in ,

செல்வபிரபுவும்  ஐந்து ரூபாயும் (சிறுகதை) -✍ ரமா கவிதா, சென்னை

செல்வபிரபுவும்  ஐந்து ரூபாயும் (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 88)

ம்பெனிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த போது தான் அவரை பார்த்தேன். ஆம் அவரே தான். என் கால்கள் பரபரத்தது.

நெருங்கி சென்று உறுதிபடுத்திக் கொள்வோமா? என்று நினைக்கும் போது பஸ் வந்து விட்டது. இவர் முகம் மறைந்து சூப்பர்வைசரின் முகம் நினைவுக்கு வரவும், பஸ்சில் தொற்றிக் கொண்டேன்.  

இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவர் எதிர்பட்டார். எதிர்பாராத விதமாக தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். முதலில் கவனிக்கவில்லை

மாடியில் எனது அறை முன்பு  நின்று, கையகல கண்ணாடியை எந்த கோணத்தில் வைத்து ஷேவ் செய்வது என்று வாட்டம் பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் கீழே நடந்து சென்று கொண்டிருந்தார்.

கருப்பு பேண்டும் நீலகலர் பனியனும் அணிந்திருந்தார். வெள்ளை ஷூ. அவரே தான். உள்ளே போய் சட்டையை மாட்டிக் கொண்டு இறங்கி போவதற்குள், மறைந்து விட்டார்.

என் கண்களையே  என்னால்  நம்ப முடியவில்லை. கணேசன் சொன்னது உண்மை தான். 

சென்னையில் ஒரு வேலை கிடைப்பது என்றால் சும்மாவா?  எனக்கு சென்னையில் வேலை கிடைத்த போது என் நண்பர்கள் எல்லாம் சொன்னது அது தான்

கணேசன் தான் சொன்னான். “டேய் ரமேசு… சென்னைல நடிகருங்க எல்லாம் தெருவுல சாதாரணமா சுத்திக்கிட்டு இருப்பாங்களாம், எங்க மாமா சொல்லியிருக்காரு. அவரு முத்துராமன் ஜெமினி கணேசனை எல்லாம் ரோட்டில் பார்த்திருக்காராம். நீயும் யாரையாச்சும் பாத்தேனா, ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கி வச்சுக்க. நடிகர்கள பாத்தா பேப்பர்ல கையெழுத்து வாங்கிக்கரனுமாம்”

“எதுக்குடா?” என்று கேட்டேன்.

“அடுத்த வாட்டி பாத்தா அவுங்களுக்கு நினைவுக்கு வரனும்ல, அதுக்கு தான்” என்றான்.

கணேசனுக்கு சென்னையைப் பற்றி நிறைய  தெரியும். அதே போல் சினிமாவை பற்றியும். அவன் மாமா சென்னையில் சில காலம் வேலை பார்த்தவர். அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் ஒவ்வொரு கதை சொல்லுவார்.   

ஊரில் டவுனுக்கு சென்று காசு கொடுத்து வண்ணத்திரை புத்தகம் வாங்கிப் படிப்பவரும் அவர் மட்டுமே. அடுத்த முறை பார்த்தா எப்படியும் பேப்பர்ல கையெழுத்து வாங்கிடணும் என்று நினைத்துக் கொண்டேன்.  

அவர் என்னை அதிகம் காக்க விடவில்லை. அந்த சனிக்கிழமை பிற்பகல் ஷிஃப்ட் முடிந்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்தார். தெளிவாக பார்த்தேன்.

இந்த முறை நல்ல வெள்ளை பேண்டும் வெள்ளையில் குறுக்கும் நெடுக்குமாக மஞ்சள் பட்டையில் டிசைன் செய்த பனியனும் அணிந்திருந்தார்.  

வெள்ளை ரோஜா படத்துல போட்டிருந்த டிரஸ் அது. எங்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் பொதுவாக ஒரு டூரிங் டாக்கீஸ் இருக்கும். எல்லா ஊரிலும் ஓடி அடங்கின புது படங்கள் பழசாகி எங்கள் ஊருக்கு வரும்.

ஸ்க்ரீனில் மழை பெய்வது போல் ஆங்காங்கே கோடுகள் விழுந்தாலும் கலர் தெளிவாகவே இருக்கும். கழுத்தில் தங்க செயின் மின்னியது.  கூலிங் க்ளாஸ் போட்டு நாசுக்காக கர்சீப்பால் பௌடர் கலையாமல் முகத்தை ஒற்றியபடி வந்தார்.

சுருட்டை கிராப். அவரே தான், பிரபு. ஆனால் படத்தில் பார்ப்பதை விட சற்று தடிமன் குறைந்து இருந்தார். ஒருவேளை சினிமா பார்க்கும் திரை அகலமாக இருப்பதால் அப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.  

அவர் கூலிங் க்ளாஸ் போட்டிருந்ததால் என்னைத் தான் பார்க்கிறாரா என்று தெரியவில்லை. சிரித்து வைத்தேன், ஆனால் அவர் சிரிக்கவில்லை. கடந்து விட்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து கையில் பேனாவும் பேப்பரும் இல்லை. சே! என்று வெறுப்பானது. அடுத்த முறை தயங்க கூடாது என்று எனக்குள் உறுதியாக சொல்லிக் கொண்டேன்.

ஆனால் மற்றவர்கள் அவரை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஒருவேளை அடிக்கடி பார்ப்பதால் இருக்குமோ? மெயின் ரோட்டிற்கு வந்து ஆட்டோ பிடித்து போகிறார்.

அவர் வீடு இங்கு தான் எங்கேயோ இருக்க வேண்டும்.  ஆட்டோவில் போகிறாரே, நடிகர்கள் எல்லாம் காரில் தான் போவார்கள் என்று கணேசன் சொல்லியிருந்தான்.

ஒரு வேளை அவங்க அப்பா சிவாஜியும் நடிப்பதால் காரை அவர் எடுத்து சென்றிருக்க கூடும். அன்று முழுவதும் மஞ்சுவை என் நினைவில் இருந்து நகர்த்தி வைத்து விட்டு அவர் உட்கார்ந்து கொண்டார்

மஞ்சுவிற்கு என்னை பிடிக்க அவரும் ஒரு காரணம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு பிரபுவை பிடிப்பதற்கு காரணமே மஞ்சு தான். 

எனது ஊரில் கணேசனின்  மாமா தான் எஸ்.எஸ்.ல்.சி பாஸ் பண்ணி சென்னைக்கு சென்று வேலை பார்த்தவர். அடுத்த தலைமுறையில்  எங்களில் சிலர் மட்டுமே பக்கத்துக்கு ஊருக்கு சென்று கல்லூரியில் படித்தவர்கள்.

எங்கள் ஊருக்கு அருகே இருந்த டவுனில் புறநகர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த பாலிடெக்னிக் கல்லூரியில், நான், கணேசன்,  ராமமூர்த்தி, செந்தில், கொன்னைவாயன் எல்லோரும்

பட்டப்பேரு இல்லைங்க, ஒரிஜினல் பேரே அதான். அவங்க சாமி பேரு கொன்னைமரத்தையன். அவனுக்கு வாய் நீளம், அதான் அந்த பேரு

இனி இந்தியாவின் எதிர்காலம் பாலிடெக்னிக் மாணவர்களின் கையில் தான் என்ற கணேசனின் மாமா வழிகாட்டுதலின்படி, முழுவதும் கட்டி முடிக்கப்படாமல் இருந்த அந்த அலிபாபா குகைக்குள் சேர்ந்தோம்.

அங்கு தான் மஞ்சுவை பார்த்தேன். ஊரில் அத்தை மாமா பொண்ணுங்க எல்லாம் என்னை மாதிரியே  மொக்க பீஸாக சுற்றிக் கொண்டிருந்தாலும்,  நம்மை மதிப்பதில்லை என்ற காரணத்தினால் மஞ்சு பேரழகியாக தெரிந்தாள்.

பேரழகிகள் மொக்கை பசங்களைத் தான் தெரிவு செய்வார்கள் என்ற தெளிந்த ஞானத்தை, கொன்னையன் தான் சில பல எடுத்துக்காட்டுகளோடு எங்களுக்கு விளக்கியிருந்தான்.

அந்த நம்பிக்கையில்  மஞ்சுவை தீவிரமாக முறைக்க தொடங்கியிருந்தேன்.  அந்த முறைப்பு வீண் போகவில்லை. அவளும் அவ்வப்போது நான் பார்க்கிறேனா? என்று பார்க்கத் தொடங்கி, ஒரு மாதிரி செட்டாகி விட்டது.

பேச தொடங்கிய போது தான் அவள் சொன்னாள், “பிரபுக்கு மாதிரியே உங்களுக்கும் கன்னத்துல குழி  விழுகுது” என்று.

ஒரு நிமிடம் திகைத்து, “எந்த பிரபு?” என்றேன்

“நடிகர் பிரபு, அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள்

சற்று பெருமூச்சு விட்டு, “எனக்கும் பிடிக்கும்” என்றேன்

“ஆமாம் ரொம்ப அழகு,  ஸ்டைல்” என்றாள்.

“அவருக்காக வெள்ளை ரோஜா படத்தை நாலு முறை பார்த்திருக்கிறேன்” என்றாள்.  

“நானும் பார்த்தேன்” என்றேன், அம்பிகாவுக்காக என்று சொல்லவில்லை

அன்று மாலை வீட்டிற்கு சென்றதும் கண்ணாடியில் அப்படியும் இப்படியும் பார்த்தேன். பல்லை இளித்தும் பார்த்தேன். கண்ணாடியில் பாதரசம் போனதால் சரியாக தெரியவில்லை என்று நினைத்தேன்.

பேச்சுவாக்கில் கணேசனிடம், “மாப்ள… நான் சிரிக்கும் போது கன்னத்துல குழி விழுகுதா?” என்று கேட்டேன்.

அவன் ஏற இறங்க பார்த்து விட்டு, கன்னத்துக்கு மிக அருகில் வந்து உற்று பார்த்து விட்டு, “லைட்டா” என்றான்

“ஏண்டா திடீர்னு?” என்றவன், “என்ன அந்த புள்ள செட்டாகிருச்சா?” என்றான் மனதை படித்தவன் போல்

அசட்டு சிரிப்பு சிரித்தேன். “தெரியும்டா, பிரேக்ல பாத்ரூம் போறேனுட்டு அங்குட்டு போய் கடல போட்டுக்கிட்டு இருக்கிறது” என்றான் செந்தில்

“இல்லடா… அந்த புள்ள தான் என்ன திரும்பி திரும்பி பாத்துச்சு. சிரிச்சுச்சு. அதனால பேசினேன். பிரபுக்கு மாதிரி குழி விழுகுதுன்னு சொல்லுச்சு” என்றேன்.

கணேசனும், “எந்த பிரபு? பி செக்ஷன்ல இருக்கானே அவனா?” என்று கேட்டான். 

“இல்லடா நடிகர் பிரபு” 

கணேசன் விழுந்து விழுந்து சிரித்தான்

“நாம கூடவே சுத்திகிட்டு இருக்கோம். நமக்கு தெரியல, அந்த புள்ளைக்கு தெரிஞ்சிருக்கு இந்த குழி” என்றான்.  

பிறகு செந்திலை நோக்கி, “டேய் இவன் ஆத்தா சொல்லியிருக்கு. இவன் ஒரு தடவ கீழ விழுந்து கன்னத்துல கல்லு குத்திருச்சுன்னு. அதுல விழுந்த டொக்கத் தான் அந்த புள்ள பணக் குழின்னு நெனச்சுக்கிட்டு இருக்கு போல” என்றான்.  

கணேசனும் கொன்னையனும் கூட மஞ்சுவுக்கு நூல் விட்டுகிட்டு இருந்தாய்ங்க. “போங்கடா… உங்களுக்கு கடுப்பு” என்றேன்.  

“யாரு? எங்களுக்கு?  ஒண்ணுக்கு போனா கூட ஒன்னாத்தானேடா போவம். எங்ககிட்ட எதுக்கு மறைக்கிற?” என்றான் செந்தில்

பதிலுக்கு கொன்னை, “ஒண்ணா ஒண்ணுக்கு போற நமக்குள்ள ஒரு பொண்ணு வந்தா தனியா ஆக்கிறாளுங்க. பாத்துடி மாப்பிளை, டவுன் பொண்ணு. கொஞ்ச நாள்ல தனியா தொங்க விட்ருவா” என்றான்.

இவனுங்க கிட்ட கேட்டதே தப்பு என்று தோன்றியது. எப்படி இருந்தா என்ன? மஞ்சுவுக்கு என்னை பிடித்து விட்டது, அது போதும். 

மற்றவர்கள் அரியர் வைத்திருந்தார்கள். மஞ்சுவுக்காகவே முக்கி தக்கி பாஸ் பண்ணிவிட்டேன் நான்.

அவள் கொஞ்சம் வசதியான வீட்டு பெண். என் தகுதியை உயர்த்திக் கொள்ளத் தான் இந்த சென்னை வாசமே. அதில் சென்னைக்கு வந்து ஒரே வாரத்தில் லக்கி ப்ரைஸ் அடித்தது போல் பிரபுவை பார்த்திருக்கிறேன்.  

காலை ரூமில் கூட இருக்கும் குமார் அண்ணனிடம் பிரபு வீடு எங்கிருக்கிருக்கிறது என்று கேட்க வேண்டும். அவரும் மதுரை பக்கத்திலிருந்து இங்கு வந்து கடை கடையாக கடலை மிட்டாய் பாக்கெட் போடும் வேலை செய்து கொண்டு இருக்கிறார்.

அவருக்கு சென்னை நன்றாக தெரியும் என்று என் கூட வேலை செய்யும் சங்கர் சொல்லியிருந்தான்.  அவர் தான், “என் ரூம் மேட் காலி பண்ணிட்டு போய்ட்டான். என்கூட தங்கிக்கட்டும்” என்று சொன்னவர்.  

பிரபுவை பார்த்து ஒரு கையெழுத்து, முடிந்தால் ஒரு போட்டோவும்   எடுத்து விட்டால் போதும், மஞ்சு மிரண்டு விடுவாள். அப்புறம் என்ன ‘டும் டும்’ தான்.  

இங்கேயே வீடு பார்த்து அவளை கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று   ஒளிமயமான எதிர்காலத்தை நினைத்தபடியே தூங்கி விட்டேன். அன்று கனவில் மஞ்சுவுக்கு பதிலாக பிரபு வந்து முத்தம் கொடுத்தார்.   

மறுநாள் அவரிடம், “அண்ணே… இங்கே பிரபு வீடு எங்க இருக்கு?” என்று கேட்டேன்

“எந்த பிரபு?” என்று கேட்டார்.

“நடிகர் பிரபுண்ணே” என்றேன்

என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, “சிவாஜி வீட்ல தான்” என்றார்

‘மதுர லந்து’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, “அதாண்ணே… சிவாஜி வீடு எங்க இருக்கு?” என்று கேட்டேன்.  

“தி நகர்ல” என்றார்

“அது எங்கண்ணே?  பக்கத்துலையா?” என்று கேட்டேன்.

“கொஞ்சம் தூரம், பஸ்ல போகணும்” என்றார்

“கொஞ்சம் அட்ரஸ் தாறீங்களா?” என்று கேட்க,

“டேய்… காலங்கார்த்தால வேலைக்கு போறவன நிறுத்தி லந்த கொடுத்துக்கிட்டு இருக்கியா?” என்றபடி போய் விட்டார்.

‘அண்ணன் தூரம்ங்கிறார். ஆனா இவர் இங்க இருந்து போறாரே?  தனி குடித்தனம்  இருக்காரா?’  என்று குழம்பினேன்.  

மாலை முக்கு கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்த போது எதிர் சாரியில் அவர் நடந்து போய்க் கொண்டு இருந்தார்.

டீ கிளாஸை வைத்து விட்டு, “அண்ணே அண்ணே… ஒரு நிமிஷம்” என்று டீ கடைக்கார அண்ணன் கணக்கு எழுதுவதற்கு வைத்திருந்த பேனாவையும் பேப்பரையும் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு அவரை நோக்கி ஓடினேன்

வழி மறைத்து நின்று மூச்சு வாங்க, “வணக்கம்” என்றேன்

பதிலுக்கு, “வணக்கம்” என்றார்

குரல் சினிமாவில் கேட்பது போன்று இல்லை. ‘அண்ணே என்று சொல்வதா? சார் என்று சொல்வதா?’ என்று தடுமாறி “அண்ணே, சார் ஒரு கையெழுத்து” என்று பேனாவையும் பேப்பரையும் நீட்டினேன்.  

சில நொடிகள் என்னை பார்த்து விட்டு, “தம்பி ஊருக்கு புதுசா?”  என்றார்

“ஆமாண்ணே” என்று சொல்லும்போது என் குரல் எனக்கே கேட்கவில்லை.

பேப்பரை வாங்கி பார்த்து விட்டு, “கையெழுத்து போட ரெண்டு ரூபா கொடுக்கணும்” என்றார்

புரியவில்லை. இருந்தாலும்,  “ஓ…” என்று அவசரமாக சட்டை பாக்கெட்டில் இருந்த இரண்டு ரூபாயை எடுத்து கொடுத்தேன்

என்னை குனிய வைத்து முதுகில் பேப்பரை வைத்து கையெழுத்தை போட்டுக் கொடுத்தார்

“பத்திரமா வச்சுருப்பேண்ணா, அடுத்த முறை பார்க்கும் போது காட்றேன்” என்றேன்

தலையை தட்டிவிட்டு சென்றார். பேப்பரில் அவரை போலவே குண்டு குண்டாக  “அன்புடன் பிரபு” என்று எழுதியிருந்தார்.

என் கால்கள் தரையில் நிற்பதை உறுதி செய்த பின்னர், ரோட்டை கடந்து கடைக்கு சென்றேன். டீ கடைக்காரரிடம் பேனாவை நீட்டி விட்டு எல்லோரும் பார்க்கும் படியாக பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்தேன்.

டீ கடைக்காரர், “ஏடா… ஆ ஆள்கிட்ட கையெழுத்து வாங்கவா பேனாவை புடுங்கிகிட்டு ஓடின?” தலையில் அடித்துக் கொண்டார்.  

கடையில் இருந்த சிலர் சிரித்தனர். ”ரெண்டு ரூபா புடிங்கிருப்பானே?”
 என்று கேட்டார்.

“ஆமாண்ணே” என்றேன்

“டீய குடிச்சுட்டு போய் ஜோலி நோக்கு” என்றபடி வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.  தயங்கியபடி வந்தேன். 

இரவு குமார் அண்ணனிடம் பேப்பரை காட்டி, “அவரு கையெழுத்து போட்டு கொடுத்ததுக்கு டீ கடைல எல்லாம் சிரிச்சாங்க. ஏண்ணே?” என்றேன் பரிதாபமாக.

“அடபாவி அவனை பார்த்துட்டு தான் பிரபு வீடு எங்க இருக்குன்னு கேட்டியா?”  என்று அவரும் தலையில் அடித்து கொண்டார்.  

“ஏண்டா… கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா? அவர் எதுக்கு இங்க தெருவுலயும் ஆட்டோலையும் போக போறார்?  நானும் மொதல்ல பார்த்தப்ப ஷாக் ஆனேன். அவன் பேரு செல்வம், அச்சு அசலா பிரபு மாதிரி இருக்கிறதால ஊர்ல எவனோ உசுப்பேத்தி விட்டிருக்கான்

பிரபு மாதிரி ஹீரோ ஆகணும்னு ஆசைல சினிமால நடிக்க இங்க வந்திருக்கான். ஸ்டுடியோ ஸ்டுடியோவா ஏறி இறங்கியிருக்கான். அதான் இங்க ஏற்கனவே பிரபு பிரபுன்னு சிவாஜி புள்ளை பீல்டுல இருக்காரே?

அப்புறம்  நாயா பேயா அலைஞ்சு  பிரபு மாதிரி ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி  டான்ஸ், டிராமா ட்ரூப்புல அப்பப்ப டூப் பிரபு வேஷம் போட்டுக்கிட்டு இருப்பான்.  அது மூலமா இப்போ ரெண்டு படம் பிரபுக்கு டூப்  போட சான்ஸ் கிடைச்சிருக்குன்னு சொன்னான்” என்றார்

“டூப்னா என்னண்ணே?”

“பெரிய நடிகர்கள் ரொம்ப ரிஸ்க்கான காட்சில நடிச்சா அடிபடும்ல. அந்த காட்சிகள்ல அவங்க ஜாடைல சைஸ்ல இருக்கிறவங்கள நடிக்க வைப்பாங்க. அதான் டூப்”

“அப்ப நாம சினிமால பார்க்கிறோமே குதிக்கிறது, வண்டில பறக்கிறது எல்லாம் அவங்க இல்லையாண்ணே? ஊர்ல கைதட்டி விசில் பறக்கும். சண்டையெல்லாம் போட்டுக்குவோம் யாரு பெரியாளுன்னு?”

“நானும் ஒரு காலத்துல அப்படி தான் இருந்தேன்” என்றபடி தொடர்ந்தார்

“இங்க இருக்கிற ஆட்டோ ஸ்டாண்டு பழனி இவன் பிரென்ட். ஷூட்டிங் சமயத்துல அவனை கெஞ்சி ஆட்டோல போயிருப்பான். மூணு நாலு நல்ல டிரஸ்ஸும் ஒரு ஷுவும் வச்சிருப்பான்.  

வாங்கினதா ஆட்டைய போட்டதானு தெரியாது.  ரெண்டு  தடவ ரொம்ப கஷ்டம்னு கேட்டப்ப, நானே என் கூட கூட்டிகிட்டு போய் கம்பெனில டெம்பரரியா கடலை மிட்டாய் டெலிவரி பண்ண சொல்லி பேட்டா வாங்கி கொடுத்திருக்கேன்.

இந்த மாதிரி எங்கேயாவது யாராவது ஊர்க்காரன் ஏமாந்தவன் சிக்கினா தலையை தடவி காசு பாப்பான். அவன் குடியிருக்கிற வீட்டுகார தாத்தாவுக்கு வேலை செஞ்சு கொடுப்பான்.

அவர் வீட்டு மாடில ஒரு தகர கூரை போட்ட ரூம்ல தங்கியிருக்கான். ஒழுங்கா ஒரு வேலைய தேடிக்கன்னாலும் கேக்க மாட்டான். ஊருக்கும் போக மாட்டான்” என்று சொல்லி முடித்தார்.

இரண்டு நாள்கள் கழித்து  டீ கடையில் வடையும் டீயும் சாப்பிட்டு கொண்டிருந்த போது டூப் பிரபு வந்தார். டிப் டாப்பான உடைகள் இல்லை. கூலிங்கிளாசும் இல்லை.

சாயம் இறங்கிய பனியனும் கைலியும்  ரப்பர் செருப்புமாக   தூக்கு வாளியுடன் டீக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தார். என்னால் நம்ப முடியவில்லை.

அவரோ என்னை கவனித்தும் கவனிக்காதவர் போல தூக்கை கொடுத்து, “சேட்டா… ஒரு டீ, ரெண்டு வடை பார்சல். ஒரு சிங்கிள் டீ குடிக்க” என்றார்

டீ கடைக்காரர், அவரை பார்த்து, “ஏடோ தெண்டி… சின்ன பையன் ஊர் நாட்டான்கிட்ட கையெழுத்து போடறதுக்கு  மோசம் பண்ணி ரெண்டு ரூபா வாங்கியிருக்க?” என்று கேட்க

அவர் சிரித்து கொண்டே, “அவன் தான் வந்து கேட்டான், நானாவா போய் நான் பிரபுன்னு சொன்னேன்?” என்று டீயை வாங்கி ஊதி குடிக்க ஆரம்பித்தார்.  

“இந்த மாதிரியே பண்ணிக்கிட்டு இருந்தேன்னா ஒரு நாள் இல்ல ஒரு நாள் யாரெங்கிலும் உன்ன சவட்டிகளையும்” என்றார்.

“அப்ப பார்த்துக்கலாம் நாயர்”

“நிண்டே அக்கவுண்ட்டை செட்டில் செய்யடோ. அதான் ஒரு மூணு நாலு திவசம் ஷூட்டிங் போனேல?”

“பேட்டா முழுசா வரல சேட்டா, இருந்ததை அம்மாக்கு அனுப்பிட்டேன், வந்ததும் செட்டில் பண்ணிறேன்” என்றார்

நான் கிளாஸை வைத்து விட்டு திரும்பி நடந்தேன். பின்னாலேயே துரத்தி கொண்டு வந்தார் ‘செல்வ பிரபு’

“பிரதர் கோச்சுக்காதீங்க… நேர்ல பார்த்த நீங்களே ஏமாந்துடீங்கல. ஊர்ல உள்ளவுங்களுக்கு தெரியவா போகுது?  ரெண்டு பெரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்குவோம்.

ஊர்ல கொண்டு போய் காட்டுங்க. நம்ம பிரெண்டு ஒருத்தன் கேமரா வச்சிருக்கான், எடுத்து கொடுப்பான். ஒரு பைவ் ரூபீஸ் கொடுங்க போதும்” என்றார்.

தலை ஆட்டிவிட்டு வந்தேன். ரூமிற்கு வந்து யோசித்தேன்.

‘நம்ம சொன்னாத் தானே ஊர்ல தெரியும். போட்டோ எடுத்துக்கிட்டா ஊர்ல பிரெண்ட்ஸ்கிட்ட மஞ்சுகிட்ட  படம் காட்டலாம், மரியாதையை கூடும்’ என்று குறுக்குத்தனமாக யோசித்தேன்.

அவரை பார்த்து ஓகே சொன்னேன். ஒரு ஞாயிறு காலை என்னிடம் இருப்பதில் நல்ல சட்டையாக அணிந்து கொண்டு சென்றேன். அவரும் வெள்ளை பேண்டும் நீல கலர் பனியனும் அணிந்து கவரிங்செயின், மோதிரம் கூலிங்கிளாஸ்  மற்றும் ஷுவும் போட்டு கொண்டு வந்தார்.

ரோஸ்பவுடர் சற்று தூக்கலாக இருந்தது.  அருகில் இருந்த பூங்காவில் போட்டோ எடுத்துக் கொண்டோம். ஒரு சிலர் திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் சென்றனர்.  ஒரு ஐந்து ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு ரூமிற்கு வந்தேன்.

மறுநாள் கம்பெனியில் வேலைகளுக்கு இடையில் சங்கர் தபால் வந்திருப்பதாக கூறி ஒரு கவரை நீட்டினான். பிரித்தேன், மஞ்சுவின் திருமண பத்திரிக்கையை அனுப்பியிருந்தான் கணேசன்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

நகல் (சிறுகதை) -✍ நாகராஜ் சுந்தரமகாலிங்கம், சென்னை

சொற்களின் ஆளுமை (சிறுகதை) -✍ மாக்ஸிம் சூர்யா, கடலூர் மாவட்டம்