மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
என் பேரு மகிழினி. நான் இந்த மாவட்டத்தோட ஆட்சியரென்பது மூன்று மாதத்திற்கு காரணமாக மனப் முந்தைய நிகழ்வு. அதிகப்படியான பணிச்சுமையின் பிறழ்வு ஏற்பட்டு விட்டதாக சொல்லி என்னை இடை நீக்கம் செய்திருக்கிறார்கள்.
நான் மறுபடியும் பணிக்கு திரும்ப வேண்டுமானால் எனது மனநிலை தெளிவாக இருப்பதாக மனநல மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பொருட்டே இன்று எனது மனநிலை குறித்து பரிசோதனை செய்து கொள்வதற்காக மனநல மருத்துவரை சந்திக்க வந்துள்ளேன்.
எனக்கு கொஞ்ச நாட்களாக திடீர்னு ஏதாவது பற்றி எரியுறத போல தோன்றுகிறது. உடனே தீயணைப்பு சேவைக்கு தகவல் தந்து விடுறேன். அவர்களும் அவசரமாக வந்து பார்த்துட்டு ஏமாந்து போயிருக்கிறார்கள்.
இவ்வாறு ஒரு முறை அல்ல, பல தடவ நடந்திருக்குது. இவ்வாறாக தோன்றுவது நான் உயிருக்கு உயிராக நேசித்த என் தோழியின் அகால மரணத்திற்கு பிறகுதான்.
நான் படித்து முடித்து தற்போது ஒரு மாவட்ட ஆட்சியர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கலாம். ஆனால் எனது பள்ளி நாட்களில் குறைவான மதிப்பெண்கள் எடுக்கிற ஒரு சராசரி மாணவியாகதான் இருந்தேன். இந்த நிலை நான் யாழினியை சந்திப்பதற்கு முன்பிருந்தது.
யாழினியை என்னோட கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்த முதல் நாளில்தான் சந்தித்தேன். அதுதான் என் வாழ்க்கையின் அபூர்வ தருணமென்று கூட சொல்லலாம். அவளுடனான சந்திப்பிற்கு அப்புறம் தான் எனது வாழ்க்கையே மாறிடுச்சின்னு சொன்னால் அது மிகையல்ல.
எனது அப்பா ஒரு அரசு இடைநிலைப் பள்ளி கணித ஆசிரியர். அம்மா இல்லத்தரசி. வீட்டு பொறுப்புகளை முழுக்க அம்மாவே கவனித்து வந்தார். அப்பா குடும்பம் சார்ந்த எந்த விஷயத்திலும் அவராக தலையிடுவதில்லை.
என் பெற்றோருக்கு நாங்கள் மூன்று பெண் பிள்ளைகள். முதலில் பிறக்கபோவது எந்த பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணமிருந்தது அப்பாவுக்கு.
அடுத்து ஆண் பிள்ளையை எதிர்பார்த்தார், அதுவும் பெண். மூன்றாவது பெரிதும் நம்பினார் பெருத்த ஏமாற்றத்தை கொடுக்க நான் வந்து பிறந்தேன். மூன்றும் பெண்ணாய் போனதிலிருந்து அப்பா வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாததை போல இருந்தார்.
இன்னொரு முயற்சி செய்து பார்க்கலாம் என்றால் கணக்கு ஆசிரியருக்கே அரசு சொல்லும் கணக்கு தெரியவில்லை என்பார்கள் என்று அம்மாவை குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள சொல்லி விட்டார்.
குடும்ப கட்டுப்பாட்டை இரு பாலினத்தவரும் செய்து கொள்ளலாமென்கிற அளவிற்கு மருத்துவம் வளர்ந்திருந்த போதும் கூட, ஆண்கள் ஒரு போதும் செய்து கொள்வதே இல்லை.
நிலம் மலடானால் விதையும் மலடாகி தானே போகும். அது என்னவோ இந்த தலைமுறை ஆண்களுக்கு நிலத்தை மலடாக்குவதில் அலாதி பிரியம். அப்பா எங்களை கண்டு கொள்வதும் இல்லை, கண்டிப்பதும் இல்லை. அவர் உண்டு அவரது வேலையுண்டு என்றிருப்பார். ஆனால் சம்பள பணம் மொத்தத்தையும் ஒரு ரூபாயைக்கூட அவர் வசப்படுத்திக் கொள்ளாமல் அப்படியே அம்மாவிடம் கொடுத்து விடுவார்.
பெரியதாக எதிலும் நாட்டமில்லாததை போலிருப்பார். அவரை எங்களால் புரிந்து கொள்ளவே முடியாது. அம்மாவை கேட்டால் “எல்லாம் பொம்பளை பிள்ளைகளாக போயிடுச்சேன்னு பொறுப்பா இருக்கிறதால உங்களுக்கு அப்படி தெரிகிறதெ”ன்று சப்பை கட்டு கட்டுவார்.
எனது மூத்த அக்கா பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அடுத்த வருஷமே அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.
இரண்டாவது அக்கா ஓரளவுக்கு நல்ல படிக்க கூடியவள்தான். அவள் இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவே, கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்கள். ஆனால் எனக்கு படிப்பு என்றாலே வேப்பங்காயாக கசந்தது.
நானும் மேல்நிலை இறுதித் தேர்வில் தோற்றுவிட்டால் எனக்கும் உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அப்பறம் படிப்புக்கு முழுக்கு போட்டு விடலாம் கல்யாணத்தை பண்ணிக் கொண்டு கணவன், குழந்தையென வாழலாம் என்கிற எண்ணத்தில் கனவு கண்டு கொண்டிருந்தேன்.
அதற்கான பயிற்சியாக அக்காவின் குழந்தைகளை குளிக்க வைப்பது, வீட்டில் எல்லோரின் துணிகளை துவைப்பதென்று ஆரம்பித்து எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுகொண்டு செய்தேன். இன்னும் ஒரு படி மேலாக தேர்வு முடிவு வருகிற அன்றுகூட நான் தோற்று போயிவிட வேண்டுமென்று கடவுளை வேண்டி, அர்ச்சனைகூட செய்தேன்.
வெளிப்பார்வையில் எனது செயலை பார்க்கிற யாருக்கும் படிக்கிற நேரத்தில் ஒழுங்காக படித்தால் கடைசி நேரத்தில் கடவுளை வேண்ட அவசியம் இருந்திருக்காதென்றுதான் நினைக்க தோன்றும்.
இதையே எனது வேண்டுதலின் நோக்கம் அறியாது அம்மா அறிவுரை போல சொன்னார். ஆனால் வேண்டுதலுக்கு எந்த பலனும் இல்லை. எனது துரதிஷ்டம் எல்லையில் தேர்ச்சி பெற்று தொலைத்துவிட்டேன்.
கலை படிப்பிற்குக்கு கூட கல்லூரியில் இடம் கிடைக்காத அளவுக்குதான் எனது மதிப்பெண்கள் இருந்தது. இருந்தாலும், இலவச சீட்டு கிடைத்ததென்று பொறியியல் படிப்பில் சேர்த்து விட்டு விட்டார்கள்.
இவ்வளவு மோசமான நிலையில் இருந்த எனது கல்வி தரத்தை, மாவட்ட ஆட்சியரென்ற நிலைக்கு உயர்த்திய என் உயிர் தோழியை ஒரு கட்டத்தில் பிரியலாம் என்றுகூட முடிவெடுத்திருந்தேன்.
பிரியமான தோழியை பிரிவது எனக்கு சோகமான நிகழ்வாக இருந்தாலும், திடீரென்று அவள் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கெஞ்சியது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. இதனால் மிகவும் வேதனை அடைந்தேன்.
அவள் மீது எனக்கு அளவு கடந்த அன்பும் பாசமும் இருப்பது உண்மைதான். அவள் இல்லாமல் வாழ்வது வேதனையானதுதான். அந்த அளவுக்கு அக்கறையோடும் தாயன்போடும் என்னை கவனித்துக் கொண்டாள்.
ஆயிரம் முறை என்ன, கோடி முறைகூட சொல்வேன். உயிருக்கும் மேலான நட்புதான் யாழினியின் நட்பு. அதற்காக அவளை திருமணம் செய்து கொள்வது எப்படி? இயற்கைக்கு முரணானதாயிற்றே? இந்த ஊர், உலகம் எப்படி பேசும்? ஊர், உலகத்தை விடுங்கள். அவர்கள் எதைத்தான் பேசவில்லை.
ஆனாலும் ஒரு பெண் எப்படி இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது. நிராகரித்தால் தற்கொலை செய்து கொள்வேனென்று மிரட்டுறாள். என் உயிரைவிட அவளது உயிர்தான் எனக்கு முக்கியம். அவள் சாகக்கூடாது எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும்.
அதே நேரத்தில் அவளை திருமணம் செய்து கொள்ளவும் முடியாது. என்ன செய்வது? அவள் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைக்கும் அளவுக்கு நானும் எல்லை மீறி நட்பை வளர்த்து விட்டேன். நானும் இதற்கு ஒரு காரணமாகதான் அமைந்துவிட்டேன்.
எப்படியாவது அவளையும் காப்பாற்ற வேண்டும் என்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்கிற எண்ணத்தில் இதற்கொரு தீர்வு பெறவேண்டி மனநல மருத்துவரை போய் சந்தித்தேன்.
அவரிடம் எனக்கு எல்லாமே யாழினிதான். என்னை இந்த அளவுக்கு ஊக்குவித்து, புரியாத பாடங்களை புரிய வைத்து, படிப்புல மட்டுமே கவனத்தை செலுத்த வைத்து, ஒரு நல்ல மாணவியாக உருவாக்கினது என் யாழினிதான்.
அன்புன்னா என்ன, பாசம்னா என்ன என்று எல்லாத்தையும் புரிய வைத்தது அவதான். எத்தனையோ பசங்க என் பின்னால சுத்தி இருக்கானுங்க. அவ அறிவுரை சொல்லியிருக்கிறாள். அதுவும் குறிப்பிட்டு இந்த பையன் சரியில்லை அந்தப் பையன் உன்னை ஏமாத்திடுவான்னு முன்கூட்டியே எச்சரித்தும் இருக்கிறாள்.
உண்மைய சொல்லனும்னா, அவ சொன்னது எல்லாமே நடந்திருக்கு. அவ மட்டும் இல்லேன்னா, என் வாழ்க்கையே திசை மாறி போயிருக்கும். எங்க வீட்டுல இருக்கிறவங்களைவிட என்னை தாயன்போடு கவனித்துக் கொண்டிருந்தவள் யாழினிதான்.
இன்னும் வெளிப்படையா சொல்லனும்னா அவ மட்டும் ஒரு ஆணா பொறந்திருந்தா நிச்சயமா அவளதான் நான் காதலிச்சிருப்பேன், கல்யாணமும் பண்ணி இருப்பேன். ஆனால் என்னை இந்த அளவுக்கு உயிருக்கு உயிரா நேசிக்கிற ஒரு ஜீவன் பொண்ணா பொறந்ததுதான் வருத்தம்.
பொண்ணா பொறந்த என் உயிர் தோழியை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? அப்படி ஒரு நினைப்பு எனக்குள்ள வரவே இல்ல. ஆனால் இதை அவளுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னுதான் தெரியல.
இதுவே எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலா இருக்கு. இப்படியே போனா அவ சாகுறதுக்கு முன்னால குற்ற உணர்வுல நான் செத்துப் போயிடுவேன் போலிருக்குதென்று எனக்கும் யாழினிக்குமான நட்பை பற்றி முழுவதுமாக சொன்னேன்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் “உங்களோட ஆழமான நட்பு, நீங்க யாழினி மேல வச்சிருக்கற அன்பு, யாழினி உங்க மேல வச்சிருக்கற அன்பு, எல்லாமே எனக்கு புரியுது. அதே மாதிரி யாழினி உங்கள் மீது காதல் கொண்டது தவறில்லை.” என்றார்.
மருத்துவர் எடுப்பிலேயே அவ்வாறு சொன்னது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
“என்ன சொல்றீங்க டாக்டர்? ஒரு பொண்ண இன்னொரு பெண் காதலிப்பதா? அது மட்டுமில்லாம கல்யாணம் வேற பண்ணிக்கிறதா? நினைக்கும் போதே அருவருப்பா இருக்குது. நான் உங்ககிட்ட இருந்து இப்படியோரு அறிவுரையை எதிர்பார்க்கல. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்தான் இல்லேன்னு சொல்லல. அதுக்காக, நான் எப்படி அவள கல்யாணம் பண்ணிக்க முடியும்.
நான் அவகிட்ட இருந்து மீளனும். என் மீது மட்டுமல்ல, எந்த பெண் மீதும் அவளுக்கு காதல் வரக்கூடாது. என்னை மாதிரியே அவளும் ஓர் ஆணை திருமணம் பண்ணிக்கிட்டு நல்லபடியாக வாழனும். இதற்கு ஏதாவது ஆலோசனை இருந்தால் சொல்லுங்க. இல்லேன்னாலும் பரவாயில்லை. நான் கிளம்புறேன். தயவு செய்து இயற்கைக்கு முரணான ஒரு விஷயத்தை எத்துக்க சொல்லி அறிவுரை சொல்லாதீங்க” என்று கோபித்து கொண்டேன்.
“மகிழினி நான் சொல்ல வர்ற விஷயத்தை காது கொடுத்து கேளுங்க. அப்பறம் உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க. முதல்ல ஒரு பொண்ணு மேல இன்னொரு பொண்ணுக்கு காதல் ஈர்ப்பு வர்றது தப்பில்லேங்கிறேன். அதை கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டிங்கன்னா, நான் சொல்ல வர்ற விஷயங்கள் உங்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்” என்றார்.
“எனக்கு ரொம்ப குழப்பமாக இருக்கு டாக்டர். நீங்களே இப்படி சொல்றீங்களே?”
அவர் என்னுடைய அறிவினத்தை பார்த்து புன்னகைத்து விட்டு “ஆணுக்கு பெண் மீதுதான் காதல் வரணும், பெண்ணுக்கு ஆண் மீதுதான் காதல் வரணுங்கிறது எல்லாம் அந்த காலம். ஆண் மீது ஆணுக்கு காதல் வரும் பெண் மீது பெண்ணுக்கும் காதல் வரும். முன்பெல்லாம் ஹோமோசெக்ஸை மனநல மருத்துவ புத்தகத்தில் மன நோய் என்று தான் வரையறுத்திருந்தார்கள். இப்போது அந்தப் புத்தகத்திலிருந்து மனநோய் என்பதை நீக்கி விட்டார்கள்.
ஆக ஏதோ ஒரு சூழ்நிலையில உங்கள் மீது யாழினிக்கு காதல் வந்து விட்டது. அது தவறில்லை. இது யாழினியின் இயற்கையான உணர்வாககூட இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் இருந்தே உங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கலாம் உங்களுக்கும் அவர் மீது காதல் ஏற்பட்டிருந்தால் யாரைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால் உங்களுக்கு அவளை காதலிக்கவோ திருமணம் செய்து கொள்ளவோ எண்ணம் இல்லை. அதனால் விலகிக் கொள்ள எடுத்த முடிவு சரியானதுதான்.
அதற்காக உங்களை திருமணம் செய்து கொள்ள முன்மொழிந்ததை நீங்கள் ஏளனமாகவோ அருவருப்பாகவோ அல்லது சமூகத்துக்கு புறம்பானதாகவோ நினைக்க வேண்டாம். நீங்கள் மட்டுமல்ல யாரும் அப்படி நினைக்க வேண்டாம். அப்படி நினைத்து யாழினியை ஒதுக்குவது அவரது உயிருக்கு நீங்கள் வைக்கும் உலைதான். உங்களுக்கு விருப்பமில்லாத ஓர் ஆண் உங்களை நாகரிகமாக அணுகி முன்மொழிந்தால் எப்படி அதை நிராகரிப்பீர்களோ! அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்.
பெண் பெண்ணிடம் முன்மொழிந்தார் என்பதற்காக அதை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம். பெண்ணும் பெண்ணும் வைத்துக் கொள்ளும் உறவுக்கு லெஸ்பியன் என்ற பெயர் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த லெஸ்பியன் உறவு தவறானது அல்ல. இவ்வகை உணர்வு பிறக்கும்போதே யாழினிக்குள் உருவானதுதான். நீங்கள் நிராகரித்தாலும்கூட எதிர்காலத்தில் யாழினி இப்படியொரு உறவதான் தேடி போவாங்க.
அப்படிப்பட்ட உணர்வு இருப்பவர்களோடு தான் யாழினி வாழ்க்கையை தொடர முடியும். நீங்கள் நினைப்பது போல ஆணை திருமணம் செய்து கொண்டு அவரால் வாழ முடியாது. அவரை அப்படி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தாலும் விவாகரத்தில்தான் முடியும்.
இதற்காக பரிதாபப்பட்டெல்லாம் நீங்கள் யாழினியை காதலிக்கவோ திருமணமோ செய்து விடாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையையும் பாதித்துவிடும். காரணம் உங்களுக்கு யாழினியோடு ஒன்றுபட்ட உணர்வு இல்ல. ஆனால் திடீரென்று அவருடைய நட்பை துண்டித்துக் கொள்ளாமலும் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்து விலகப் பாருங்கள். அதே நேரத்தில் முழுவதுமாக விலகியும் விடாதீர்கள்.
யாழினியின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது நீங்கள் மட்டுமல்ல, உங்களது சகதோழிகளும் யாழினியின் குடும்பத்தினரும் தான் என்பதை புரிய வையுங்கள். உங்கள் மீது யாழினிக்கு காதல் வர நீங்கள் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் பழகியது அந்த நோக்கத்தில் அல்ல. உண்மையிலேயே காதலிக்கிறேன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி யாழினியிடம் நீங்கள் நட்பு பாராட்டி இருந்தால் மட்டுமே நீங்கள் குற்ற உணர்வு அடையலாம்.
ஆனால் நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லையே, தோழி என்ற உணர்வோடு தானே அவரிடம் பழகி இருக்கிறீர்கள். அதனால இது குறித்து துளி அளவும் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்கு பிடித்த ஆணை திருமணம் செய்து கொண்டு தாராளமாக வாழ்க்கையை தொடங்குங்கள். நிச்சயமாக யாழினிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்” என்று நம்பிக்கையூட்டி ஆறுதல்படுத்தினார்.
நான் மருத்துவர் சொன்னபடியே யாழினியிடம் நடந்து கொள்ள, அவளும் புரிந்துகொண்டு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்கிற எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட ஆரம்பித்தாள். ஆனால் பின் வந்த நாட்களில் மருத்துவர் எதை செய்யக் கூடாதென்று உறுதியாக சொன்னாரோ அதை செய்யும்படி யாழினியை துண்டினேன்.
அப்படி ஒரு உணர்வை நானே அவளுக்கு ஏற்படுத்தினேன். எனது இரண்டாவது அக்காவுக்கு திருமணமாகி தலை பிரசவத்திற்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். நான் யாழினியை எனது வீட்டிற்கு அழைத்து சென்று பிரசவத்திற்கு வந்திருக்கும் என் அக்காவின் கருத்தரிப்பு குறித்த பெருமிதங்களை யாழினியும் உணரும்படி செய்தேன். தாய்மை எல்லாவற்றையும் வென்றிடுமென்று அறிவுறுத்தினேன். நம்பிக்கையூட்டினேன். அதை அவளும் ஏற்றுகொண்டு தனது கருவறையில் ஒரு குழந்தையை வளர்க்க வேண்டுமென்கிற மனநிலைக்கு வந்தாள்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவளது திருமணத்துக்கு தோழியாக நின்று நல்லபடியாக திருமணத்தை நடத்தி வாழ்த்திவிட்டு வந்தேன். நான் எதிர்பார்த்தது போல யாழினி பத்தாவது மாதம் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த மூன்றாவது மாதம் வரைக்கும் யாழினியின் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போகிறதென்று நினைத்திருந்தேன்.
அதெல்லாம் போய் என்று சொல்வது போல என் யாழினி தனக்கு தானே நெருப்பு வைத்து தற்கொலைக்கு முயன்றாள் என்ற தகவல் வந்ததும், யாழினியை காண அவள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்தேன்.
மருத்துவமனையில் நான் கண்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு காட்சி. என் யாழினி எண்பது சதவீதத்துக்கு மேல் உடல் கருகி சுடு மண்ணுக்குள் தூக்கி போட்ட மண் புழுவை போல துடித்துக் கொண்டு கிடந்தாள். அவளை, நான் சந்திப்பதற்கு முன்னரே அவளிடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்து விட்டார்கள்.
காவலர்களிடம் தானே தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்தவள், என்னிடம் அவளது கணவன்தான் நெருப்பு வைத்து எரித்துவிட்டதாக சொன்னாள்.
“தாய்மையடைந்த பிறகாவது எனது உணர்வு பெண்மையை நோக்கி பயணிக்குமென்று நினைத்துதான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கிருந்த உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எவ்வளவு நாளுதான் ஒரு ஆணின் ஆசையை என்னிடம் தீர்த்து கொள்ள பிணம்போல உணர்வற்று கிடப்பேன். அவனும் எத்தனை நாள்தான் ஒரு பிணத்தோடு உறவு கொள்வது போல உறவு கொள்வான். என் மனம் ஒரு பெண்ணுடன் புணர்வு கொள்ளதானே நினைக்கிறது. அவன், என்னை கொலை செய்தானென்று நான் நினைக்கவில்லை. மாறாக இந்த நரக வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை பெற்று தந்தான் என்றுதான் நினைக்கிறேன். எனக்காக, நீ அதிகார துஷ்பிரயோகம் செய்யமாட்டேனென்று எனக்கு சத்தியம் செய்து கொடு” என்று என்னிடம் சத்தியம் பெற்றவள், அவளது மகனை நன்றாக வளர்க்கும்படி என்னிடம் வேண்டிக் கொண்டவள், அவனது உணர்வுகளை புரிந்து கொள்ளும்படி கேட்டு கொண்டவள், எனது விழிகள் பார்த்து கொண்டிருக்கும்போதே அவளது விழிகளின் வழியே என்னை விட்டு நீண்ட தூரம் சென்றிருந்தாள்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings