in ,

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 3) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2

இதுவரை:

நடிகை வந்தனாவுடன் உல்லாசமாய் இருக்கிறான் தொழிலதிபர் ராம் குமார்.. சஞ்சலப்படுகிறாள் மனைவி மகா ..

இனி

காம வேளையில் கள்வனாய் இடைபுகுந்த அலைபேசி அழைப்பு ராம்மை எரிச்சல் கொள்ள வைத்தது. சிணுங்கிய போனை எடுத்துப் பார்க்க லைனில் மகா, அதிர்ந்தான் ராம்குமார்.. மகா எதுக்காக கூப்பிடுறா..?

“யாரு ராம்? டிஸ்டர்ப் பண்ணிகிட்டு” வந்தனா எரிச்சலோடு கேட்க…

“மகா கூப்பிடுறா.. வந்தனா இதோ வர்றேன்” என்றவன் பால்கனிக்கு போனுடன் நடந்தான். அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த வந்தனாவின் முகம் கடுகடுவென மாறியது.

‘பொண்டாட்டிகிட்டயிருந்து போன் வந்ததும் எப்படி ஓடுறான்… பயந்தாங்குளி’ மனதுக்குள் கறுவிக் கொண்டாள்.

“என்ன மகா! என்ன வேணும்? காலையில இவ்வளவு சீக்கிரம் கூப்பிட்டிருக்க..” என்றான். மனதில் எழுந்த எரிச்சல் குரலிலும் பிரதிபலித்தது.

“என்னங்க போன வேலை முடிஞ்சுதா? எப்ப திரும்புவீங்க?”

“நான் நேத்து சாயங்காலம் தானே அங்கிருந்து கிளம்பி வந்தேன்.. அதுக்குள்ள போன் போட்டு வேலை முடிஞ்சிடுச்சான்னு கேக்குற. நான் வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும். முக்கியமான வேலைன்னு சொன்னேன்ல மகா. உனக்கு போரடிச்சா ராகினி சித்தி வீட்டுக்கு வேணா போயிட்டு வா.. அவங்க உன்ன வா வான்னு ரொம்ப நாளா கூப்பிட்டு கிட்டே இருக்காங்களே..”

“ஏங்க! புரியாம பேசாதீங்க! நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன்.. நான் சொல்றதை முதல்ல கவனமா கேளுங்க. என்ன முக்கியமான வேலைனாலும் பரவாயில்லைங்க! முதல்ல கிளம்பி ஊருக்கு வந்து சேருங்க..”

“என்ன மகா! என்ன சொல்ற… விளையாடுறியா? முக்கியமான மீட்டிங்.. கிளையண்ட் இருக்காங்க.. அவங்க கூட இருக்க வேண்டியது அவசியம். வெளிநாட்டில இருந்தெல்லாம் வந்திருக்காங்க.. எப்படி விட்டுட்டு அங்க வர முடியும்?”

“ஏங்க சொன்னா புரிஞ்சுக்கோங்க! மாமாவோட திதி நாளை வருது. இன்னைக்கு ஒதுக்கல் விரதம். நீங்க விரதமா சாப்பிடனும். நான் சரியா கவனிக்காம அடுத்த பட்சம்னு நெனச்சுக்கிட்டு இருந்துட்டேன். நேத்துதான் ஐயர்கிட்ட நானும் சுந்தரம் அண்ணனும் போய் கேட்டுட்டு வந்தோம். நேத்து நைட்டே உங்களை கூப்பிட்டேன், ஆனா ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வந்தது. நீங்க உங்க அப்பாக்கு திதி கொடுக்க நாளைக்கு இங்கே இருக்கனும். உங்களுக்கு பதிலா வேற யாரையாவது பார்த்துக்க சொல்லிட்டு வந்து சேருங்க.”

“விளையாடுறியா மகா… திடீர்னு சொன்னா நான் எப்படி ஏற்பாடு பண்ண முடியும் ..”

“சுந்தர்கிட்ட சொல்லுங்க, பார்த்துக்குவான். நீங்க உங்க அப்பாக்கு திதி கொடுக்கிறது முக்கியமில்லையா? அன்னதானத்துக்கு வேற கோயில்ல ஏற்பாடு பண்ணியிருக்கு. அதுவாவது நான் பண்ணிடுவேன்m திதி கொடுக்க நீங்க எப்படியும் கண்டிப்பா இங்க இருந்துதான் ஆகனும்”

“சரி..சரி… காலையில எதுக்கு மூட் அவுட் பண்ற… நான் எப்படியாவது வந்துடறேன்” என்று போனை வைத்தான்.

“என்ன பொண்டாட்டிகிட்ட காலையிலேயே கொஞ்சியாச்சா? என்ன சொல்றா உன் அருமை பொண்டாட்டி.. நீ இல்லாம ஒரு நாள் கூட அவளுக்கு தூக்கம் வரலையா அம்மாவுக்கு, உடனே வந்து சேருங்கன்னு சொல்றாளா” கத்தினாள் வந்தனா .

“நீ வேற வந்தனா! மகா சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிகிட்டிருக்கா… கிளையண்ட் மீட்டிங்னு கதை விட்டுட்டு வந்திருக்கேன். அவ என்னடான்னா அப்பாக்கு நாளைக்கு திதி.. திதி குடுக்குறதுக்கு வந்தே ஆகனும்னு பிடிவாதமாக சொல்றா.. முன்னாலேயே பார்க்க விட்டுட்டாளாம். பார்த்திருந்தா என்ன பெங்களூருக்கு அனுப்பியிருக்க மாட்டேன்னு சொல்றா “

“ஏன் கிளம்பிப் போக வேண்டியது தானே! உன்னை யார் இங்க புடிச்சு வச்சிருக்கா? நானா இங்க வா வா னு கெஞ்சினேன். என்ன இருந்தாலும் அவ உன் பொண்டாட்டி.. அவளுக்கு தான் நீ முக்கியத்துவம் கொடுப்ப… இது தெரிஞ்ச விஷயம் தானே.. நான் யாரோ தானே… அப்பப்ப தொட்டுக்கற ஊறுகாய் ..”

“ஏன் வந்தனா! இப்படியெல்லாம் பேசுற… நான் தான் உன்கிட்ட பொறுமையா எல்லாத்தையும் சொன்னேனே. எனக்கு நீதான் உயிர்னு உனக்கே தெரியும். மகாவை சமாளிப்பதற்கு ஏதாவது ஒரு பதில் சொல்லனும்.”

“மகா.. மகா.. மகா.. அந்த பேரு என் காதுல விழக்கூடாது. என் கூட இருக்கிறதா இருந்தா இரு, இல்லேன்னா இப்பவே கிளம்பி போயிடு. போ..போ.. யாரும் என் கூட இருக்க வேண்டியதில்லை. நான் தனியா இருப்பேன், எனக்கு யாரும் தேவையில்லை. நீ இப்பவே போ… போயிடு” என்று கத்தியவள், பக்கத்தில் இருந்த தண்ணிர் பாட்டில், பிளவர வாஸ் …எல்லாவற்றையும் எடுத்து தூக்கி வீசியெறிந்தாள்.

தலையணையால் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் குலுங்கிக் குலுங்கி அழுவதைப் பார்க்க பொறுக்க முடியாத ராம், “எதுக்கு டென்ஷன் ஆகுற பேபி… நான் போறேன்னு சொல்லவே இல்லையே, அவ கூப்பிட்டான்னு தான சொன்னேன். நான் உன்கூட ரெண்டு நாள் இருக்கேன்னு சொல்லியிருக்கேன். அந்த ரெண்டு நாள் உன் கூடதான் இருப்பேன் பேபி. நீ டென்ஷனாகாத பேபி கூல்..” என்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

மெல்ல அவள் நெற்றியில்.. கண்களில்… உதடுகளில் முத்தமிட்டான். காமன் அவையில் காவியம் அரங்கேற… அவனுடைய சாகச கலையில் மயங்கிய அவள் மெல்ல சமாதானமானாள்.

“சரி வா ராம்! கீழே போகலாம்… வயிறு ரொம்ப பசிக்குது, முதல்ல சாப்பிடலாம், அப்புறம் பிளான் பண்ணி ஏதாவது ரிசார்ட்டுக்கு போய் நிம்மதியா இருந்துட்டு வருவோம். நீ வருவ தானே.. என் கூட இருப்பல்ல, என்ன விட்டுட்டு போக மாட்டியே” என்று குழந்தைதனமாக கேட்கும் அவளை அணைத்துக் கொண்டு படியிறங்கினான்.

கீழே வந்தனாவின் அம்மா சந்தியா.. ராம்குமார், வந்தனா இருவருக்கும் பிடித்த காலை உணவை சமைக்கச் சொல்லி ரெடியாக அவர்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

“வாங்க மாப்பிள்ளை நேரமாயிடுச்சு! பசி வந்திருக்கும்.. முதல்ல சாப்பிட உட்காருங்க” என்று உபசாரமாய் கூறினாள்.

“மம்மி… ராம் ரெண்டு நாள் என் கூடத் தான் இருக்கப் போறான் ” என்றாள் சந்தோஷமாக.

‘ரெண்டு நாள் என்ன… எத்தனை நாள் வேணாலும் அவர் இங்கே இருக்கட்டும். உனக்கும் எனக்கும் சந்தோஷம்தான்” என்றாள் சந்தியா வாயெல்லாம் பல்லாக .

“ரொம்ப பசிக்குது..வா ராம்! உட்காரு சாப்பிடலாம் ” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் இருவரும் கொஞ்சம் பிரஷ்ஷாக பீல் பண்ண …”அம்மா! ராதிகாவை என்னுடைய திங்ஸ் ரெண்டு நாளைக்கு தேவையானதை பேக் பண்ணி வைக்க சொல்லு.. நாங்க ரெண்டு பேரும் ஒரு ரிசார்ட்டிற்குப் போய் தங்கப் போறோம். ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவோம்… பி.ஏகிட்ட சொல்லி எல்லாம் ஷூட்டிங்கையும் இரண்டுநாள் கேன்சல் பண்ணச் சொல்லிட்டேன். K.S.சாரோட பட ஷூட்டிங். நீ அவர்கிட்ட போன் பண்ணி எனக்கு உடம்பு சரியில்லைன்னு ஏதாவது பேசி சமாதானப்படுத்திடு.”

“பாப்பா! நீ அதை பத்தியெல்லாம் கவலைப்படாத.. மாப்பிள்ளையோட நிம்மதியா ரிசார்ட்டில ரெண்டு நாள் தங்கிட்டு, சந்தோஷமா ரெண்டு பேரும் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க… இங்க நான் பாத்துக்குறேன். K.S. சாரைப்பத்தி கவலைபடாதே.. நான் அவரை சமாதானபடுத்திக்கிறேன்.”

“மம்மி! நான் போட்டிருக்கிற வைர நெக்லஸ் எப்படி இருக்கு? ராம் பிரசன்ட் பண்ணினான். விலை எவ்வளவு தெரியுமா? 25 லட்சம்…”

சந்தியா வாயெல்லாம் பல்லாக, “உனக்கு ரொம்ப அழகா இருக்குது.. இதோட போன தடவை அவர் வரும்போது வாங்கிட்டு வந்தாரே அந்த வைர வளையலையும் போட்டுக்கோ” என்றாள்.

ராமின் சிந்தனை எங்கோ இருந்தது. ரெண்டு நாள் வந்தனாவோடு ரிசார்ட்டில் இன்பமாக கழிக்கும் நினைவே அவனை பரவசப்படுத்தியது. அவன் மகாவைப் பற்றி கவலைப்படவில்லையென்றாலும், அப்பா திதி.. ஒரே மகன் இதுவரைக்கும் திதி கொடுக்காமல் இருந்ததில்லை. அப்பாவுக்கு செய்யும் கடமையிலிருந்து அவன் இதுவரை தவறியதில்லை… ஆனால் இந்த தடவை என்ன செய்யப் போகிறான்? காமம் கடமையை பின்னுக்கு தள்ளுமா????

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரெக்கார்டு டான்ஸ் (குறுநாவல் – இறுதி பகுதி) – நாமக்கல் எம்.வேலு

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 5) – கவிஞர் இரஜகை நிலவன்