in

மாத்தி யோசி (சிறுவர் சிறுகதை) – ✍ மாலா ரமேஷ், சென்னை

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ஹாய் சுட்டீஸ்… ஒரு இன்டெரெஸ்டிங்கான கதை சொல்லப் போறேன்.

ஒரு சின்ன கிராமம், அதுல ஒரு குளம் இருந்துச்சு.  அந்தக் குளத்துல பகல்ல நிறைய தாமரைப் பூக்கள் பூத்துருக்கும்.  சாயந்திரம் நிறைய அல்லிப்பூ பூத்துருக்கும். பாக்கறதுக்கே ரொம்ப அழகா இருக்கும். 

அந்தக் குளத்துல நிறைய மீன்கள் உண்டு. எல்லா மீன்களும் அந்தக் குளத்துல வளர்ந்திருக்கிற பாசியையும் சின்னச் சின்ன புழுப் பூச்சிகளையும் ‘லபக், லபக்’னு பிடிச்சு சாப்பிடும்.  

குளத்துத் தண்ணில சில பசங்கல்லாம் ‘தொபுக்கட்டீர்’னு குதிச்சு கையையும் காலையும் வேகமா உதைச்சுக்கிட்டு நீச்சல் அடிப்பாங்க. சில நேரம் குட்டிப் பசங்க புதுசா நீச்சல் பழகவும் வருவாங்க. ஆனா, இருக்கிறதுலயே யாரு சூப்பரான ஸ்விம்மர் தெரியுமா? 

அது வேற யாருமில்ல, அப்புக்குட்டிதான். பேரைக் கேட்டதும் ஏதோ ஆனைக்குட்டின்னு நினச்சிடாதீங்க, அது ஒரு சின்ன குறும்பான ஆமைக்குட்டி. அதுக்கு தரையில மெதுவா போறதை விட தண்ணில நீந்தறது ரொம்பப் பிடிக்கும். 

அப்புக்குட்டி  அதோட நாலு காலையும் விரிச்சுக்கிட்டு தலைய அப்பப்ப தண்ணிக்கு மேல தூக்கிப் பாத்துட்டு படு ஸ்டைலா நீந்தும். பெரிய பெரிய மீனெல்லாம் கூட அந்தக் குளத்துல இருக்கும். ஆனா, பயப்படாம அதுக்குப் பக்கத்துலயே போய் அப்புக்குட்டி நீந்தும். அப்படிப்பட்ட அசகாய சூரன்தான் அப்புக்குட்டி.

அந்தக் குளத்தோட கரை ஓரத்துல நிறைய விழுதுகளோட ஒரு பெரிய ஆலமரம் இருந்துச்சு. அந்த ஆலமரம்தான் நிறைய பறவைகளுக்கு வீடா இருந்துச்சு. மரத்துல சில மரப்பொந்துகள் உண்டு. சில பொந்துகளுக்கு உள்ளே, பச்சைக்கிளி ‘கீக்கீ’னு கத்திக்கிட்டு இருக்கும்.

காக்கா, குருவி, மைனானு கிளைகள்ள நிறைய பறவைகள் எப்பவும் நிறைஞ்சு இருக்கும். பக்கத்துல குளம் இருந்ததால, அழகான நீல நிற மீன்கொத்தியும் அந்த மரத்துல உட்கார்ந்துட்டு இருக்கும்.  அது தண்ணிய கூர்ந்து பாத்துட்டே இருக்கும்.  சரியான நேரத்துல, ‘சர்’ருனு பறந்து போய் மீனை அப்படியே கொத்தித் தூக்கிடும்.   

இது மட்டுமில்லாம,  அந்த பெரிய ஆலமரத்துல, குரங்குகளும் இருக்கும். ஆரம்பத்துல குரங்குகளைப் பார்த்துப் பறவைகள் ஓடினாலும், பிறகு எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. அந்தக் குரங்குக் கூட்டத்துல ஒரு குட்டிக்குரங்கு இருந்துச்சு, அது பேரு சீனு. இந்தச் சீனுவும் அப்புக்குட்டியும் திக் ஃப்ரெண்ட்ஸ். அவங்க ரெண்டு பேரும் பிறந்ததுலேருந்தே ஒரே இடத்துலதான் வளர்ந்துட்டு வராங்க.

அப்புக்குட்டி  தண்ணில நீந்தறதப் பார்க்க சீனுவுக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த  அழகை சீனு கரைல இருந்து பாத்து கைத் தட்டும்.  நல்லா தண்ணில ஆட்டம் போட்டுட்டு அப்புக்குட்டி வெளில வரும்.  உடனே, சீனு கிடுகிடுன்னு மரத்து மேல ஏறி இங்கயும் அங்கயும் தாவும். விழுதைப் பிடிச்சுட்டு தொங்கும். 

டார்ஜான் மாதிரி ஒரு விழுதுல தொங்கிட்டே அடுத்த விழுதுக்கு ‘சர்’ருனு பறந்து போகும். அதைக் கீழே இருந்து அப்புக்குட்டி பார்த்துக்கிட்டு இருக்கும். அந்த நேரத்தில், சீனு ஒரு கிளைலே இருந்து,  இன்னொரு கிளையில் போய் மறைஞ்சிக்கும். அது எங்கே ஒளிஞ்சிட்டு இருக்குதுன்னு கீழே இருந்து அப்புக்குட்டி கண்டுபிடிக்கும். இப்படி ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆடுவாங்க. தினமும் காலைலயும் சாயந்திரமும் ஆட்டம்தான்.    

அப்புக்குட்டியின் உடம்பு மேல உள்ள ஓடு மிக அழகான டிசைனுடன் இருக்கும். நல்ல தடிமனான ஓடு. ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் போதும். அவ்ளோதான், அப்புக்குட்டி உடனே தன்னோட நாலு கால்கள், தலை, அப்றம் பின்னாடி நீட்டிட்டு இருக்கிற சின்ன வால் பகுதி எல்லாத்தையும் உள்ளே இழுத்துட்டு வெறும் ஓடு மட்டும் தெரியற மாதிரி அப்படியே கிடக்கும்.  அந்த ஆபத்து சரியானதும், திரும்பவும் எல்லாத்தையும் நீட்டிக்கும். இது சீனுவுக்கு சிரிப்பா  இருக்கும். சில நேரம், இந்த வித்தையை சீனு செய்து காட்ட சொல்லும். அப்புக்குட்டியும் அதுக்காக செய்து காட்டும்.

சில நேரம் சீனு, அப்புக்குட்டியைப் பார்த்து “நீ சரியான பயந்தாங்குளிடா. ஏதாவது ஒண்ணுன்னா உன்னோட ஓட்டுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிற” என்று கிண்டல் செய்யும். அப்போல்லாம் அப்புக்குட்டி எதுவும் சொல்லாம சிரிச்சுக்கும்.

ஒரு நாள் அவங்க இருந்த பக்கம், வழி தடுமாறி நரி ஒண்ணு வந்துடுச்சு. அது ஆலமரத்துல இருந்த பெரிய பொந்து உள்ள ஒளிஞ்சுட்டு இருந்துச்சு. அந்த மரத்துக்கு கீழே அப்புக்குட்டியும், மேல சீனுவும் இருந்தாங்க.

பாத்துட்டே இருக்கும் போது, அந்தப் பக்கமா போன ரெண்டு கோழிய அப்படியே ‘லபக்’னு தொண்டையப் பிடிச்சுக் கவ்வி, பொந்துக்குள்ள தூக்கிட்டு போயிடுச்சு நரி. கொஞ்ச நேரத்துல, பாவம் அது ரெண்டும் உயிரையே விட்டுடுச்சு. உடனே, சீனுவும் அப்புக்குட்டியும் ரொம்ப டென்ஷனாயிட்டாங்க.

சீனுவுக்கு ரொம்ப கோவம் வந்து மரப்பொந்துகிட்ட போயி அதோட பல்லை கோபமா காட்டி காச்சு மூச்சுனு சத்தம் போட்டுச்சு. உடனே நரி ‘டபக்’குனு வெளியே வந்து தன்னோட முன்னங்காலால ஒரு அறை விட்டுச்சு.  அதுல தடுமாறிப் போன சீனு ‘தொப்பு’ன்னு விழுந்துடுச்சு.

சரியா, அது அப்புக்குட்டி மேல விழ, அது வழக்கப்படி எல்லாத்தையும் உள்ளே இழுத்துக்கிட்டு ஓடா இருந்துச்சு. சீனு எழுந்ததும் அப்புக்குட்டி மெதுவா அதைப் பாத்துச்சு.  நரியோட கால் நகம் பூரி விட்டதால,  சீனுவுக்கு ரத்தம் வந்துட்டு இருந்துச்சு. 

சீனு குட்டிகுரங்கு தானே… அதோட உடம்பு ரொம்ப மென்மையா இருந்ததுல தாங்கல. ஏற்கனவே,  அந்த நரி, ரெண்டு கோழிய சாப்டு ஏப்பம் விட்டதால, சீனுவுக்கு ஒரு அடி கொடுத்ததோட விட்டுடுச்சு.  இல்லன்னா, அதையும் ஒரு கை பாத்திருக்கும். ரத்தம் வந்தாலும், சீனுவோட கோவம் என்னவோ குறையல. அதுக்கு இன்னும் ஆத்திரமாவும் அவமானமாவும் இருந்துச்சு. 

“இருடா… அதைப் போயி திருப்பி அடிச்சிட்டு வரேன்” என்றது அப்புக்குட்டியிடம்.

உடனே அப்புக்குட்டி,  “சீனு… பொதுவாவே நரி ரொம்பவும் தந்திரமானதுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க. அதுலயும் இந்த நரி ரொம்ப பேட் பாயா இருக்குது. அதனால…”  என்றதும்

மிகவும் கடுப்பான சீனு, “அதனால என்ன?  நீ போயி ஓட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கப் போறியா?” என்று சத்தம் போட்டது. அப்புக்குட்டியின் முகம்  வாடிப் போனது.

“சீனு… தந்திரமான இந்த நரிய நாமளும் தந்திரமாத்தான் மாட்டிவிடணும். இல்லன்னா,  அனாவசியமா ரத்தகாயம் பட்டு புண் படறதுதான் மிச்சம்”  என்று சொல்லிவிட்டு முகத்தை கோபமாக வேறு பக்கம் திருப்பிக் கொண்டது. அப்போது சீனுவுக்கு நன்றாக வலிக்க ஆரம்பித்திருந்தது.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்றது அப்புக்குட்டி. உடனே சீனு அதைப் பார்த்து முறைத்தது. 

“சரி விடு… நமக்குள்ள எதுக்கு சண்டை? சீனு… கவனமா கேளு. மரப்பொந்துல நரி இருக்கிற விஷயம் நம்ம மரத்துல இருக்கிற  எல்லாருக்கும் தெரிய வந்துச்சுன்னா குட்டி பறவைகள் எல்லாம் பயப்படும். அதனால, இதை நம்மளே டீல் பண்ணுவோம்” என்றது. 

கோபம் குறைந்து அமைதியான சீனு, “நீ சொல்றது சரிதான், என்ன பண்ணலாம் சொல்லு” என்றது. 

“வெளிச்சம் கொறஞ்சிட்டே வருது. சாயந்திரம் பசங்க குளத்துல நீச்சலடிக்க வருவாங்கல்ல… அப்போ இந்த நரிய மாட்டிவிடலாம்” என்றது அப்புக்குட்டி.

“எப்படி? எப்படி?”  என்று ஆர்வமாகப் படபடத்தது சீனு.

“வெயிட் வெயிட், நான் ஸ்லோவா தான நகருவேன். நம்ம இப்ப குளத்துக்குப் போகலாம் வா” என்று சொல்லிவிட்டு அப்புக்குட்டி மரப்பொந்தைப் பார்த்தது.  உள்ளே நரி சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டு இருந்தது. உடனே இரண்டும் ரகசியமாக ஒரு திட்டத்தத் தீட்டிக்கொண்டு, குளத்துப் பக்கம் நடையைக் கட்டின.

அங்கே சிறுவர்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  அவர்களுடைய பம்பரம்,  உண்டிவில்,  உடைகள் என்று எல்லாவற்றையும் சீனுவும் அப்புக்குட்டியும் நோட்டம் விட்டன.

அப்புக்குட்டி சிக்னல் கொடுத்ததும், சீனு அதிலிருந்து நைசாக இரண்டு பம்பரத்தையும் ஒரு உண்டி வில்லையும் அபேஸ் செய்து கொண்டு,  மரப்பொந்துக்கு வெளியில் போட்டுவிட்டு திரும்பி வந்தது. பிறகு, சிறுவர்கள் விளையாட்டுப் பொருள்களைத் தேடும்வரை காத்திருந்தது.

“டேய்… எங்கடா என் பம்பரத்தைக் காணூம்?”

“என்னோடதும் தாண்டா”

“டேய்… என் உண்டிவில்லைக் காணும்டா”

“எங்கேடா போயிருக்கும்?  நம்ம தண்ணில விளையாண்டுட்டு வர்ரதுக்குள்ள காணும்டா”  என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது,  அப்புக்குட்டி சீனுவுக்கு சிக்னல் கொடுத்தது.  உடனே, சீனு அவர்கள் கண்ணில் படும்படியாக அவர்களது உடைகளில் இரண்டைத் தூக்கிக் கொண்டு ஓடியது.

“டேய்… அந்தக் கொரங்குக்குட்டி வேலைதாண்டா. வாங்கடா புடிப்போம்” என்று சொன்னபடி பின்னால் ஓடி வந்தார்கள்.  சீனு தாவித் தாவி ஓடிப்போய், சரியாக பொந்துக்குள் சட்டையைப் போட்டது.   பின்னால் வந்த சிறுவர்களின் காலில் பம்பரம் தடுக்கியது. 

“டேய் இங்கதாண்டா கிடக்குது” என்று சொன்னபடி ஒரு சிறுவன் பொந்துக்குள் கையைவிட்டு சட்டையை இழுக்க,  சட்டையோடு சேர்த்து நரியின் வாலையும் பிடித்து இழுத்தான்.

வலி தாங்காத நரி, ஊளையிட்டபடி அவனைக் கடிக்கப் பார்த்ததும், “டேய் நரிடா… ஓடு ஓடு” என்றபடி ஓட, எதிரில் அந்தப் பக்கம் வந்த பெரியவர்களிடம் சொல்ல,  பெரிய கம்புடன் வந்து நரியை நையப்புடைத்து வெளுத்தார்கள். வலி தாங்காத நரி, திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து ஓடியது.

“நம்மல்லாம் இந்தக் கொரங்குக் குட்டிக்குத் தாண்டா தேங்க்ஸ் சொல்லணும். இல்லன்னா,  இது நம்ம வீட்டு கோழி, ஆட்டுக் குட்டியையெல்லாம் சாப்பிட்டிருக்கும்” என்று சொன்னார்கள்.

சீனு அப்புக்குட்டியின் ஐடியாவை மெச்சியது. 

“சாரிடா… நான் உன்னை நிறைய தடவ பயந்தாங்குளின்னு சொல்லி இருக்கேன். ஆனா, நீதான் ஸ்மார்ட்” என்றது.

அப்புக்குட்டி சீனுவிடம், “சீனு… எவ்ளோ சூப்பரா ஐடியா குடுத்தாலும், அதை நீ சரியா செஞ்சதாலதான் நரியத் துரத்த முடிஞ்சிச்சு… ஹைஃபை” என்று சொல்லிவிட்டு இரண்டும் சிரித்துக் கொண்டன.

“இனிமே நம்ம கஷ்டமான சமயத்துல என்ன செய்யணுனு புரிஞ்சிடுச்சு” என்றது சீனு.

“ம்… அதேதான். மாத்தி யோசி”  என்று சொல்லி கண்ணடித்தது அப்புக்குட்டி.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

5 Comments

  1. ஆமைக்குட்டியும் குரங்குக்குட்டியும் சூப்பர் காம்போ. எனக்கு இந்தக் கதை ரொம்ப பிடித்தது.

தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 1) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

நான்காம் பால் (சிறுகதை) – ✍ ரக்ஷன் கிருத்திக்