in ,

அப்பாவின் மற்றொரு மனைவி (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

ப்பா சாமிநாதன் சித்தியை வீட்டுக்குக் கூட்டி வந்தபோது சங்கரன் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அது முழுதும் புரியாத வயதும் அல்ல. இலைமறைவு காய் மறவாக நண்பர்கள் மூலமும், படிக்கக் கூடாத புத்தகங்கள் மூலமாகவும் அரைகுறையாக அறிந்து கொண்ட அரைவேக்காட்டுத்தனம் கொண்ட பருவம்.

‘இது சரஸ்வதி.. உன் சித்தி. இது சங்கரன்..’ என்ற அப்பாவின் அறிமுகத்துடன் தொடங்கிய உறவு. அவள் இவனைப் பார்த்த பார்வையில் எந்த உணர்ச்சியும் இல்லை. தலையாட்டலோ அல்லது புன்முறுவலோ கிடைக்காத அலட்சியப் பார்வை.

எதையும் பார்க்காதது போல் முகத்தில் நிலைத்திருந்த நிலைகுத்திய கூர்மைக் கவனிப்பு. அவனுக்கும் அவளைக் கண்டதில் அன்போ, பாசமோ அல்லது சிநேகிதமோ தோன்றவில்லை. அறிமுகம் கடந்த அடுத்த நொடியில் அவள் சமையலறையில் இருந்தாள். அவன் படிக்கும் அறையில் இருந்தான்.

இந்த வயதில் எதற்காக அப்பா இன்னொரு மனைவியைக் கூட்டி வந்தார் என்பது அவனுக்கு விளங்கவில்லை. சமையலையே தொழிலாகக் கொண்ட அப்பாவிற்கு, அம்மாவின் மறைவிற்குப் பிறகு சமையல் செய்வதில் பெரிய சிரமம் இருந்ததாகத் தெரியவில்லை. அவனும் தன் வேலையைத் தானே கவனித்துக் கொள்கிறான்.

அப்பாவைப் பார்த்தால் பெண் சுகத்திற்கு ஏங்கும் ஆள் போலவும் அவன் பார்வையில் தெரியவில்லை. பின் எதற்கு சித்தி என்ற பெயரில் ஒரு புதிய ஆள் அந்த வீட்டுக்குள் நுழைய வேண்டும்? சங்கரனுக்குப் புரியவில்லை. அப்பாவிடம் கேட்குமளவிற்கு அவரிடம் அத்தகைய‌ நட்புப் பரிமாற்றமும் அவனுக்கு எப்போதும் இருந்ததில்லை.

பள்ளிக்கு பணம் கட்ட வேண்டிய நேரத்திலும், சாப்பிடும் நேரத்திலும் நடக்கும் ஓரிரு வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர அவனுக்கும் அப்பாவுக்கும் வார்த்தைத் தொடர்புகள் எக்காலத்திலும் இருந்ததில்லை.

அம்மா இருந்த காலத்திலும் அப்படித்தான். இப்போது அந்த மெளன உலகத்தில் மேலும் ஒரு பெண், சித்தி என்ற பெயரில். சரஸ்வதி அந்த வீட்டுக்குள் நுழைந்து ஒரு மாதம் ஆகியும் சங்கரனும் சரஸ்வதியும் இதுவரை ஒரு வார்த்தை கூட நேரடியாகப் பேசிக் கொள்ளவில்லை.

காலையில் பள்ளி செல்லும் நேரத்தில் காலை உணவு டேபிளின் மேல் தயாராய் இருக்கும். மதியஉணவு டிபன்பாக்சில் போட்டு வைக்கப்பட்டிருக்கும். போகும்போதெல்லாம் யாரும் யாரிடத்திலும் சொல்லிக் கொள்வதில்லை. அப்பா மாத்திரம் தந்தி வார்த்தைகள் போல் சித்தியிடம் சமையலறையில் பேசும் பேச்சு மெலிதாக அவ்வப்போது கேட்கும்.

அன்று சங்கரனின் பள்ளியில் கொடி நாள் கொண்டாட்டத்திற்காக‌ ஒவ்வொரு மாணவனும் ஐம்பது ரூபாய் கொண்டு வரச் சொல்லியிருந்தார்கள். அப்பாவிடம் கேட்டபோது, ‘பள்ளிக்கூடம் போகும்போது வழியில் கந்தசாமி அண்ணன் மளிகைக்கடையில் போய் வாங்கிக் கொள்’ என்று சொல்லி விட்டார்.

அப்பா சமையல் வேலைக்குப் போகும் நேரம் போக மீதி இருக்கும் நாட்களில் டவுனில் மளிகைக் கடை வைத்திருக்கும் கந்தசாமியின் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதனால் சங்கரன் எப்போது கேட்டாலும் மளிகைக் கடைக்காரர் கந்தசாமி, அப்பா சாமிநாதனின் சம்பளத்தில் இருந்து காசை எடுத்துக் கொடுத்து விடுவார்.

பள்ளிக்குப் போகும் வழியில் இருக்கும் ‘கந்தசாமி மளிகை’ என்ற பெயர்ப் பலகை உள்ள‌ மளிகைக் கடைக்குச் சென்று கேட்டபோது, ‘ஐம்பது ரூபாய் போதுமா தம்பி?’ என்று கனிவான‌ புன்முறுவலுடன் கல்லாவிலிருந்து காசை எடுத்துக் கொடுத்தார் கந்தசாமி.

பள்ளியில் சங்கரனுக்கு இருக்கும் ஒரே தோழன் மனோகரன். நான்காம் வகுப்பிலிருந்து ஒரே வகுப்பில் தொடர்ந்து நான்கு வருடங்கள் ஒன்றாகப் படித்ததாலோ அல்லது இருவரும் தாயை இழந்தவர்கள் என்பதாலோ, இனம் தெரியாத ஒரு அன்புச்சங்கிலி அவர்களை இணைத்திருந்தது.

சங்கரன் வாயைத் திறந்து பேசுவான் என்பதே அவன் மனோகரின் கூட இருக்கும்போது மட்டும்தான் தெரியும். மனோகரனையும் அவன் தங்கையையும் விட்டுவிட்டு அவனின் அம்மா கொரோனாவில் இறந்தபோது அதற்காகவே காத்திருந்தது போல அடுத்த வருடமே அவன் அப்பா மறுமணம் செய்து கொண்டார்.

குழந்தைகள் இருவரையும் வளர்த்துவதற்காக துணைதேவை என்று வெளியில் சொல்லி தன்னை நியாயப்படுத்திக் கொண்டார். ஆனால், அதற்கு மாறாக, வந்த அவனின் சித்தி தாயில்லாப் பிள்ளைகள் இருவரிடமும் ஏனோ வெறுப்பையே கக்கிக் கொண்டிருந்தார். தட்டிக் கேட்க வேண்டிய அப்பாவோ பிள்ளைகளிடமே குற்றங்களைக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார். தப்பித் தவறிக்கூட தன் புது மனைவியைக் கேள்வியே கேட்பதில்லை.

அன்று பி.டி.பீரியடில் மனோகரன் காலை நொண்டிக் கொண்டிருந்தான். தனிமையில் சங்கரன் அதுபற்றிக் கேட்டபோது கண்கலங்கச் சொன்னான், ‘காலைல சித்தி கால் முட்டியில அடிச்சுட்டாங்கடா… அதான் ஓட முடியல..’ என்றான்.

‘அடிச்சாங்களா, எதுக்கு?’ என்றான் சங்கரன். சித்திகள் அடிப்பார்கள் என்பதே அவனுக்குப் புதிதாக இருந்தது.

‘அது அடிக்கடி நடக்கும். காலைல எழுந்து சித்தி எழுந்திருக்கறதுக்க முன்ன கடைக்குப் போய் பால் வாங்கி வருவேன். இன்னைக்கும் வாங்கி வந்தேன். வீட்டிற்குள் வரும்போது கதவு முனை பட்டு ஒரு பால் பாக்கெட்டில் ஓட்டையாகி கொஞ்சம் பால் சிந்திவிட்டது. அதற்குத்தான் அடி.. எனக்குப் பரவாயில்லடா.. சில சமயம் தங்கச்சி அடி வாங்கும்போது தான் எனக்கு மனசு வலிக்கும். அப்பத்தான் எங்க அம்மாவை நினைத்துக் கொள்வேன்’ என்றான்.

பிறகு ஆச்சரியத்துடன் சங்கரனிடம் கேட்டான், ‘ஆமா.. உங்க சித்தி உன்னை அடிக்க மாட்டாங்களா?’.

‘ஊஹீம்.. அடிக்க மாட்டாங்க..’ என்றான் சங்கரன்.

‘ம்..உங்க சித்தி நல்லவங்க போல.. அதான் மத்தியான சாப்பாடு கூட நல்லதா கொண்டு வர்ற நீ…’ என்றான் மனோகரன் ஏக்கத்துடன்.

அன்று பள்ளியின் தாளாளர்களில் ஒருவர் திடீரென்று நெஞ்சுவலியில் இறந்துவிட்டதால் மதியத்தோடு பள்ளி லீவு விட்டு விட்டார்கள். அடுத்த நாள் பிசிக்ஸ் ரிகார்டு எழுதிக் கொடுக்க வேண்டி இருந்ததால் வீட்டிற்குச் சென்று எழுதிக் கொள்ளலாம் என்று வீட்டை நோக்கி நடந்தான் சங்கரன்.

வீட்டின் முன் கதவு உட்புறமாகத் தாளிடப்பட்டு இருந்தது. சித்தி ஒரு வேளை தூங்கிக் கொண்டிருக்கலாம் அல்லது பின்புறம் தோட்டத்தில் இருக்கலாம் என்று நினைத்து வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்புறம் சென்றான் சங்கரன். அவர்களின் பின்புறக் கதவு இரவு நேரம் தவிர மற்ற நேரங்களில் தாளிடாமல் சாத்தி வைக்கப்பட்டிருக்கும்.

தோட்டத்துக்குள் நுழையும் சிறிய படலைத் திறந்து கொண்டு தோட்டத்துக்குள் நுழைந்தான் சங்கரன். தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பலா மரங்களும், முந்திரி மற்றும் வாழை மரங்களும் பசுமையோடு சேர்த்து குளுமையையும் கொடுத்துக் கொண்டிருந்தன. சில சமயம் சித்தி தோட்டத்தில் விளைந்திருக்கும் கீரைகளைப் பறித்துக் கொண்டிருப்பார்.

தோட்டத்தில் யாரும் இல்லாததால், வீட்டின் பின்புறக் கதவைத் திறக்கச் சென்றான். படிக்குப் பக்கத்தில் ஒரு புதிய விலையுயர்ந்த செருப்பு கழட்டி விடப்பட்டிருந்தது. அது அப்பாவின் செருப்பல்ல என்பது சங்கருக்குத் தெரியும். பின்புறக்கதவு திறந்திருந்தது.

கதவை மெதுவாகத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சங்கரன். வீடு அமைதியாக இருந்தது. சித்தியின் படுக்கை அறையில் மாத்திரம் மெல்லிய, கிசுகிசுப்பான பேச்சுக் குரல் கேட்டது. அப்பாவின் குரல் அல்ல அது. வயதின் ஆர்வத்தினால் திறந்திருந்த அறையினுள் பார்வையைச் செலுத்தினான் சங்கரன்.

இரு உருவங்கள் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. இடுப்புக் கீழ் தெரிந்த உருவத்தில் ஒன்று ஆண் மற்றொன்று பெண். ஆண் உருவம் அவனுக்குப் பரிச்சயம் இல்லாதது. பெண் உருவம் சரஸ்வதி சித்தி.

குப்பென்று வேர்க்க, படபடப்புடன் திரும்பி பின்புற வாசல் வழியாக வெளியே வந்தான் சங்கரன். படபடப்பும், வியர்வையும் அடங்காத நிலையில் தூரத்தில் இருந்த பலா மரத்துக்குப் பின் மறைந்து நின்றான். அந்த ஆண் யார் என்பதைத் தெரிந்து கொண்டு அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று கவனமாகப் பின்புற வாசலையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் அந்த ஆண் வெளியே வருவது தெரிந்தது. பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தான் சங்கரன். செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டு திரும்பியபோது தெளிவாகத் தெரிந்தது அந்த உருவம் சங்கரனுக்கு… அது வேறு யாருமல்ல, மளிகைக்கடை கந்தசாமி என்று.

தனிமையில் அப்பா சாமிநாதனிடம் சொன்னபோது, விட்டேத்தியாக ‘அதுக்கென்ன இப்போ?’ என்றார். இதுவரை ஓரிரு வார்த்தைகளே பேசிக் கொண்டிருந்த அப்பாவிடம் அதிகமாகப் பேசியது இப்போதுதான்.

தான் கூறியது சரியாகக் காதில் விழவில்லையோ என்று மறுபடியும் தான் பார்த்ததை மீண்டும் சங்கரன் சொன்னபோது ‘அதுக்கென்ன இப்போ?’ என்றார்.

வெறித்துப் பார்த்த அவனிடம், ‘உன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப் போவது உன் படிப்புத்தான். அதில் கவனம் செலுத்து. இதையெல்லாம் வெளியே சொல்லிக்கிட்டுத் திரியாதே’ என்றார் சுவற்றைப் பார்த்துக்கொண்டு.

வெறிகொண்டு படித்ததில், கல்லூரிப் படிப்புத் தாண்டி ஒரு வங்கி வேலையில் அமர்ந்தான் சங்கரன். அவன் விரும்பியது போலவே வேறு மாநிலத்தில் போஸ்ட்டிங் கிடைத்தது நிறைவாயிருந்தது அவனுக்கு.

அந்த வீட்டையும், அந்த உறவுகளையும் தாண்டி எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போக விரும்பினான் சங்கரன். நான்கு வருடங்கள் கழித்து சென்னைக்கு பதவி உயர்வு வந்து சென்னை வந்து சேர்ந்து ஒரு மாதம் கழித்து, ஒரு நாள் மளிகைக் கடை கந்தசாமியிடம் இருந்து போன் வந்தது.

‘தம்பி.. அப்பாவுக்கு கொஞ்சம் முடியவில்லை. படுக்கையாகி விட்டார். ஆகாரம் குறைந்து விட்டது. அவருக்கு நல்ல நினைவு இருக்கும்போதே வந்து பார்த்துவிட்டுப் போய்விடு..’ என்றார்.

அப்பா மிகவும் மெலிந்திருந்தார். தண்ணீர், ஜூஸ் மாத்திரமே அவரின் ஆகாரமாய் இருந்தது. அவர் கையைப் பற்றிக் கொண்டு அருகில் அமர்ந்தபோது மெல்லிய குரலில் முனகினார், ‘உன்னிடம் ஒண்ணு சொல்லணும்’.

‘சொல்லுங்க… சித்தி காய் வாங்கப் போயிருக்காங்க..’ என்றான் சங்கரன்.

‘அவ உன் சித்தியில்லை’ என்றார்.

ஒருவேளை நினைவு தப்பிவிட்டதோ என்று அவர் முகத்தைச் சந்தேகமாகப் பார்த்தான் சங்கரன். சாமிநாதன் மீண்டும் சொன்னார், ‘அவ உன் சித்தியில்லை. உன் அம்மா இறந்த பிறகு எனக்கு சமையல் வேலையும் சரியாகக் கிடைக்காத நிலை. அம்மாவின் வைத்தியத்திற்கு நிறைய செலவு செய்துவிட்டதால் சேமிப்பும் இருக்கவில்லை. வாடகை கொடுக்காததால் வீட்டைக் காலி செய்யச் சொல்லி வீட்டுக்காரர் சொல்லி விட்டார். உன் படிப்புச் செலவு, மளிகைச் செலவு என்று தவித்துக் கொண்டிருந்தபோது மளிகைக் கடைக்காரர் கந்தசாமியிடம் என் பாரத்தைக் கொட்டினேன். அப்போதுதான் அவர் ஒரு வழி காண்பித்தார்.

‘இதோ பார் சாமிநாதா.. உனக்கு ஒரு பிரச்சினை இருப்பது போல எனக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எனக்கு குடும்பம், குழந்தைகள் என்ற நல்ல வாழ்க்கை இருக்கிறது. இந்தக் கடை மற்ற எல்லா வசதிகளும் என் மாமனார் கொடுத்தது. இன்று என் மாமனார் என்னை துரத்தி விட்டார் என்றால் நான் உன்னை விட மோசமான நிலைக்கு வந்து விடுவேன். நான் வியாபார விசயமாக வெளியூர் சென்றபோது சரஸ்வதி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. மிகவும் நல்ல பெண். வெளியூருக்குச் சென்று அவளை அடிக்கடி பார்ப்பது என் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகம் இப்போது அடிக்கடி தோன்றுகிறது. நான் உனக்கு வீடு எடுத்துத் தருகிறேன். வீட்டுச் செலவுகள் அனைத்தையும் மளிகை சாமான்கள் உட்பட ஏற்றுக்கொள்கிறேன். உன் பையனை எவ்வளவு வேண்டுமானாலும் படிக்க வைக்கிறேன். நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஊர் உலகத்துக்கு சரஸ்வதியை உன் இரண்டாவது மனைவி என்று சொல்ல வேண்டும். இந்த ரகசியம் உனக்கும், எனக்கும், சரஸ்வதிக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது. உன் பிரச்சினை, என் பிரச்சினை இரண்டும் இதனால் தீர்ந்துவிடும். என்ன சொல்கிறாய்?’ என்றார். வேறுவழியே இல்லாததால் ஒப்புக் கொண்டேன்’.

கையைப் பற்றிக்கொண்டு மேலும் சாமிநாதன் ஏதோ சொல்ல முயலும்போது, சரஸ்வதி வெளிக்கதவைத் திறக்கும் சப்தம் கேட்டதால் சங்கரன் எழுந்து கொண்டான். கட்டிலில் வற்றிப்போய் இளைப்பு வாங்கிக்கொண்டு கிடக்கும் சாமிநாதன் என்ற இந்த மனிதர், தான் வாழ்ந்த காலத்தில் என்ன சுகத்தை அனுபவித்திருப்பார் என்று எண்ணிப் பார்த்ததில் அவனுக்கு அவர்மேல் ஒரு கழிவிரக்கமே தோன்றியது. ஏனோ அவர் மேல் வருத்தமோ, கோபமோ வரவில்லை. இன்று அவன் வாழும் வாழ்க்கைக்கு அவர் கொடுத்த கல்வியே காரணம் என்ற நன்றி உணர்ச்சியும் அவன் மனதில் நிறைந்திருந்தது.

அடுத்த பதினைந்து நாட்களில் சாமிநாதனின் வாழ்க்கை முடிந்திருந்தது. காரியங்கள் எல்லாம் எதுவும் இல்லாமல், எளிமையாக மின்மயானத்தில் எரிந்து, சொம்பில் சாம்பலானார் சாமிநாதன்.

அந்த நாள் முழுவதும் அவனுடனேயே இருந்தார் கந்தசாமி. அடுத்த இரண்டு நாட்களில் அவன் கிளம்புவதற்கு முன், சரஸ்வதி இருக்கும்போதே, கந்தசாமியிடம் பேசினான், ‘நான் சித்தியை என்னுடன் கூட்டிக்கொண்டு போகிறேன். இரண்டு காரணங்கள். ஒன்று அப்பா உங்களுக்குக் கொடுத்த வாக்கு. இரண்டாவது அவங்க கையால் நான் சாப்பிட்ட சாப்பாடு. கடைசிவரை அவங்க என்னோடதான் இருப்பாங்க. நீங்க எப்பா வேண்டுமென்றாலும் தாராளமா அங்கே வந்து பார்க்கலாம்’.

சொல்லி முடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்தபோது சரஸ்வதி கையில் பெட்டியுடன் தயாராய் நின்றிருந்தாள். ‘அப்பா எல்லாம் சொல்லிட்டாரா?’ என்று கேட்டுவிட்டு நன்றியுடன் அவன் கையைப் பற்றிக் கொண்டார் கந்தசாமி.

அடுத்து வந்த நாட்களும், மாதங்களும், வருடங்களும் யாருக்காகவும் நிற்காமல் ஓடின. சங்கரனிடமிருந்து கந்தசாமிக்கு ஒரு நாள் போன் வந்தது.

‘சித்தி நாட்களை எண்ணிக்கிட்டிருக்காங்க… அவர்களின் முடிவு நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளன. அப்படி ஏதும் நடந்தால் உடனே நீங்கள் வரவேண்டும். நீங்கள் வந்துதான் எல்லாக் காரியங்களும்..’ என்றான் சங்கரன்.

‘ஏம்பா அப்படிச் சொல்றே? அதான் நீ இருக்கறயில்ல?’ என்றார் கந்தசாமி.

‘இல்லைங்க.. ஒரு பெண்ணுக்கு இறுதிக் காரியம் செய்வது ஒண்ணு மகனாயிருக்கணும், இல்லன்னா கணவனா இருக்கணும். இரண்டு பேரும் இல்லையென்றால் தான் மூன்றாவது மனிதர்கள். நீங்க கொள்ளி போடுவதுதான் முறை..’.

‘சரிப்பா… வந்துடறேன்’ என்றார் கந்தசாமி.

(முற்றும்)

நூலாசிரியர் பற்றி:

இதுவரை எனது சிறுகதைகள் தினமணி கதிர், மங்கையர் மலர், கல்கி, மல்லிகை மகள், மைவிகடன் மற்றும் சஹானா போன்ற இணைய இதழ்களில் வெளி வந்துள்ளன. எனது சிறுகதை ‘காவடி ஆட்டமும் காந்திமதியின் காதலும்’ மங்கையர் மலர் நடத்திய ஜெயசிறீராஜ் நினைவு சிறுகதைப் போட்டியில் ரூ.3000/ பரிசு பெற்றுள்ளது. எனது சிறுகதை ‘ஓர் ஒடுங்கிய உழவனின் கதை’ திருப்பூர் மக்கள் மாமன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு(ரூ 1000/‍) வென்றுள்ளது.

மேலும் எனது சிறுகதைத் தொகுப்பு (20 சிறுகதைகள்) புத்தகமாக ‘குடைக்காம்பு’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. நன்றி.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சுகுணாக்கா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    நேர்மறை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு