in ,

கடமை (சிறுகதை) – ✍ துர்கா தேவி, மலேசியா

கடமை (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 131)

“அம்மா சாப்பாடு ரெடியா? மணி ஆகுது மா”

“இதோ ரெடி பண்ணிட்டேன் இந்தாமா” என உணவுப் பொட்டலத்தை என்னிடம் தந்த அம்மாவின் கண்கள், இனம் புரியாத கேள்விகளைத் தாங்கி உள்ளதை என்னால் உணர முடிந்தது.

ஒளி வீசும் கண்ணோடு துடிப்பாக அம்மா இருப்பதைப் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டன. அனைத்திற்கும் காரணம் நான் தான் என்பதனை நான் அறியாமல் இல்லை.

ஒவ்வொரு நாளும் நான் வீட்டில் இருந்து புறப்படும் போது, என் பெற்றோர்கள் கவலைக் கடலில் மூழ்கிப் போவதையும் என்னால் உணர முடிந்தது.

ஆனால், உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கி நானும் பின் வாங்க வேண்டும் என எண்ணிவிட்டால், அதை விட என் வேலைக்கு நான் செய்யும் பெருந்துரோகம் இருந்திட முடியாது என ஆழ்மனம் எனக்கு அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டே இருந்தது.

இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகளையும் குழப்பங்களையும் நான் ஏந்தி வந்த போதிலும், என் குடும்பத்தாரோடு இருக்கின்ற ஒவ்வொரு கனமும், அந்நொடியை ரசித்து வாழ்ந்திட மறந்ததில்லை.

நிலையில்லாத என் வாழ்க்கையில், நான் இப்படி மகிழ்வாக இருப்பதைப் பார்த்து என் குடும்பத்தார்களே உண்மையில் நான் மகிழ்வாகத் தான் இருக்கிறேனா என பல முறை என் மேல் சந்தேகப் பார்வையை வீசியுள்ளனர்.

இரவு வேலையை முடித்து விட்டுக் காலையில் வீடு திரும்பிய, நான் எப்போதும் போல் வீட்டுற்குள் நுழைவதற்கு முன்னால், முழுமையாக என்னை தூய்மைப்படுத்திக் கொண்டு உணவு உண்டப் பிறகு, சற்று இளைப்பாறி விட்டு அறைக்குள் நுழைந்தேன்.

தினசரி செய்திகளைத் தாங்கி வந்த நாளிதழோடு என் தந்தையும், அனல் பறக்கும் ஆவிகளின் கூட்டத்தில் சமையலறையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த அம்மாவும், எப்போதும் போல் தத்தம் தினசரி வேலைகளில் மூழ்கிப் போயிருந்தனர்.

நானோ, என்னை ஆரத்தழுவக் காத்திருந்த என் தலையணைகளோடு துயில் கொள்ள ஆர்வமாகப் படுக்கையில் சாய்ந்த போது, என்னைப் பார்த்து சிரித்தது ‘வைரமுத்து கவிதைகள்’ என்ற அந்த புத்தகம்.

பல நாட்களாக வாசிக்கும் பழக்கத்திற்கும் நான் விடுமுறைக் கொடுத்திருந்த காரணத்தால், இன்று சிறிது நேரம் கவிதைகளில் திளைத்திட முடிவு செய்து புத்தகத்தை எட்டி எடுத்தேன்

ஏறத்தாழ முப்பது நிமிடங்களுக்கு பின், என் அம்மாவின் குரல் வீட்டின் வரவேற்பறையில் ஒலிக்கத் தொடங்கியது

“என்னங்க வர வர எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. நம் மகள் அன்றாடம் வேலைக்குப் போய் திரும்பி வீடு வரதற்குள் எனக்கு உயிர் போய் உயிர் வருதுங்க. என்ன செய்யுறது? ஆசைப்பட்டு ஊண் உறக்கமில்லாம கஷ்டப்பட்டு படிச்சு இந்த வேலைக்குப் போன பிறகு, இப்படி ஒரு கஷ்டக்காலம் வரனுமா?”

தனக்குள் ஆயிரம் கலக்கங்கள் வேரூன்றி இருந்த போதும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பா, “மரகதம், இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்,  இது கடந்து போயிரும், பயப்படாத” என அம்மாவைத் தேற்றியது எனக்கு சற்று ஆறுதலாய் இருந்தது

ஆனாலும், அப்பா என்னை நினைத்துக் கலங்கிய பல தருணங்களைக் கண்கூடாய் நான் கண்டிருக்கிறேன்

“எப்பவும் இதேயே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ஆனா, நம் மகள் மாதிரி தானே அந்த அமுதாவும். அந்த பொண்ணோட இறுதி ஊர்வலத்தில் குடும்பம் மொத்தமும் அழுது புலம்புனத கண்ணால பார்த்த நாள் முதல், எனக்கு தூக்கமே போச்சுங்க. பெத்த வயிறு பத்தி எரியுது, ஏதாவது செஞ்சு இந்த வேலை வேணாம்னு சொல்லுங்க” என இத்தனை நேரமாக அமைதிக் காத்த அம்மாவின் கண்களில் கண்ணீர் துளிகள் அணைக் கடந்த வெள்ளமென பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

தன் அன்பு மனைவியின் கண்ணீரை காண மாட்டாமல் அப்பாவும் கண்ணீர் மல்க, “மரகதம் ஏன் எதை எதையோ நினைச்சு இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற? நான் வணங்குற அந்த தெய்வம் நம்மள கை விடாது, தைரியமா இரு. இலக்கியாவைப் பார்த்தியா? எவ்வளவு தைரியமா வேலைக்குப் போய் திரும்பி வரான்னு, வீட்டிலேயும் எப்பவும் சந்தோசமாத் தான இருக்கறா? நீ கண்டதையும் நினைச்சு மனசைப் போட்டு குழப்பிக்காத” என அப்பா அம்மாவை சமாதானம் செய்ய

அம்மா அவற்றை எல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல், “உங்களுக்கு என்னங்க ஆச்சு? இருபத்து எட்டு வருசமா நாம் வளர்த்த நம்ப பொண்ணு என்ன நோக்கத்தோடு இப்படி சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறானு கூடவா உங்களுக்குத் தெரியல?

இலக்கியா சின்ன பிள்ளையா இருந்த போது, நாம் நம்முடைய கஷ்டங்களை மறைத்துக் கொண்டு அவளுக்குக் காட்டிய அதே அன்புக் கலந்த மகிழ்ச்சியைத் தான், இப்ப அவள் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.

ஒவ்வொரு நாளும் அவ அதிகப்பட்ச அன்பையோ மகிழ்ச்சியையோ வெளிக்காட்டும் போது, ஏதோ இறுதி நாளை எண்ணிக் காத்திருக்கும் ஒருத்தன் செய்யும் செயல் போல் எனக்கு தோணுதுங்க” என்ற அம்மாவை அப்பா கோபித்துக் கொள்ளத் தொடங்கி இருந்த போதிலும்

என் மனம் என்னமோ ஒரு தாயினால் மட்டும் எப்படி தன் பிள்ளையின் உள்ளக்கிடங்கை இத்துணை ஆழமாக, சரியாகப் புரிந்து கொள்ள முடிகின்றது என ஆச்சரியப்பட வைத்தது.

அறிவியலுக்கோ ஆராய்ச்சிக்கோ எட்டாத ஒரு விசயமாகவே நான் இதைப் பார்க்கிறேன். இதற்கு மேல், அமைதிக் காப்பது சரியில்லை என முடிவு செய்த நான், மெல்ல என் அறை கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே சென்றேன்.

என்னைப் பார்த்தவுடன் ஆளுக்கொரு மூலையாக ஏதும் அறியாதவர்கள் போல் கலைந்து செல்ல இருந்த அப்பாவையும் அம்மாவையும் பிடித்து அமர வைத்தேன்

“நான் உங்க ரெண்டு பேர்கிட்டேயும் கொஞ்சம் பேசனும்” என அமைதியாகக் கூறிய என்னைப் பதற்றத்தோடு பார்த்தனர்.

அப்பாவோ எல்லாவற்றுக்கும் காரணம் அம்மா தான் என்பது போல், கண்களால் அம்மாவையும் சுட்டெரித்துக் கொண்டிருந்தார்.

இருவரையும் அமரச் சொல்லி அவர்களுக்கிடையில் அமர்ந்து கொண்ட நான், இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டேன்

“அம்மா, அப்பா நீங்க ரெண்டு பேரும் அனுபவிக்கிறே வேதனை எனக்குத் தெரியாமலோ புரியாமலோ இல்லை. ஆனால் நாட்டிற்கு ரொம்ப முக்கியமாக தேவைப்படுறே இந்த நேரத்தில நான் பின் வாங்குவதோ, இல்லை என் கடமையை ஒழுங்கா செய்யாம போறதோ சரியில்லைமா

இந்த வேலைக்குப் போகும் போதே என் கடமையை முறையாகச் செய்து பணியாற்றுவேன்னு தானே உறுதிமொழி எடுத்துக்கிட்டேன். இப்ப கோவிட் ஊரெல்லாம் தலைவிரிச்சாடும் போது, நான் மட்டும் நல்லா இருந்தா போதும்னு சுயநலமா இருக்க எனக்கு முடியலே. தன்னலம் தான் முக்கியம்னு நினைச்சிருந்தா நமக்கொரு அப்துல் கலாமோ, இதோ இந்த விளக்குக் கூட கிடைச்சிருக்காதே” என தெளிவாகக் கூறி முடித்தேன்.

ஆயிரம் சொன்னாலும் தனக்கு உரிமையானவற்றைப் பெற்றுக் கொள்வதில் தீவிரமாக அடம் பிடிக்கும் குழந்தைப் போல் அம்மா “இல்லைடி, எங்களுக்கு இருப்பது நீ ஒருத்தி தான். உனக்கு ஏதாச்சும் ஒன்னுனா நாங்க என்ன செய்வோம், என் ஈரக்குலயே நடுங்குது இலக்கியா. இந்த வேலை வேணாம் என் தங்கமே, அம்மா சொல்வதைக் கேளுமா” என சிறுபிள்ளைப் போல் என் கைகளைப் பற்றி கொண்டு அழத் தொடங்கினார்.

என்ன சொல்வது, யார் பக்கம் பேசுவது எனத் தெரியாமல் திக்குமுக்காடிப் போயிருந்தார் அப்பா. அவர் கண்களில் மட்டும் நீர் முட்டிக் கொண்டு நின்றிருந்தது, இவ்வேலை வேண்டாம் என அவரின் உள்மனமும் வேண்டுவதை, அது உணர்த்தியது

பாசப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட என் மனம், அம்மாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு அவரின் ஆசைக்கு இசைந்து விடலாம் என கூறினாலும், என் அறிவோ நாட்டிற்குக் உன் கடமையை செய் என உரக்க கூறியது 

“சரி அம்மா அழாதீங்க, எல்லாம் நல்லாதாகவே நடக்கும்” என மேற்கொண்டு இதைப் பற்றி பேசாமல், சமையலறைக்கு ஓடிச் சென்று அம்மாவிற்கு அருந்த நீர் கொண்டு வந்து நீட்டினேன்.

ஏக்கம் நிறைந்த கண்களோடு அம்மா அந்நீரை வாங்கி அருந்தினார்.

“உங்க அம்மா இப்படித் தான், அழுதுக்கிட்டே இருப்பா. நீ போய் தூங்குமா, இரவெல்லாம் கண் விழித்து வேலை செய்துட்டு வந்து இப்பவும் தூங்கலைனா என்னவாகும் உடம்பு” என அம்மாவை தேற்றிக் கொண்டே எனக்கு விடைக் கொடுத்தார் அப்பா.

என் வாழ்வின் ஒளி விளக்காகிய இருவரையும் நான் இப்படி கஷ்டப்படுத்துவது எனக்கே மனக்கவலையை ஏற்படுத்தியது. இறுக்கமான மனநிலையோடு பலவற்றை யோசித்துக் கொண்டே தூங்கியும் போனேன்.

மதியம் 3 மணிக்கு என்னை கூவி அழைத்தது என்னுடைய தொலைப்பேசியின் அலாரம். பிடிப்பேதுமில்லாமல் குழம்பிப் போயிருந்த மனநிலையோடு வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

அதற்கிடையில் என்னுடைய வேலைச் சீருடையைக் காணவில்லை. அறை முழுவதும் தேடியும் காணவில்லை. ஒருவேளை, இனிமேல் நான் வேலைக்குச் செல்ல கூடாதென முடிவுக் கட்டி அம்மா எடுத்து மறைத்து வைத்து விட்டார்களோ என அச்சத்தோடு யோசித்துக் கொண்டிருந்தேன்

அதே நேரம் அறைக் கதவை தட்டி திறந்தபடி வந்த அம்மா, “இந்தா இலக்கியா உன் டாக்டர் கோட்டு, இன்னைக்கும் துவைச்சுட்டேன், அயன் செய்து உள்ளே வைக்க நேரமாச்சு” என ஏதும் நடக்காதது போல் என்னிடம் நீட்டிய அம்மா, எனக்கு ஒரு கேள்விக்குறியாகத் தெரிந்தார்

“இந்தா பாரு இலக்கியா, கவனமா வேலை செய். சுத்தமா இருக்கனும், எதைத் தொட்டாலும் உடனடியா கையைக் கழுவிறு. கவனம் இலக்கியா” என தனது அறிவுரைகளை அடுக்கிக் கொண்டே எனக்காக உணவுகளைப் பொட்டலம் கட்டச் சென்ற அம்மாவை, வியப்போடு பார்த்துக் கொண்டே அப்பாவைத் தேடி அறைக்கு வெளியே சென்றேன்.

“அம்மாடி, இதோ இந்த வைட்டமின் எல்லாம் நேரத்துக்கு எடுத்துக்கோ, கவனமா வேலை செய்யனும்” என என் அப்பா மீண்டும்  பள்ளிக்கு அனுப்பும் தோரணையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்

இருவரின் மாற்றத்தை கண்டு என்னால் நம்பவே முடியவில்லை. நடந்தது என்னவாக இருக்கக்கூடும் என யூகிக்கவும் முடியவில்லை.

ஆனால், இம்மாற்றம் கலங்கி போயிருந்த என் மனதை தெளிந்த நீரோடைப் போல் ஆக்கியது. எப்போதும் போல் இருவரையும் கட்டியணைத்து விட்டு மருத்துவமனையை நோக்கி பயணித்தேன்.

மாலை மணி ஐந்தை எட்டுவதற்குள் ஓடோடிச் சென்று என் வார்டுக்குள் நுழைந்து,  “ஆமாம், இங்கிருந்த அனிதா எங்கே?” என நர்சிடம் கேட்டேன்

“டாக்டர்… காலையில் ரொம்ப மோசமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுச்சு, காப்பாத்த முடியலே இறந்திருச்சு” என வருத்தமாகச் சொல்லி விட்டு, அடுத்த நோயாளிக்கு மருந்து கொடுக்கச் சென்றார் நர்ஸ்

ஆம், இது தான் எங்களுடைய வாழ்க்கை. பல போராட்டங்களும் மரண ஓலமும் கேட்டுக் கொண்டு, நெருப்பின் மேல் வேலை செய்வது போல் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

இருந்தாலும், எங்களின் ஒரே நோக்கம் இந்த கோவிட்டை முழுமையாக ஒழிப்பது மட்டுமில்லாமல், மரணப்பிடியில் இருந்து பலரை மீட்பதும் தான் என எனக்கு நானே சங்கல்பம் செய்து கொண்டேன்

அதே நேரம், “டாக்டர் டாக்டர் இங்க வாங்களேன், இந்த எட்டாம் நம்பர் பேஷண்ட்டுக்கு ரொம்ப மோசமா மூச்சிறைக்குது” என என் கடமை அழைத்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    யாதுமாகி ❤ (சிறுகதை) – ✍ கருணா, கோவை

    பூனை போட்ட கோடு (சிறுகதை) – ✍ சுதர்சன், கும்பகோணம்