in ,

மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 1) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மெல்லிய பனிப்போர்வை பெங்களூர் நகரை போர்த்தியிருந்தது. பிரம்மாண்டமான அந்த பங்களாவைச் சுற்றி சூழ்ந்திருந்த மரங்கள் அந்த பங்களாவிற்குத் தனி அழகைக் கொடுத்திருந்தன. நந்தவனமாய் இருந்த தோட்டத்தில் பலவிதப் பூக்கள் பூத்துக் குலுங்கியது. வாசலில் நின்ற வெளிநாட்டுக் கார்கள் அந்த ‘வந்தனா நிலையத்தின்’ வளமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன.

நவம்பர் மாதத்துக் குளிர்ந்த காற்று மூடியிருந்த ஜன்னலையும் ஏமாற்றிக் கொண்டு சின்ன இடைவெளி வழியாக அந்த அறைக்குள் உள்ளே நுழைந்து ஏசியுடன் போட்டி போட்டு அறையை குளிர்வித்துக் கொண்டிருந்தது.

லேசாக கண் விழித்த ராம்குமார் பக்கத்தில் படுத்திருந்த வந்தனாவை இறுக அணைத்து போர்வைக்குள் இழுத்துக் கொண்டான்.

தூக்கம் லேசாக கலைய, “விடு ராம், நைட் முழுக்க தூங்க விடல… இப்பவாவது கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்று சிணுங்கியவாறே அவன் பிடிக்குள் இன்னும் தன்னை இறுக நுழைத்துக் கொண்டாள்.

குளிர்ச்சியான அந்த அறை, போர்வையின் இதமான கதகதப்பு… .இருவரையும் கிறங்கடித்தது. காம பூஜையில் இடையே வந்த கரடியாய் அலைபேசி சிணுங்க வந்தனா போனை எட்டி எடுத்துப் பார்த்தாள் எரிச்சலோடு. பி.ஏ. மனோகர் லைனில் இருந்தான்.

வந்தனா – தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகி. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் என மற்ற திரையுலகுக்கும் அறிமுகமானவள். முன்னணி கதாநாயகர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவளை புக் செய்யும் அளவுக்கு பிரபலமானவள். அவள் நடித்த பல படங்கள் வெற்றி விழா கொண்டாட திரையுலகில் ராசியானவள் என்று கொண்டாடப்பட்டாள். பிரபல தயாரிப்பாளர்கள் அவளைத் தேடி வந்தனர்.

மற்ற நடிகைகளுக்கெல்லாம் மேனேஜர் இருக்க, வந்தனாவுக்கு ஒரேயொரு பி.ஏ. மட்டுமே.  மேனேஜர் அவளுடைய அம்மா சந்தியாதான். வரும் கதாசிரியர்களிடம் கதை கேட்பது, தயாரிப்பாளரிடம் பேசுவது, டைரக்டர் ஹீரோவை செலக்ட் செய்வது என, எல்லாமே அவள் அம்மாதான்.

சிறுவயதிலேயே அவள் அப்பா அம்மாவை ஏமாற்றி விட்டு ஓடி விட, சந்தியா வைராக்கியமாக மகளை வளர்த்து நடிகையாக்கினாள். பணம்.. பணம்… பணம்… என்பது அவளுடைய வாழ்க்கையின் குறிக்கோளாகிப் போனது.

அதற்கு மகளை பகடைக்காயாக பயன்படுத்தத் தயங்கவில்லை. உலகமே தன்னை திரும்பிப் பார்க்க வேண்டும்… அந்த அளவுக்கு பணம் வேண்டும் என்பதில் சந்தியா குறியாக இருந்தாள். அதனால் வந்தனாவின் வாழ்க்கை திசை மாறிப் போனது.

ராம்குமாரை பார்க்கும் வரை முன்னணி கதாநாயகன் ஒருவருடன் வாழ்ந்து வந்தவள், ஒரு திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு தலைமை தாங்கிய தொழிலதிபர் ராம்குமார் அவளை வெகுவாக கவர்ந்தான்.

அடுத்து வந்த நாட்களில் இருவரும் சந்தித்துக் கொள்ள, விரைவில் ராம்குமார் வந்தனாவின் மனதையும் உடலையும் கவர்ந்து கொண்டான். வந்தனாவின் அழகிலும், கவர்ச்சியிலும், அவன் மதுவுண்ட வண்டாக மயங்கிக் கிடந்தான்.

தூக்கம் கலைந்த எரிச்சலோடு செல்போனை எடுத்த வந்தனா

“என்ன மனோ… என்ன அவசரம் காலையிலேயே கூப்பிடுற?” என்றாள் கடுமையாக.

“மேடம்! மணி 9 ஆகப் போகுது. இன்னிக்கு பத்தரை மணிக்கு K.S .சாரோட படசூட்டிங் இருக்கு .. பத்து மணிக்கு ரெடியா இருங்க. அதை நினைவுபடுத்தத் தான் கூப்பிட்டேன்”

“வாட் மனோகர்! நேத்து கிளம்பும்போது சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு எல்லா ஷூட்டிங்கும் கேன்சல்”

“மேடம்! உங்களுக்கு தெரியாததில்லை. சார் ரொம்ப காஸ்ட்லியா செட் போட்டிருக்காரு… நீங்க வரலைன்னு கேன்சலான்னா கோபப்படுவாரு. காலையில ஹீரோ கார்த்திக் சாரோட உங்களுக்கு சீன்ஸ் இருக்கு. உங்களுக்கே தெரியும் மேடம்! கார்த்திக் சார் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.. அது வீணாயிடுச்சுன்னா K.S.சார் கோபப்படுவார். அதனால அவருடைய சீன்களை மட்டும் காலையில முடிச்சி கொடுத்துட்டுப் போயிடுங்க. மத்தியானம் உள்ளதை கேன்சல் பண்ணிடலாம் மேடம்.”

“மனோ! நீ எனக்கு பி.ஏ.வா?. நான் உனக்கு பி.ஏ.வா? நான் சொல்றத மட்டும் செய். இன்னைக்கு ஷுட்டிங்கை கேன்சல் பண்ணச் சொல்லு. அப்படி கேட்டா வந்தனா மயக்கம் போட்டு விழுந்துட்டா… உடம்பு சரியில்லைன்னு ஏதாவது சொல்லு… இன்னைக்கு என்னால வர முடியாது” என்றாள் அழுத்தமாக.

மனோ என்ன சொல்வதென்று தெரியாமல் திகைக்க, வந்தனா போனை சுவிட்ச் ஆப் பண்ணி படுக்கையில் எறித்தாள்.

“இந்த மனோ காலங்காத்தாலேயே மூட் அவுட் பண்றான்” முணுமுணுத்தாள்.

“என்ன ஆச்சு பேபி…” ராம் முனங்கினான்.

நன்றாக தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்த வந்தனா, “ராம்! நீ பாட்டுக்கு சொல்லாமக் கொள்ளாம சர்ப்ரைஸ் கொடுக்கிறேன்னு திடீர்னு வந்துட்ட… இன்னைக்கு ஒரு பெரிய டைரக்டர்.. ஒரு பெரிய ப்ராஜெக்ட் படத்தோட ஷூட்டிங். ஹீரோ அந்த கார்த்திக்…. கார்த்திக் ராஜசேகர். ஒரு நாள் சூட்டிங் நம்மளால கேன்சல் ஆச்சுன்னா கத்துவான். K.S.சார் டென்ஷன் ஆயிடுவாரு. பிரச்சினை ஆயிடும்னு பி.ஏ போன் பண்ணி சொல்றான், என்ன செய்ய சொல்ற?”

“கூல் கூல் பேபி.. எல்லாம் கொஞ்ச நாள்தான், அப்புறம் எல்லாத்துக்கும் முழுக்கு போட்டுட்டு சென்னையில உனக்கு பெரிய பங்களா கட்டிகிட்டு இருக்கேன்ல.. இங்க வந்து செட்டிலாயிடு நிம்மதியா நம்ம லைப்ப என்ஜாய் பண்ணலாம்”

“சென்னையில செட்டிலாகிறதெல்லாம் அப்புறம் பாக்கணும். முதல்ல கமிட்டாகியிருக்கிற படங்கள முடிச்சு குடுக்கணும்.. எல்லாத்துக்கும் மேல நீ முதல்ல மகாவை தல முழுகணும்”

“பொறு பேபி! எல்லாம் நடக்கும். கொஞ்சம் கொஞ்சமாக… ஒன்னொன்னா செய்வோம்… நீ நினைக்கிற மாதிரி மகாவை அவ்வளவு ஈசியா கழட்டி விட முடியாது. ஏன்னா ‘மகா மார்பிள்ஸ்’ முழுக்க முழுக்க எங்க மாமா சுயசம்பாத்தியம். எல்லா சொத்துக்களும் மாமா இறந்த பிறகு மகாவுக்கு வந்துருச்சு. என்ன அவ முழுக்க முழுக்க நம்புறா… அதனால அந்த சொத்துக்களை நிம்மதியா அனுபவிச்சுகிட்டிருக்கேன். நான் அவளைக் கல்யாணம் பண்ணினது அவ என் மாமா மகள்ங்கறதுக்காக இல்ல. மாமா பேர்ல உள்ள பாசத்துக்காகவும் இல்லை. அவர் என்ன வளர்த்தவர் தான் இல்லைன்னு சொல்லல, ஆனா எனக்கு மகா பேர்ல எப்போதுமே ஒரு பெரிய பாசமெல்லாம் கிடையாது. ஆனால் சொத்து முழுக்க லட்டு மாதிரி மகாகிட்ட இருந்து வரும்ங்கிற ஒரே காரணத்துக்காக பிடிக்காதவளை கல்யாணம் பண்ணினேன்.”

“சரி சரி.. காலையில அவ புராணம் எதுக்கு? நான் இரண்டு நாள் எல்லா ஷீட்டிங்கையும் கேன்சல் பண்ணிட்டேன். எங்கேயாவது நிம்மதியா வெளியில போயிட்டு வருவோம்.”

“அதுவும் சரிதான், இப்ப எதுக்கு அவளைப் பத்தி பேசி நேரத்தை வீணாக்குவானேன்” திரும்ப அவளைப் போர்வைக்குள் இழுத்தவன் தேனுண்ட மலராய் கிறங்கி கிடந்தான்.

அவர்கள் உறக்கத்தை கெடுத்தது போல கிறக்கத்தையும் கெடுத்தது செல்போன் ஒலி, இம்முறை அடித்தது ராம் போன்.

“மொபைல முதல்ல சுவிட்ச் ஆஃப் பண்ணு ராம்.. நிம்மதியா இருக்கலாம்” என்றாள் வந்தனா எரிச்சலுடன்.

யார் அழைக்கிறார்கள் என்று செல்போனை பார்த்த ராமின் முகம் மாறியது, லைனில் மகா.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 11) – முகில் தினகரன்

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 11) – ராஜேஸ்வரி