in ,

டைகர் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு நாய்க்குட்டி துள்ளித் திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்ட கணேஷ், உடனே அதை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்து விட்டான்.

அதைப் பார்த்து திடுக்கிட்ட அவனது அம்மா சத்தம் போட்டாள், ‘டேய், அதை ஏன்டா வீட்டுக்குள்ளே தூக்கிட்டு வந்தே… கொண்டுபோய் விட்டுட்டு வா, அது என்ன ஜாதி நாயோ… என்ன இழவோ…‘  

அப்பா, அக்காவுக்கும் கூட அதை பிடிக்கவுமில்லை. அவைகளிடமிருந்து நமக்கு வியாதி ஒட்டிக் கொள்ளும் என்றும்  பயமுறுத்தினார்கள்.

அவனது அம்மா முன்பெல்லாம் கதை சொல்லியிருக்கிறாள், அவர்கள் சேலத்தில் இருக்கும் போது ஒரு நாய் வளர்த்து வந்தார்களாம். அது ஒருதடவை வெளியே போன போது ஒரு காரில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போய்விட்டதாம். அதைப் பார்த்து விட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் பைரவருக்கு உகந்த நாளாகப் பார்த்து அந்த நாய் இறந்து போனதால், அதற்குப் பரிகாரமாக அதைப் புதைத்துவிட்டு அகல்விளக்கு ஏற்றவேண்டும். பிறகு அவளும் அப்படித்தான் செய்தாளாம்.

அந்தக் கதையை அவள் நிறைய தடவை சொல்லக் கேட்டிருக்கிறான் அவன். அப்போதும் அதையே மறுபடியும் சொன்னாள்.

ஆனாலும் அவனோ, ‘ப்ளீஸ்மா… ப்ளீஸ்மா… நான் வளர்க்கறேம்மா… ‘ என்று அடம் பண்ணி அந்த நாயை வீட்டிலேயே வைத்துக் கொண்டான்.

அவர்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டு, ‘எப்படியோ போ…’ என்று விட்டுவிட்டனர். அவன் சந்தோஷத்துடன் அதை வளர்த்து வந்தான். அதற்கு டைகர் என்று பெயரும் வைத்தான். 

வாரம் ஒருமுறை, தவறாமல் அதைக் குளிப்பாட்டிவிடுவான். அவ்வப்போது ஷாம்ப்பும் போட்டு குளிப்பாட்டுவான்.

அதற்கென்று ஒரு சில்வர் கிண்ணம் வைத்து அதில் தினமும் தவறாமல் சாப்பாடு வைத்து விடுவான். பள்ளிக்கூடம் போகும்போதும் சரி, திரும்பி வந்தபிறகும் சரி, அது சாப்பிட்டதா என்று கவனித்துக் கொள்வான்.

அம்மா தயிர் புளித்துப் போய்விட்டது என்று சாக்கடையில் கொட்ட வந்தால், அதைப் பிடுங்கி சாதத்துடன் கலந்து உப்பும் சேர்த்து பிசைந்து வைத்துவிடுவான். டைகரோ அதைக் கொஞ்சமும் விட்டுவைக்காமல் சாப்பிட்டுவிடும்.  சிலசமயம் துடைத்துப் போட்டது போல தட்டைக் காலி செய்துவிட்டுத்தான் போகும்.

வீட்டில் மாதம் ஒரு முறை அசைவம் சமைப்பதுண்டு.  எலும்புகளை வீணாக்காமல் டைகருக்குப் போட்டு விடுவான். எலும்புகளுடன் சேர்த்து ஒன்றிரண்டு கறித் துண்டுகளையும் போடுவான். வாலை ஆட்டிக்கொண்டு டைகர்  அவைகளை ரசித்து ருசித்து சாப்பிடும்.

சிலசமயம் எலும்பைக் கடிக்க முடியாவிட்டால், காலால் எலும்பை அழுத்திக்கொண்டு வாயால் கடி கடியென்று கடிக்கும். அந்த எலும்பு நகர்ந்து கொண்டே போகும்… டைகரும் கூடவே போகும்.

தெருநாய்கள் அந்த வழியாகப் போகும்போதும் வரும்போதும் மெயின் கேட்டுக்கு வெளியே நின்றபடியே டைகரைப் பார்த்து குறைக்கும். அசைவ நாளில் மட்டும் சில நாய்கள் அவர்கள் வீட்டு காம்பவுண்டு கேட் முன்னால் வரிசைக்கட்டி நிற்கும். டைகர் எலும்பு கடிப்பதை உற்று உற்றுப் பார்க்கும்.

சிலசமயம் அவைகளுக்குள் சண்டை வந்து ஒன்றோடொன்று கடித்துக் கொள்வதும் உண்டு. புரண்டு உருளுவதுமுண்டு. அப்போதெல்லாம் தெரு நாய்களை ஓரக்கண்களால் பார்த்துக் கொண்டே வாலையும் ஆட்டிக் கொண்டு, டைகர்  எலும்புகளைக் கடிக்கும்.

காம்பவுண்டு கேட்டை தாழ் போட்டே வைத்திருப்பதால் அவைகளால் உள்ளே வர முடியாது. அவைகள் உள்ளே உற்று நோக்கும். டைகர் அமைதியாய் அவைகளை வேடிக்கைப் பார்க்கும்.

திடீரென்று ஒருநாள் அவனது அப்பாவுக்கு மும்பைக்கு மாற்றல் வந்துவிட்டது. குடும்பத்துடன் மும்பை போக முடிவு செய்துவிட்டார்கள். கவலை வந்துவிட்டது கணேஷுக்கு, டைகரை என்ன செய்வது என்று. அவர்களும் டைகரை எல்லாம் கூட்டிக்கொண்டு போகமுடியாது என்று கறாராக சொல்லி விட்டனர்.

ஊருக்கு வெளியே ரொம்ப தூரம் கொண்டு சென்று விட்டுவிடலாம் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அப்படியும் அது திரும்பி வந்துவிடும் என்றும் சொன்னார்கள். ஆனாலும் கணேஷுக்கு மனதில்லை, அதில் இஷ்டமுமில்லை.  அவனது நண்பர்கள் சிலரிடம் அதை எடுத்துக் கொண்டு போய் வளர்க்கச் சொல்லி கேட்டுக்கொண்டான். அவர்களோ மறுத்து விட்டார்கள்.

ஒரு நாள் லாரியில் சாமான்களை அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்பியும் விட்டார்கள். கணேஷ் மனமே இல்லாமல் திரும்பித் திரும்பி பார்த்தபடி நடந்தான். வீட்டிலிருந்த மற்றவர்கள், ‘அது எப்படியாவது கிடைத்ததைச் சாப்பிட்டுப் பிழைத்துக்கொள்ளும், நீ பேசாமல் கிளம்பி வா…‘  என்று அவனுக்கு சமாதானம் சொல்லி அவனைக் கூட்டிக் கொண்டு போனார்கள்.

xxxxxxxxx

கிளம்பும் சமயம், வழக்கம்போல கேட்டை வெளிப் பக்கமாக தாழ் போட்டுவிட்டு போய் விட்டார்கள் அவர்கள். யாரும் இல்லாத வீட்டில் தனித்து நின்றது டைகர். நேரம் ஆக ஆக பசி எடுத்தது. காம்பவுண்டுக்குள்ளேயே அங்குமிங்குமாய் அலைந்தது. சாப்பிட ஒன்றும் கிடைக்காத போது களைத்துப் போய் முருங்கை மர நிழலில் படுத்துக் கொண்டது.

கைப்பிடி கழன்றுகொண்ட ஒரு பெரிய பக்கெட்டில் டைகருக்காகவே எப்போதும் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள்.  அதில் தண்ணீர் கொஞ்சம் மிச்சம் இருந்தது. அதில் பழுத்த இலை தழைகள் விழுந்து கிடந்தன. வேறு வழியின்றி அவ்வப்போது அதை மட்டும் குடித்துக் கொண்டது டைகர்.  அதனுடைய கிண்ணத்தில் மண்ணெல்லாம் விழுந்து அழுக்குப் படிந்து போனது.

சாத்தப்பட்ட வீட்டுக்கதவை அடிக்கொரு தடவை எட்டிப் பார்த்துக்கொண்டது. எப்போதாவது யாரவது திறக்கமாட்டார்களா என்று. வீட்டுக்காரர்கள் எல்லோரும் வீட்டைக் காலி செய்துவிட்டு வெளியூர் போய் விட்டார்கள் என்று அதற்கு தெரியவில்லை..

பசி அதிகமாக இருக்கும்போது காம்பவுண்டு கேட்டருகில் போய் நிற்கும். அது திறந்திருந்தால் தானே வெளியே போகமுடியும். அதுவுமில்லாமல் தெருநாய்கள் அந்த வழியாக போகும்போதும் வரும்போதும் டைகரைப் பார்த்து இப்போது ரொம்பவும் குரைக்க ஆரம்பித்தன. கணேஷோ மற்றவர்களோ இருந்திருந்தால் அவைகளை விரட்டுவார்கள். இப்போது யாருமில்லாததால் அவைகள் தங்கள் இஷ்டம்போல குரைத்தன.

அப்போதும் கூட கேட்டருகே ஒரு சொறிநாய் நின்றபடி டைகரைப் பார்த்து குரைத்து கொண்டு தான் இருந்தது. பதிலுக்கு குரைத்து குரைத்து வெறுத்துப் போன டைகர் திரும்பி வந்து படுத்துக் கொண்டது. 

சிலசமயம் மட்டும் காம்பவுண்டு ஓரமாகவே இடதும் வலதுமாக நடந்து கொண்டிருந்தது. அருகில் இருந்த செடிகளில் இருந்த இலை தழைகளை கடித்துத் தின்றது. பசி அடங்கும் போது போய் படுத்துக் கொண்டது. சிலசமயம் அது மண்ணையும் விடவில்லை.

தயிர் சோறும் எலும்பும் தின்று கொழுத்துப்போன அதன் வயிறு இப்போது ஒட்டிப் போய் இளைக்கவும் ஆரம்பித்திருந்தது. ஒரு வழியாக பக்கெட்டில் பழுப்பேறியிருந்த தண்ணீரும் காலியானது. இப்போது தாகத்துக்கு தண்ணீரும் இல்லாமல் அல்லாடியது. குழாயடியை மட்டும் அடிக்கடி போய் நக்கிப் பார்த்தது. ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லாமல் வெறுப்புடன் திரும்பி வந்து படுத்துக் கொண்டது.

காம்பவுண்டு கேட் வழியாக வெளியேற முடியாது என்று உணர்ந்த டைகர் ஒரு தடவை காம்பவுண்டு சுவர் மீது இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி வைத்து எட்டிப் பார்த்தது. சுவரின் உயரம் அதிகமாய் இருந்ததால் அதனால் தாண்டமுடியவில்லை.

அதைக் கண்டுவிட்ட தெருநாய்கள் அதன் முகத்துக்கு நேர் எதிரில் வந்து எட்டிப் பார்த்து குறைக்க ஆரம்பித்தன. தாண்ட முயன்று முயன்றுப் பார்த்து ஓய்ந்து போய் திரும்பி வந்து படுத்துக் கொண்டது.

ஒருமுறை பசி தாங்க முடியாமல், குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் காம்பவுண்டு சுவரை வெறியுடன் தாண்ட முயன்றது. எகிறிக் குதித்தால்தான் சுவரைத் தாண்டமுடியும் என்று உணர்ந்த டைகர் கொஞ்சம் பின்னால் வந்து ஒரே பாய்ச்சலாய் தாவி  காம்பவுண்டு சுவரைத்தாண்டி இரண்டு குட்டிக்கரணங்கள் அடித்து ரோடில் போய் விழுந்தது.

அந்த நேரம் பார்த்து வேகமாய் வந்துகொண்டிருந்த ஒரு காரில் அது அடிபட்டுக் கத்தியது. வழியால் துடித்தது. காரோ நிற்காமல் போயேவிட்டது. தூரத்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி, ‘ஐயோ கார்காரன் ஏதோ நாய் மேல ஏத்திட்டான் போல… ‘ என்று சத்தம் போட்டுக்கொண்டே ஓடிவந்தாள். அங்கே அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த டைகரைப் பார்த்தாள்.  

‘அட, கணேஷ் வீட்டு நாயி….  ‘ என்று முனுமுனுத்துக் கொண்டாள். அருகே போய் பார்த்த போதுதான் அது அசைவின்றி கிடந்தது தெரிந்தது.

அந்த வழியாக வந்த ஒரு பெண்மணி, ‘அடக்கடவுளே… இப்போதான் பைரவருக்கு பூஜை பண்ண போய்க்கிட்டே இருக்கேன்… இப்போ பார்த்து கண்ணு முன்னால இப்படி அடிப்பட்டுக் கிடக்குதே இது… ‘ என்று கவலையுடன் சொல்லிக்கொண்டே போனார்.

பக்கத்து வீட்டு அம்மாள் ஓடிப்போய், மொபைலை எடுத்து, பேசிக்கொண்டிருந்தாள்.

‘கார்பொரேஷன் ஆபீஸ்ங்களா… இங்கே ஒரு நாயி கார்ல அடிபட்டு செத்துக் கிடக்குதுங்க… வந்து க்ளீன் பண்ணுங்க… ‘

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பேத்தி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    தட்டிவிட்ட கை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு