in ,

நேர்மறை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

குளித்து முடித்து, தலை துவட்டிக் கொண்டு வந்த குணாவுக்கு வயிறு காலியாக இருந்தது. டைனிங் சேரில் உட்கார்ந்து சாப்பிட என்ன செய்திருக்கிறாள் என்ற ஆவலில் ஹாட் பாக்ஸைத் திறந்து பார்த்தான்.

இடியாப்பம் செய்து வைத்திருந்தாள். பக்கத்திலேயே மூடி போட்ட ஒரு கிண்ணத்தில் தேங்காய் பாலும், இன்னொரு கிண்ணத்தில் தேங்காய் சட்டினியும் செய்து வைத்திருந்தாள்.  இடியாப்பம் வெதுவெதுப்பாக இருந்தது.

திடீரென்று அம்மாவை நினைத்துக் கொண்டான். அவர்கள்  இருக்கும் வரை, இட்லி, தோசையைத் தாண்டி வேறு எதுவும் செய்ய மாட்டாள் பானு.

ஒருநாள் ‘என்னம்மா… இட்லி தோசையே செய்யறே… வேற எதுவும் செய்ய மாட்டியா?‘ என்று அம்மா கேட்டாலும் கேட்டாள்.

‘எனக்குத் தெரியாது… உங்களுக்கு தெரிஞ்சா செஞ்சு சாப்பிட்டுக்கங்க…’ என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு நகர்ந்து போய் விட்டாள் பானு.

குணாவுக்கு கோபம் கொப்பளித்தது. அம்மாத்தான் அவனை அடக்கி வைத்தாள்.

‘வேண்டாம்பா… எங்களால உங்களுக்குள்ளே சண்டை வேண்டாம்… நாங்க ஒரு காலத்துல கம்மஞ்சோறும்பும் கேழ்வரகு களியும் சாப்பிடலையா… இந்த இட்லி கிடைக்க நானா கொடுத்து வச்சிருக்கனுமாக்கும்…’ என்று சமாதானம் சொல்லி அந்த விஷயத்துக்கு அப்போது அப்படியே முற்றுப் புள்ளி வைத்து விட்டாள்.

அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது.  எவ்வளவு பெருந்தன்மை இருந்தாள் அவள் அப்படி சொல்லியிருப்பாள் என்று நினைக்கும் போதெல்லாம் கண்கள் கலங்கத்தான் செய்தன அவனுக்கு.

இப்போது பார்த்தால், இடியாப்பம் செய்து வைத்திருக்கிறாள். நேற்று ஸ்டஃப்புடு சப்பாத்தி செய்திருருந்தாள். முந்தினநாள் பூரி செய்திருந்தாள். வெறுப்பு தலை தூக்கியது. மூடியை அப்படியே வைத்துவிட்டு நகர்ந்தான். சாப்பிடவே பிடிக்கவில்லை அவனுக்கு.

எங்கிருந்தோ ஓடி வந்தாள் பானு. ‘மாடில துணி காயப்போடப் போயிருந்தேங்க… நீங்க லேப்டாப்புல இருந்தீங்களா. சாப்பிட வர லேட்டாகும்னு நினைச்சுக்கிட்டு மேலே போயிருந்தேன்… அதுக்குள்ளே குளிச்சிட்டே வந்துட்டீங்க போல… கொஞ்சம் இருங்க… உங்களுக்கு இடியாப்பம் பிடிக்குமேனு செஞ்சிருக்கேன்… உட்காருங்க தட்டுல போடறேன்…’ என்று சொல்லிக் கொண்டே ஆவி பறக்கும் இடியாப்பத்தை இடுக்கியில் எடுத்து தட்டில் போட்டாள்.

அதுவரை மண்டை காய்ந்து போய் உட்கார்ந்திருந்தவன், சட்டென எழுந்து கொண்டான். ‘இல்லே எனக்கு பசிக்கலை…’

திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.  ‘குளிச்சி முடிச்சு  டைனிங் டேபிள்ல வந்து உட்கார்ந்திட்டு இப்போ பசிக்கலைன்னு சொன்னா என்னங்க அர்த்தம்… எவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சிருக்கேன் உங்களுக்காக…’ என்று இழுத்தாள்.

‘இப்படி கஷ்டப்பட்டு வித விதமா செய்யறதை எங்கம்மா கேட்கும்போது செஞ்சு கொடுத்திருக்கக் கூடாது… எவ்வளது நெஞ்சழுத்தகாரிடி நீ…’ என்று கேட்க நினைத்தவன், பேசாமல் வாயை மூடிக்கொண்டு எழுந்து போய் விட்டான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மறுபடியும் லேப்டாப்பை திறந்து கொண்டு மறுபடியும் உட்கார்ந்து விட்டான்.

‘மாடியில் துணி காயப் போட போயிருந்தேங்க‘ என்று அவள் சொன்னது நினைத்துக் கொண்டவனுக்கு அம்மாவின் நினைவு  வந்தது.

‘தம்பி… இங்கே வா‘ என்று மிகவும் மெல்லிய குரலில் அவனிடம் சொல்லி அவனை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனாள். ஏன், என்ன ஆனது என்று ஒன்றும் புரியாமல் அவளுடன் மாடி ஏறினான்.  மாடிக்குப் போய் அங்கே காய்ந்து கொண்டிருந்த துணிகளை சுட்டிக் காட்டினாள்.

‘என்னம்மா ஆச்சு?‘ என்று கேட்டான்.  பிறகுதான் புரிந்தது,  அம்மா அப்பாவின் துணிமணிகளை ஒரு ஓரமாய் ஒதுக்கி விட்டு தான் துவைத்துக் கொண்டு வந்திருந்த துணிகளை தொங்க விட்டிருந்தாள் பானு.

‘இடம் பத்தலைனா இன்னொரு கொடி இருக்கே அங்கே போட்டிருக்கக் கூடாதா… எங்க துணிகளை ஒதுக்கித் தள்ளிட்டு அவ கொண்டுவந்த துணிகளை தொங்க விட்டிருக்கா… காய்ஞ்சிருந்தா கூட எடுத்துக்கிட்டு போயிடுவேன்… காயாம கிடக்கற துணிகளை ஏன் சுருட்டித் தள்ளனும்…’ என்று கண் கலங்கினாள் அம்மா.  அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

பானு ஏன் இப்படியெல்லாம் செய்கிறாள் என்று அவனுக்கும் தெரியும். இன்று நேற்றா பார்க்கிறான். கடந்த ஒரு வருடமாகவே இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறாள். அவளைப் பொறுத்தவரை, மாமனார், மாமியார் வேண்டாம் அவளுக்கு.

கண்களை துடைத்துக் கொண்டு, ‘தம்பி… நீ தெரிஞ்சுக்கணும்னு தாம்பா கூட்டி வந்து காட்டினேன்… அதுக்காக நீ அவக்கிட்டே கேட்டுடாதே… சண்டையெல்லாம் போட்டுக்க வேண்டாம்.  என்ன பண்ண, அவ இன்னும் பக்குவப்படலை… எல்லாம் போகப் போக சரியாகிடும்… ’ என்றுவிட்டு நகர்ந்து போனாள்.

‘காஃபியாவது போட்டுத்தரட்டுமா…’ என்று சொல்லி அவனது சிந்தனையை களைத்தாள் அவள்.

சட்டென சுயநிலைக்குத் திரும்பிய அவன், ‘உனக்கு வேணுமானா போட்டு குடிச்சுக்கோ…’ என்று எரிச்சலாய் சொன்னான். அவள் அம்மாவுக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறாள் அதே ஸ்டைலில்.

கல்யாணத்திற்கு முன்பிருந்தே அவர்கள் அவனுடன் தான் இருக்கிறார்கள்.  அவன்தான் கிராமத்திலிருக்க வேண்டாம் என்று கூட்டி வந்திருந்தான். முதலில் நன்றாய்த்தான் பழகினாள் பானு, ஆனால் போகப்போக மாறி விட்டாள்

மாமியார் ஏதும் சொன்னால் முகத்தை சுளித்துக் கொண்டு போவது.  எதற்கும் ஒரு எதிர் பேச்சு. பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் கால்மேல் கால்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பது… தான் மட்டுமே காபி போட்டு குடிப்பது.. இன்னும் நிறைய.

பதமாக சொல்லிப் பார்த்து விட்டான் அவன். ஒவ்வொரு தடவையும் தனது செயலை நியாயப்படுத்தினாள் அவள்.

‘என்னோட கால், நான் போட்டுக்கறேன் ‘ என்பாள்.

‘எனக்கு தேவைப்பட்டது காபி கலந்து குடிக்கறேன்… மத்தவங்க ஏன் காபி குடிக்கறாங்கனு நான் எப்போவாவது கேட்டிருக்கேனா’ என்பாள்.

இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தான் அவன்.

திடீரென்று ஊருக்கு கிளம்பி விட்டனர் அம்மாவும் அப்பாவும்.

‘கிராமத்து வீடு இடிஞ்சு விழுந்திடும்போல இருக்குப்பா… நாங்க போயி கொஞ்சம் ரிப்பேர் வேலையெல்லாம் பண்ணனும்… திருவிழா, விசேஷம்னு நாம போயி தங்கனுமில்லையா‘ என்று அதற்கு ஒரு சாக்கு சொன்னார்கள்.

அவனுக்கு சரியென்று சொல்லவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை.

‘சரிம்மா உங்க இஷ்டம்… ஆனா ரிப்பேர் வேலை முடிஞ்சதும் உடனே ஊருக்கு திரும்பிடணும்..’ என்றான்.

‘சரிப்பா ‘ என்றாள் அம்மா. மகனின் மனது வேதனைப்படக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பாள் அம்மா.

ஊருக்கு கிளம்பி போய் விட்டார்கள். இப்போதுதான் பானு ரொம்பவும் சந்தோசமாய் இருக்கிறாள். அவளது பேச்சிலும் நடையிலும் ஒரு பெரிய மாற்றமே உண்டாகி விட்டது.

‘இந்தாங்க இந்த காஃபியையாவது குடிச்சிட்டு வேலை பாருங்க’ என்று காஃபி கப்பை நீட்டினாள். அவனுக்கிருந்த கோபத்திற்கு கப்பை அப்படியே தட்டி விடலாம் என்று கூட தோன்றியது. ஆனாலும் அவனுக்கிருந்த தலைவலி குடி என்றது. முறைத்து பார்த்துக் கொண்டே கப்பை வெடுக்கென பிடுங்கிக்கொண்டான்.  அந்த வேகத்தில் காஃபி கொஞ்சம் சிந்தியாதும் உண்மை.

‘சார் ரொம்ப கோபமா இருக்காப்புல இருக்கு… அது குறையற மாதிரி  நான் ஏதாவது பண்ணட்டுமா?’ என்று கொஞ்சலாய் கேட்டாள் அவனது தலைமுடியை கோதிவிட்டபடி. .

‘ஒரு ஆணியும் புடுங்க வேணாம்… கதவை சாத்திட்டு போய்ச் சேரு…’ என்று விரட்டினான். அவளுக்குப் புரிந்தது.  ஆனாலும் அவள் நகர்வதாகத் தெரியவில்லை.

மெல்ல அருகில் வந்து உட்கார்ந்தாள். மெல்ல ஆரம்பித்தாள். ‘ஏங்க… ரோம்ப போர் அடிக்குதுங்க’ என்றாள்

‘ அதுக்கென்ன இப்போ?’ என்றான்

‘நானே சமைச்சு, நானே துணி துவைச்சு, நானே வீட்டை பராமரிச்சு… ’ என்றாள்

வேலைக்காரி ஏதும் வைத்துக் கொள்ளலாமென்று சொல்ல வருகிறாளோ என்று யோசித்தான். ஆனாலும் லேப்டாப்பிலிருந்து கவனத்தை திருப்பாமலேயே இருந்தான்.

‘ஒரு சின்ன ஐடியா… ராணி டெலிவரிக்காக அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டா… சுந்தர்தான் குவைத்ல இருக்கானே. பாவம், எங்க அப்பா அம்மா மட்டும் தனியா இருக்காங்க. ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு அவங்களை இங்கே வந்து கூட்டிட்டு வந்து வச்சுக்கட்டுமா?’

‘அப்படியே எங்கம்மாக்கிட்ட பேசி அவங்களையும் வரச் சொல்லு. அவங்க வந்தா உங்கப்பா அம்மாவும் வரலாம்… ‘

கோபத்தில் கத்துவான் என்று நினைத்தவளுக்கு அதிர்ச்சி. முதன்முதலாக தனது எதிர்ப்பை நேர்மறையில் காட்டினான். பாவம், அவள்தான் குழம்பிப் போய் உட்கார்ந்திருக்கிறாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

அப்பாவின் மற்றொரு மனைவி (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 1) – ராஜேஸ்வரி