in ,

பூனை போட்ட கோடு (சிறுகதை) – ✍ சுதர்சன், கும்பகோணம்

பூனை போட்ட கோடு (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 132)

ரவு 9 மணி. ஓட்டு வீடுகள் சிமெண்ட் வீடுகளாக மாறி கொண்டிருந்த காலம். ஊரே அமைதி ஆகும் நேரத்தில் ஒரு வீடு மட்டும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

“அந்த மெத்தைய எடுத்து வச்சீங்களா டா? வாளி நம்ப வீட்ல தான் நிறைய இருக்கே, வெளில தான் வாங்கிக்கணுமா அவன்…? நீ எடுத்து வை தம்பி, நா சொல்லிக்குறேன்…” என்று மடமடவென் அடுக்கிய செல்வி, அவள் வீட்டு நாய் ஐரா விற்கு சாப்பாடு வைத்துவிட்டு நகர்ந்தாள்.

அப்போது அந்த வீட்டிற்குள் ஒரு பூனை நுழைந்தது. ‘மியாவ் மியாவ்’, என்று ஒவ்வொருவராக கூப்பிட்டு பார்த்தது. யாரும் அதனை கவனிக்கவில்லை. அதன் கண்ணில் ஐரா சாப்பிட்டு கொண்டிருப்பது தெரிந்தது

அதனுடன் சேர்ந்து இதுவும் சாப்பிட சென்றது. ஐரா பூனையை பார்த்து குரைத்தது. பூனை சாப்பாட்டு தட்டை தட்டி விட்டு ஓடியது. ஐரா விடாமல் துரத்த, பூனை தாவி தாவி மேடை மேலே ஏறி உட்கார்ந்தது. ஐரா அதை பார்த்து குரைத்து கொண்டிருந்தது.

“மியாவ்”, என்று பாவமாக கத்தியது பூனை. சத்தம் கேட்டு அந்த பக்கம் வந்த செல்வி “இந்தா என்ன வேணும் உனக்கு? சும்மா கொலச்சிட்டேரிருக்க? பார்ரா! போட்ட சாப்பாடாயும் தட்டி விட்டு…. உனக்கு இன்னிக்கு சாப்பாடு கிடையாது அவ்ளோ தான் போ” என்று நாயிடம் கடிந்து கொண்டாள்.

தன்னை பார்த்து அந்த பூனை சிரிப்பது போல தெரிந்தது ஐராவிற்கு. மேடையில் இருக்கும் பாத்திரதில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது பூனை

டப்பா ஒன்று சரியாக மூடாமல் இருப்பதை பார்த்த அலங்காரம் அதை திறந்து ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டாள். “தூ” என்று ருசி புடிக்காமல் அதை கீழே வைத்தாள்.

“அடியே அலங்காரம்… ஏதாவது சாப்பாடு மென்னுட்டே இருக்கணுமா உன் வாய்க்கு? அது உனக்கு செஞ்சதில்ல, பாவம் என் புள் வெளிஊர்ல போய் ஹோட்டல் சாப்பாடு மட்டும் சாப்பிட்டான்னா, ஏற்கனவே தேவாங்கு மாதிரி இருக்கிறவன் அப்றம் ஈர்க்குசியா போயிடுவான். அவனுக்காக மிளகாய்ப்பொடி, எள்ளுப்பொடி, எலும்பிச்சை ஊறுகாய் வச்சிருக்கேன். கொண்டு போய் பத்திரமா வை” என்று சொன்னபடி வீட்டில் அங்கும் இங்கும் நடந்தப்படி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள் செல்வி

அலங்காரம் வானத்தை பார்த்து “அங்க போயாசும் நீ தப்பிச்சுபேனு நினச்சேன்… ஆனா உனக்கு விமோச்சனமே கிடையாதுடா”, என்று மூணுமூணுத்தாள்.

“ஏன்னடி சொன்ன…?”

“இந்தா வச்சிடறேன் அத்தைனு சொன்னேன்” என்று சொன்னபடி ஒரு பையை வாசலுக்கு தூக்க முடியாமல் தூக்கி சென்றாள். அவளுடன் ஐராவும் சென்றது.

அங்கு மாட்டு வண்டியில் ஏற்கனவே இரண்டு பை, ஒரு மெத்தை வைக்கப்பட்டிருக்க, அத்துடன் இதையும் வைத்தாள்.

அப்போது தோளில் கை வைத்த சுப்பு, “அலங்காரம், நான் சென்னைக்கு வேலை தான் தேடி போறேன். என்ன ஒரேடியா அங்கையே குடியேத்திடுவீங்க போல தெரிதே. இதெல்லாம் எப்படடி ஒரே ஆளான என்னால ட்ரைன்ல எடுத்து போக முடியும்?”

ஐரா சுப்புவின் கால்களை சுற்றி சுற்றி வந்தது. “எல்லாம் உங்க அம்மா பண்ற வேலை தான். நான் சொன்ன கேக்க மாட்டாங்க. நீயே கேளு”

“இதோ கேக்குறேன்”

“இங்க இப்டி தான் பேசுவ உள்ள போனதும் அத்தை சொல்றதுக்கு சரி சரினு சொல்லிட்டு வரதான் போற”

“நீ வேணா பாரு” என்று வீட்டிற்குள் நுழைந்தான் சுப்பு

“அத தான் காலம் காலமா பாக்கறேனே” என்று சொன்னபடி பின்னால் சென்றாள் அலங்காரம். ஐராவும் அவர்களுடன் உள்ளே வந்தது.

“மியாவ்” என்ற சத்தம் கேட்டு பூனைக்கு பால் வைக்க சென்ற செல்வி

“அம்மா” என்ற சத்தம் கேட்டு அதை மறந்து வெளியே வந்தாள்.

சுப்புவின் நெற்றியை கவனித்த செல்வி, “கோவிலுக்கு போக சொன்னேன், எங்கடா போய்ட்டு வந்த?” என்று கோவமாக செல்வி கேட்டாள்

அம்மா ஏன் இப்படி கேக்குறாங்கன்னு புரிந்து கொண்டவன், “அட அழுஞ்சிருச்சிமா” என்றான் அப்பாவியாக.

“அது எப்படி அதுக்குள்ள அழியும்? இங்கவா நான் நா பூஜை அறைல இருந்து வச்சிவிடுறேன்” என்று சொன்னபடி பூஜை அறைக்கு சென்றவள்

சாமியை வணங்கி, அவளது கணவன் படத்திற்கு அருகே இருந்த குங்குமச்சிமிழில் இருந்து குங்குமம் எடுத்து அவன் நெற்றியில் வைத்தவள், “என்புள்ளய நீதான்பா காப்பாத்தணும்” என்றாள்.

அலங்காரம் சுப்புவிடம் செய்கை காட்ட, சுப்பு அம்மாவிடம் “அம்மா, எதுக்கு இவ்ளோ சாமான்…”

செல்வி அதை கண்டுக்காதவாறு, “தம்பி குமாரு, அந்த குல்லா எடுத்து வெச்சியா? சென்னை ரொம்ப குளுருமாமே” என்று சொன்னபடி வெளியே சென்றாள்

சுப்பு அலங்காரத்தை பார்த்தான். அவள் “எப்படி டிவேர்ட் பண்றாங்க பாத்தியா? விடாத…” என்றாள்

அவர்களை பின் தொடர்ந்தவன், “அம்மா நான் சென்னைக்கு வேலை தேடி போறேன்மா. தங்க போற இடம் இந்த ரூம் அளவு தான். அதும் என் பிரின்ட் ஓட தங்க போறேன். அதுக்கு ஏன் இவ்ளோ சாமான்லாம்?”

செல்வி அவனை மேலிருந்து கீழே பார்த்துவிட்டு “சரி நாளைக்கு சென்னைக்கு போற. போன ஒடனே வேலை கிடைச்சிடுமா? (யோசித்த சுப்பு இல்லை என்று தலையசைத்தான்) 1 மாசம்? 2 மாசம்? (இதற்கும் இல்லை என்று தலையசைத்தான்) ஒரு வர்ஷம்? (நிதானமாய் ஆமாம் என்று தலையசைத்தான்)

உன் பிரின்ட் அங்க ரெண்டு வருஷமா வேலை தேடறான், உனக்கு 1 வருஷத்துல வேலை கிடைச்சிடும்? (சந்தேகத்துடன் ஆமாம் என்றான் சுப்பு) அப்டி வேலை கிடைக்கலைனா இந்த வீட்டு பக்கமே வர கூடாது பரவாயில்லையா?”

“அது எப்படிமா அவ்ளோ சரியா சொல்ல முடியும்?”

“அப்ப அங்க பூரா ஹோட்டல் சாப்பாடு சாப்பிட முடியுமா? நமக்கு அது மொதல்ல கட்டுப்படி ஆகுமா?”

சுப்பு சற்று யோசித்து “அது நான் சைடுல பார்ட் டைம் வேலை செய்வேன்ல”

“அப்ப அந்த வேலை செய்யத் தான் அங்க போறியா? அந்த காசு உனக்கு போதுமா? நான் எதும் தர வேணாமா?”

பொறுமை இழந்த சுப்பு, “நீங்க சும்மா வேணும்னே எடக்கு மடக்கா கேக்குறீங்க”

“சரி தான் போடா, வந்துட்டான் பேச. படிச்சி ஒரு பட்டம் வாங்குனா போதும், எல்லாம் தெரிஞ்ச மாறி பேசுவானுங்க. டேய் குமாரு, எல்லாத்தையும் எடுத்து வச்சியாடா” என்று கேட்ட படி அந்த இடம் விட்டு நகர்ந்தாள் செல்வி. அவள் பின்னால் ஐராவும் ஓடியது.

“அதானே, எப்போதும் போல ஆகிடிச்சி” என்று சொன்னபடி கீழே இருந்த அடுத்த பையை எடுத்து சென்றாள் சுப்பு.

அந்த பூனை சமையல் அறையில் பால் இருக்கும் சிறிய மேடையில் ஏற முடியாமல் தவித்தது. ஒரு வழியாக தாவி மேடை ஏறிய பூனை, அதே வேகத்தில் பாலையும் தட்டி விட்டது. கீழ குதித்து ஓடும் பாலை நக்கியது. ஆனால் தரையில் மண் அதிகம் இருக்க, சாப்பிடாமல் வெளியே சென்றது

எல்லாம் ரெடியானது. சுப்புவை வண்டியில் அனுப்பி வைக்க அனைவரும் வெளியே வந்தனர். மாட்டுவண்டியில் 5 பெரிய பைகளும் ஒரு மெத்தையும் இருந்தது.

“ஒரு கைல 2 பை எடுத்துக்கிட்டா கூட இன்னொரு கை வேணும், என்ன பண்ண போற?” என அலங்காரம் கேலியாய் கேட்க

“என்ன பண்ண சொல்ற? எங்க அம்மாவோட பேசி ஜெயிக்கவே முடியாதே”, என்றான் சுப்பு பாவமாக

“பேசாம நானும் உன்னோட வந்துடவா?” என்றாள் அலங்காரம் ஆசையாக.

“எனக்கு இருக்குற லக்கேஜே போதும்” என்று நக்கலடித்தான் சுப்பு. அலங்காரம் முகம் சுழித்தாள்

“ட்ரெயின் வர இன்னும் 1.30 மணி நேரம் இருக்கு. வழில தேவையான பொருள மட்டும் எடுத்துக்கிட்டு, மீதிய இதே வண்டில உன்கிட்ட குடுக்க சொல்லிட்றேன். சென்னைல என் நண்பன்ட எல்லாமே இருக்குனு நான் சொன்னதா சொல்லி நீ ஏதாவது சொல்லி சமாளிச்சுடு” என்று கெஞ்சினான் சுப்பு.

“முடியாது” என்று அலங்காரம் சொன்னாள் ஒரேடியாக.

“நீயும் அப்டி சொல்லாத. எங்க அம்மாவோட பேசி ஜெயிக்கிற திறமை உன்கிட்ட மட்டும் தான் இருக்கு” என்றான்.

அவள் சமாதானம் அடையவில்லை.

“வேலை கிடைச்சதும் உன்ன சென்னைக்கு கூட்டி போறேன்” என்றான் சுப்பு வேறு வழி இல்லாமல். அலங்காரம் அவனை மகிழ்ச்சியாக பார்த்தாள்.

“என்னடி சொல்றான் சுப்பு?” என செல்வி அம்மா வர

“அது… ஒன்னும் இல்லத்தை… உங்கல நல்லா பாத்துக்க சொல்றான்”.

கண் கலங்கிய செல்வி, அதை மறைத்தவாறு, “என்னைப் பத்தி கவலைப்படரியாடா?” என்று அவனை அனைத்துக் கொண்டு, “அதெல்லாம் பத்தி யோசிக்காத, நீ ஜாக்ரதையா போய்ட்டு வேலையோடவா” என்று அவனுக்கு முத்தமிட்டாள்

அனைவரிடமும் விடைபெற்று கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான் சுப்பு. அப்போது சாலையின் மறுபுறத்தில் இருந்த பூனை “இவன் கிளம்புவதற்காக தானே எனக்கு இன்னிக்கி சாப்பாடு வைக்க மறந்திங்க?” என்று நினைத்ததோ என்னவோ, மாட்டுவண்டி கிளம்புவதற்கு சில நொடிகள் முன்னாள் குறுக்கே சென்றது.

அதை எல்லோரும் பார்த்தனர். “நிறுத்துங்க” என்று மாட்டு வண்டியை நிறுத்தினாள் செல்வி.

அதன் தொடர்ச்சியாக “இன்னிக்கு சகுனம் சரியில்ல. நாளைக்கு போகலாம்” என்றாள்

சுப்புவிற்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஒரு பூனையின் தற்சயலான  செயல் தன்னுடைய வாழ்க்கையை தீர்மானிப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை

“இல்லம்மா, நாளைக்கே ஒரு நல்லா கம்பெனில இன்டெர்வியூ இருக்குமா”

“பரவயில்லடா அந்த கம்பெனி இல்லனா வேற கம்பெனில வேலை செய்… அதும் கிடைக்கலைனா நம்ப வயல் வேலைலாம் பாத்துக்கலாம்” என்று சொன்னவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

விடாத சுப்பு “இல்லமா அது எனக்கு புடிச்ச கம்பெனி”, என்று பேச, அலங்காரம் அவனை நோக்கி செய்கையால் வேண்டாம் என்று கூறினாள்.

செல்வி திரும்பி அவளை பார்த்து “இப்போ நீ உள்ள வரியா இல்ல தொடப்பத்தோட நான் வெளிய வரவா?” என்று கேட்டுவிட்டு உள்ளே சென்றாள்.

குமார் வண்டியில் இருந்து பையை இறக்கினான். வந்த காரியம் முடிந்தது என்று நினைத்ததோ என்னவோ, பூனை சற்று தூரம் நடந்து அருகிலிருக்கும் அலங்காரம் வீட்டிற்க்குள் நுழைந்தது

அம்மா ஒரு நாற்காலியில் உட்கார்ந்துருக்க, வெளியே சற்று கோவமாக உட்காந்திருந்தான் சுப்பு. அவனாருகே அலங்காரமும் உட்கார்ந்திருந்தாள்.

“என்னால இதை சுத்தமா ஏத்துக்க முடில, இந்த பூனை குறுக்க போற கதை எப்படி மூட நம்பிக்கையாச்சுன்னு தெரியுமா?

அந்த காலத்துல காட்டு வழியா தான் மாட்டுவண்டில, குதிரைல எல்லாரும் வேற இடதுக்கு போவாங்க. அந்த வழியா சிறுத்தை, புலினு ஏதாவது வந்தா அதை பார்த்து குதிரை பயப்படும், கன்னாபின்னானு ஓடும்.

இந்த சிறுத்தை, புலி, பூனை எல்லாத்துக்கும் ஒரே மாதிரி கண்கள் இருக்கும். அந்த கண்கள் ஒரு மாதிரி மின்னும். அதான் பூனையோட கண்ண பார்த்தா கூட நம்ப மாடும் குதிரையும் அது புலியோடதுனு பயந்துடும்னு கொஞ்சம் நேரம் வண்டிய ஓரமா போட்டு ஓய்வு எடுத்துட்டு போவாங்க.

அந்த கொஞ்ச நேரம் கொஞ்சமா மாறி ஒரு நாளா போகிடிச்சி இப்போ. அதும் யார் இப்போ காட்டு வழில போக போறாங்க…? ஏதாவது ஆரம்பிச்சதும் வரிசையா தடங்கல் வந்ததா” என்று அம்மா காதில் விழும்படி கத்தி அலங்காரதிடம் சொன்னான்.

“அடேங்கப்பா இவ்ளோ தெரிஞ்ச உனக்கு, அத்தை ஏன் இந்த விஷயத்துல ரொம்ப பிடிவாதமா கூடாதுனு சொன்னாகனு தெரியலேயடா” என்று சிரித்தாள்.

சற்று அமைதியாக யோசித்தவன் வீட்டிற்குள் சென்றான். அம்மாவின் காலருகே சென்று உட்கார்ந்தான். அலங்காரமும் வீட்டின் ஒரு தூண் பின்னால் நின்று கொண்டாள்.

ஐரா வேறு வழி இல்லாமல் கீழே சிந்தி கிடைக்கும் சோற்று பருக்கைகளை சாப்பிட துவங்கியது.

“அம்மா நீங்க எதுக்காக இப்டி சொல்லறீங்கன்னு புரிந்தது. ஆனா அப்பா இறந்தது பூனை குறுக்க போனதுனால இல்ல, அது விபத்து. தற்சயலா நடந்த விஷயம்” என சுப்பு கூறியதை, அவன் அம்மா கவனிக்கவே இல்லை

“நாளைக்கு நான் இன்டெர்வியூ போற கம்பெனி ரொம்ப நல்ல பெரிய கம்பெனி மா. அந்த இன்டெர்வியூ மட்டும் நல்லா பண்ணி எனக்கு வேலைக்கிடைசிதுனா, நம்ப எதிர்காலமே மாறிடும் மா” என்று என்ன என்னவோ சொல்லி பார்த்தான்

அம்மா கொஞ்சமும் அசைவு கொடுக்கவில்லை. சோகத்துடன் அந்த இடம் விட்டு நகர்ந்தான் சுப்பு.

தனது பூனையால் அத்தானுக்கு வேலை கிடைக்காமல் போவது அலங்காரத்திற்கு குற்ற உணர்வாக இருந்தது. அதுவரை பொறுமையாக இருந்த அலங்காரம், தனது புடவை முனையை இடுப்பில் சொருவிக் கொண்டு அத்தையின் முன்னால் வந்து நின்றாள்

“அத்தை என்கிட்டே இந்த மூஞ்சிய தூக்கி வைக்குற வேலைலாம் வேணாம், அத்தான ஏன் போக கூடாதுனு சொன்னீங்க?” என்று அவள் கேட்க, வெளியே சென்று கொண்டிருந்த சுப்பு அங்கேயே நின்றான்

“பூனை குறுக்க போச்சின நம்ப அந்த வழியா போகவே கூடாதுனு தெரியாதாடி உனக்கு? புதுசா கேக்குற?”

“அதானே விஷயம்?”

 “ஆமாம். ஸ்டேஷனக்கு அந்த வழியா தான் போக முடியும். அதான் வேணாம்னு சொன்னேன்”

“மாத்த மாட்டீங்களே?”                                                          

 “நான் ஏன் மாத்தணும்?” என்றாள் உறுதியாக

அலங்காரம் நிதானமாக “அப்போ அந்த பூனை குறுக்க போன வழி, அந்த கோட்டை சுத்தி போனா, அது நமக்கான கோடு கிடையாதுல?”

“சபாஷ்” என்றான் சுப்பு

“அது எப்படி…?” என்று செல்வி பேச வர

“ஆஹான்… நீங்க சொன்னபடி தான் சொன்னேன். வார்த்தை மாற மட்டேன்னு சொன்னீங்க” என்றாள் அலங்காரம்

இதை ஏற்க மறுத்த செல்வி “என்னாடி முட்டாள் மாதிரி பேசுற? என்ன தான் இருந்தாலும், பூனை குறுக்க போனது போனது தான்” என்றாள் செல்வி

ஆனால் அதை பாதியில் தடுத்த அலங்காரம், “அந்தப் பாதைய ஏன் கவர்மென்ட் போட்ட ரோடா பாக்குறீங்க? அந்த பாதையை மொத்த கிழக்கா எடுத்துக்குங்க, அது மொத்த கிழக்கும் குறுக்கவா போச்சி? இல்ல எங்க வீட்டுக்குள்ள தான் போயிருக்கும். அத்தான் எங்க வீட்ட சுத்தி போன போதும்ல, அந்த கோட்ட சுத்தி போன மாதிரி ஆகிடும். அந்த பூனை குறுக்க போன மாதிரி ஆகாதுல?” என்று மடக்கினாள் அலங்காரம்

செல்வியால் எதும் பதில் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் விடாமல் “அந்த பூனை இந்நேரம் எங்க எங்கயோ போயிருக்குமே” என்றாள்

“அந்த பூனை எங்கையும் போகல, எங்க வீட்டுக்கு தான் போச்சி, நான் பார்த்தேன். இந்நேரம் எங்கம்மா அத திட்டி அடைச்சு வச்சிருப்பாங்க” என்றாள் உறுதியாக

செல்வி இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.

“அப்ப அந்த கோட்ட சுத்தி போனா சுப்புவ விட்ருவீங்கல்ல?” என்று கேட்டாள்.

“நீ மொதல்ல அத கண்டுபுடிச்சி சுத்திவா, அப்றம் அத பத்தி பேசலாம்” என்று மழுப்பினாள் செல்வி

விடாத அலங்காரம் “அப்டி பொதுவா சொல்ல கூடாது. ஆமாம் இல்லைனு சரியா சொல்லணும்” என்றாள் செல்வி முன்னால் சென்று.

செல்வி யோசித்தாள். சுப்பு ஆவலுடன் அம்மாவின் பதிலை எதிர்பார்த்தான்.

சற்று யோசித்தவள் “போகலாம்” என்றாள்

சுப்பு ஓடி வந்து அம்மாவை கட்டிக் கொண்டான்

“அனுமதி வாங்கிக்கொடுத்தது நான், ஆனா நன்றி அம்மாக்கு” என்று தலையில் அடித்துக் கொண்டாள் அலங்காரம். அம்மா அவனை நகர்த்தி விட்டு உள்ளே சென்றாள்.

அலங்காரம் தொண்டையை கனைத்துக் கொண்டு “ட்ரென்னுக்கு ஒரு மணி நேரம் 10 நிமிடம் தான் இருக்கு” என்றாள்

சுப்பு அலங்காரத்தை கூப்பிட்டுக் கொண்டு அவள் வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். அவள் முகத்தை தூங்கி வைத்திருப்பதை பார்த்த சுப்பு “ரொம்ப தேங்க்ஸ் அலங்காரம்” என்றான்

“நான் ஒன்னும் உனக்கா இதை செய்யல. அந்த பூனை என்னோடது. என்னால உனக்கு வேலை போக வேணான்னு தான் சொன்னேன்”

“நான் சொல்லல, எங்க அம்மாவை மடக்கி பேசுற திறமை உனக்கு மட்டும் தான் இருக்கு…”

“சும்மா என்னை சமாதானம் படுத்தணும்னு பேசாத. ஊருக்கு கிளம்புற வழிய பாரு” என்றாள்.

“அட சாத்தியமா சொல்றேன்”

“சரி சரி சீக்கிரமாக வா, பூனை ஓடிடப் போது”

சுப்பு மனதில், ‘எங்க அம்மா மாறியே பண்றாளே’ என்று நினைத்துக் கொண்டான்.

அவர்கள் அலங்காரம் வீட்டிற்கு நுழையும் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தது அந்த பூனை. இருவரும் அங்கேயே அதிர்ந்து நின்றனர்.

“பூனை ஓடிடப் போகுது, இப்ப என்ன பண்றது?” என்றான் சுப்பு

 “மியாவ் மியாவ்” என்றபடி முன்னால் போனாள் அலங்காரம்.

இருவரும் அதனருகே பொறுமையாக சென்றனர். அப்போது “வாவ் வாவ்”, என்று ஐரா குரைக்க, பூனை ஓட துவங்கியது

ஐரா அதனை துரத்த, இவர்கள் ஐராவை பின் தொடர்ந்து ஓடினார்கள். அப்போது ஒரு வீட்டின் கம்பி இடுக்கில் நுழைந்தது பூனை. ஐராவால் நுழைய முடியவில்லை. வெளியிலிருந்து குரைத்தது.

அந்த இடம் வந்த சுப்பு ஐராவை அதட்டினான்.

“போன ஜென்மத்துல மிருகங்களை என்னவோ பண்ணியிருக்க, அதான் மொத்தமா உன்ன பழிவாங்குது” என்று சிரித்தாள் அலங்காரம்

“விளையாடாத, இப்ப என்ன பண்றது?” என்றான் சுப்பு

“ஒன்னும் இல்ல. பூனை வீட்ல இருக்கான்னு பார்ப்போம். இருந்துச்சின்னா இந்த வீட்ட சுத்தி வந்துடு. அவ்ளோ தான்” என்றாள் அலங்காரம்.

“எப்படி இவ்ளோ புத்திசாலி ஆனா?” என்று சுப்பு கேட்க, அதற்கு சிரித்தபடி வீட்டு பெல் அடித்தாள் அலங்காரம்

“வீட்டுக்கு பூனை வந்துச்சா?” என்று சுப்பு கேட்க, அதற்கு “ஆமாம்” என்றார் எதிர்புறம் நின்றவர்.

“தேங்க்ஸ் அண்ணா” என்று சொன்னவன், அலங்காரத்தை பார்த்து சிரித்து விட்டு வீட்டை சுற்றி போக துவங்கினான். அப்போது ஐரா மேலே பார்த்து குரைத்தது. அவன் கீழே நடக்க நடக்க அந்த பூனையும் அதே திசையில் மேலே நடந்து வந்து கொண்டிருந்தது.

இவன் வேகமாக அதை தாண்டி செல்ல ஓடினான். அவனுடன் வேகமாக அந்த பூனை ஓடியது. ஐரா இப்போது அந்த பூனையை துரத்தி ஓடியது. சுப்புவும் ஓடினான். பின்னால் அலங்காரமும் சேர்ந்து ஓடினாள்.

இடதும் வடதுமாக ஓடினார்கள். ஒரு முறை இடது புறமாக திரும்பும் போது சுப்புவின் கண்களில் இருந்து பூனையும் ஐராவும் மறைந்தன. இவன் இடது புறமாக திரும்ப அப்போது ஐரா மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தது.

“நீயும் அத விட்டுட்டியா?” என்று சுப்பு சோகமானான். ஐரா பாவமாக முகத்தை வைத்துக்கொண்டது

“அங்க சுத்தி இங்க சுத்தி நம்ப வீட்டுகிட்ட வந்துட்டோமா?” என்றான் சுப்பு.

அலங்காரமும் சுப்புவும் ஒவ்வொரு இடமாக தேடி பார்த்தார்கள். எங்கும் தென்படவில்லை. 20 நிமிடங்கள் கடந்தன. வீட்டிற்கு வந்து உட்கார்ந்தான் சுப்பு.

“என்னடா? பூனைய சுத்த போறேன், புடிக்க போறேன்னு சொல்லிட்டு நீ பூனை மாதிரி இங்க வந்து உட்காந்திருக்கீங்க?” என்ற அரிசி புடைத்துக் கொண்டிருந்த செல்வி நக்கலடித்தாள்.

சுப்புவால் எதும் பேசமுடியவில்லை. அலங்காரம் மணியை பார்த்தாள். “இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கு. நீ இங்கேந்து அங்க போகவே 25 நிமிஷம் ஆகும். இப்போ என்ன பண்றது?” என்று கேட்டாள்.

சுப்பு எழுந்து வீட்டிற்குள் சென்றான். செல்வி அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்

அவன் நேராக பூஜை அறைக்கு நேராக சென்றான். அப்பாவின் போட்டோ முன்னாடி சென்று நின்று பூனை கிடைக்க வேண்டும் என்று கண்ணை மூடி வேண்டி நின்றான். 5 நிமிடங்கள் ஓடியது.

அலங்காரமும் ஐராவும் அவனோடு நின்றனர். 10 நிமிடங்கள் கடந்தது. அதுவரை நாற்காலியில் அமர்ந்து சுப்பு செய்வதை பார்த்துக் கொண்டிருந்த செல்வி மெதுவாக எழுந்து ஒரு அறைக்குள் சென்றாள்.

வெளியே வரும் செல்வியை பார்த்து “வாவ் வாவ்”, என்று ஐரா சந்தோஷமாக குரைத்தான். அலங்காரம் சத்தம் கேட்டு கண் திறக்க அவள் கண் முன்னால் செல்வி பூனையுடன் நடந்து வந்தாள்.

பூனையின் வாயில் பால் துளிகள் இருந்தது. அந்தப் பூனையை அலங்காரத்திடம் கொடுத்து விட்டு மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்து அரிசியை புடைக்க துவங்கினாள்

மெதுவாக சுப்புவை தொட்ட அலங்காரம், “சுப்பு, இதோப் பாரு பூனை கிடைத்து விட்டது” என்று சந்தோஷமாக கத்தினாள்.

அவனால் அதை நம்பவே முடியவே இல்லை. “இவ்ளோ நேரமா நம்ப வீட்ல தான் ஒளிஞ்சிட்டு இருந்துருக்கு” என்றாள் அதே வேகத்துடன்.

அப்பா முன்னால். சேவித்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்ட சுப்பு “இதை இப்டியே கைல வச்சிக்கோ. நான் சுத்தி வந்துடறேன்” என்றான்.

செல்வி அவனை சிரித்தபடி பார்த்தாள். சுப்பு அம்மா முன்னால் நின்று “இப்போ நான் போலாம்ல மா?” என்று மெதுவாக கேட்டான்.

செல்வி தலையை ‘ஆமாம்’ என்று அசைத்தாள். வேக வேகமாக கிளம்பினான் சுப்பு. மீண்டும் மாட்டு வண்டி ரெடி ஆனது

அப்போது அலங்காரம் அவனிடம் சென்று “நீ இன்னிக்கு ஊருக்கு போகாம போறதுக்கு காரணமா இருந்தது பூனை குறுக்க போனது மட்டும் இல்லை. உன் மேல அத்தைக்கு இருந்த பாசம் தான். உன்ன இதுக்கு அப்றம் பார்க்க முடியாம போய்விடுமோங்கிற பயமும் தான்” என்று மெதுவாக அவனிடம் சொன்னாள்.

சுப்பு அம்மாவை பார்த்தான். நேராக சென்று அவளை கட்டிப் பிடித்தவன், “நான் சென்னைக்கு பொழப்புக்கு தான் போறேன். நான் சென்னைக்கு போனாலும் என் நினைப்பு எல்லாம் இங்க தான் இருக்கும். நான் தினமும் உங்களுக்கு கடுதாசி போடறேன்.

 பண்டிகைனா ஊருக்கு திரும்பிடுவேன். உங்க சாப்பாடு சாப்பிடாம எப்படி இருக்க முடியும் என்னால? அப்டி ஒருவேல நல்லா வேலை கிடைச்சி அங்கையே இருக்குற மாதிரி ஆச்சுன்னா, உங்களையும் அங்க கூட்டிப் போவேன்” என்று சொல்லி அம்மாவிடம் விடைபெற்று மாட்டுவண்டியில் ஏறினான்

வண்டி புறப்பட்டது. சரியான நேரத்தில் ஸ்டேஷன் சென்றடைந்தான். வண்டி ஓட்டி வந்த குமார் அண்ணன் உதவியுடன் எல்லா பைகளையும் ட்ரெயின் ஏற்றினான். ட்ரெயின் புறப்பட்டது.

சென்னை சென்றடைந்ததும் அவனுக்காக சென்னை நண்பன் கோபால் ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தான். இருவரும் பைகளை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றனர்.

சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டவன், பின்னர் குளித்து வெளியே வந்தான். வெளிய வந்தவனை கோபால் மீண்டும் உள்ளே அனுப்பி ஷேவ் செய்ய சொன்னான். அதை செய்தவன், வெளியே வந்து கருப்பு சட்டை போட்டுக் கொள்ளும் போது கோபால், “என்ன இன்டெர்வியூக்கு எதிர்ப்பு தெரிவிக்க போறியா?” என்றான்

சிவப்பு சட்டை போடாமல் அதற்கு ஒரு காரணம் சொல்லி தடுத்தான். இறுதியாக நீல நிற சட்டை போட்டு ரெடி ஆனான்.

கையில் தனது வாட்ச், கழுத்தில் டை எல்லாம் மாட்டி விட்டான்

“எதுக்குடா இதெல்லாம்” என்று கேட்டான் சுப்பு

“இதல்லாம் இன்டெர்வியூ எடுக்குறவங்க கவனிப்பாங்கடா. இப்டிலாம் போனத் தான் வேலை கிடைக்கும், இந்த சைக்காலஜி உனக்கு புரியாது” என்றான்

“இவ்ளோ தெரிஞ்சும் உனக்கு ஏன்டா இன்னும் வேலை கிடைக்கவில்லை?” என்று சுப்பு கேட்க

“நீ கழட்டு… டை, வாட்ச் எல்லாத்தையும் கழட்டு! உனக்கு சொன்னேன் பார்த்தியா… கழட்டு”, என்று கோபித்து கொண்டான் கோபால்

“சும்மா சொன்னேன்டா” என்று சுப்பு அவனை சமாதானம் செய்தான்.

‘கிராமத்தில் மூடநம்பிக்கைக்கு ஒரு காரணத்த சொல்றாங்க. சிட்டில இப்படி எல்லாம் சொல்லி சைக்காலஜினு சொல்றானுங்க’ என்று நினைத்துக் கொண்டான் சுப்பு

அன்றைய இன்டெர்வியூ நன்றாக நடைபெற, சுப்புவிற்கு வேலை உறுதியானது. வீட்டிற்கு கடுதாசி போட்டான் சுப்பு. அதை வாங்கிய அலங்காரம் மகிழ்ச்சியுடன் ஓடிவந்து அத்தைக்கு குடுத்தாள்.

எல்லோரை பற்றியும் சுகம் விசாரித்த சுப்பு, தனக்கு வேலை கிடைத்ததை குறிப்பிட்டிருந்தான். அலங்காரத்திற்கு கோடி நன்றிகளை சொல்லியிருந்தான். செல்வி மகிழ்ச்சியுடன் கலந்த நிம்மதி அடைந்தாள்.

ஆனாலும் அலங்காரத்திற்கு அத்தையின் திடீர் மனமாற்றதிற்கான காரணம் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. நேராக செல்வியிடம் போய் கேட்டாள்.

அதற்கு செல்வி, “எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வார்கள். அன்று என் கணவர் பூனை குறுக்கே போனாலும், தான் போவது நல்லவிஷயத்துக்காக என்றும், நல்ல விஷயங்களை தள்ளி போடக்கூடாது என்றும் சொல்லி சென்றார்.

அவர் நல்ல எண்ணம் கொண்டிருந்தாலும் எனது எண்ணம் அவருக்கு ஏதோ கெடுதல் நடப்பது போலவே காட்டியது. நான் அவரை அன்று விடவே இல்லை. ஆனாலும் அவர் விடாப்பிடியாக கிளம்பினார்.

கிளம்பும் போது எனது பயங்களால், அவரது உறுதியான எண்ணங்களும் சிதறிப் போய் இருந்தன. ஒருவேளை அதனால் கூட இறந்திருப்பாரோ என்னவோ என்று நான் நினைத்ததுண்டு. அதே தப்பை நான் திரும்பவும் செய்ய விரும்பவில்லை.

நேற்று நான் தவறாக நடக்கும் என்று நினைத்தாலும், நீங்கள் இருவரும் நல்லதையே நினைத்தீர்கள். பயம் இருந்தாலும் நான் எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். நல்லதையே நினைத்தேன். இப்போது என் மகனுக்கு அதே போல வேலையும் கிடைத்துவிட்டது” என்று ஆனந்தக் கண்ணீருடன் சொன்னவள், பூஜை அறைக்கு சென்று எல்லா தெய்வங்களுக்கும் நன்றி சொன்னாள்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடமை (சிறுகதை) – ✍ துர்கா தேவி, மலேசியா

    காமராசு (சிறுகதை) – ✍ சல்மா அம்ஜத் கான், மதுரை