in

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, அமெரிக்கா

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ரவெல்லாம் தூக்கம் வராமல் நினைவுகளின் கனத்தினால் புரண்டு புரண்டு படுத்த விஸ்வநாதன், விடியற்காலை நான்கு மணிக்குத் தான் தூங்கவே ஆரம்பித்தார். காலை மணி எட்டு அடித்தது அந்தப் பழையகால சுவர் கடிகாரத்தில்.

விஸ்வநாதன் ஒரு சென்ட்ரல் கவரன்மென்ட் ரிடையர்ட் கிளார்க், வயது எழுபத்தி எட்டு. பூமியில் வாழவும் முடியாமல், இதை விட்டுப் போகவும் வழில்லாமல் தத்தளிக்கின்ற ஒரு இரண்டுங்கெட்டான் வயது. மனைவி இவரைத் தன்னந்தனியாகத் தவிக்க விட்டுப் போய் நான்காண்டுகள் ஆயிற்று.

இரண்டு மகன்கள். பெரியவன் ராம் குமார் கல்கத்தாவில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் கிளார்க். சின்னவன் லட்சுமண் குமார் சென்னையில் உள்ள தபால் இலாக்காவில் கிளார்க். கழுதை மேய்த்தாலும் சென்ட்ரல் கவரன்மென்ட் கழுதையாகத் தான் மேய்க்கிறார்கள்.

சின்னவனுக்கு பெரம்பூரில் உள்ள தபால் அலுவலகத்தில் தான் வேலை. விஸ்வநாதனோ அந்த காலத்தில் ஆபீஸ் லோனில்  வேளச்சேரியில் அக்காமடேஷன் கன்ட்ரோல் மூலம் ஒரு தனி வீடு குறைந்த விலையில் வாங்கியிருந்தார்.

தஞ்சாவூரில் இருந்து மாற்றலாகி வந்த லட்சுமண் குமார் பெரம்பூரில் வீடு பார்க்காமல் நேரே இவர் வீட்டில் வந்து குடியேறி விட்டான். பெரம்பூரிலேயே நிறைய அபார்ட்மென்ட்டுகள் ஆபீஸ் அருகிலேயே பார்த்துக் கொள்ளலாமே என்று கூட சொல்லி விட்டார் விஸ்வநாதன்.

ஆனால் அவனோ, “சொந்த வீடு இருக்கும் போது ஏன் வாடகை வீட்டில் இருக்க வேண்டும்? வயதான காலத்தில் நீங்கள் ஏன் தனியாக இருக்க வேண்டும்? உங்களுக்கு தேவையானதை நானும் என் மனைவி சரளாவும் பார்த்துப் பார்த்து செய்வோம். உடம்பிற்கு ஏதாவது என்றால் நாங்கள் அருகில் இருந்தால் டாக்டரிடம் அழைத்துச் செல்வோம்” என்றான்.

“நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எனக்கு இங்கே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். உதவி என்று குரல் கொடுத்தால் உடனே வந்து செய்வார்கள்” என்றார் விஸ்வநாதன்.

“என்ன இருந்தாலும் பிள்ளையும் மருமகளும் பார்த்துக் கொள்வது போல் ஆகுமா?” என்றாள் சரளா.

ஆன்லைனில் பார்த்து பிடித்துப் போய், ஆன்லைனிலேயே நிச்சயதார்த்த ஒப்பந்தங்களில் எலக்ட்ரானிக் கையெழுத்திட்டு, திருமணம் மட்டும் நேரில் செய்து கொண்ட தம்பதிகள்.

விஸ்வநாதனுக்கு பில்டர் காபி தான் குடிக்க வேண்டும். அதனால் முதல்நாள் இரவே பில்டரில் காபி தூள் போட்டு, நன்றாக அழுத்தி கொதிக்க வைத்தத் தண்ணீரை ஊற்றி ‘சாந்து’ மாதிரி ‘திக்‘காக டிக்காக்‌ஷன் இறக்கி வைப்பார்.

பிள்ளையும் மருமகளும் இவருடன் வந்த பிறகு சரளாவிற்கு அதையும் சொல்லிக் கொடுத்தார். இவருக்கு காலையில் ஆறு மணிக்கெல்லாம் சுடச்சுட ஸ்ட்ராங்கான காபியும் தினமலர் செய்தித் தாளும் டீப்பாயின் மேல் கட்டாயம் இருக்க வேண்டும். இதையெல்லாம் ஏற்கெனவே சரளாவிடம் சொல்லி விட்டார் .

ஏனென்றால் அவர்கள் இருவருக்குமே ‘சோம்பேறி காபி’ தான். அதாவது பாலைத் தனியாகக் காய்ச்சாமல் பச்சைப் பாலிலேயே ப்ரூ காபி பௌடர், சர்க்கரை எல்லாம் ஒன்றாகப் போட்டு மைக்ரோ ஓவனில்  ஒரு நிமிடம் வைத்து சூடேற்றிக் குடித்து விடுவார்கள்.

அதைப் பாரத்து  விஸ்வநாதன் முகம் சுளிக்க, “மாமா… இதில் முகம் சுளிக்க என்ன இருக்கிறது? இதுவும் காபிதான், நீங்கள் போடுவதும் காபிதான். நாங்கள் மூக்கை நேராகத் தொடுகிறோம், ஒரு நிமிடத்தில் எங்கள் காபி ரெடி. நீங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள், உங்கள் காபி ரெடியாக அரைமணி நேரம் ஆகிறது. அதுவுமில்லாமல் நீங்கள் போடும் காபியில் எத்தனை அழுக்குப் பாத்திரங்கள் விழுகின்றன. ஆனால் எங்களுக்கு அழுக்காகும் பாத்திரம் ஒரே ஒரு காபி கப் தான். இது தான் ஜெனரேஷன் கேப் என்பது” என்றாள் சரளா, இமைய மலையில் கொடி ஏற்றியது போல் ஒரு வெற்றிக் களிப்பில்.

‘போங்கடி நீங்களும் உங்கள் காபியும்’ என்று மனதில் நினைத்தவர், “நீங்கள் உங்கள் விருப்பம் போல் இருங்கள், எனக்கு நான் விரும்பியது போல்தான்” என்றார்.

ஆனால் அடுத்த நாள் காலையில் டீபாயின் மேல் காபியும் இல்லை, பேப்பரும் இல்லை. அவர்கள் படுக்கை அறைக் கதவு திறக்கவேயில்லை. தலையில் அடித்துக் கொண்டு இவரே காபி பில்டரில் டிகாக்‌ஷன் இறக்கினார்.

‘பிரிட்ஜி’லிருந்து பால் கவரும் எடுத்து மில்க் குக்கரில் பாலும் காய்ச்சி காபியும் கலந்து குடித்தார். விஸ்வநாதனுக்கு காலையில் முதல்முதலாகக் குடிக்கும் காபியில் மட்டும் எந்த இடையூறு வந்தாலும் கோபமும் எரிச்சலும் மூக்கிற்கு மேல் வரும்.

காபியைக் குடித்து விட்டுப் பிறகு வழக்கம் போல் அருகில் உள்ள பார்க்கிற்கு வாக்கிங் கிளம்பி விட்டார். அங்கே அவர் வயதையொத்த நண்பர்கள் நான்கு பேர் காத்திருப்பார்கள். அதில் இருவர் இவரைப் போலவே மத்திய அரசின் வெவ்வேறு துறையைச் சேர்ந்த ரிடையர்ட் மக்கள் தான், மற்றும் இருவர் ஹைஸ்கூல் வரை ஒன்றாகப் படித்தவர்கள், ஆனாலும் நட்பைத் தொடர்பவர்கள், கருத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள்.

மற்றும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அவர்களும் இவரைப் போலவே மனைவியை இழந்தவர்கள். பென்ஷன் வாங்கும் இவர்கள் மூவரும் மற்ற இருவருக்கும் அவ்வப்போது காபி டிபன், சில சமயம் நொறுக்குத் தீனி என்றும் வாங்கித் தருவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வீட்டில் இருக்கும் போது பசிக்கிறது என்பார்கள்.

காலையில் காபி சாப்பிட்டு வாக்கிங் வந்த விஸ்வநாதன் முகம் வழக்கம் போல் இல்லை. கொஞ்சம் ஏமாற்றமும், கோபமும் கலந்தாற் போல் இருந்தது

“என்ன விசுவா, காலையிலேயே உன் முகம் கடுவன் பூனை போல் இருக்கிறது? மருமகளுடன் ஏதாவது தகராறா ?” என்றார் ராம்மூர்த்தி, அவரும் இவரைப்போல் பென்ஷன் வாங்குபவர் தான்.

“காலையில் எழுந்தால் தானே தகராறோ, சமாதானமோ? எத்தனை மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடக்குமோ தெரியவில்லை. நான் வரும் வரை பெட்ரூம் கதவு திறக்கவேயில்லை. நானே காபி போட்டு, நானே குடித்து விட்டு வந்தேன்” என்றார் எரிச்சலோடு.

“காலையில் இதே புரூ காபி தான் நாங்களும் குடிக்கிறோம். ஆனால் எங்களுக்கு அதுவே ஒழுங்காகக் கிடைக்காது” என்றார் ராமமூர்த்தி.

சிறிது நேரம் பேசிவிட்டு மனதில் உள்ள கோபத்துடன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்.

சரளா அன்று மதியம் லஞ்ச் ஒன்றுமே செய்வதாகத் தெரியவில்லை.  இன்று லட்சுமண் குமாரும் வீட்டில் தானே இருக்கிறான். மணி பன்னிரண்டைத் தாண்டியது.

‘இந்தப் பெண் வீட்டில் தானே இருக்கிறாள், ஏன் எதுவும் செய்யவில்லை?’ என்று மனதிற்குள் யோசித்தவர், மகனிடம் வாய் விட்டே கேட்டு விட்டார்.

“இப்போதெல்லாம் அப்படித்தான் மாமா. எல்லாம் ஸ்விகி என்னும் ஆப்’பில் ஆர்டர் செய்து விடலாம். நாம் எதுவும் சமைக்க வேண்டியதில்லை. காசு , நேரம் எல்லாம் மிச்சம். எல்லாமே ஆன் லைன் தான்” என்றாள் சரளா போனில் ஏதோ நோண்டிக் கொண்டு.

“ஏம்மா சரளா, உனக்கு சமைக்கத் தெரியாதா?”

“சுமாராக சமைப்பேன் மாமா. ஆனால் இவர் வீட்டில் இருக்கும் போது இவருடனே இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துத் தான் சமைக்கவில்லை. ஆன்லைனில் வாங்குவது கூட நன்றாகத்தான் இருக்கும் மாமா, உங்களுக்கும் சேர்த்துத்தான் ஆர்டர் செய்திருக்கிறோம்”

“சரியம்மா, இன்று ஒரு நாள் நான் சாப்பிட்டுக் கொள்கிறேன். இனிமேல் எனக்கு ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்” என்றார் விஸ்வநாதன்.

அடுத்த நாள் சமையலுக்கு அன்று மாலையே போய் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்து வைத்தை விட்டார். எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் தான் வாங்கினார். அவருக்கு தினம் ஏதாவது ஒரு கீரை இருக்க வேண்டும். கொஞ்சம் கத்திரிக்காய், ஒரே ஒரு முருங்கைக் காய், கொஞ்சம் வெண்டைக்காய் என்று வாங்கிக் கொண்டார்.

சரளாவை  சரியான சோம்பேறி என்று நன்றாகப் புரிந்து கொண்டார் விஸ்வநாதன். ‘ஆதலால் இவளோடுப் பேசி ஒன்றும் புண்ணியமில்லை. வழக்கம் போல் நம் சாப்பாட்டை நாம் கவனித்துக் கொள்ளலாம்; அவர்கள் வேண்டுமானால் எந்த ‘ஆப்’ மூலமாகவோ வாங்கி சாப்பிட்டுக் கொள்ளட்டும்’ என்று முடிவு செய்தார்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் பில்டர் காபி குடித்து விட்டு, நண்பர்களிடம் போய் பார்க்கில் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு எல்லோருமாகப் போய் வழக்கமாக சாப்பிடும்  இட்லிக்கடைக்குப் போய் ஆளுக்கு இரண்டு இட்லியும், ஒரு சாம்பார் வடையும் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினார்கள்.

வீட்டிற்குப் போனவுடனே எதிரில் வந்து நின்றான் லட்சுமண். ‘என்ன?’ என்பது போல் ஏறிட்டுப் பார்த்தார் விஸ்வநாதன்.

“எலக்ட்ரிசிடி பில் வந்திருக்கிறது அப்பா” என்றான் மகன்.

“நீங்கள் தான் எல்லாம் ‘ஆன்லைனிலேயே’ கட்டி விடுவீர்களே. அப்படியே கட்டி விடுங்கள்” என்றார் விஸ்வநாதன்.

“பில் உங்கள் பெயரில் இருக்கிறதே மாமா, அதனால் நீங்கள் தான் கட்ட வேண்டும்” என்றாள் சரளா.

“எனக்கு வழக்கமாக பில் 6000 ரூபாய் தான் வரும், ஆனால் இந்த முறை ரூபாய் 26,000 வந்திருக்கிறதே. அதனால் நீங்கள் தான் கட்ட வேண்டும். என் பங்கிற்கு ரூபாய் 6000 தான் கொடுக்க முடியும்” என்றார். உடனே கொடுத்தும் விட்டார்.

“அது எப்படி மாமா, பெற்ற பிள்ளையிடம் போய் இப்படிக் கணக்குப் பார்க்கிறீர்கள்? நாளைக்கு ஒரு கஷ்டம் என்றால் உங்களை நாங்கள் தான் தாங்க வேண்டும். உங்கள் உதவாக்கரை நண்பர்கள் ஒன்றும் தாங்க மாட்டார்கள், அதை மட்டும் மறந்து விடாதீர்கள்” என்றாள் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு.

“நான் என்னுடைய பென்ஷனில் மட்டும் தான் செலவு செய்ய முடியும். உன் கணவன் போல் சென்ட்ரல் கவர்ன்மென்ட்  உத்தியோகம் செய்து  சம்பாதிக்கவில்லை. அதனால் உங்கள் செலவை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார் திட்டவட்டமாக.

ஆனால் சரளாவோ, விஸ்வநாதன் அனுமதியில்லாமலேயே காலையில் இவர் செய்யும் சமையலையே கணவருக்கும் மதிய சாப்பாடாகக் கட்டிக் கொடுத்து விடுவாள். அவள் சாதம் மட்டும் குக்கரில் வைத்துக் கொண்டு மற்றபடி சைட் டிஷ்ஷெல்லாம் இவர் செய்வதிலேயே எடுத்துக் கொள்வாள். இரண்டு நாட்கள் பார்த்த பிறகு விஸ்வநாதன் எல்லாவற்றையும் கொஞ்சம் நிறையவே செய்து விடுவார்.

ஏறக்குறைய வீட்டு வரி, அரிசி, காய்கறி செலவு என்று வீட்டிற்காகும் எல்லா செலவுகளும் விஸ்வநாதனே தன்னையறியாமல் செய்யும்படி நைசாகப் பேசியே ஏற்பாடு செய்து விடுவாள். இதனால் விஸ்வநாதனின் சேமிப்புக் கணக்கு கணிசமாகக் குறைந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் விஸ்வநாதன் ஓயாமல் இருமிக் கொண்டே இருந்தார். கொஞ்ச தூரம் நடப்பதற்குள் மூச்சு அதிக அளவில் வாங்கியது. லட்சுமண் உடனடியாக ஒரு நாள் விடுமுறை எடுத்துத் தந்தையை பிரபல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அங்கு x-ரே, ஸ்கேன், இரத்தப் பரிசோதனை எல்லாம் முடிவதற்குள் ஒரே நாளில் சில ஆயிரங்களை விழுங்கிவிட்டது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும், அறை வாடகை, மருந்து உணவு மற்றும் வேறு செலவுகளும் சேர்த்து ஐந்து லட்சம் உடனடியாகக் கட்டிய பிறகு தான் டிரீட்மென்ட் தொடங்க முடியும் என்றும் கூறி விட்டார்கள்.

வீட்டில் இவருடைய தட்டு, டம்ளர் எல்லாம் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டது. எல்லாப் பரிட்சைகளின் முடிவு இவருக்கு ‘லங்  கேன்ஸர் என்று தெரிந்தது, அப்போது தான் சரளாவின் புத்தி தெரிந்தது.

கணவனிடம், “அரசாங்க மருத்துவமனையில் சேர்த்து விட்டால் உணவு எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்” என்று வற்புறுத்திக் கூறியதோடு, வீட்டையும் காலி செய்து விட்டு பெரம்பூரில் ஆபீஸ் அருகில் வீடு பார்த்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்  விஸ்வநாதன்.

நண்பர் ராம்மூர்த்தியிடம் எல்லா விஷயங்களையும் விவரித்துக் கூற, அவரோ “நமக்குத்தான் மருத்துவ காப்பீட்டு அட்டை இருக்கிறதே, அதன் மூலம் நாம் ஏற்பாடு செய்துக் கொள்ளலாம் கிளம்பு” என்று அவரே அதே பிரபல மருத்துவமனை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.

அதிர்ச்சி மேல் ஒரு இன்ப அதிர்ச்சியாக டாக்டர் என்ன சொன்னார் என்றால், வேறு ஒரு நோயாளியின் ரிப்போர்ட்டை மாற்றிக் கொடுத்து விட்டதால் தான் தவறான முடிவு கூறியதாகவும், இவருக்கு வெறும் சளியும் வீக்னெஸும் தான் என்றும், சளிக்கு மருந்தும், சத்து மாத்திரைகளும் கொடுத்தனுப்பினார்.

பத்து நாட்கள் கழித்து மகன் தந்தையின் உடல் நலத்தைக் கேட்க, தந்தை விஷயத்தைச் சொல்லும் போது, அதே ஆன்லைனில் யுடியூபில் ‘யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க’ என்ற பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.

(முற்றும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நான்காம் பால் (சிறுகதை) – ✍ ரக்ஷன் கிருத்திக்

    ஏழாம் வீடு (சிறுகதை) – ✍ சசிகலா  ரகுராமன்