதல் உதவிப் பெற்றனர்.

வீடு திரும்பியவுடன், “ஏன்மா இப்படி பன்னீங்க? அது வெறும் பேப்பர் தான, அதுக்கு ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுத்தீங்க? கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்ல” என்று தமிழரசியிடம் கேட்டாள் அதித்தி

“உனக்கு அத பத்தி தெரியாது, அதுல நெறையா பேரோட கனவு இருந்துச்சு” என்றார் தமிழரசி புன்னகைத்தபடி

“உடம்ப பாத்துக்கோங்க” என்று சொல்லி அவள் தாத்தா கொடுத்தனுப்பிய கோப்பை அவளிடம் ஒப்படைத்து விடைபெற்றாள்.

அன்று நடந்தது அதித்தியின் மனதில் தீராத பாதிப்பை ஏற்படுத்தியது. அன்று நடந்ததைப் பற்றியும் தமிழரசியின் பதிலை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தாள்‌.

இரவு வெகு நேரமாகியும் உறக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தவள், ஒருவழியாக உறங்க சென்றாள்.

உறக்கத்தில், அவள் தினமும் ஓர் அழகிய கட்டிடத்திற்குச் சென்றாள். ஓங்கி வளர்ந்த அந்த பளிங்கு நிற கட்டிடத்தில் அமைதி உறைந்திருந்தது. மழை தீண்டும் போது எழும் மண் வாசனை போல் ஏதோ ஒரு புதுவித வாசம் அந்த கட்டிட சுவர்களுக்குள்.

அறிவொளி வீசிக் கொண்டிருக்கும் அந்த கட்டிடத்தை நிலவொளி இன்னும் அழகாக்கி கொண்டிருந்தது. அந்த கட்டிடத்தை நோக்கிய அவளது பயணம் தினமும் தொடர்ந்தது.

அங்கு வரிசையாக அடுக்கப்பட்டிருந்த மேசைகளும் நாற்காலிகளும் அவளிடம் ஏதோ ஒன்றை சொல்லாமல் சொல்வதாய் ஓர் உணர்வு. அந்த புதிர்க்கான விடையை தேடி அவளின் கால்கள் அந்த கட்டிடத்திற்குள் தினமும் பிரவேசித்தது.

ஒரு நாள் அந்த கட்டிடத்தை விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே வந்தாள். அவள் வெளியே வந்தவுடன் திடீரென அந்த கட்டிடம் அவள் கண் முன்னே தீப்பிடித்து எரிந்தது. 

திடுக்கிட்டு எழுந்தவளுக்கு, அப்போது தான் அது கனவென்றுப் புரிந்தது

‘ச்ச கனவா? அது என்ன பில்டிங்? அவ்ளோ அழகா இருந்துச்சு, ஆனா கடைசில ஏன் தீப்பிடிச்சு எரிஞ்சிச்சு? ஒருவேளை இது தான் அந்த மேசைகளும் நாற்காலிகளும் நம்மகிட்ட சொல்ல வந்துச்சோ?’ என தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவளிடம்

“என்னடிமா காலைல எழுந்த உடனே யோசன” என்று சிவகாமி கேட்க

“என்ன விடிஞ்சிருச்சா? அது ஒன்னும் இல்ல பாட்டி, கனவு ஏன் வருதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள்.

“இதுல என்ன யோசன, படுக்கும் போது எதையாச்சும் நெனச்சுட்டே படுத்தா அது கனவா வரும். அப்படி என்ன கனவு கண்ட” என்ற பாட்டியிடம்

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி, சும்மாதான் கேட்டேன்” என்றாள்.

அன்று முழுக்க அந்த கட்டிடத்தை பற்றிய சிந்தனை தான் அவளுக்கு.

தன் கைபேசியை எடுத்து ஓவியாவை அழைத்து, “அம்மாக்கு இப்போ எப்படி இருக்கு” என்று நலம் விசாரித்து அழைப்பை துண்டித்தாள்.

அப்போது அங்கு வந்த சிவகாமி, “என்ன மா, யாரு ஃபோன்ல?” என்று கேட்க

“ஓவியா பாட்டி” என்று தொடங்கி, முதல் நாள் ஓவியா வீட்டில் நடந்த சம்பவத்தைப் பற்றி கூறினாள்.

இதையெல்லாம் வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த தாத்தா “அட கடவுளே இப்போ தமிழுக்கு கை எப்படி இருக்கு” என்று கேட்டார்

“அததான் தாத்தா ஓவியாகிட்ட கேட்டுட்டு இருந்தேன், இப்போ பரவால்லனு சொன்னா தாத்தா”

“தமிழ் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க கூடாதா? அப்படி என்ன இருந்துச்சு அந்த பேப்பர்ல?” என்ற சிவகாமியிடம்

“அதான் பாட்டி நானும் கேட்டேன், ஆனா அவங்க சரியா பதில் சொல்லல” என்றாள் அதித்தி

“சரி டா, நீ சாப்ட வா” என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்றார் சிவகாமி. 

தாத்தாவும் அதித்தியும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தார்கள். சிவகாமி இருவருக்கும் உணவு பரிமாறினார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த அதித்தி திடீரென்று, “பாட்டி, ஓவியா வீட்டுல மட்டும் நிறையா புக்ஸ் இருக்கு, நம்ம வீட்டுல ஏன் இல்ல? இங்க யாரும் புக்ஸ் படிக்க மாட்டிங்களா?” என்று கேட்க, தாத்தா சாப்பாட்டு மேசையிலிருந்து பாதியில் எழுந்து சென்றார்.

அதித்திக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சிவகாமியிடம் அதை பற்றி கேட்கும் முன்னரே, “அது ஒன்னும் இல்ல டா, தாத்தாக்கு ஏதோ ஃபோன் வந்திருக்கும் போல, அதான் பாதிலயே எழுந்து போய்ட்டாரு. நீ சாப்பிடு” என்று சொல்லி சமாளித்தார். அதித்தியும் எதுவும் பேசாமல் சாப்பிட்டாள்.

காலை உணவை முடித்து விட்டு, ஒரு வெள்ளை தாளில் அந்த கட்டிடத்தை வரைய முயற்சி செய்தாள். கனவில் கண்ட கட்டிடத்தை நினைவுப்படுத்த அவள் எவ்வளவோ முயற்சித்தும், அவளால் முடியவில்லை.

பாதி கட்டிடம் தான் அவள் நினைவில் இருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் தன்னால் அந்த கட்டிடத்தை வரைய முடியாததை எண்ணி வருத்தப்பட்டாள்.

அந்த கட்டிடத்தை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டும் அவளுக்கு குறையவில்லை. அதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். 

ஓரிரு நாட்கள் சென்ற பிறகு மீண்டும் அவளுக்கு அதே கனவு. இம்முறை அவளுக்கு ஏதோ ஒருவித குழப்பம்.

‘திரும்பவும் அந்த பில்டிங் ஏன் நம்ம கனவுல வருது. இத நா எங்கயோ பாத்திருக்கிறேனே’ என்று யோசித்தபடி தன் குழப்பத்தைத் தெளிவுப்படுத்த தன் பாட்டியிடம் கேட்டாள்.

“பாட்டி என் கனவுல நா ஒரு அழகான பில்டிங்குள்ள இருக்கேன். நா வெளிய வந்த உடனே அந்த பில்டிங் தீப்பிடிச்சு எரியுது. இந்த கனவு எனக்கு ரெண்டு வாட்டி வந்துருச்சு. இதுக்கு என்ன அர்த்தம் பாட்டி” என்றவளிடம்

“அது ஒன்னுமில்ல அம்மாடி, நீ பகல் எல்லாம் எப்போ பாரு படம் வரஞ்சுட்டுப் பில்டிங் பத்தியே யோசிட்டு இருக்கல, அதான். வேற எதுவும் இல்ல. உனக்கு தான் இரண்டு நாள் லீவுல. இரண்டு நாளைக்கு அத பத்திலாம் யோசிக்காம நிம்மதியா இரு கனவு வராது” என்றாள்.

பாட்டி சொன்னதை உண்மை என்று நம்பியவள், தன் பாட்டியிடம் சமையல் கற்றாள். பின் தன் தாத்தாவோடுச் சேர்ந்துத் தோட்ட வேலை பார்த்தாள். அன்று முழுக்க அவள் பில்டிங் பற்றி யோசிக்கவே இல்லை.

ஆனால் அன்றும் அவளுக்கு அதே கனவு. என்ன செய்வதென்று தெரியாமல் சீக்கிரமாக எழுந்து வாசலுக்குச் சென்றாள். அந்த அதிகாலை தென்றல் அவள் தேகம் தழுவ சிலிர்த்தவள், பாட்டியின் குரல் கேட்டு உள்ளே சென்றாள்.

“என்னடா இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட” என்ற தாத்தாவிடம்

“ஆமா தாத்தா தூக்கம் போயிருச்சு” என்றாள்.

வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருந்த பாட்டி “அம்மாடி இந்த பெட்டியை அந்த பரண் மேல வச்சிருடா” என்றார்

“சரி பாட்டி இதுல என்ன இருக்கு?” என்று கேட்க

“பழைய ஃபோட்டோஸ்டா”

“அப்போ நா பாக்றேன் பாட்டி” என்று சொல்லிப் பெட்டியை திறந்து ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கினாள்.

பக்கங்களை புரட்டிக் கொண்டு வந்தவள், ஒரு போட்டோவை பார்த்து “இந்த பில்டிங்கா?” என்று வியந்தாள்.

அவளின் ஆச்சரியத்திற்கான காரணத்தை அறிந்துக் கொள்ள, “என்னாச்சுமா” என்ற பாட்டியிடம்

“இந்த பில்டிங் தான் பாட்டி என் கனவுல வந்துச்சு. இது தான் தீப்பிடிச்சு எரிஞ்சுச்சு” என்று அதை சுட்டிக் காட்டினாள்.

அதை பார்த்தவுடன் அங்கு அமர்ந்திருந்த தாத்தா படக்கென எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

“பாட்டி இந்த ஃபோட்டோ தான் ஓவியா வீட்டுல இருந்துச்சு. அது தீக்குள்ள விழுந்தப்ப, அத எடுக்க போய் ஓவியா அம்மா கைல காயமாச்சு. எனக்கு இப்போ தான் அது நியாபகம் வருது. ஆமா இத பாத்த உடனே ஏன் தாத்தா எழுந்து வெளியே போயிட்டாரு” என்று அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, அந்த போட்டோவை கையில் வாங்கி பெருமூச்சு விட்டார் சிவகாமி.

“அம்மாடி இது யாழ்ப்பாணத்தில இருந்த ஒரு நூலகம். ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம். இந்த நூலகத்துல தான் தமிழரசியோட அப்பா சுப்ரமணியன் வேலை பார்த்தார். உங்க தாத்தாவுக்கும், தமிழோடு அப்பாவுக்கும் புத்தகம்னா அவ்ளோ பிடிக்கும்.

ரெண்டு பேரும் மணி கணக்குல அந்த நூலகத்துல தான் இருப்பாங்க. வேல முடிஞ்சு உங்க தாத்தா வீட்டுக்குக் கூட வராம இருப்பாரே தவிர, அந்த நூலகத்துக்குப் போகாம இருக்க மாட்டார்.

உன் தாத்தாவும் தமிழோடு அப்பாவும் அந்த நூலகத்துல இருக்குற புத்தகங்கள படிச்சு அத தமிழ்ல மொழிபெயர்க்கனும்னு ஆசபட்டாங்க. ரெண்டு பேருக்குமே தமிழ் மேல அப்படி ஒரு பற்று.

நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுதுனாங்க, அதையெல்லாம் புத்தகமா வெளியிடலாம்னு முடிவுப் பன்னப்போ தான் அங்க போர் ஆரம்பிச்சுச்சு. அந்த போர்ல யார் யாரோ எதை எதையோ இழந்தாங்க. ஆனா உன் தாத்தாவோட இழப்பும், தமிழரசியோட இழப்பும்  ரொம்ப பெரிசு.

ஜூன் 1 1981 இரவை உங்க தாத்தாவால இப்ப வரைக்கும் மறக்க முடியல. அன்னைக்குத் தான் அவர் தினமும் போயிட்டு வந்த நூலகம் தீப்பிடிச்சு எரிஞ்சிச்சு. அந்த நூலகத்தோட சேர்ந்து அவரோட ஆருயிர் தோழனான சுப்ரமணியனும், அவரோட உயிருக்கும் மேலா நெனச்ச 97,000 புத்தகங்களும் எரிஞ்சுப் போச்சு.

அதுக்கப்பறம் எங்களால அந்த ஊர்ல இருக்க முடில,‌ கெளம்பி தஞ்சாவூர் வந்டோம். அன்னைக்கு எரிய தொடங்கிய நெருப்பு, இப்ப வரைக்கும் உன் தாத்தா மனசுலயும், தமிழரசி மனசுலயும் எரிஞ்சிட்டு இருக்கு.‌

அதனால தான் அந்த நெருப்பும், அதனால ஏற்பட்ட காயமும் அவளுக்கு பெருசா தெரியல. அத விட பெரிய காயம் அவ மனசுல இருக்கு. தன் அப்பாவோட கனவை நிறைவேத்த அந்த பொண்ணு தமிழ் படிச்சா.

அவ அப்பா நினைச்ச  மாதிரியே அவ நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுதிருக்கா, மொழி சார்ந்த புத்தகங்களும் எழுதிருக்கா. அன்னைக்கு தாத்தா உன்கிட்ட கொடுத்த கோப்புல என்ன இருந்துச்சு தெரியுமா? 

அதுல தமிழரசி அப்பா கைப்பட எழுதுன ஆராய்ச்சி கட்டுரை இருந்துச்சு. அத உங்க தாத்தாகிட்ட கொடுத்து சரி பார்க்க சொன்னார். அது தான் அவர் கடைசியா எழுதுனது. தீ விபத்துல இருந்து தப்பிச்ச அந்த பொக்கிஷத்த தான் நீ எடுத்துட்டுப் போய் தமிழரசி கிட்ட கொடுத்த.

அவ அந்த ஆராய்ச்சி கட்டுரைய ‘எரியும் கனவுகள்’ என்ற பேர்ல வெளியிட போறதா சொன்னா. அவள மாதிரியே அவ பொண்ணு ஓவியாவும் மொழி சார்ந்த சிந்தனைகள பத்திரிகை மூலமா மக்கள்கிட்ட கொண்டுப் போய் சேர்க்கறா  மா. நிச்சயம் தமிழரசி தன் அப்பாவோட கனவ ஒரு நாள் நிறைவேத்துவா” என்று அவர் முடிக்க, அதித்தியின் கண்களில் நீர் நிறைந்தது 

 அவளுக்கு உடனே தமிழரசியை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. “பாட்டி நா போய் தமிழ் அம்மாவ பாத்துட்டு வரேன்” என்றபடி வீட்டு வாசலுக்கு வந்தாள். 

வீட்டுத் திண்ணையில் கண் கலங்கியபடி அமர்ந்திருந்தார் தாத்தா. அவர் அருகில் சென்ற அதித்தி, அவர் கைகளை பிடித்து “இதெல்லாம் ஏன் தாத்தா என்கிட்ட சொல்லல?” என்று கேட்க

“நீ சின்ன பொண்ணு டா, உனக்கு சொன்னா புரியுமானு தெரில, அதான் சொல்லல. அந்த சம்பவத்துக்கப்புறம் நா புத்தகம் வாசிக்கறதயே விட்டுட்டேன் மா. அதான் அன்னைக்கு நீ பாட்டிக்கிட்ட ஏன் நம்ம வீட்டுல மட்டும் நிறையா புக்ஸ் இல்லனு கேட்டப்ப, நா என்னோட உணர்ச்சிகள காமிச்சுக்காம எழுந்து போனேன்.

அப்பப்போ தமிழரசியோட புத்தகங்கள மட்டும் படிப்பேன் டா. ஏன்னா அதுல இருக்குறது தமிழோட எழுத்து இல்ல, சுப்ரமணியோட எழுத்து. அவன் சாகும் போது தமிழுக்கு பத்து வயசு. இப்ப அவ எழுத்துல நா சுப்ரமணிய பாக்றேன். அவ அப்பா மாதிரி அப்படியே எழுதுறா மா” என்று கண்களை துடைத்துக் கொண்டார்

தாத்தாவை சமாதானம் செய்துவிட்டு தமிழரிசியின் வீட்டுக்கு சென்றாள் அதித்தி

அங்கு மேஜையில் தாத்தா கொடுத்தனுப்பிய கோப்புக்கு அருகில், தமிழரசி எழுதிய புத்தகம் ஒன்று இருந்தது.

அதன் பின் அட்டையில், “மொழி ஓர் அடையாளம். ஆயிரம் காகிதங்கள் அழிக்கப்படினும், ஆயிரம் ஏடுகள் எரிக்கப் படினும், மொழி வாழ்ந்துக் கொண்டே தான் இருக்கும், எரியும் கனலில்” எனப் பொறிக்கப்பட்டிருந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!