in ,

தட்டிவிட்ட கை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘ஜானு… விஷயம் தெரியுமா உனக்கு… தேவியை ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்காங்களாம்… ‘  

மல்லிகா அப்படி சொன்னவுடன் கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் ஜானகி. தேவிக்கு குழந்தை சாதாரணமாக பிறக்க வாய்ப்பில்லை… அநேகமாய் சிஷேரியன்தான் என்று ஏற்கனவே சொல்லக் கேள்விபட்டிருந்தாள் இவள். ஆனாலும் திடீரென்று ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் என்றதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

‘ஹல்லோ ஹல்லோ… ‘

மறுமுனையில் கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள் மல்லிகா… சட்டென சுயநினைவுக்குத் திரும்பி, ‘ ஸாரிடி ‘ என்றுவிட்டு, ‘ சொல்லு… சீமா ஹாஸ்பிடல்தானே…’ என்று கேட்டாள் இவள்.

கொஞ்சம் திகைப்புடன், ‘ ஏ.. உனக்கு முன்னாடியே தெரியுமா… ‘ என்றாள் அவள்.

‘ மக்கு… டாக்டர் சீமாகிட்டத்தானேடி அவ கன்ஷல்டேஷனே பண்ணிக்கிட்டிருந்தா… ‘ என்றுவிட்டு, ‘ சரி சரி… போனை வை… நான் போய் ஒரு நடை பார்த்துட்டு வர்றேன்… ‘ என்றுவிட்டு இவளும் போனை வைத்தாள்.

அப்போது பார்த்து அந்தப் பக்கமாக வந்த அவளது அம்மா, ‘ யாரும்மா போன்ல… ‘ என்றாள்.

‘ அம்மா… தேவிப்பிரியா இருக்கால்ல… அவளுக்கு  வலி வந்து ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம்… நான் ஒரு நடை போய் பார்த்திட்டு வந்திடறேன்மா… நீ சமையலை பார்த்துக்கோ… ‘ என்றுவிட்டு பரபரப்புடன் நகர்ந்தவளை உற்று நோக்கினாள்  அம்மா.

‘ என்னம்மா… ‘ என்றாள் இவள்.

‘ ஜானு… தேவிக்கு ஒரு பிரண்டுங்கற முறையில போறே… சரி. ஆனால் அங்கே அவளோட மாமியாருந்தானே இருப்பா. உனக்கு நடந்த அந்த அவமானத்தை எப்படி மறப்பே… அந்தம்மாவைப் பார்த்ததும் உனக்கு அது ஞாபகத்துக்கு வராதா… ஃபீல் பண்ண மாட்டியா… யோசி… ‘ என்றாள் அம்மா.

xxxxxxxxx

தேவிப்ரியா தனது வளைகாப்புக்கு ஜானகியையும் அழைத்திருந்தாள். ஒவ்வொருவராக போய் சந்தனத்தை அள்ளி அவளது கன்னத்திலும் கைகளிலும் தடவி, சந்தனத்தையும் குங்குமத்தையும் இட்டுவிட்டு வளையல்களை மாட்டிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

அதையெல்லாம் சுவாரசியமாக உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தாள். முன்னாள் ஒரு ஒரு அம்மாள் நின்றுகொண்டிருந்தாள். அடுத்து ஜானகிதான்.

திடீரென்று அவளது கையை யாரோ பின்பக்கமாக தட்டி விட்டது போல இருந்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் இவள். கொஞ்சம் தள்ளி, தேவியின் மாமியார் முறைத்தபடி இவளுக்கு ஏதோ ஜாடை காட்டினாள். இவளுக்குப் புரியவில்லை.

‘என்ன ஆண்ட்டி… ‘ என்றாள் இவள். அவளோ இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து காதோடு காதாய், ‘ இப்போ உனக்கென்ன அவசரம்… ‘ என்றபடி புருவங்களை வளைத்து முழிகளை உருட்டினாள்.

திகைத்துப் போன ஜானகி,  ‘ ஏன்… ‘ என்பது போல பார்த்தாள்.

‘ விலகிப் போ… ‘ என்பது போல ஜாடைக் காட்டினாள் அவள்.

புரிந்து போனதும், திகீர் என்றது ஜானகிக்கு. அழுகை முட்டியது. நொடிப்பொழுதில் வேகமாய் நகர்ந்தவள் யாரும் கவனித்துவிடாதபடி கண்களைத் துடைத்துக்கொண்டே நேரே ஓடிப்போய் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள். அழுகையை அடக்க முடியவில்லை.

ஜானகிக்கு கல்யாணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகின்றன. கணவனைப் பிரிந்துதான் வாழ்கிறாள். விவாகரத்து கொடுக்க ஒருவருடம் காத்திருக்கச் சொன்னார்கள். வரும் ஆகஸ்டுடன் அந்தக் கெடு முடிகிறது.   

இவள் முன்பொருதடவை தேவியைப் பார்க்கப் போயிருந்தபோது, வேறு யாரைபற்றியோ பேசிக் கொண்டிருக்கும் போது, அவளது மாமியார் ஜாடை மாடையாக, ‘புருஷனை பிரிஞ்சு கும்மாளம் போடறவளுக்கு குழந்தை எப்படி உண்டாகும்… ‘ என்று சொல்லி விட்டாள்.  

நமக்கும்தானே குழந்தை இல்லை, நாமும்தானே பிரிந்திருக்கிறோம், அதைத்தான் மறைமுகமாக சொல்லிக் காட்டுகிறார்களோ என்று யோசித்தவுடன், வெறுப்புத் தட்டியது, அழுகையாவும் வந்தது. அதைப் புரிந்துகொண்ட தேவி இவளை தேற்றினாள். அதற்குப் பிறகு அவர்களது வீட்டிற்கு போவதை குறைத்துக் கொண்டாள்.

‘நானும் பெண்தானே… குழந்தை இல்லாதது என் குற்றமா… இல்லை குழந்தை இல்லாதவர்கள்தான் வளையலே போடக் கூடாதா… ‘

உள்ளுக்குள் புழுங்கினாள். இரண்டு மூன்று முறை யாரோ பாத்ரூம் கதவைத் தட்டிப் பார்த்து விட்டு போய்விட்டார்கள். வாஷ்பேசினில் முகத்தைக் கழுவிக்கொண்டு பொட்டை சரி செய்துகொண்டு கூடத்திற்குள் வந்தாள்.

மக்கள் அங்குமிங்குமாய் நகர்ந்துகொண்டும் பேசிச் சிரித்துக்கொண்டும் ஷெல்பி எடுத்துக் கொண்டுமிருந்தார்கள். இவளுக்குத்தான் உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது அழுகை.

அங்கே ஓரமாய் கிடந்த ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள். ஆனாலும் பொறுமை இல்லை. அழுகை முட்டியது. அவ்வளவுதான், போன் பேசுவது போல போனை காதில் வைத்துக் கொண்டே மெல்ல நடந்து வெளியேறி வீட்டிற்கே போய்விட்டாள்.

விஷயம் கேள்விப்பட்ட கொதித்தெழுந்தாள் அம்மா.  ‘அவளெல்லாம் ஒரு மனுஷியா… அவள் சொன்னாள்னு பாதியிலேயே வத்திருக்கியே. தேவிக்காகவாவது, கொஞ்ச நேரம் இருந்து வளையல் போட்டுட்டு வந்திருக்கக் கூடாதா…‘ என்றாள் அவள். 

xxxxxxxxx

ஸ்பத்திரிக்குள் நுழையும்போதே தேவியின் குடும்பமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தேவிக்கும் இவளுக்கும் பொதுவான தோழியான சுகுணா, அங்கே நின்றிருந்தாள். அவளிடம், ‘ எப்படி இருக்கா தேவி… ‘ என்றாள் இவள்.

பதட்டத்துடன் நெருங்கிய அவள், ‘ ஆப்பரேஷன் நடந்துக்கிட்டிருக்கு. ஏற்கனவே ரெண்டு யூனிட் பிளட் ரெடியா வச்சிருந்திருக்காங்க… இப்போ பிளட் தொடர்ந்து லீக் ஆகுதாம்… இன்னும் ரெண்டு யூனிட் வேணுமாம். அவசரமா கேட்கறாங்களாம்… ரேர் க்ரூப் அல்லவா, கிடைக்கலையாம்… ‘ என்று படபடத்தாள் அவள்.

அவளுக்கு AB நெகடிவ் என்று ஜானகிக்கு தெரியும். அது அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது என்றும் தெரியும்.  ஆனால் ஜானகியும் அதே க்ரூப்தான்.

‘நானும்  AB நெகடிவ்தான்… நான் கொடுக்கறேனே… ‘ என்றாள் இவள்.  உடனே தேவியின் கணவனிடம் விஷயத்தைச் சொல்ல ஓடினாள் சுகுணா.

பரவசமடைந்த அவன் ஜானகியை கூட்டிக்கொண்டு லேபை நோக்கி ஓடினான். நர்ஸ் ஜானகியைக் கூட்டிக்கொண்டு போய் படுக்கவைத்தாள்.  அடுத்த பதினைந்து நிமிடங்களில் பரிசோதனை எல்லாம் முடிந்து  ரத்தம் இடம் மாறியது.

அடிக்கொரு தடவை தேவியின் கணவன் அங்கே வந்து ஜானகியையும் ரத்தம் இறங்குவதையும் பார்த்துவிட்டு போய்க்கொண்டிருந்தான். ‘ ஸார், உள்ளே வராதீங்க… ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தாள் நர்ஸ்.

திடீரென உள்ளே வந்த சுகுணா  மெல்லிய குரலில், ‘ப்ளீடிங் நின்னிடுச்சாம்… ஆபத்தில்லையாம்… பெண் குழந்தை பிறந்திருக்காம்… ரெண்டு பேருமே ஷேஃப்… ‘ என்றாள் பரவசத்துடன். ரொம்பவும் பூரித்துப் போனாள் ஜானகி.

அங்கே வந்த நர்ஸ், ‘அவ்ளோதாங்க… ‘ என்றுவிட்டு ஊசியை எடுத்துவிட்டு காட்டன் வைத்து பேண்டேஜ் போட்டுவிட்டு ஜானகியை எழுந்து கொள்ளச் சொன்னாள்.

சுகுணாவைப் பார்த்து, ‘அக்கா… தரைத் தளத்துல கேண்டீன் இருக்கு. அங்கே போய் இவங்களுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுங்க… தேவைப்பட்டா இட்லியோ சப்பாத்தியோ சாப்பிடக் கொடுங்க… சாப்பிட்டிட்டு ஒரு பத்து இருபது நிமிஷம் ரெஸ்ட்ல இருக்கட்டும்… ‘ என்றாள் அந்த நர்ஸ்.

உடனே ஜானகி, ‘நான் பேஷன்ட்டை பார்க்க முடியுமா… என் பிரண்டுதான் அவங்க… ‘ என்று கேட்டாள்.

‘மேடம்… இன்னும் ப்ரோசஜர் முடியலை… ஒரு அரை மணிநேரம் ஆகும்… அப்புறந்தான் பார்க்க முடியும்… ‘ என்றுவிட்டு போய்விட்டாள் நர்ஸ்.

கேண்டீன் போகும்போதே தேவியின் கணவனும் கூடவே ஓடிவந்தான். அவனே ஜூஸ் வாங்கிக் கொடுத்தான். அந்நேரம் பார்த்து டாக்டர் கூப்பிடுகிறார் என்று ஒரு நர்ஸ் வந்து சொல்ல அவன் ஓடிவிட்டான். பிறகு ஜூஸ் குடித்துவிட்டு மேலே வந்தாள் ஜானகி.

கொஞ்சம் களைப்பாகத்தான் உணர்ந்தாள். சுகுணாவும் கூடவே வந்தாள். ஆனாலும் தேவிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்துவிட்டது என்று உணர்ந்தபோது அந்த களைப்பெல்லாம் காணாமல் போனது. அவளை ரிஷப்ஷனில் உட்காரவைத்துவிட்டு நகர்ந்தாள் சுகுணா.

அதற்குள் தேவியின் அப்பா அம்மா அவளது தங்கை எல்லோரும் ஜானகியிடம் வந்து விட்டார்கள். தேவியின் அம்மா ஜானகியைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

‘தேவியை நீதாம்மா காப்பாத்தினே… உன் நல்ல மனசுக்கு கடவுள் எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்குவார்ம்மா… ‘ என்று அழுதார்கள். மற்றவர்களும் அவளிடம் நன்றி சொல்லிக் கொண்டார்கள்.

அப்போது தூரத்தில் தேவியின் மாமியார் இவர்களை நோக்கி தயக்கத்துடன் வந்து கொண்டிருப்பதைக் கவனித்த ஜானகி, சட்டென பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

தயங்கித் தயங்கி அருகே வந்தவள், ஜானகியின் கையை பற்றிக்கொண்டார்கள். ஏதோ பேச முயன்றார்கள். ஆனால் முடியவில்லை.

‘இதே கை தானே அன்றைக்கு நம் கையைத் தட்டிவிட்டது…‘ என்று நினைத்தபோது கூச்சமாக இருந்தது. சட்டென கையை இழுத்துக்கொள்ள முற்பட்டாள். அதற்குள் ஜானகியை அப்படியே அணைத்துக்கொண்ட அவள், ‘ ஸாரிமா ‘  என்றும் சொன்னாள்.

இவளுக்குத்தான் மனதாறவில்லை.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    டைகர் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    ஆயிரம் ரூபாயும் ஒரு அறையும் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு